Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 24)
முதல் ப்ரகரணம்
நாலில் ஒன்று ப்ரவர்த்தகம்; ஒன்று நிவர்த்தகம்.
இப்படியிருந்துள்ள ஸ்வரூப ஜ்ஞாநத்தையும் ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்தையு முடையராய் “சாஸ்த்ரிகள்” இத்யாதி வாக்யத்தில் ப்ரவர்த்தி பரராகவும் நிவ்ருத்தி பரராகவும் சொல்லப்பட்ட அதிகாரிகளுக்கு ப்ரவர்த்தக நிவர்த்தகங்க ளின்னதென்கிறது மேலே – “நாலிலித்யாதி”.
இப்படியாக உள்ள ஆத்மஞானம் மற்றும் ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி உணரும் ஞானம் ஆகியவற்றைக் கொண்டவர்களாக, சூர்ணை (19) - சாஸ்த்ரிகள் - என்று கூறியதற்கு ஏற்ப முயல்பவர்களாகவும், முயலாதவர்களாகவும் உள்ள அதிகாரிகளை, அது போன்று முயற்சி செய்ய வைப்பதும், முயற்சி செய்வதில் இருந்து விலக்குவதும் எது என்பதை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
அதாவது, சேஷத்வ போக்த்ருத்வங்களும் பாரதந்த்ர்ய போக்யதைகளுமாகிற நாலிலும் வைத்துக் கொண்டு சேஷத்வ போக்த்ருத்வங்களே ஆத்மாவுக்கு ஸ்ரூவபமென்று தர்சித்த சாஸ்த்ரிகளை, போக்த்ருத்வமானது – போக்தாவனவன் போக்ய ஸித்திக்கு யத்நம் பண்ணவேண்டாவோ வென்னும் நினைவாலே போக்யபூத பகவத் விஷய லாபார்த்தமான உபாய ப்ரவ்ருத்தியிலே மூள்விக்கும். பாரதந்த்ர்ய போக்யதைகளையே ஸ்வரூப யாதாத்ம்ய வேஷமென்று தர்சித்த ஸாரஜ்ஞரை, போக்யதையானது “போக்தாவான ஈச்வரனன்றோ ஸ்வபோக்யமான இவ்வஸ்துவைப் பெறுகைக்கு யத்நம் பண்ணுவான்; தத் போக்யபூதமான இவ்வஸ்துவுக்கு தல்லாபத்துக்கு யத்நிக்க ப்ராப்தியில்லை” என்னும் நினைவாலே, உபாய ப்ரவ்ருத்தியில் நின்றும் மீள்விக்குமென்கை.
சேஷத்வம், போக்த்ருத்வம், பாரதந்த்ர்யம் மற்றும் போக்யதை ஆகிய நான்கில், சேஷத்வம் மற்றும் போக்த்ருத்வம் ஆகிய இரண்டு மட்டுமே ஆத்மஸ்வரூபம் என்று எடுத்துக் கொள்பவர்களான வேதங்களின் வழி நிற்பவர்களை, போக்த்ருத்வம் செய்வது என்னவென்றால் - இன்பத்தை அனுபவிக்கும் ஒருவன் அத்தகைய இன்பம் கிட்டுவதற்கான முயற்சியைச் செய்யவேண்டாமோ என்று எண்ண வைக்கும்; அதன் காரணமாக, இனிமையான ஸர்வேச்வரனை அடைவதற்கான சில முயற்சிகளை அவர்கள் செய்யும்படியாக, அந்தச் செயல்களில் ஈடுபடுத்திவிடும். பாரதந்த்ர்யம் மற்றும் போக்யதை ஆகிய இரண்டு மட்டுமே ஆத்மாவின் உண்மையான தன்மைகள் ஆகும் என்று உணர்ந்தவர்களான வேதங்களுடைய சாரமாகிய திருமந்த்ரத்தில் நிலை நிற்பவர்களை, போக்யதை செய்வது என்னவென்றால் - அனுபவிப்பவனாக உள்ள ஸர்வேச்வரன் அல்லவோ தனக்கு இனிமையாக உள்ள ஆத்மாவைப் பெறுவதற்கான முயற்சிகளைச் செய்வான் என்றும், அவனுக்கு இனிய பொருளாக உள்ள ஆத்மாவுக்கு, தனது பயனுக்காகச் செய்யும் முயற்சிகள் என்று எதனையும் செய்யத் தகுதி இல்லை என்றும் உள்ள நினைவுகளை ஏற்படுத்தி, அவனைப் பெறுவதற்கான உபாயத்தின் அடிப்படையில் செய்யப்படும் செயல்களில் இருந்து விலக்கிவிடும்.