Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 17)
முதல் ப்ரகரணம்
முனிவரை யிடுக்கியும் முந்நீர் வண்ணனாயும் வெளியிட்ட சாஸ்த்ர தாத்பர்யங்களுக்கு விசிஷ்ட நிஷ்க்ருஷ்ட வேஷங்கள் விஷயம்.
ஆக ஸர்வேச்வரன் தன் க்ருபையாலே ஸம்ஸாரி சேதநரை உஜ்ஜீவிப்பிக்கைக்காக சாஸ்த்ரத்தையும் சாஸ்த்ர தாத்பர்யமான திருமந்த்ரத்தையும் வெளியிட்டானென்று நின்றது கீழ். இவை யிரண்டையும் வெளியிட்ட ப்ரகாரமென்? அவற்றுக்கு விஷயமேது? என்னுமாகாங்க்ஷையிலே தத்ப்ரகாரங்களையும் தோற்றுவித்துக் கொண்டு விஷயங்களையும் சொல்லுகிறது (முனிவரை யித்யாதி).
இப்படியாக ஸர்வேச்வரன் தன்னுடைய கருணை காரணமாக ஸம்ஸாரத்தில் உழன்றபடி உள்ள ஜீவாத்மாவைக் கரையேற்றுவதற்காக சாஸ்த்ரங்களையும், அந்தச் சாஸ்த்ரங்களின் ஆழ்பொருளாக உள்ள திருமந்த்ரத்தையும் அருளிச்செய்தான் என்று உரைத்தார். இந்த இரண்டையும் அவன் எவ்வாறு வெளியிட்டான்? அவற்றுக்கான இலக்கு எது? என்று பல கேள்விகள் எழலாம். இதற்கு விடை அளிக்கும் விதத்தில் அவற்றை எவ்வாறு வெளிப்படுத்தினான் என்பதையும், அவற்றுக்கான இலக்குகள் எவை என்பதையும் இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
அதாவது, “இருள்கள் கடியும் முனிவர்” என்கிற ஸ்மர்த்தாக்களான வ்யாஸாதி ருஷிகளை, “க்ருஷ்ண த்வைபாயநம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும், கோ ஹ்யந்ய: புண்டரீகாக்ஷாத் மஹாபாரத க்ருத் பவேத்” என்கிறபடியே தானாகச் சொல்லலாம்படி அந்தர்யாமியாய் எடுத்து நின்று தந்முகேந வெளியிட்ட சாஸ்த்ரத்துக்கு சேதநருடைய தேஹ விசிஷ்ட வேஷம் விஷயம். “வதரியாச்சிராமத் துள்ளானைக் கருங்கடல் முன்னீர் வண்ணனை” என்கிறபடியே ஸ்ரீபதரிகாச்ரமத்திலே ஸ்வேந ரூபேண நின்று வெளியிட்ட (சாஸ்த்ர) தாத்பர்யமான திருமந்த்ரத்துக்கு சேதநருடைய நிஷ்க்ருஷ்ட வேஷம் விஷயமென்கை. இத்தால் சாஸ்த்ரத்துக்கு தேஹத்திலே நோக்கு, தாத்பர்யத்துக்கு ஸ்வரூபத்திலே நோக்கு என்றதாய்த்து.
(முனிவரை இடுக்கியும்) – திருவாய்மொழி (10-7-7) – இருள்கள் கடியும் முனிவர் – என்று கூறுவதற்கு ஏற்ப ஸ்ம்ருதிகளின் தலைவர்கள் என்று போற்றப்படும் வ்யாஸர் போன்றவர்களை, ஸ்ரீவிஷ்ணுபுராணம் (3-4-5) - க்ருஷ்ண த்வைபாயநம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும், கோ ஹ்யந்ய: புண்டரீகாக்ஷாத் மஹாபாரத க்ருத் பவேத் - க்ருஷ்ண த்வைபாயனர் என்று திருநாமம் கொண்ட வ்யாஸ முனிவரை அனைத்திற்கும் எஜமானனாக உள்ள நாராயணன் என்றே அறிவாயாக. தாமரை போன்ற திருக்கண்கள் கொண்ட அவன் அல்லாமல் மற்ற யார் ஒருவர் உயர்ந்த மஹாபாரதத்தைச் செய்ய இயலும்? - என்று கூறுவதற்கு ஏற்ப, “இவர் ஸர்வேச்வரன்” என்று தானென உரைக்கும்விதமாக அந்தர்யாமியாக நின்று வ்யாஸர் மூலமாக வெளிப்படுத்திய சாஸ்த்ரத்துக்கு, சரீரத்துடன் கூடிய ஆத்மாவே இலக்காக உள்ளது. (முன்னீர் வண்ணன்) - பெரியதிருமொழி (1-4-10) - வதரியாச்சிராமத் துள்ளானைக் கருங்கடல் முன்னீர் வண்ணனை - என்று கூறுவதற்கு ஏற்ப பத்ரிநாத் க்ஷேத்ரத்தில் தானே சிஷ்யனும் ஆசார்யனுமாக, நரநாராயணனாக அவதரித்து, வெளியிட்ட சாஸ்த்ர ஆழ்பொருளை திருமந்த்ரத்திற்கு, ஆத்ம ஸ்வரூபம் இலக்காக உள்ளது. ஆக சாஸ்த்ரத்தின் இலக்கு சரீரம் என்றும், சாஸ்த்ரத்தின் ஆழ்பொருளான திருமந்திரத்தின் இலக்கு ஆத்மா என்றும் தெளிவாகிறது.