Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 22)

முதல் ப்ரகரணம்

ஜ்ஞாந சதுர்த்திகளின் மேலேயிறே ஆநந்த ஷஷ்டிகளுக்கு உதயம்.

இவ்வர்த்தத்தை ஸ்வரூப யாதாத்ம்ய ப்ரகாசகமான திருமந்த்ரத்திலே தர்சிப்பிக்கிறார் “ஜ்ஞாநேத்யாதியாலே”.

– கடந்த சூர்ணையில் கூறிய கருத்தை, ஆத்ம ஸ்வரூபத்தின் உண்மையான ஞானத்தை உணர்த்தவல்ல திருமந்த்ரம் கொண்டு இந்தச் சூர்ணையில் அருளிச் செய்கிறார்.

அதாவது, ஆத்மவாசியான மகாரத்திலே “மந – ஜ்ஞாநே” என்கிற தாதுவிலே உதிதமாய் போக்த்ருத்வ ப்ரகாசகமா யிருக்கிற ஜ்ஞாநத்தின் மேலேயிறே, அந்த மகார விவரண ரூபமாய் போக்யதா ப்ரகாசகமான சதுர்த்தியில் ஆநந்தத்துக்கு உதயம்; ப்ரதமாக்ஷரத்தில் சேஷத்வவாசியான சதுர்த்தியின் மேலேயிறே பாரதந்த்ர்ய ப்ரகாசகமான நமஸ்ஸுக்கு உதயமென்கை. இத்தால் ஆத்ம ஸ்வரூபத்தினுடைய சேஷத்வ போக்த்ருத்வங்கள் உதித்திருக்கச் செய்தே அதின்மேலே ஸ்வரூப யாதாத்ம்ய வேஷமாக உதித்தவையாகையாலே சேஷத்வ போக்த்ருத்வங்களில் பாரந்த்ர்ய போக்யதைகளுக்கு நெடுவாசி யுண்டென்றதாயிற்று. இந்த யோஜனைக்கு அல்பம் அநுபபத்தியுண்டு. ஷஷ்டியென்கிறவிது முக்ய வ்ருத்தியாலேயாதல் கௌண வ்ருத்தியாலேயாதல் நமஸ்ஸைக் காட்டமாட்டாமையாலே; ஷஷ்ட்யந்த பதமென்கிறதை ஷஷ்டியென்று சொல்லிற் றாகாதோ வென்னில், அது சேராது. நமஸ்ஸு இரண்டு பதமாகையாலும் அதில் உத்தரபதமே ஷஷ்ட்யந்தமாகையாலும். ஆனால் செய்யவடுப்பதென்னென்னில்; இன்னம் ஒரு யோஜனை சொல்லப்படுகிறது; அதாவது - த்ருதீயாக்ஷரத்தில் “மந – க்ஞாநே” என்கிற தாதுவிலே உத்தமாய் போக்த்ருத்வ ப்ரகாசகமான ஜ்ஞாநத்தின் மேலேயிறே மகார விவரணமான சதுர்த்தியில் சொல்லப்படுகிற போகத்தில் காகாக்ஷி ந்யாயத்தாலே நமச்சப்தத்தாலே கழிக்கப்படுகிற ஸ்வப்ரயோஜநத்வ ப்ரயுக்தமான ஆநந்தத்துக்கு உதயம். ப்ரதமாக்ஷரத்தில் சேஷத்வவசியான சதுர்த்தியின் மேலேயிறே நஞ்ஞாலே நிஷேதிக்கப்படுகிற ஸ்வரக்ஷணே ஸ்வப்ரவ்ருத்தி ஹேதுபூத ஸ்வாதந்த்ர்ய ப்ரகாசிகையான ஷஷ்ட்டிக்கு உதயமென்கை. இத்தால் சேஷத்வ ப்ரகாசகமான சதுர்த்தியின் மேலே ஸ்வரக்ஷண ஹேதுபூத ஸ்வாத்ந்த்ர்ய வாசியான ஷஷ்டி உதிக்கையாலும், போக்த்ருத்வ ப்ரகாசகமான ஜ்ஞாநத்தின் மேலே போகஸ்வார்த்ததா புத்தி மூலமான ஆநந்தம் உதிக்கையாலும் சேஷத்வ போக்ருத்வங்கள் ஸ்வ விரோத்யுதய ஸஹங்களாயிருக்கும். நமஸ்ஸிலே பாரதந்த்ர்யம் உதித்த பின்பு ஸ்வரக்ஷணே ஸ்வயத்நம் நிவ்ருத்தமாகையாலும், நமச்சப்தாநு க்ருஹீதையான சரம சதுர்த்தியிலே ஈச்வரனுக்கு போக்யமாயிருக்கையே ஆத்மாவுக்கு வேஷமென்று தோற்றின பின்பு ஸ்வப்ரயோஜநம் நிவ்ருத்தமாகையாலும் பாரதந்த்ர்ய போக்யதைகள் ஸ்வ விரோத்யுதய ஸஹங்களன்று. ஆகையால் ஸ்வ விரோத்யுதய ஸஹங்களான சேஷத்வ போக்த்ருத்வங்கள் போலன்றே அத்தை ஸஹியாத படியிருக்கும் பாரதந்த்ர்ய போக்யதைகள் என்றதாயிற்று.

ஆத்மாவை உணர்த்துவதாக ப்ரணவத்தில் உள்ள “ம” என்ற எழுத்திலே, “மந ஜ்ஞாநே” என்ற தாதுவில் தோன்றியதாகவும், அனுபவிக்கும் தன்மைக்கு விளக்கமாகவும் ஞானம் உள்ளது (இதன் மூலம் போக்த்ருத்வம் கூறினார்); இத்தகைய ஞானத்தின் மேலே உள்ளது எதுவென்றால் – “ம” என்ற எழுத்தின் பொருளை விவரித்துக் கூறுவதும், போக்யதையை விளக்குவதும் ஆகிய “நாராயணாய” என்பதில் உள்ள “ஆய” என்னும் நான்காம் வேற்றுமை மூலம் வெளிப்படும் ஆனந்தம் என்பதாகும் (இதன் மூலம் போக்யதையைக் கூறினார்). (அடுத்த சதுர்த்தி என்று சூர்ணையில் கூறியது, ப்ரணவத்தின் முதல் எழுத்தான “அ” என்பதன் மேல் புணர்ந்து கெட்ட “ஆய” என்ற நான்காம் வேற்றுமை உருபினை ஆகும்). ப்ரணவத்தின் முதல் எழுத்தான ”அ” என்பதன் மூலம், புணர்ந்து கெட்டதான “ஆய” என்னும் நான்காம் வேற்றுமை உருபு, சேஷத்வத்தைக் கூறுகிறது; இதற்கும் மேலே உள்ளது என்னவென்றால் - பாரதந்த்ர்யத்தை வெளிப்படுத்தும் “நம:”என்பதாகும். ஆகவே, ஆத்மஸ்வரூபத்தின் சேஷத்வம் மற்றும் போக்த்ருவத்வம் ஆகிய இரண்டும் வெளிப்படும்போதிலும், அவற்றின் மேலே, ஆத்மஸ்வரூபத்தின் உண்மை நிலையாக உள்ள பாரதந்த்ர்யமும், போக்யதையும் வெளிப்படுகிறது. ஆகவே சேஷத்வம் மற்றும் போக்த்ருத்வம் என்பதைக் காட்டிலும் பாரதந்த்ர்யம் மற்றும் போக்யதை ஆகிய இரண்டிற்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. மேலே கூறப்பட்ட கருத்துக்குச் சிறிது பொருத்தமின்மை என்பது உண்டு (குறிப்பு - இங்கு பொருத்தம் இன்மை என்று கூறுவதைப் புரிந்து கொள்ளச் சற்றுக் கடினமாக உள்ளதால் மேலும் விளக்கப்படுகிறது. “நம:” என்பது “நம:” என்று ஒரு எழுத்தாகவும், “ந, ம:” என்று இரண்டு எழுத்துக்களாகவும் பிரித்துப் பொருள் தரவல்லதாகும். முதலில் உள்ளது ஒருமொழி அல்லது தனிமொழி என்றும், அடுத்து உள்ளது தொடர்மொழி என்றும் கூறப்படும். ஒருமொழி அல்லது தனிமொழியாகப் பொருள் கொள்ளப்படும்போது “அகண்ட நமஸ்ஸு” என்றும், தொடர்மொழியாகப் பொருள் கொள்ளப்படும்போது “ஸகண்ட நமஸ்ஸு” என்றும் கூறுவர். இங்கு “ஷஷ்டி” என்று கூறுவது ஆறாம் வேற்றுமை உருபை இறுதியில் வைத்துள்ள “நம:” என்பதில் காணப்படும் “அ:” என்பதை ஆகும். மாறாக “நம:” என்பதைத் தனிமொழியாகக் கொள்ளும்போது, ஷஷ்டி என்பது “நம:” என்றாகி, அதன் இறுதியில் உள்ளது “ம:” என்பதாகிறது. மேலே கூறப்பட்ட கருத்தில், “நம:” என்பதைத் தொடர்மொழியாகக் கொண்டே பொருள் அருளிச்செய்துள்ளார். இந்தப் பொருளில் ஷஷ்டி என்பது மேலே கூறியபடி “ம:” என்பதை உணர்த்தும் அல்லாது, அதன் முன்பாக உள்ள “ந” என்பதைக் காண்பிக்காது. ஆனால் பாரதந்த்ர்யம் என்பது உணர்த்தப்படவேண்டும் என்றால், “என்னுடைய ரக்ஷணத்தில் எனக்குச் சம்பந்தம் இல்லை” என்பது கூறப்படவேண்டும்; அதாவது, “ம:” என்பதற்கு முன்பாக உள்ள “ந” என்பதும் சேர்த்து உணர்த்தப்பட வேண்டும். அவ்விதம் உணர்த்தாமல் உள்ள காரணத்தால், மேலே கூறிய கருத்துக்குச் சிறிது பொருத்தம் இன்மை கூறப்படலாம் என்று அருளிச்செய்கிறார்). இந்தப் பொருத்தம் இன்மை என்ன காரணத்தால் வந்தது என்றால் “ஷஷ்டி” என்பதான “நம:” என்பது நேரடியாக ஒரு பொருளை உணர்த்தினாலும், மறைமுகமாக வேறு ஒரு பொருளை உணர்த்தினாலும், நமஸ் என்பதைக் காண்பிக்காமல் உள்ளதால் ஆகும். இவ்விதம் ஏன் கொள்ளவேண்டும்? ஷஷ்டியை இறுதியில் கொண்ட முழுச்சொல்லான “நம:” என்பதையே “ஷஷ்டி” என்று கூறியதாகக் கொள்ளலாமே; “நம:” என்பதன் இறுதியில் உள்ளதான “ம:” என்பதை மட்டும் “ஷஷ்டியின் இறுதியில்” என்று கூறியதாக ஏன் கொள்ளவேண்டும் என்று கேட்கலாம். அவ்விதம் கொள்ளலாகாது. ஏன்? காரணம் “நம:” என்பது இரண்டு எழுத்துக்கள் கொண்டது என்பதாலும், அந்த இரண்டு எழுத்துக்களில் இறுதியாக உள்ளது “ம:” என்பதாலும், “ஷஷ்டியை இறுதியில் கொண்டது” என்பது “ம:” என்பதே ஆகிறது. – இவ்விதம் கொண்டால், “ந” என்பதன் பொருள் அங்கு உணர்த்தப்படுவது எப்படி என்ற கேள்விக்கு விடை அளிக்கிறார். அதாவது ப்ரணவத்தில் காணப்படும் மூன்றாவது எழுத்தான “ம” என்பது “மந ஜ்ஞாநே” என்ற தாது மூலம் உணர்த்தப்படும் போக்த்ருத்வத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த “ம” என்பதன் விளக்கமாக “நாராயணா” என்ற பதத்தினைத் தொடர்ந்து காணப்படும் “ஆய” என்ற நான்காம் வேற்றுமையால் (அதாவது “நாராயணுக்காக” என்பது நான்காம் வேற்றுமை) கூறப்படும் இன்பத்தில், “நம:” என்றும் பதம் மூலம் விலக்கப்படுவதான “தனக்கு உரித்தான ஆனந்தம்” என்பது வெளிப்படுகிறது. (அதாவது “நாராயணனுக்காக இருத்தல் என்பது தனக்கு உரித்தான ஆனந்தம்” என்பதும் ஆத்மஸ்வரூபத்துக்கு முரணானதாகும். இதனை போக்த்ருத்வம் வெளிப்படுத்தித் தாங்குகிறது. ஆக இந்தப் போக்த்ருத்வம் என்பது “தனக்கு உரிய ஆனந்தம்” என்ற தோஷத்தைத் தாங்கி நிற்கிறது. இந்தக் குற்றம் எவ்விதம் கழியும் என்றால், “ஓம்” என்பதற்கும், “நாராயணாய” என்பதற்கும் நடுவில் காணப்படும் “நம:” என்பதை, “நாராயணாய நம:” என்று “நாராயணாய” பதத்துடன் சேர்த்துக் கொள்வதால் ஆகும்). ஆக காகாக்ஷி நியாயம் போன்று “நம:” என்றுள்ள ஒரு சொல்லே மற்றோரிடத்திலும் இணைந்து கொண்டு பொருள் தருகிறது என்று கொள்க. ப்ரணவத்தின் முதல் எழுத்தான “அ” என்பது புணர்ந்து கெட்டு “ஆய” என்றாகிறது; இது நான்காம் வேற்றுமை ஆகும்; இதன் பொருள் சேஷத்வம் ஆகும். இத்தகைய சேஷத்வம் என்பதற்கு மேலே அல்லவோ (மேலே என்றால் தொடர்ந்து என்று பொருள் கொள்க – அதாவது நாராயணாய என்பதைத் தொடர்ந்து உள்ள நம:), தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் “தன் சுதந்திரம்” என்பதை உணர்த்துகின்ற, “நம:” என்பதில் காணப்படும் “ம:” என்னும் ஆறாம் வேற்றுமை காணப்படுகிறது; இத்தகைய “தன் சுதந்திரம்“ என்பதான விரோதியையே “ந” என்னும் எழுத்து நீக்குகிறது (ஆகவே “நம:” என்பது விளக்கப்பட்டது). ஆக சேஷத்வத்தை உணர்த்துவதான நான்காம் வேற்றுமையான “ஆய” என்பதைக் கடந்து, தன்னைத் தானே பாதுகாப்பது என்பதற்குக் காரணமாக உள்ள சுதந்திரத்தை உணர்த்தும் ஆறாம் வேற்றுமையான “நம:” என்பது தோன்றுவதாலும்; போக்த்ருத்வத்தை உணர்த்துவதான ஞானத்தைக் கடந்து, தனக்கு உரிய இன்பம் என்பதை உண்டாக்கும் புத்தி மூலம் ஆனந்தம் தோன்றுவதாலும் - இவை இரண்டும் சேஷத்வம் மற்றும் போக்த்ருத்வம் என்பதான இரண்டு ஆத்மஸ்வரூப விரோதிகள் உண்டாவதற்கு ஆதரவு தருபவைகளாக இருக்கும் (அதாவது சேஷத்வம் மட்டுமே உண்டானால் அதனைக் கடந்து ஏற்படும் விரோதியை விலக்க பாரதந்த்ர்யம் அவசியமாகிறது; போக்த்ருத்வம் மட்டுமே ஏற்பட்டால் அதனைக் கடந்து ஏற்படும் விரோதியை விலக்க போக்யதை அவசியமாகிறது; ஆக இந்த இரண்டைக் காட்டிலும் பாரதந்த்ர்யம், போக்யதை ஆகியவையே மேம்பட்டவை என்கிறார்). “நம:” என்பதன் மூலம் பாரதந்த்ர்யம் வெளிப்பட்ட பின்னர், தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளச் செய்யும் “தன் முயற்சி” என்பது விலக்கப்படுகிறது; “நம:” என்பதுடன் சேர்ந்து நிற்கும் “நாராயணாய” என்பதில் காணப்படும் “ஆய” என்ற நான்காம் வேற்றுமை மூலம் ஸர்வேச்வரனுக்கு இனிமையாக இருத்தலே ஆத்மாவின் தன்மை என்பது வெளிப்பட்ட பின்னர், “தான் தனக்குப் பயனாக உள்ள நிலை” என்பது விலக்கப்படுகிறது - ஆக இதன் மூலம் பாரதந்த்ர்யம், போக்யதை ஆகிய இரண்டும் தங்களுக்கு விரோதிகள் ஏற்படுவதைப் பொறுத்து கொள்ளவதில்லை என்றாகிறது. ஆகவே தங்களுக்கு விரோதிகள் ஏற்படுவதைப் பொறுத்துக் கொள்ளவல்லதான சேஷத்வம் மற்றும் போக்த்ருத்வம் ஆகிய இரண்டைப் போன்றதல்ல, அவ்விதம் தங்களுக்கு விரோதிகள் ஏற்படுவதைப் பொறுத்துக் கொள்ளாத பாரதந்த்ர்யமும், போக்யதையும் என்கிறார்.