Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 25)

முதல் ப்ரகரணம்

முற்பாடர்க்கு க்ரியாங்கமானவை யிரண்டும் செயல் தீர்ந்தார் வ்ருத்தியில் ஸ்வ நிர்ப்பந்தமறுக்கும்.

ஆனால் சேஷத்வ போக்த்ருத்வங்கள்தான் இவர்களுக்குமுண்டே; செய்வதென்னென்னச் சொல்லுகிறது – (முற்பாடர்க்கித்யாதி).

– ஆனால் சேஷத்வம் மற்றும் போக்த்ருத்வம் ஆகிய இரண்டும் திருமந்த்ரத்தில் நிலை நிற்பவர்களுக்கும் உண்டு அல்லவோ? அவை இரண்டும் அவர்களுக்குச் செய்வது என்ன என்னும் கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, சாஸ்த்ரிகளென்று ப்ரதமத்தில் சொல்லப்பட்ட உபாஸகர்க்கு போக்த்ருத்வமானது போக்யஸித்திக்குடலான யத்நத்திலே மூட்டுகையாலும், அதுதான் ஆத்ம ஜ்ஞான பூர்வகமாக யத்நிக்க வேண்டுகையாலே சேஷத்வமும் அதுக்கு உறுப்பாகையாலும் உபாஸன ப்ரதமபாவியான கர்மத்துக்கு உத்பத்தியிலே ஸஹகரித்துக் கொண்டுத் ததங்கங்களா யிருக்கிற அவை யிரண்டும், “செயல் தீரச் சிந்தித்து வாழ்வார்” என்கிறபடியே, “இவ்வாத்மா செய்யக்கடவ தொன்றுமில்லை, எம்பெருமானே நிர்வாஹகன்” என்றநுஸந்தித்து உபாயரூப ப்ரவ்ருத்தியில் நிவ்ருத்தரான ப்ரபந்நருடைய கைங்கர்யரூப ப்ரவ்ருத்தியில் அவனுகப்பைப் பின்சொல்லுமதொழிய, தங்கள் நிர்ப்பந்தத்தைத் தவிர்க்குமென்கை. – “பரகதாதிசயா தாநேச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ஸ சேஷ:” என்கிறபடியே பராதிசயகரத்வ ரூபமான சேஷத்வம் ஸ்வாச்ரயேச்சயா வரும் ஸ்வநிர்ப்பந்தத்தைத் தவிர்க்குமிறே. இனி போக்த்ருத்வம், ஸ்வநிர்ப்பந்தத்தைத் தவிர்க்கையாவது - பாரதந்த்ர்ய போக்யதா ஜ்ஞாநம் பிறந்தவனுடைய போக்த்ருத்வமாகையாலே ஸ்வரஸத்துக்கு உடலன்றிக்கே சேஷி ரஸத்துக்கு உடலாயிருக்கை. – “ஆநந்தம் அவன் ப்ரீதியைத் துளி ரெழுப்ப” என்கிறபடியே இவனுடைய போக்த்ருத்வம் சேஷியானவன் ப்ரீதிக்கு வர்த்தகமாயிறே இருப்பது. ஆகையிறே, “அஹமந்ந மஹமந்நம்” என்று ஸ்வபோக்யதையை முன்னிட்டு சேஷியை உகப்பிக்க இழிந்தவன், “அஹமந்நாத:” என்று ஸ்வபோக்த்ருத்வத்தையும் புரஸ்கரிக்கிறது. இப்படியல்லாதபோது ஒரு சேதநனோடு அநுபவித்ததாயிராதிறே. இவற்றை யெல்லாத்தையு முட்கொண்டாய்த்து “வ்ருத்தியில் ஸ்வநிர்ப்பந்தமறுக்கும்” என்றருளிச் செய்தது.

– சாஸ்த்ரிகள் என்று கூறப்பட்டவர்களாகிய வேதங்களில் ஆழ்ந்து நிற்பவர்களுக்குப் போக்த்ருவத்வம் என்பது - அனுபவிப்பதற்குரிய இனிமையான பொருள் கிட்டுவதற்கான முயற்சியில் ஈடுபடுத்துவதாலும், அத்தகைய முயற்சி என்பது ஆத்மஞானம் ஏற்படுவதற்கு முன்பாகவே செய்யப்படவேண்டும் என்பதால் அத்தகைய முயற்சிக்கு சேஷத்வம் காரணமாக உள்ளதாலும், அப்படிப்பட்ட உபாசகர்கள் தங்களுடைய உபாஸனைக்கு முன்னரே தோன்றுவதான கர்மத்தின் வெளிப்பாட்டிற்கு உதவி செய்வதால், சேஷத்வம் மற்றும் போக்த்ருத்வம் ஆகிய இரண்டும் கர்மத்தின் அங்கங்களாக இருப்பதாகும். ஆனால் அந்த இரண்டும் திருமந்திரத்தில் நிலை நிற்கும் ப்ரபந்நர்கள் விஷயத்தில் செய்வது என்னவென்றால் - நான்முகன் திருவந்தாதி (88) - செயல் தீரச் சிந்தித்து வாழ்வார் – என்று கூறுவதற்கு ஏற்ப, “இந்த ஆத்மா செய்யக்கூடியது ஏதும் இல்லை, இதனை ஸர்வேச்வரனே நியமித்துக் கொள்வான்” என்று எண்ண வைத்து, உபாயம் என்றுள்ள செயல்களில் ஸர்வேச்வரன் திருவுள்ளம் மகிழ்ந்து ஈடுபட வைக்கும்போது அவ்விதமே செல்லும் அல்லாமல், அந்த இரண்டும் தங்களுடைய செயல்பாடுகளை அவர்கள் மீது திணிப்பது கிடையாது. சேஷத்வம் தனது நிர்ப்பந்தத்தை எவ்வாறு இவர்கள் விஷயத்தில் தவிர்க்கிறது என்றால் - ஸ்ரீபாஷ்யம் - பரகதாதிசயா தாநேச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ஸ சேஷ: - மற்றோரு வஸ்துவுக்கு மேன்மையை ஏற்படுத்தவேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாக அமைந்த தன்மை, எந்த ஒரு வஸ்துவுக்கு உள்ளதோ, அந்த வஸ்து அடிமைப்பட்ட ஒன்றாகும் – என்று கூறுவதற்கு ஏற்ப, ஸர்வேச்வரனுக்குப் பெருமையை ஏற்படுத்தவல்லதான சேஷத்வம், தான் பற்றி நிற்கக்கூடிய ஆத்மாவின் ஆசை காரணமாக ஏற்படும் தனது நிர்ப்பந்தத்தைத் தவிர்த்துவிடும் அல்லவோ? அடுத்து போக்த்ருவம் தனது நிர்ப்பந்தத்தைத் தவிர்ப்பது எப்படி என்றால் - பாரதந்த்ர்ய ஞானம் மற்றும் போக்யதை குறித்த ஞானம் ஆகிய இரண்டும் ஏற்பட்ட ஒருவனுக்கு உள்ள போக்த்ருத்வம் என்பதால், தனது இன்பத்திற்குக் காரணமாக இல்லாமல், ஸர்வேச்வரடைய இன்பத்திற்குக் காரணமாக அமைவதால் ஆகும். நம்பிள்ளை - ஆநந்தம் அவன் ப்ரீதியைத் துளி ரெழுப்ப - என்று கூறுவதற்கு ஏற்ப ஆத்மாவின் போக்த்ருத்வம் என்பது ஸர்வேச்வரனுடைய ப்ரீதியை வளர்ப்பதற்கே ஆகும். இதனால்தான், தைத்திரீயம் - அஹமந்ந மஹமந்நம் - நான் அவனுக்கு உணவு போன்று இனிமையானவன் இனிமையானவன் - என்று ஜீவாத்மாவாகிய தான், அவனுக்கு இனிமையாக உள்ளதை முன்னிட்டுக் கொண்டு ஸர்வேச்வரனை மகிழ்விக்க முயல்பவன், தைத்திரீம் - அஹமந்நாத: – நான் ஸர்வேச்வரன் என்னும் இனிய வஸ்துவை அனுபவிக்கிறேன் – என்று, தான் இன்பத்தை அனுபவிக்கக்கூடியவனாகவும் உள்ள தன்மையை முன்னிடுகிறான். இவ்விதம் பொருள் கொள்ளவில்லை என்றால், ஒரு சேதநனோடு ஸர்வேச்வரன் கூடி நின்று அனுபவித்தான் என்று கூற இயலாது அல்லவோ? இவை அனைத்தையும் தனது திருவுள்ளத்தில் கொண்ட காரணத்தினால்தான் “வ்ருத்தியில் ஸ்வநிர்ப்பந்தமறுக்கும்” என்று சூர்ணையில் அருளிச்செய்தார்.