Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 21)
முதல் ப்ரகரணம்
சேஷத்வ போக்த்ருத்வங்கள் போலன்றே பாரதந்த்ர்ய போக்யதைகள்.
ஸ்வரூப ஜ்ஞாநமென்றும் ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநமென்றும் ஆத்ம ஸ்வரூப விஷய ஜ்ஞாநத்திலே தாரதம்யமுண்டிறே. அதில், “பதிம் விச்வஸ்ய”, “யஸ்யாஸ்மி” என்றும், “நஹி விஜ்ஞாதுர்விஜ்ஞாதேர் விபரிலோபோ வித்யதே, ஜாநாத்யே வாயம் புருஷ:” என்றும் ஆத்மாவுக்கு பகவச் சேஷத்வத்தையும் ஜ்ஞாத்ருத்வத்தையும் சொல்லி அந்த ஜ்ஞாத்ருத்வ கார்யமான போக்ருத்வ ப்ரயோஜநமாக, “ஸோச்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா” என்று பகவதநுபவத்தையும் சொல்லுகிற சாஸ்த்ர முகத்தாலே ஸ்வரூபத்தை யறியுமளவில் பகவச் சேஷத்வமும் பகவதநுபவ போக்த்ருத்வமுமிறே ப்ரகாசிப்பது. அந்த சாஸ்த்ர தாத்பர்யமான திருமந்த்ரத்தில் உள்புக்காலிறே பாரதந்த்ர்ய போக்யதாரூபமான ஸ்வரூப யதாத்ம்யம் ப்ரகாசிப்பது. இதுவே ஸ்வரூப யாதாத்ம்யமென்னுமிடத்தை யறிவிக்கிறார் மேல் – “சேஷத்வேத்யாதியால்”.
ஆத்மாவின் ஸ்வரூபம் குறித்த ஞானம் என்பதில் ஸ்வரூப ஞானம் (ஆத்மா அடிமையாக உள்ளதைப் பற்றிய ஞானம், ஆத்மா ஸர்வேச்வரனுடன் அனுபவிக்கிறது என்ற ஞானம்) மற்றும் ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் (ஆத்மா ஸர்வேச்வரன் வசப்பட்டது என்ற ஞானம், ஆத்மா அனுபவிக்கப்படுபவனாக இருத்தல் என்ற ஞானம்) என்று இருவிதம் உள்ளது. இவற்றில், புருஷஸூக்தம் - பதிம் விச்வஸ்ய - இந்த உலகின் எஜமானன் ஸர்வேச்வரன் - என்றும், யஸ்யாஸ்மி – அவனுக்கு நான் அடிமை - என்றும், ப்ருஹத் உபநிஷத் (6-3-10) - நஹி விஜ்ஞாதுர்விஜ்ஞாதேர் விபரிலோபோ வித்யதே - ஞானத்திற்கு இருப்பிடமாக உள்ள இந்த ஆத்மாவின் ஞானத்திற்கு அழிவு இல்லை - என்றும், ஜாநாத்யே வாயம் புருஷ: - ஆத்மா அறியும் வஸ்து - என்றும் பலவிதமாக ஆத்மாவானது ஸர்வேச்வரனுக்கு அடிமைப்பட்டுளதையும், அறியும் தன்மை கொண்டது என்பது குறித்தும் கூறப்பட்டது; மேலும் இத்தகைய அறியும் தன்மையின் விளைவாக உள்ளதான, “ஸர்வேச்வரனுடன் சேர்ந்து இன்பம் அனுபவித்தல்” என்பதையே பயன் என்று, தைத்திரீயம் - ஸோச்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா - பரம்பொருளுடன் சேர்ந்து ஆத்மா அனைத்து விருப்பங்களையும் அனுபவிக்கிறது - என்பதான பகவத் அனுபவத்தைச் சாஸ்த்ரம் கூறுகிறது. இப்படிப்பட்ட சாஸ்த்ரங்கள் மூலம் ஆத்மாவின் தன்மை குறித்து அறியும்போது – ஆத்மா ஸர்வேச்வரனுக்கு அடிமைப்பட்டது என்ற நிலையும், ஸர்வேச்வரனுடன் சேர்ந்து இன்பத்தை அனுபவிக்கிறது என்ற நிலையும் – வெளிப்படுகிறது. அப்படிப்பட்ட சாஸ்த்ரங்களுடைய சாரமாகவே உள்ள திருமந்த்ரத்தை அறியும்போது - ஸர்வேச்வரனுக்கு ஆத்மா வசப்பட்டுள்ள நிலையும், ஸர்வேச்வரனால் அனுபவிக்கப்படும் இனிய வஸ்துவாக உள்ள நிலையும் என்பதான ஆத்மாவின் உண்மை நிலைகள் வெளிப்படுகின்றன. இதுவே ஆத்மாவின் ஸ்வரூபம் மற்றும் உண்மை என்று இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
சேஷத்வமாவது இஷ்டவிநியோகார்ஹதா மாத்ரம். பாரதந்த்ர்யமாவது சேஷிக்கு இஷ்டமானபடியே விநியோகப்படுகை. “கட்டிப்பொன் போலே சேஷத்வம், பணிப்பொன் போலே பாரதந்த்ர்யம்” என்னக்கடவதிறே, (ஆகையாலே சேஷவஸ்துவை சேஷிக்கு இஷ்டமானபடியே விநியோகப்படுத்துமது பாரதந்த்ர்யம்?) போக்த்ருத்வமாவது ஜ்ஞாத்ருத்வ பலத்தாலே போகதசையிலே விளைகிற ரஸங்களுக்குத் தான் போக்தாவாகை. போக்யதையாவது பதார்த்த கதமான ரஸவர்ணாதிகள் போக்தாவுக்கே போக்யமாயிருக்குமாபோலே, ஆத்மகதமான ஜ்ஞாநாதிகளும் ஈச்வரனுக்கே போக்யமாயிருக்கை. ஆகையால் இஷ்டவிநியோகார்ஹதா மாத்ரமான சேஷத்வம் போலன்றே, இவ்வஸ்துவை சேஷிக்கு இஷ்டமானபடி விநியோகப்படுத்திக் கொடுக்கிற பாரதந்த்ர்யம்; போகத்தில் ஸ்வார்த்ததா புத்தி ஹேதுவான போக்த்ருத்வம் போலன்றே அந்த போக்ருத்வத்தை சேஷியுடைய ப்ரியோபயோகியாக்கிக் கொடுக்கிற போக்யதை யென்றபடி.
“சேஷத்வம்” என்றால் ஸர்வேச்வரன் அவனுடைய விருப்பத்தின்படிச் செய்யும் செயல்களுக்குத் தகுதியுடன் இருத்தல் ஆகும். பாரதந்த்ர்யம் என்றால் ஸர்வேச்வரன் அவ்விதம் செய்யும் செயல்களுக்குப் பயன்படும்படியாக இருத்தல் ஆகும். கட்டிப்பொன் போலே சேஷத்வம், பணிப்பொன் போலே பாரதந்த்ர்யம் - கட்டியாக உள்ள தங்கம் என்பது போன்றது சேஷத்வம், ஆபரணங்களாக உள்ள பொன் போன்றது பாரதந்த்ர்யம் - என்பது காண்க. ஆகவே அடிமையாக உள்ள வஸ்துவை எஜமானனுக்கு விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ள விடுவதே பாரதந்த்ர்யம் - ஆகும். “போக்த்ருத்வம்” என்றால், அறியும் தன்மை என்பதன் பயன் காரணமாக, இன்பமாக உள்ள நிலையின்போது ஏற்படும் சுவைகளை அனுபவிப்பவனாக இருப்பதாகும். “போக்யதை” என்றால், ஒரு வஸ்துவில் உள்ள சுவை, நிறம் போன்றவை அந்தப் பொருளை அனுபவிப்பவனுக்கு மட்டுமே இனிமையாக இருப்பது போன்று, ஆத்மாவில் உள்ள ஞானம் போன்ற தன்மைகள் ஸர்வேச்வரனுக்கு மட்டுமே இனிமையாக உள்ளதாகும். ஆகவே ஆத்மாவை ஸர்வேச்வரன் தனது செயல்களுக்கு ஏற்றபடியாகப் பயன்படுத்தக் கொள்ள ஏதுவாக உள்ள பாரதந்த்ர்யம் என்பது, ஸர்வேச்வரன் தனது விருப்பத்தின்படி செயலாற்றுவதற்குத் தகுதியாக மட்டுமே உள்ள சேஷத்வம் போன்றது அல்ல என்று கருத்து. இன்பத்தை அனுபவித்தலில் நம்முடைய இன்பம் என்று சொந்தம் கொண்டாடி உண்டாவதற்குக் காரணமாக உள்ள போக்த்ருத்வம் போன்றது அன்று, அந்தப் போக்த்ருத்வத்தை ஸர்வேச்வரனுடைய விருப்பத்திற்கு ஏற்ப பயன்படும்படி மாற்றிக் கொடுக்கும் போக்யதை என்று கருத்து.