Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 20)

முதல் ப்ரகரணம்

இவை ஸ்வரூபத்தை உணர்ந்துணர்ந் துணரவும், உணர்வைப் பெறவூர மிகவுணரவு முண்டாம்.

இவர்களுக்கு இவ்வாகாரங்களுண்டாகைக்கு அடி இன்னதென்கிறது (இவையித்யாதி).

மேலே கூறப்பட்ட இரண்டுவிதமான அதிகாரிகளுக்கு இத்தகைய தன்மை உண்டாகக் காரணம் இவை என்று அருளிச்செய்கிறார்.

– அதாவது, சாஸ்த்ரிகளானவர்களுக்கு, “உணர்ந்துணர்ந்திழிந்தகன் றுயர்ந்துருவியந்த விந்நிலைமை யுணர்ந்துணர்ந் துணரிலும்” என்கிறபடியே ஆத்ம ஸ்வரூபத்தை ஜ்ஞப்தி மாத்ரமன்றிக்கே நித்யஜ்ஞாந குணகமாய் அந்த ஜ்ஞாநத்தாலே எங்குமொக்க வ்யாபித்து தேஹத்திற்காட்டில் வேறுபட்டிருக்குமதாய் அந்த ஜ்ஞாத்ருத்வ பலாயாத கர்த்ருத்வ (போக்த்ருத்வ) ஸஹிதமாய் பகவச்சேஷமா யிருக்குமென்று ச்ரவண மநநங்களாலே ஸாக்ஷாத்கரிக்கவே ஸ்வயத்நந்தாலே ஸம்ஸாரநிஸ்தரணம் பண்ணத் தேடுகையாகிறவிது உண்டாம். ஸாரஜ்ஞரானவர்களுக்கு ஆத்ம ஸ்வரூப வைலக்ஷண்யத்தை தர்சிப்பிக்கைக்கு உடலாக, “உணர்வு முயிரு முடம்பும் மற்றுலப்பிலனவும் பழுதேயா முணர்வைப் பெறவூர்ந்து” என்கிறபடியே வைஷயிக ஜ்ஞாநமும் ப்ராணனும் சரீரமும் மற்று மபரிச்சேத்யமான ப்ரக்ருதி விகாரங்களும் ப்ரக்ருதியும் ஹேயமென்னு மறிவைப் பெறும்படி நிர்ஹேதுகமாக ஈச்வரன் நடத்த, “மெய்ம்மையை மிகவுணர்ந்து” என்கிறபடியே ஆத்ம ஸ்வரூபத்தை தேஹாதி விலக்ஷணமாய் ஜ்ஞாநாநந்த ஸ்வரூபமாய் ஜ்ஞாத்ருத்வாதி குணகமாய் ததீய சேஷத்வ பர்யந்த தச்சேஷத்வ யுக்தமாய் தத்காஷ்ட்டையான பாரதந்த்ர்ய யோக்யதைக வேஷமா யிருக்குமென்று உணரவே ஸ்வபரத்தை அவன் மேலே போகட்டு ஸ்வயத்ந ரஹிதரா யிருக்கையாகிற விது உண்டாமென்கை. இத்தால் இவர்களுடைய ஸ்வரூப ஜ்ஞாந தாரதம்யமே கீழ்ச்சொன்ன வாகாரங்கள் இவர்களுக்கு உண்டாகைக்கு ஹேது வென்றதாயிற்று. ஆக “முனிவரை யிடுக்கியும்” என்று தொடங்கி, இவ்வளவாக சாஸ்த்ர தாத்பர்யங்களின் விஷய பேதமும், அதிகாரி பேதமும் அவ்வதிகாரிகளின் ப்ரதிபத்தி பேதமும், அதுக்கடியான ஜ்ஞாந தாரதம்யமும் சொல்லப்பட்டது.

சாஸ்த்ரங்களில் ஆழ்ந்து நிற்பவர்களுக்கு: திருவாய்மொழி (1-3-6) - “உணர்ந்துணர்ந்திழிந்தகன் றுயர்ந்துருவியந்த விந்நிலைமை யுணர்ந்துணர்ந் துணரிலும் - என்று கூறுவதற்கு ஏற்ப ஆத்ம ஸ்வரூபமானது ஞானம் மட்டும் அல்ல, ஞானம் என்பதைக் குணமாகவும் கொண்டது; அந்த ஞானம் காரணமாக எங்கும் பரவி, சரீரத்தைக் காட்டிலும் வேறாக இருந்து, ஞானத்தைக் குணமாகக் கொண்டுள்ளதால் கர்மம் இயற்றுதல் மற்றும் அதன் பலனை அனுபவித்தல் போன்றவற்றோடு கூடியது; ஸர்வேச்வரனுக்கு அடிமையாக உள்ளதால், கேட்டல் மற்றும் எண்ணுதல் ஆகியவற்றால் உணரப்படுகிறது; அதன் காரணமாக தங்களுடைய முயற்சியால் ஸம்ஸாரக் கடலைக் கடக்கும் முயற்சியைத் தேடுதல் என்ற எண்ணம் ஏற்படும். சாஸ்த்ரங்களின் சாரமாக உள்ள திருமந்த்ரத்தில் நிலை நிற்பவர்களுக்கு: ஆத்மஸ்வரூபத்தின் வேறுபாட்டினை உணர்த்தவல்லதான திருவாய்மொழி (8-8-3) - உணர்வு முயிரு முடம்பும் மற்றுலப்பிலனவும் பழுதேயா முணர்வைப் பெறவூர்ந்து - என்று கூறுவதற்கு ஏற்ப, உலக ஞானமும், உயிரும், சரீரமும், எல்லையில்லாதபடியான ப்ரக்ருதி மாற்றங்களும், ப்ரக்ருதியும் மிகவும் தாழ்ந்தவை என்பதால் கைவிடத்தக்கவை என்னும் அறிவைப் பெறும்படியாக ஸர்வேச்வரன் எந்த ஒரு காரணமும் இன்றி வழி நடத்துகிறான்; ஆகவே திருமாலை (38) - மெய்ம்மையை மிகவுணர்ந்து - என்பதற்கு ஏற்ப ஆத்ம ஸ்வரூபத்தை - சரீரம் போன்றவற்றைக் காட்டிலும் வேறுபட்டது, ஞானம் மற்றும் ஆனந்தமே வடிவானது, அறியும் தன்மை போன்றவற்றைக் குணமாகக் கொண்டது, அடியார்களுக்குக் கைங்கர்யம் செய்வதை முடிவாக உடையதான பகவானுக்குக் கைங்கர்யம் செய்தல் என்பதைத் தன்மையாகக் கொண்டது, அந்த அடிமை நிலைக்கு எல்லையான பகவானுக்கு மட்டுமே வசப்பட்டிருத்தல் மற்றும் இனியதாக இருத்தல் என்பதைத் தனக்குத் தன்மையாகக் கொண்டது - என்று உணர்கிறார்கள்; ஆகவே தங்களுடைய பாரத்தை அந்த ஸர்வேச்வரன் மீது ஏற்றி, தங்களுடைய முயற்சி ஏதும் அற்றவர்களாக இருத்தல் என்ற நிலை ஏற்படும். ஆகவே இவ்விருவர்களுடைய ஆத்மஸ்வரூபம் குறித்து ஞானத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வு என்பதே இவர்களுக்கு மேலே கூறியபடி எண்ணம் ஏற்படக் காரணம் ஆகிறது என்று கருத்து. ஆகவே (சூர்ணை 17) - முனிவரை யிடுக்கியும் - என்பது தொடங்கி, இந்தச் சூர்ணை முடிய - சாஸ்த்ரங்கள், சாஸ்த்ரங்களின் சாரமான திருமந்திரம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், தகுதி வேறுபாடுகள், அதிகாரிகளின் எண்ணத்தில் உள்ள வேறுபாடுகள், அவற்றுக்குக் காரணமாக உள்ள ஞானத்தின் ஏற்றத்தாழ்வுகள் குறித்து உணர்த்தினார்.