Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 23)

முதல் ப்ரகரணம்

முளைத்தெழுந்த ஸூர்யதுல்ய யாதாத்ம்யசரமம் விதியில் காணும் ப்ரதம மத்ய தசைகளைப் பகல்விளக்கும் மின்மினியுமாக்கும்.

இப்படி ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநதசையில் தோற்றுகிற பாரதந்த்ர்யாதிகள் ஸ்வரூப ஜ்ஞாநதசையில் தோற்றுகிற சேஷத்வாதிகளைத் திரஸ்க்ருதமாக்கும்படி சொல்லுகிறது - (முளைத்தெழுந்த இத்யாதி).

இப்படியாக ஆத்மஸ்வரூபத்தின் உண்மை நிலையை உணர்த்துவதான ஞானநிலையில் வெளிப்படும் பாரதந்த்ர்யம் மற்றும் போக்யதை ஆகிய இரண்டும், ஆத்மஸ்வரூபத்தின் ஞானநிலையில் வெளிப்படுவதான சேஷத்வம் மற்றும் போக்த்ருவத்வம் ஆகிய இரண்டையும் மறையும்படிச் செய்யும் என்று இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.

அதாவது, “முளைத்தெழுந்த திங்கள் தானாய்” என்றும், “யதா ஸூர்யஸ் ததா ஜ்ஞாநம்” என்று சொல்லப்பட்ட ஸ்வரூப ஸாக்ஷாத்கார ஜ்ஞாநத்தினுடைய யாதாத்ம்யா வஸ்தையான சரமென்று ஸ்வரூப யாதாத்ம்ய வேஷமாகப் பின்பு சொன்ன பாரதந்த்ர்ய போக்யதைகளைச் சொல்லுகிறது. ஸ்வரூப ஸாக்ஷாத்கார ஜ்ஞாநத்துக்கு சந்த்ரனை த்ருஷ்டாந்தமாக ஆழ்வார் அருளிச்செய்தது நமக்கு பகவத் ப்ரஸாத லப்தமாகையாலே அயத்ந ஸித்தமாகையாலும், அந்த ஜ்ஞாநந்தான் ஆஹ்லாதகரமா யிருக்கையாலுமிறே. இங்கும் “உணர்வைப் பெறவூர மிகவுணரமுண்டாம்” என்று இந்த ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநம் பகவத் ப்ரஸாத லப்தமாகவிறே சொல்லிற்று. “யதா ஸூர்ய:” என்கிறவிதிலே ஸ்வயத்நத்தால் வந்த க்லிஷ்டதை தோற்றிற்றாகிலும் இவ்விடத்தில் அது அவிவக்ஷிதம். ஜ்ஞாநத்தினுடைய ப்ரகாசாதிசயம் சொல்லுகிற மாத்ரமே அபேக்ஷிதம். ஏவம் பூதமாயிருந்துள்ள ஸாக்ஷாத்கார ஜ்ஞாநத்தினுடைய யாதாத்ம்யா வஸ்த்தையில் ப்ரகாசிக்கிற பாரதந்த்ர்ய போக்யதைகளாகிற சரமங்கள், “ஸ்வரூபத்தை உணர்ந்துணர்ந்துணரவும்” என்று கீழ்ச் சொன்ன ந்யாயத்திலே, “விதியில் காண்பார்” என்கிறபடியே சாஸ்த்ர விதி ப்ரகாரேண ச்ரவண மநநாதிகளாகே தர்துக்கம்படுகிற ப்ரதம தசையான சேஷத்வத்தையும் மத்யம தசையான போக்த்ருத்வத்தையும் – பகல் விளக்கும் மின்மினியும் போலே அப்ரயோஜநமாகவும் அல்பப்ரகாசமாகவும் பண்ணுமென்கை. ப்ரணவோதிதமான ஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்யத்வேந மத்யம சரம பதங்களிலே பின்பு உதிக்கு மவையாகையாலே பாரதந்த்ர்ய போக்யதைகளை சரமங்க ளென்கிறது. ப்ரதமாக்ஷரத்தில் சதுர்த்தியிலே ப்ரதமமேவ சேஷத்வம் உதிக்கையாலும், அநந்தரம் ததாச்ரயவாசியான சரமாக்ஷரத்தில் உத்தர பதத்வயத்தில் பாரதந்த்ர்ய போக்யதோதயத்துக்கு முன்னே நடுவே ஜ்ஞாத்ருத்வ பலாயாத போக்த்ருத்வம் உதிக்கையாலும் சேஷத்வ போக்த்ருத்வங்களை ப்ரதம மத்யம தசைகளென்கிறது. ஆக இவ்வாக்யத்தால் ஸ்வப்ரயோஜநகந்தா ஸஹங்களாய் ஸ்வசேஷி போகாத்யந் தாநுகூலங்களாய்க் கொண்டு ஸ்வரூபத்தை நிறம் பெறுத்தும் இப்பாரதந்த்ர்ய போக்யதைகள் இவ்வாகாரங்களில்லாத சேஷத்வ போக்த்ருத்வங்களைத் திரஸ்க்ருத மாக்கித் தானே மேலாயிருக்குமென்றதாயிற்று.

– திருநெடுந்தாண்டகம் (1) - முளைத்தெழுந்த திங்கள் தானாய் - என்றும், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (6-5-62) - யதா ஸூர்யஸ் ததா ஜ்ஞாநம் - சூரியன் எவ்விதம் ப்ரகாசமாக உள்ளதோ அது போன்றே ஞானம் - என்றும் கூறப்படுவதான ஆத்மஸ்வரூபத்தின் உண்மை நிலையை உள்ளது உள்ளபடி உணர்கின்ற ஞானத்தின் முடிவு அல்லது எல்லை எதுவென்றால் - ஆத்மஸ்வரூபத்தின் உண்மை நிலைகளாக, திருமந்த்ரத்தில் உள்ள “நம:” மற்றும் “நாராயணா” என்பதால் கூறப்பட்டதான பாரதந்த்ர்யம் மற்றும் போக்யதை ஆகும். ஆத்மஸ்வரூபத்தை உணர்த்தவல்ல ஞானத்திற்கு ஆழ்வார் சந்த்ரனை எடுத்துக்காட்டாக அருளிச் செய்தமை என்பது - தனக்கு பகவானுடைய திருவருளால் கிட்டியதால் தனது முயற்சி என்று ஏதும் இல்லாமல் கிட்டியதாலும், அத்தகைய ஞானம் மகிழ்வை அளிக்கவல்லது என்பதாலும் ஆகும் அல்லவோ [அதாவது சந்த்ரனுக்குத் தனியாக ஒளி இல்லை, அது சூரியனிடமிருந்தே ஒளியைப் பெறுகிறது, அது போன்று ஆழ்வார் தன்னுடைய முயற்சி ஏதும் இன்றி ஸர்வேச்வரனுடைய கருணையால் அனைத்தும் பெற்றார் என்று கருத்து]? இவ்விதம் ஆத்மாவுடைய உண்மையான தன்மையை உள்ளது உள்ளபடி உணர்த்தவல்ல ஞானம் என்பது பகவானின் கருணையால் கிட்டுவதாகும் என்று இந்த க்ரத்தத்திலேயே ( சூர்ணை 20) - உணர்வைப் பெறவூர மிகவுணரமுண்டாம் - என்று உரைத்தார் அல்லவோ? யதா ஸூர்ய: - சூரியன் எவ்விதமோ - என்று கூறுவதன் மூலம் இத்தகைய ஞானம் பெறுவதில் தனது முயற்சி காரணமாக ஏற்பட்ட சோர்வு தென்பட்டபோதிலும், இங்கு க்ரந்தத்தை அருளிச்செய்த இவருக்கு அந்தக் கருத்து இல்லை என்று கொள்ளவேண்டும்; ஞானமானது மிகவும் ப்ரகாசமானது என்று உணர்த்தவே உரைப்பதாகக் கொள்ளவேண்டும். – இப்படியாக உள்ள ஆத்மஞானத்தின் உண்மை நிலையில் ப்ரகாசிக்கும் பாரதந்த்ர்யம் மற்றும் போக்யதை ஆகிய இறுதி நிலைகள் இரண்டும் செய்வது என்ன என்று அடுத்து அருளிச்செய்கிறார். சூர்ணை 20 - ஸ்வரூபத்தை உணர்ந்துணர்ந்துணரவும் - என்று கூறப்பட்ட ந்யாயத்தின் அடியொட்டி, திருக்குறுந்தாண்டகம் (18) - விதியில் காண்பார் - என்று கூறுவதற்கு ஏற்ப, சாஸ்த்ரங்களால் விதிக்கப்பட்ட விதத்தில் கேட்பது, நினைப்பது போன்றவை மூலம் காணப்படுவதான முதல் நிலையான சேஷத்வத்தையும், நடுவில் உள்ள நிலையான போக்த்ருத்வத்தையும், சூரியன் உள்ளபோது விளக்கும் மின்மினிப்பூச்சியும் முறையே எவ்விதம் பலன் அற்றதாகவும், குறைந்த ஒளியையே அளிப்பதாகவும் உள்ளனவோ – அது போன்று மாற்றிவிடுகின்றன. ப்ரணவத்தில் வெளிப்படுகின்ற ஆத்மாவின் உண்மை நிலைகள், “நம:” என்னும் நடுப்பதத்தாலும், “நாராயணா” என்னும் இறுதி பதத்தாலும் பின்னர் வெளிப்படுகின்றன என்பதாலும் (அதாவது ப்ரணவத்தைத் தொடர்ந்து உள்ள திருமந்த்ரத்தின் பகுதியில்), அவை பாரதந்த்ர்யம் மற்றும் போக்யதையை வெளிப்படுத்துவதாலும், இந்த இரண்டையும் (பாரதந்த்ர்யம், போக்யதை) சரமம் (இறுதி) என்றார். “ஓம்” என்னும் ப்ரணவத்தின் முதல் எழுத்தான “அ” என்பதில் மறைந்து கிடப்பதான “ஆய” என்னும் நான்காம் வேற்றுமையில், முதலில் சேஷத்வம் வெளிப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அந்த ப்ரணவத்தின் இறுதி எழுத்தான ஆத்மாவை உணர்த்தும் “ம” என்ற எழுத்தில், ப்ரணவத்தைத் தொடர்ந்து வருவதான “நம:” என்ற பதம் மூலம் பாரதந்த்ர்யம் மற்றும் “நாராயணா” என்னும் பதம் மூலம் போக்யதை ஆகிய இரண்டும் வெளிப்படுகின்றன; ஆனால் அவற்றுக்கு முன்பாக, நடுவில், அறியும் தன்மை காரணமாகப் போக்த்ருத்வம் வெளிப்படுகிறது. இதனால் இவற்றை ப்ரதம தசை (முதல் நிலை - சேஷத்வம்) மற்றும் மத்யம திசை (இடை நிலை - போக்த்ருத்வம்) என்றார். ஆக இந்தச் சூர்ணை மூலமாக, தனது முயற்சி மற்றும் தனக்குப் பயன் போன்றவை ஏதும் சிறிதும் இல்லாமல், தனது எஜமானனாகிய ஸர்வேச்வரனுடைய இன்பத்திற்கு மட்டுமே முழுமையாக உதவி செய்பவையாக நின்று, ஆத்மாவை ப்ரகாசம் பெறச் செய்யும் பாரதந்த்ர்யம் மற்றும் போக்யதை ஆகிய இரண்டும், இத்தகைய தன்மைகள் அற்றதான சேஷத்வம் மற்றும் போக்த்ருத்வம் ஆகிய இரண்டையும் மறையும்படிச் செய்து, தாங்கள் ஓங்கி நிற்கும் என்கிறார்.