Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 19)
முதல் ப்ரகரணம்
சாஸ்த்ரிகள் தெப்பக்கையரைப்போலே இரண்டையு மிடுக்கிப் பிறவிக்கடலை நீந்த ஸாரஜ்ஞர் விட்டத்திலிருப்பாரைப்போலே இரு கையும் விட்டு கரை குறுகும் காலமெண்ணுவர்கள்.
இனிமேல் இந்த சாஸ்த்ர நிஷ்டராயும் தாத்பர்ய நிஷ்டராயு மிருக்கும் முமுக்ஷுக்கள் படிகளைச் சொல்லுகிறது (சாஸ்த்ரிகளித்யாதி).
– அடுத்துச் சாஸ்த்ரங்களில் நிலைநிற்பவர்களாயும், சாஸ்த்ரங்களின் ஆழ்பொருளான திருமந்த்ரத்தில் நிலை நிற்பவர்களாயும் உள்ள முமுக்ஷுக்கள் குறித்து அருளிச்செய்கிறார்.
– அதாவது “ஆத்மா வா அரேத்ரஷ்டவ்யச் ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்ய”, “ஆத்மேத்யேவோபாஸீத”, “ஓமித்யாத்மாநம் த்யாயத” என்று ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வக பகவத்ப்ராப்தி ஸாதநமாக பகவ துபாஸநத்தை விதித்து, “அம்ருதஸ்யைஷ ஸேது:”, “பலமத உபபத்தே:” என்று பகவானே அதுக்கு பலப்ரதனாகவும் சொல்லும் சாஸ்த்ரத்திலே நிஷ்டரானவர்கள் ஆறு நீஞ்சுவார் தெப்பத்தை ஒரு கையிலே யிடுக்கித் தாங்களும் ஒரு கை துழாவுமா போலே ஸ்வயத்நமும் தத்ஸாத்ய பகவத் க்ருபையுமாகிற உபயத்தையு மவலம்பித்துக்கொண்டு, “பிறவிக்கடல் நீந்துவார்க்கே” என்கிறபடியே ஸம்ஸார ஸமுத்ரத்தைக் கடக்கத்தேட, ஸ்வயத்நநிஷேத பூர்வகமாக ஆத்மாவின் பகவதேகோபாயத்வத்தை ப்ரதிபாதிக்கிற சாஸ்த்ரஸாரமான திருமந்த்ரஜ்ஞரானவர்கள், ஓடமேறினவர்கள் தீரகமநார்த்தமான ஸ்வயத்நத்தையும் தெப்பத்தையும் கைவிட்டு “கரை குறுகுவது எப்போது” என்று பார்த்துக்கொண்டு அதன் விட்டத்திலே யிருக்குமாபோலே, “விஷ்ணுபோதம்” என்கிறபடியே அக்கரையும் இக்கரையும் ஊடுருவ நின்று ஸம்ஸார ஸமுத்ரத்தைக் கடத்தும் “வைகுந்த னென்பதோர் தோணியை” ஸம்ஸார நிஸ்தாரகமாகப் பற்றி, தத்ஜ்ஞாந சக்த்யாத்யநு ஸந்தானத்தாலும் ஸ்வபாரதந்த்ர்யத்யநு ஸந்தானத்தாலும் நிர்ப்பரராகையாலே இரண்டு கையும் விடுமாபோலே, ஸ்வயத்நரூபோபாஸநாதியையும் தத்ஸாத்ய பகவத் க்ருபையையும் அவலம்பிக்கையை விட்டு கேவல பகவத் க்ருபையே உத்தாரக மென்றத்யவஸித்து, “கூவிக் கொள்ளுங்கால மின்னங் குறுகாதோ” என்றும், “ஆக்கை விடும் பொழுதெண்ணே” என்றும் சொல்லுகிறபடியே பகவத்ப்ராப்தியாகிற கரையைக் குறுகுகைக் கீடான கால சிந்தனை பண்ணா நிற்பர்களென்கை. இத்தால் சாஸ்த்ரஜ்ஞருடையவும் ஸாரஜ்ஞருடையவும் ப்ரபத்தி க்ரமம் சொல்லிற்றாயிற்று.
(சாஸ்த்ரிகள்) - ப்ருஹத் உபநிஷத் - ஆத்மா வா அரேத்ரஷ்டவ்யச் ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்ய – பரம்பொருளைக் குறித்துக் கேட்கத் தக்கவன், மனனம் செய்யத்தக்கவன், த்யானம் செய்யத்தக்கவன், நேரடியாக காணத் தக்கவன் - என்றும், ப்ருஹத் உபநிஷத் - ஆத்மேத்யேவோபாஸீத - ஆத்மா என்றே புகழ்ந்து வணங்கவேண்டும் – என்றும், முண்டக உபநிஷத் - ஓமித்யாத்மாநம் த்யாயத – ஆத்மாவையே ”ஓம்” என்பதாக த்யானித்து – என்பதற்கு ஏற்ப ஸம்ஸாரத்தில் உண்டாகக்கூடிய துன்பத்தை விட்டு நீங்கி ஸர்வேச்வரனை அடைவதற்கான மார்க்கமான ஸர்வேச்வரனை உபாஸித்தல் என்பதை விதித்து; முண்டக உபநிஷத் - அம்ருதஸ்யைஷ ஸேது: - பரம்பொருளே அமிர்தமாகிய மோக்ஷ காரணம் - என்றும், உத்தரமீமாம்ஸை – பலமத உபபத்தே: – அனைத்து பலன்களும் பரம்பொருளிடமிருந்தே கிட்டுகிறது – என்றும் கூறுவதற்கு ஏற்ப உபாஸனைக்கான பலனை அளிப்பது பரம்பொருளே ஆவான் என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. இவ்விதம் கூறும் சாஸ்த்ரங்களில் நிலைநிற்பவர்கள் - ஆற்றில் மிதக்க உதவும் மரக்கட்டை ஏதேனும் ஒன்றை ஒரு கையில் பிடித்தும், மற்றொரு கையால் நீரைத் தள்ளியபடியும் வருவது போன்று – தங்களுடைய முயற்சி மற்றும் தங்கள் முயற்சியால் கிட்டும் பகவானின் கருணை ஆகிய இரண்டையும் பற்றியபடி ஸம்ஸாரக் கடலைக் கடக்க முயல்வார்கள். (ஸாரஜ்ஞர்) – ஆத்மாவானது தனது முயற்சியைக் கைவிட்டு ஸர்வேச்வரன் ஒருவனை மட்டுமே உபாயமாகப் பற்றும்படியாக இருக்கத்தக்கது என்று சாஸ்த்ரங்களின் ஆழ்பொருளான திருமந்திரம் உணர்த்துகிறது. இப்படிப்பட்ட திருமந்த்ரத்தில் நிலைநிற்பவர்கள் ஆற்றினைக் கடக்க ஓடத்தில் ஏறியவர்கள் போன்றவர்கள் ஆவர்; அதாவது அவர்கள் ஆற்றைக் கடக்கவேண்டிய தாங்கள் செய்யும் முயற்சி என்று ஏதும் செய்யாமலும், மரக்கட்டை போன்று எதனையும் நாடாமலும், “கரை சேர்வது எப்போது” என்று பார்த்தபடி, அந்த ஓடத்தின் மேல் தளத்தில் அமர்ந்துள்ளது போன்று, ஸ்ரீவிஷ்ணுதர்மம் - விஷ்ணுபோதம் - ஸம்ஸாரத்தைக் கடக்க விஷ்ணு அல்லாமல் வழி இல்லை - என்பதற்கு ஏற்ப, அக்கரையும் இக்கரையும் தொடும் விதம் பரந்து நிற்கும் ஸம்ஸாரப் பெருங்கடலைக் கடக்கவைப்பதான நாச்சியார் திருமொழி (5-4) – வைகுந்தன் என்பதோர் தோணி - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரன் என்ற தோணியை உறுதியாகப் பற்றி, அவனுடைய ஞானம், சக்தி ஆகியவற்றை எப்போதும் எண்ணியும், தாங்கள் அவனிடம் வசப்பட்டுள்ள நிலையை எண்ணியும் பாரம் அற்றுள்ளவர்களாக இருப்பதால், இரண்டு கைகளையும் விடுவது போன்று, தங்களுடைய முயற்சியால் செய்யப்படும் வாழ்த்து போன்றவற்றையும் அதன் மூலம் உண்டாக்கவல்ல பகவத் அனுக்ரஹம் என்பதைப் பற்றுக் கோலாகப் பற்றுதலைக் கைவிட்டு, பகவத் கருணை என்பது மட்டுமே தங்களைக் கரை ஏற்றவல்ல உபாயம் என்று எண்ணுவர்; இவ்விதம் எண்ணியபடி, திருவாய்மொழி (6-4-9) - கூவிக் கொள்ளுங்கால மின்னங் குறுகாதோ - என்றும்; திருவாய்மொழி (1-2-9) – ஆக்கை விடும் பொழுதெண்ணே - என்றும் கூறுவதற்கு ஏற்ப ஸர்வேச்வரனை அடைவதான கரையைக் குறுக்குவதற்குத் தகுதியான காலத்தைக் குறித்துச் சிந்தித்தபடி இருப்பர். இப்படியாகச் சாஸ்த்ரங்களில் நிலைநிற்பவர்கள், திருமந்த்ரத்தில் நிலைநிற்பவர்கள் ஆகியவர்களுடைய சிந்தனைகளில் உள்ள விதங்களை உணர்த்தினார்.