Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 18)

முதல் ப்ரகரணம்

தோல்புரையே போமதுக்குப் பழுதிலா யோக்யதை வேணும்; மனமுடையீ ரென்கிற ச்ரத்தையே அமைந்த மர்மஸ்பர்சிக்கு நானும் நமருமென்னும்படி ஸர்வருமதிகாரிகள்.

ஏவம் பூதமான விவை யிரண்டும் ஸர்வாதிகாரமோ, அதிக்ருதாதிகாரமோ வென்னச் சொல்லுகிறது (தோல்புரை யித்யாதி).

மேலே கூறப்பட்ட இரண்டும் அனைவராலும் கற்பதற்கு ஏற்றதோ அல்லது குறிப்பட்ட சிலர் மட்டுமே கற்கத் தகுந்ததோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

அதாவது விசிஷ்ட வேஷ விஷயமாகையாலே ஆந்தரமான ஸ்வரூபத்தி லூற்றமின்றியே மேலெழ தேஹத்திலே நோக்காய் நடக்கிற சாஸ்த்ரத்துக்கு, “பழுதிலா வொழுகலாறு” என்கிறபடியே நெடுகப் போருகிற வம்ச ப்ரவாஹத்திலே உத்பத்தியிலே யாதல், ஆசாரத்திலேயாதல் ஒரு பழுதற்றிருக்கையாகிற யோக்யதை வேணும்; “கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்” என்றும், “ச்ரத்தைவ காரணம் பும்ஸாம் அஷ்டாக்ஷர பரிக்ரஹே” என்றும் சொல்லுகிறபடியே ச்ரத்தாமாத்ரமே அமைந்த ஸ்வரூப ஸ்பர்சியான தாத்பர்யத்துக்கு, “நானும் சொன்னேன் நமருமுரைமின் நமோ நாராயணமே” என்று சொல்லும்படி யோக்யாயோக்ய விபாகமற ஸர்வரு மதிகாரிக ளென்கை. இத்தால் சாஸ்த்ர தாத்பர்யங்களின் அதிக்ருதாதிகாரத்வ ஸர்வாதிகாரத்வங்களை தத்தேது ஸஹிதமாகச் சொல்லிற்றாயிற்று.

(தோல்புரையே போமது) - சரீரத்தோடு கூடிய ஆத்மாவை இலக்காகக் கொண்டுள்ளது என்பதால், உள்ளே இருக்கும் ஆத்மாவின் ஸ்வரூபத்தில் ஊற்றம் இல்லாமல் மேலே உள்ள சரீரத்தில் இலக்கு வைக்கும் சாஸ்த்ரங்களுக்கு. (பழுதிலா யோக்யதை வேணும்) - திருமாலை (42) - பழுதிலா வொழுகலாறு – என்று கூறுவதற்கு ஏற்ப வழிமுறைகள் தவறாமல் உள்ள குலத்தில் பிறவி எடுத்தல், எந்தவிதமான தவறுதலும் இல்லாமல் ஒழுக்கத்துடன் வாழ்தல் என்பதான தகுதிகள் அவசியமாகிறது. (மனம் உடையீர்) – திருவாய்மொழி (10-5-1) - கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் - என்றும், பாஞ்சராத்ரம் - ச்ரத்தைவ காரணம் பும்ஸாம் அஷ்டாக்ஷர பரிக்ரஹே - ஆடவர்கள் திருஅஷ்டாக்ஷர மந்த்ரம் கற்பதற்குக் காரணம் ச்ரத்தையே ஆகும் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, ச்ரத்தை என்பது மட்டுமே போதுமானது என்றுள்ளதும், ஆத்மாவை இலக்காக உடையதும் ஆகிய திருமந்திரத்துக்கு, பெரியதிருமொழி (6-10-6) - நானும் சொன்னேன் நமருமுரைமின் நமோ நாராயணமே - என்பதற்கு ஏற்ப இவர் தகுதியானவர், இவர் தகுதியற்றவர் என்பதான வேறுபாடுகள் இன்றி அனைவருமே தகுதியானவர்கள் ஆவர். இதன் மூலம், சாஸ்த்ரங்கள் அனைவரும் கற்காதபடி இருப்பதற்கான காரணமும், திருமந்த்ரம் அனைவரும் கற்கலாம்படி உள்ளதற்கான காரணமும் அருளிச்செய்யப்பட்டது.