Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 16)

முதல் ப்ரகரணம்

சதுர்விதமான தேஹவர்ணாச்ரமாதிகார பல மோக்ஷ ஸாதந கதி யுக தர்ம வ்யூஹ ரூப க்ரியாதிகளை அறிவிக்கிற பாட்டுப் பரப்புக்குப் பெரிய தீவினில் ஒன்பதாம் கூறும் மானிடப் பிறவியும் ஆக்கைநிலையும் ஈரிரண்டி லொன்றும் இளமையுமிசைவு முண்டாய் புகுவரேலு மென்கிறதுக்குள்ளே விக்நமற நின்றவாநில்லாப் ப்ரமாதியைக் கொண்டு அறக்கற்கை அரிதென்றிறே வேதஸாரோபநிஷத் ஸாரதராநுவாக ஸாரதம காயத்ரியில் முதலோதுகிற பொருள் முடிவான சுருக்கைத் தெய்வவண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும் ஓதம்போல் கிளர் நால்வேதக் கடலிலும் தேனும் பாலு மமுதுமாக வெடுத்துப் பெரு விசும்பருளும் பேரருளாலே சிங்காமை விரித்தது.

இனிமேல் சாஸ்த்ரப்ரதிபாத்யார்த்த விசேஷங்களை ஸங்க்ரஹேண ப்ரதிபாதித்துக் கொண்டு, ஏவம் பூத சாஸ்த்ராப்யாஸம் அநேக யோக்யதாஸாபேக்ஷதயா துஷ்கரமென்று தானே திருவுள்ளம் பற்றி ஈத்ருசாநேகயோக்யதா நிரபேக்ஷத்வேந ஸுகரமாய், சாஸ்த்ரதாத்பர்யமுமான திருமந்த்ரத்தை ஈச்வரன் வெளியிட்டருளின படியை அருளிச்செய்கிறார் “சதுர்விதேத்யாதி” சூர்ணையாலே.

அடுத்து, சாஸ்த்ரங்களில் உரைக்கப்பட்டவற்றின் ஆழ்பொருளை சுருக்கமாக அருளிச்செய்து, அப்படிப்பட்ட சாஸ்த்ரங்களை அவற்றின் ஆழ்பொருளுடன் அறிவதற்குப் பலவிதமான தகுதிகள் தேவை என்பதால், அந்தச் சாஸ்த்ரங்கள் கற்பதற்கு மிகவும் கடினமாவை என்று தனது திருவுள்ளத்தில் எண்ணினார். ஆகவே இப்படிப்பட்ட தகுதிகள் ஏதும் அவசியம் இல்லாத காரணத்தால், கற்பதற்கு எளியதாகவும், சாஸ்த்ரங்களின் ஆழ்பொருள்களை உள்ளடக்கியதாகவும் உள்ள திருமந்திரத்தை ஸர்வேச்வரன் வெளியிட்ட விதத்தை அருளிச்செய்கிறார்.

சதுர்விதமான வென்கிறது மேற்சொல்லுகிறவை யெல்லாவற்றிலு மநுவர்த்திக்கிறது; அதாவது – தேவ மநுஷ்ய திர்யக் ஸ்த்தாவராகாரேண நாலு வகைப்பட்ட தேஹம், ப்ராஹ்மண க்ஷத்ரிய வைச்ய சூத்ர ரூபேண நாலு வகைப்பட்ட வர்ணம், ப்ரஹ்மசர்ய கார்ஹஸ்த்த்ய வாநப்ரஸ்த்த ஸந்ந்யாஸாத்மகதயா நாலு வகைப்பட்ட ஆச்ரமம், “அர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ” என்கிற நாலு வகைப்பட்ட அதிகாரம், தர்மார்த்த காம மோக்ஷங்கள் என்கிற நாலு வகைப்பட்ட பலம், ஸாலோக்ய ஸாமீப்ய ஸாரூப்ய ஸாயுஜ்யங்கள் என்கிற நாலு வகைப்பட்ட மோக்ஷம், கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகள் என்கிற நாலு வகைப்பட்ட ஸாதநம், பஞ்சாக்நி வித்யோக்த ப்ரகாரேண வரும் கர்ப்பகதி யாம்யகதி தூமாதிகதி அர்ச்சிராதிகதி யென்கிற நாலு வகைப்பட்ட கதி, க்ருத த்ரேதா த்வாபர கலிகள் என்கிற நாலு வகைப்பட்ட யுகம், “த்யாயந் க்ருதே யஜந் யஜ்ஞை: த்ரேதாயாம் த்வாபரேர்ச்சயந், யதாப்நோதி ததாப்நோதி கலௌ ஸங்கீர்த்ய கேசவம்” என்று சொன்ன த்யாந யஜந அர்ச்சந ஸங்கீர்த்தநங்க ளாகிற நாலு வகைப்பட்ட யுகதர்மம், வாஸுதேவ ஸங்கர்ஷண ப்ரத்யும்நாநிருத்தர்களாகிற நாலு வகைப்பட்ட வ்யூஹம், க்ருதாதி யுகங்களில் “பாலின் நீர்மை” இத்யாதிப்படியே சொல்லுகிற ஸித பீத ச்யாம நீலதயா நாலு வகைப்பட்ட ரூபம், ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார மோக்ஷ ப்ரதத்வங்கள் என்கிற நாலு வகைப்பட்ட க்ரியை. ஆதிசப்தத்தாலே மற்றும் சதுர்விதமான ப்ரமேய விசேஷங்களைச் சொல்லுகிறது. வாஸுதேவா துத்பந்நரான கேசவ நாராயண மாதவர்கள், ஸங்கர்ஷணாதுத்பந்நரான கோவிந்த விஷ்ணு மதுஸூதநர்கள், ப்ரத்யும்நாதுத்பந்நரான த்ரிவிக்ரம வாமன ஸ்ரீதரர்கள், அநிருத்தாதுத்பந்நரான ஹ்ருஷீகேச பத்மநாப தாமோதரர்கள் என்கிற நாலு வகைப்பட்ட வ்யூஹாந்தரம், முதலானவை பலவுமுண்டிறே. ஆக இப்படி சதுர்விதமான அர்த்த விசேஷங்களை ப்ரகாசிப்பிக்கிற “பாட்டும் முறையும்” என்கிற பாட்டில் சொல்லுகிற சாஸ்த்ர விஸ்தரத்துக்கு. (பெரிய தீவினி லித்யாதி) “நாவலம் பெரிய தீவு” என்கிற போகமோக்ஷ ஸாதநாநுஷ்ட்டாந பூமியாகையாலே த்வீபாந்தரங்களில் உத்க்ருஷ்டமான ஜம்பூ த்வீபத்தில் நவகண்டத்திலும் வைத்துக்கொண்டு வர்ஷாந்தரங்களைப் போலே பௌமமான ஸ்வர்க்க மென்னலாம்படி போக பூமியாயிராதே ஸ்வர்க்க மோக்ஷ ரூபமான பலங்களுக்கு ஸாதநாநுஷ்ட்டாநம் பண்ணுகைக் கீடான ஸ்தலமாய், “காயந்தி தேவா: கில கீதகாநி தந்யாஸ்து யே பாரதபூமிபாகே, ஸ்வர்க்காபவர்க்காஸ்பதமார்க்க பூதே பவந்தி பூய: புருஷாஸ் ஸுரத்வாத்” என்று தேவர்களும் ச்லாகிக்கும்படியான நவமகண்டமான பாரத வர்ஷமும், “துர்லபோ மாநுஷோ தேஹ:” என்றும், “அத்ர ஜந்மஸஹஸ்ராணாம் ஸஹஸ்ரைரபி ஸத்தம, கதாசித் லபதே ஜந்து: மாநுஷ்யம் புண்ய ஸஞ்சயாத்” என்றும் சொல்லுகிறபடியே, “மானிடப் பிறவியந்தோ” என்று துர்லபமாகச் சொன்ன மநுஷ்ய ஜந்மமும், “மாநுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷணபங்குர:” என்கிறபடியே, “மின்னின் னிலையில மன்னுயி ராக்கைகள்” என்று அஸ்திரமாகச் சொன்ன சரீரத்தினுடைய ஸ்த்தைர்யமும், சாஸ்த்ர ஜ்ஞாநயோக்ய வர்ணங்களில் ப்ரதம கண்யமாய், “குலங்களாய வீரிரண்டிலொன்று” என்கிற ப்ராஹ்மண ஜந்மமும், “தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத ச்ரேயஸே ஸதா” என்கிறபடியே புத்தி கொழுந்துவிட்டு அப்யஸிக்கைக் குறுப்பான “கிளரொளியிளமை” என்கிற பால்யமும், “யானுமென்னெஞ்சு மிசைந்தோழிந்தோம்” என்கிறபடியே எல்லாத்துக்கும் இசைவு வேண்டுகையாலே இதில் மூளுகைக் குறுப்பான இச்சையுமுண்டாய், “வேதநூற் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்” என்று – “சதாயுர் வை புருஷ:” என்று வேதசாஸ்த்ரோக்தமான ஆயுஸ்ஸு நூறும் மநுஷ்யர்கள் தாங்கள் புகுந்தார்களாகிலுமென்கிற. இவ்வாயுஸ்ஸுக்குள்ளே, “அநந்தபாரம் பஹு வேதிதவ்யம் அல்பச்ச காலோ பஹவச்ச விக்நா:” என்றும், “ச்ரேயாம்ஸி பஹுவிக்நாநி பவந்தி மஹதாமபி” என்றும் சொல்லுகிறபடியே, சாஸ்த்ராப்யாஸம் பண்ணவொண்ணாதபடி வரும் விக்நங்களுமற்று, “நின்றவா நில்லா நெஞ்சு” என்றும், “சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்” என்றும் சொல்லுகிறபடியே ஒரு விஷயத்தில் அரை க்ஷணமும் நில்லாதே இவனையடர்த்துத் தன் வழியே யிழுக்கும் மநஸ்ஸைக் கொண்டு, “கலையறக் கற்ற மாந்தர்” என்கிறபடியே ச்ருதி ஸ்ம்ருத்யாதி சாஸ்த்ரங்களைத் தாத்பர்யம் கைப்படும்படி அதிகரிக்கை. “ஆமாறறிவுடையாராவதரிதன்றே” என்று தாத்பர்யத்திலே யுற்று நிற்கை, யுக்தமாம்படி அறிவுடையராகை அரிதன்றோ வென்கிறபடியே அரிதென்று திருவுள்ளம் பற்றியிறே. (வேதஸாரோபநிஷதித்யாதி) “அஸாரமல்ப லாரஞ்ச ஸாரம் ஸாரதரம் த்யஜேத், பஜேத் ஸாரதமம் சாஸ்த்ரே ரத்நாகர இவாம்ருதம்” என்று ஸாரதமமான சாஸ்த்ரத்தை பஜிப்பானென்கையாலே வக்ஷ்யமாணத்தின் ஸாரதமத்வத்தை தர்சிப்பிக்கிறார்; (வேதஸாரோபநிஷத்) என்றது பூர்வபாகத்தில் ஸாரமான வேதாந்த மென்றபடி. அயதார்த்த ப்ரதிபாதகமாகையாலே அஸாரமான பாஹ்ய சாஸ்த்ரங்கள் போலன்றிக்கே யதா பூதவாதியா யிருந்ததேயாகிலும், ச்யேநவிதி முதலாக ஜ்யோதிஷ்டோமாதிக ளீறாக ஐஹிக பாரலௌகிக புருஷார்த்த ஸாதநங்களை ப்ரதிபாதிக்கிற பூர்வபாகம், க்ஷுத்ர புருஷார்த்த தத் ஸாதந ப்ரதிபாதக மாகையாலும் சாஸ்த்ராஸ்திக்யம் ப்ரக்ருத்யாத்ம விவேகம் இவற்றைப் பிறப்பிக்கும் மாத்ரமாகையாலும் அல்ப ஸாரமாயிருக்கும். அங்ஙனன்றிக்கே அநந்த ஸ்திர பல ப்ரஹ்ம ஸ்வரூபாதிகளையும் தத்ப்ராப்தி ஸாதநத்தையும் ப்ரதிபாதிக்கையாலே உபநிஷத் பாகம் ஸாரமாயிருக்கும். அது தன்னிலும் அவ்வுபநிஷத்துக்களிற் சொல்லுகிற பரம்ப்ரஹ்ம பரதத்வ பரஞ்ஜோதி: பரமாத்மாதி ஸாமாந்யவாசி சப்தங்களாலும், விசேஷவாசியான சம்பு சிவாதி சப்தங்களாலும் ப்ரதிபாதிக்கப்படுகிறான் நாராயணனே யென்று பகவத் பரத்வத்தை ஸுஸ்பஷ்டமாக ப்ரதிபாதிக்கிற அநந்ய பரமான நாராயணாநுவாகம் ஸாரதரமா யிருக்கும். அது தன்னிலுங் காட்டில் ஸர்வஸ்மாத்பரத்வத்துக்கு ப்ரதாந லிங்கமான அவனுடைய ஸர்வாந்தராத்மத்வத்தை ப்ரகாசிப்பிப்பதாய், அவ்யாபகமான ஸகல பகவந் மந்த்ரங்களிலும் ச்ரேஷ்ட்டமாயிருக்கிற வ்யாபக மந்த்ர த்ரயத்தையும் ப்ரதிபாதிக்கிற விஷ்ணு காயத்ரி ஸாரதமாம யிருக்கும். இப்படியிருந்துள்ள காயத்ரியிலே வ்யாப்யாத்யாஹாராதி ஸாபேக்ஷமான வ்யாபகாந்தரங்களில் வ்யாவ்ருத்தமாகையாலே, “நாராயணாய வித்மஹே” என்று ஆதாரம் தோற்ற ப்ரதமத்திலே ஓதப்படுகிற “ஓத்தின் பொருள் முடிவுமித்தனையே - மாதவன் பேர் சொல்லுவதே யோத்தின் சுருக்கு” என்கிறபடியே வேதாந்த தாத்பர்யமாய், “ருசோ யஜூம்ஷி ஸாமாநி ததைவாதர்வணாநிச, ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்ஸ்த்தம்” என்கிறபடியே ஸகல வேத ஸங்க்ரஹமான திருமந்த்ரத்தை, (தெய்வவண்டாயித்யாதி) வேதஸாரமாய், “தேனும் பாலுமமுதுமாய திருமால் திருநாமம்” என்னும்படி யிருக்கிறவித்தை வேதத்தில் நின்றும் அவன் க்ரஹிக்கிறபோது க்ரஹித்த ப்ரகாரத்தை த்ரிப்ரகாரமாக வர்ணித்தருளிச் செய்கிறார். அதாவது, “தூவியம் புள்ளுடைத் தெய்வவண்டா” கையாலே ஷட்பதமானது சாகா ஸஞ்சாரம் பண்ணி மதுவை யெடுக்குமா போலே ஸாரபூத ஸமஸ்தார்த்த போதகதயா ஸர்வ ரஸமான தேன் போலே இருக்கிற வித்தை வேதசாகைகளிலே தேனை க்ரஹிக்குமா போலே க்ரஹித்தபடியும், “அன்னமாயன்றங் கருமறை பயந்தான்” என்கிறபடியே ஹம்ஸ ரூபியானவ னாகையாலே அன்னமானது நீரிலே கலந்து கிடக்கிற பாலை விவேகித் தெடுக்குமாபோலே, “நானும் சொன்னேன் நமரு முரைமின்” என்னும்படி யிருக்கையாலே ஸர்வாதிகாரமான பால் போலேயிருக்கிறவித்தை, “ஓதம் போல் கிளர் வேதநீரிலே” பாலை க்ரஹிக்குமாபோலே க்ரஹித்தபடியும், “அமுதங் கொண்ட பெருமான்” என்கிறபடியே அஸுரபயபீதராய் அமரத்வ ஸாபேக்ஷரான தேவர்களுடைய ரக்ஷணார்த்தமாக க்ஷீராப்தியை மதித்து அம்ருதத்தை வாங்கினாப்போலே ஸம்ஸாரபீதராய் அம்ருதத்வ காமரானவர்களுடைய ரக்ஷணார்த்தமாக விலக்ஷண போக்யமாய் விநாசஹரமு மாகையாலே அம்ருதம்போலே யிருக்கிறவித்தை “நால்வேதக் கடலிலே” அம்ருதத்தை க்ரஹிக்குமாபோலே க்ரஹித்தபடியும் சொல்லுகிறது. ஆக விப்படி வேதஸாரமான வித்தை ஸ்வயமேவ எடுத்து, “அமரர் பெரு விசும்பருளும் பேரருளாளன் – வதரியாச்சிராமத் துள்ளான்” என்கிறபடியே நித்யஸூரிகளுக்கு போக்யமாய் பரமாகாச சப்த வாச்யமான பரமபதத்தைக் கொடுப்பதான நிர்ஹேதுக க்ருபையாலே, “நரநாரணனா யுலகத் தறநூல் சிங்காமை விரித்தவன்” என்கிறபடியே ஸ்ரீபதரிகாச்ரமத்திலே நரநாராயண ரூபேண அவதரித்துத் தானே சிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று ஸ்வரூப சாஸ்த்ரம் ஸங்குசிதமாகாமல் உபதேசாநுஷ்ட்டாநங்களாலே விஸ்த்ருதமாம்படி பண்ணிற்று – (அறக்கற்கை யரிதென்றிறே) என்றத்தோடே அந்வயிக்கிறது.

“சதுர்விதம் = நான்குவிதம்” என்ற பதத்தை அடுத்துள்ள “தேஹம்” என்று தொடங்கி, “க்ரியை” முடிய உள்ள அனைத்துடனும் சேர்க்கவேண்டும். அதாவது: சதுர் தேஹம் - தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் சதுர் வர்ணம் - அந்தணன், க்ஷத்ரியன், வைச்யன், சூத்ரன் சதுர் ஆச்ரமம் - ப்ரம்மசர்யம், க்ருஹஸ்தன், வாநப்ரஸ்தம், ஸ்ந்ந்யாஸம் சதுர் அதிகாரி – கீதை (7-16) - அர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ - இழந்த செல்வத்தை மீண்டும் அடைய விரும்புபவன், புதிய செல்வம் விரும்புபவன், ஆத்ம இன்பத்தை விரும்புபவன், என்னை அடைய விரும்புபவன் - என்பதற்கு ஏற்ப உள்ளவர்கள் சதுர் பலன் - அறம், பொருள், வீடு, இன்பம் சதுர் மோக்ஷம் - ஸர்வேச்வரனுடன் ஒன்றாகப் பரமபதத்தில் இருத்தல் (ஸாமீப்யம்), அவன் போன்ற ரூபம் பெறுதல் (ஸாரூபம்), அவனுடைய அனுபவம் பெறுதல் (ஸாயுஜ்யம்) சதுர்வித உபாயம் அல்லது சாதனம் - கர்மம், ஞானம், பக்தி, ப்ரபத்தி சதுர் கதி - பஞ்சாக்நி வித்யையில் கூறப்பட்ட விதத்தில் உண்டாகும் கருவில் புகுதல் (கர்ப்பகதி), யமலோகம் புகுதல் (யாம்யகதி), ஸ்வர்க்கம் போன்றவற்றை அடைதல் (தூமாதிகதி), மோக்ஷம் புகுதல் (அர்ச்சிராதிகதி) சதுர் யுகம் – க்ருத, த்ரேதா, துவாபர, கலி யுகங்கள் சதுர் தர்மம் - ஸ்ரீவிஷ்ணுபுராணம் (6-2-16) - த்யாயந் க்ருதே யஜந் யஜ்ஞை: த்ரேதாயாம் த்வாபரேர்ச்சயந், யதாப்நோதி ததாப்நோதி கலௌ ஸங்கீர்த்ய கேசவம் - க்ருதயுகத்தில் த்யானத்தாலும், த்ரேதா யுகத்தில் யாகத்தாலும், துவாபர யுகத்தில் அர்ச்சனையாலும் எது அடையப்படுகிறதோ, அது கலியுகத்தில் கேசவனுடைய திருநாமத்தை உச்சரிப்பதால் அடையப்படுகிறது - என்பதற்கு ஏற்ப உள்ளதான த்யானம், யாகம், அர்ச்சனை, திருநாம ஸங்கீர்த்தனம் என்னும் நான்கு தர்மங்கள் சதுர் வ்யூஹம் - வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்நன், அநிருத்தன் சதுர் ரூபம் - திருச்சந்தவிருத்தம்(44) – பாலின் நீர்மை - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரன் க்ருதயுகம் போன்ற நான்கு யுகங்களில் கைக்கொள்ளும் வெண்மை, பசுமை, ச்யாமம், நீலம் என்பதான நிறங்கள் சதுர் க்ரியை - படைத்தல், காத்தல், அழித்தல், மோக்ஷம் அளித்தல். சூர்ணையில் உள்ள “க்ரியாதி” என்பதில் காணப்படும் “ஆதி” சப்தம் மூலம் நான்கு நான்காகப் பிரித்த விதம் கூறுகிறார். அதாவது வாஸுதேவனிலிருந்து வெளிப்பட்ட கேசவன், நாராயணன், மாதவன்; ஸங்கர்ஷணனிடமிருந்து வெளிப்பட்ட கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன்; ப்ரத்யும்நனிலிருந்து வெளிப்பட்ட த்ரிவிக்ரமன், வாமநன், ஸ்ரீதரன்; அநிருத்தனிலிருந்து வெளிப்பட்ட ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் - என்றுள்ள நான்கு வ்யூஹத்தில் உள்ள வேறுபாடுகளும்; ஆமோதம், ப்ரமோதம், ஸம்மோதம், வைகுண்டம் என்பதான ரூபத்தில் உள்ள நான்கு வ்யூஹ மூர்த்திகளின் இருப்பிடங்கள் கூறப்பட்டன. இப்படியாக நான்கு விதமான பொருள்களை உணர்த்துவதான நான்முகன் திருவந்தாதி (76) – பாட்டும் முறையும் - என்னும் பாசுரத்தில் கூறப்படுவதான சாஸ்த்ரங்களைக் கற்பதற்கு ……… (பெரிய தீவினி லித்யாதி) - பெரியாழ்வார் திருமொழி (3-6-1) - நாவலம் பெரிய தீவு - என்னும் பாசுரத்தில் கூறுவதற்கு ஏற்ப இந்த உலக இன்பம் மற்றும் மோக்ஷம் என்பவற்றை அடையவைக்கும் கர்மங்களை இயற்ற ஏற்றதான பூமியாக உள்ளதால், மற்ற ஆறு த்வீபங்களைக் காட்டிலும் உயர்ந்ததான ஜம்புத்வீபம் (ஏழு த்வீபங்கள் - ஜம்பூ, ப்ளக்ஷ, புஷ்கர, குஸ, க்ரௌஞ்ச, சக, ஸால்மல) என்னும் நாவலம் தீவில்; ஸ்வர்க்க லோகம் என்பதான வெறும் இன்பம் அளிக்கவல்ல இடமாக மட்டும் இல்லாமல், ஸ்வர்க்கம் - மோக்ஷம் என்பதான பலன்களுக்கு ஏற்ற உபாயங்களைக் கைக்கொள்ள வல்ல இடமாகவும், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (2-3-24) - காயந்தி தேவா: கில கீதகாநி தந்யாஸ்து யே பாரதபூமிபாகே, ஸ்வர்க்காபவர்க்காஸ்பதமார்க்க பூதே பவந்தி பூய: புருஷாஸ் ஸுரத்வாத் – ஸ்வர்கம், மோக்ஷம் என்பதான பேறுகளை அடைவதற்கு ஏற்றதாக உள்ள பரதகண்டத்தில், தெய்வத் தன்மையை அடைந்து அது முடிந்தவுடன் மீண்டும் மனிதர்களாக யார் பிறக்கிறாரோ அவர் சிறந்தவர் என்று தேவர்கள் பாடுகிறார்கள் - என்று கூறுவதற்கு ஏற்ப, தேவர்களும் போற்றும்படி உள்ளதான ஒன்பது கண்டங்களில் உள்ள ஒன்பதாவது கண்டமான பாரதகண்டத்தில் (ஒன்பது கண்டங்கள் - இளாவ்ருதம், பத்ராச்வம், ஹரிவர்ஷம், கேதுமாலம், ரம்யகம், ஹிரண்மயம், உத்தரகுரு, கிம்புருஷம் மற்றும் பாரதம்); ஸ்ரீமத் பாகவதம் (11-2-21) - துர்லபோ மாநுஷோ தேஹ: - பல சரீரங்கள் எடுக்கின்ற ஆத்மாவுக்கு, ஒரு நொடியில் அழியக்கூடிய மனித சரீரம் கிட்டுவது அரிது – என்றும், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (2-3-24) - அத்ர ஜந்மஸஹஸ்ராணாம் ஸஹஸ்ரைரபி ஸத்தம, கதாசித் லபதே ஜந்து: மாநுஷ்யம் புண்ய ஸஞ்சயாத் - ஆத்மாவானது புண்ணியத்தில் மிகுதி காரணமாகவே ஆயிரம் ஆயிரம் பிறவிகளுக்குப் பின்னர் மனிதப் பிறவியைப் பெறுகிறது – என்றும், திருக்குறுந்தாண்டகம் (90) - மானிடப் பிறவியந்தோ – என்றும் கூறுவதற்கு ஏற்ப அரிதான மனிதப் பிறவி கிட்டினாலும்; (ஆக்கை நிலையும்) - ஸ்ரீமத் பாகவதம் (11-2-21) - மாநுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷணபங்குர: - நொடிப்பொழுதில் அழியக்கூடிய மனிதப்பிறவி – என்றும், திருவாய்மொழி (1-2-2) – மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் – என்றும் கூறுவதற்கு ஏற்ப நிலையற்றதாகக் கூறப்பட்ட அந்தச் சரீரம் நிலைநின்றாலும். (ஈர் இரண்டில் ஒன்றும்) – சாஸ்த்ர ஞானத்தைப் பெறுவதற்குத் தகுதியான வர்ணங்களில் முதன்மையானதும், திருச்சந்தவிருத்தம் (90) - குலங்களாய வீரிரண்டிலொன்று - என்று கூறுவதற்கு ஏற்ப உள்ளதும் ஆகிய அந்தணனாகிய பிறந்தாலும். (இளமையும்) - ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-17-75) - தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத ச்ரேயஸே ஸதா - ஆகவே ஞானம் நிறைந்த ஒருவன் எப்போதும் தனது இளம் வயதிலேயே புகழ்வதற்கு ஏற்றதான செயல்கள் செய்ய முயலவேண்டும் – என்று கூறுவதற்கு ஏற்ப ஞானம் கொழுந்து விட்டுக் கற்பதற்கு ஏற்றதான திருவாய்மொழி (2-10-1) - கிளரொளி இளமை - என்று கூறுவது போன்றுள்ள இளமைப்பருவத்துடன் இருந்தாலும். (இசைவும் உண்டாய்) - பெரியதிருவந்தாதி (26) - யானுமென்னெஞ்சு மிசைந்தோழிந்தோம் – ஒன்று கூறுவதற்கு ஏற்ப எந்தச் செயலில் ஈடுபடுவதற்கும் ஆழ்ந்த மனவிருப்பம் அவசியம் என்பதால், அந்தச் செயலில் ஈடுபடுவதற்கான ஆசையும் உண்டானாலும். (புகுவரேலும்) – திருமாலை (3) – வேதநூற் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும் – என்றும், சதாயுர் வை புருஷ: - மனிதன் நூறு வயது உடையவன் - என்றும் கூறுவதற்கு ஏற்ப நூறு வயது ஆயுள் பெற்றனர் என்றாலும். (என்கிறதுக்குள்ளே) – இப்படியாகப் பெற்ற இந்த ஆயுளுக்குள்ளே, அதாவது மரணம் அடைவதற்குள். (விக்னமற) – உத்தரகீதை (7-10) - அநந்தபாரம் பஹு வேதிதவ்யம் அல்பச்ச காலோ பஹவச்ச விக்நா: - எல்லையற்ற பல சாஸ்த்ரங்கள் கற்பதற்கு உள்ளன, அறிவதற்கு உள்ள காலம் மிகவும் குறைந்தது, அதில் ஏற்படும் தடைகள் ஏராளம் - என்றும், ச்ரேயாம்ஸி பஹுவிக்நாநி பவந்தி மஹதாமபி – மஹான்கள் செய்யும் செயல்களுக்குக்கூட தடைகள் ஏற்படுகின்றன – என்றும் கூறுவதற்கு ஏற்ப சாஸ்த்ரங்களைக் கற்க இயலாதபடி உண்டாகும் தடைகள் ஏதும் இல்லாமல். (நின்றவா நில்லா பிரமாதியைக்கொண்டு)- பெரிய திருமொழி (1-1-4) - நின்றவா நில்லா நெஞ்சு - என்றும், ஸ்ரீமத் பகவத்கீதை (6-34) - சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம் – அலைந்து திரியும் தன்மை கொண்டதான மனம் அந்தத் தன்மை காரணமாக எப்படிப்பட்ட வலிமை கொண்டவரையும் கலங்கும்படிச் செய்யும் – என்றும் கூறுவதற்கு ஏற்ப எந்த ஒரு விஷயத்திலும் அரைநொடிப்பொழுது கூட நிலையாக நிற்காமல் மனிதனை இழுத்துக்கொண்டு தனது வழியில் செல்லும் மனதின் மூலமாக. (அறக்கற்கை) – திருமாலை(7) - கலையறக் கற்ற மாந்தர் - என்று கூறுவதற்கு ஏற்ப ச்ருதி, ஸ்ம்ருதி உள்ளிட்ட சாஸ்த்ரங்களை அவற்றின் ஆழ்பொருளுடன் சேர்த்துக் கற்பது என்பது. (அரிதென்றிறே) - பெரியதிருவந்தாதி (37) - ஆமாறறிவுடையாராவதரிதன்றே - என்று கூறுவதற்கு ஏற்ப ஆழ்ந்த பொருளில் பொருந்தி நிற்பது அரிது என்று திருவுள்ளத்தில் எண்ணியதால்தான் சூர்ணையின் இறுதியில் “பேரருளாலே சிங்காமை விரித்து” _ தனது க்ருபை காரணமாக விரிவாக உரைத்தான் – என்றார். (வேதஸாரோபநிஷதித்யாதி) - வைகுண்ட தீக்ஷிதீயம் - அஸாரமல்ப லாரஞ்ச ஸாரம் ஸாரதரம் த்யஜேத், பஜேத் ஸாரதமம் சாஸ்த்ரே ரத்நாகர இவாம்ருதம் - சாரம் ஏதும் இல்லாதபடி வேதங்களுக்குப் புறம்பாக உள்ளவற்றையும், அற்பமான பலன் அளிக்கவல்லதான வேதத்தின் முற்பாகத்தையும் (அல்லது கர்மகாண்டம்), வேதங்களின் சாரமாக உள்ள உபநிஷத்துக்களையும், உபநிஷத்துக்களின் சாரமாக உள்ள நாராயண அநுவாகத்தையும் கைவிட வேண்டும்; கடலில் மூழ்கி அமிர்தம் எடுப்பது போன்று நாராயண அநுவாகத்தின் சாரமாகிய விஷ்ணுகாயத்ரியை எடுத்தல் வேண்டும் - என்று கூறுவதற்கு ஏற்ப, சாரத்தில் மிகவும் நுண்ணிய பகுதியை எடுத்துப் புஜித்தல் வேண்டும் என்பதை அனுசரித்து, தான் இனி அருளிச்செய்ய உள்ள திருஅஷ்டாக்ஷரத்தின் சீர்மையை உரைக்கிறார். (வேதஸாரோபநிஷத்) - வேதத்தின் பூர்வபாகமாகிய வேதாந்தம். அவை உண்மை அல்லாதவற்றையும் உணர்த்துகின்றன. ஆக சாரம் ஏதும் இல்லாத மற்ற சாஸ்த்ரங்கள் போன்று அல்லாமல், உள்ளதை உள்ளபடிக் கூறுவதாக உள்ளபோதிலும், ச்யேநவிதி தொடங்கி ஜ்யோதிஷ்டோமம் முடிய இந்த உலகில் இன்பம் அடைவதற்கான மார்க்கங்கள், ஸ்வர்கம் போவதற்கான மார்க்கங்கள் மற்றும் இவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து வேதங்களின் முற்பாகம் உரைக்கின்றன; ஆகவே தாழ்ந்த பலன்களைப் பெற்றுத் தரவல்ல வழிமுறைகளை உரைப்பதாலும், சாஸ்த்ரங்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்துதல் மற்றும் சரீரமும் ஆத்மாவும் வெவ்வேறு போன்றதான ஞானத்தை ஏற்படுத்துவதாலும், இந்தப் பூர்வபாகம் அல்பசாரம் என்றே கருதப்படும். இவ்விதம் அல்லாமல் எப்போதும் ஸ்திரமாக உள்ள மோக்ஷம், ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் போன்றவற்றையும், இவற்றை அடைவதற்கான வழிமுறைகளையும் உணர்த்துவதால் உபநிஷத் பாகங்கள் வேதங்களுடைய சாரமாக உள்ளன. (ஸாரதரநுவாக) - அந்த உபநிஷத்துக்களில் கூறப்படும் பரம்ப்ரஹ்ம, பரதத்வம், பரஞ்ஜ்யோதி, பரமாத்மா முதலான பொதுவான சொற்களால் உணர்த்தப்படுபவனும், சிறப்புச் சொற்களாகிய சம்பு, சிவன் போன்றவற்றாலும் உறுதிபட உரைக்கப்படுபவன் நாராயணனே ஆவான் என்று ஸர்வேச்வரனுடைய முதன்மைத் தன்மையை உறுதிபடத் தெளிவாக உரைக்கும் காரணத்தால், அந்த உபநிஷத்துக்களில் நாராயண அனுவாகம் என்பது சாரத்திலும் நுண்ணிய சாரமாக இருப்பதாகும். (ஸாரதம காயத்ரி) - அத்தகைய நாராயண அனுவாகத்தைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவனாக உள்ள ஸர்வேச்வரத் தன்மைக்கு அடையாளமான அனைத்து உயிர்களுக்குள்ளும் நின்று அவற்றைத் தாங்கி இருத்தல் என்பதை உணர்த்துவதும், அவன் எங்கும் பரந்து நிற்பதை நேரடியாக உணர்த்தாமல் இருப்பதான ஸர்வேச்வரனைக் குறித்த மற்ற அனைத்து மந்த்ரங்களைக் காட்டிலும் அவன் எங்கும் வ்யாபித்து நிற்பதைக் கூறுவதால் உயர்ந்ததாக உள்ளதும் ஆகிய விஷ்ணுகாயத்ரி மிகவும் நுட்பமான சாரமாகும். (முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை) - இப்படியாக உள்ள விஷ்ணுகாயத்ரியில், எங்கும் வ்யாபித்து நிற்பதை உணர்த்தவல்லதான சொற்களில் இடம் பெறுவதான விஷ்ணு, வாஸுதேவன் என்பதைக் காட்டிலும் வேறுபட்டதாக உள்ளதால், புருஷஸூக்தம் - நாராயணய வித்மஹே - நாராயணனை உபாஸிக்கிறோம் - என்னும்படி அதிகமான விருப்பு வெளிப்படும்படியும், இரண்டாம் திருவந்தாதி (39) - ஓத்தின் பொருள் முடிவுமித்தனையே - மாதவன் பேர் சொல்லுவதே யோத்தின் சுருக்கு - என்பதற்கு ஏற்ப அனைத்து வேதாந்தங்களின் ஆழ்பொருளாய் உள்ளதும், பாஞ்சராத்ரம் - ருசோ யஜூம்ஷி ஸாமாநி ததைவாதர்வணாநிச, ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்ஸ்த்தம் - ருக், யஜுர், ஸாம, அதர்வண வேதங்களிலும் மற்ற இதிஹாஸங்களிலும் உள்ள அனைத்தும் அஷ்டாக்ஷர மந்த்ரத்தின் உள்ளே பொதித்துள்ளன - என்பதற்கு ஏற்ப அனைத்து வேதங்களுடைய சுருக்கமாக உள்ளதும் ஆகிய “ஓம் நமோ நாராயணாய” என்பதான திருமந்த்ரத்தை. – வேதங்களின் ஸாரமாகவும், பெரிய திருமொழி (6-10-6) - தேனும் பாலுமமுதுமாய திருமால் திருநாமம் - என்னும்படியும் உள்ள இந்தத் திருமந்த்ரத்தை வேதங்களிலிருந்து அவன் எடுத்தான்; இப்படியாக அவன் இந்த ஸாரத்தை எடுத்த முறையை மூன்றுவிதமாக வர்ணித்து அருளிச்செய்கிறார். அவையாவன: திருவாய்மொழி (9-9-4) - தூவியம் புள்ளுடைத் தெய்வவண்டு – என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரன் தெய்வவண்டு என்பதால், ஆறுகால்கள் கொண்ட வண்டு ஒன்று பல இடங்களிலும் அலைந்து திரிந்து தேனை எடுப்பது போன்று, அந்தத் தேன் போன்றுள்ள இந்தத் திருமந்த்ரத்தை, வேதங்களாகிய சாகைகளில் இருந்து தேனை எடுப்பது போன்று எடுத்தான்; எடுத்த பின்னர் தனது கருணை காரணமாக விரிவாக உணர்த்தினான். பெரிய திருமொழி (5-7-3) - அன்னமாயன்றங் கருமறை பயந்தான் - என்பதற்கு ஏற்ப ஹம்ஸ வடிவமாக அவதாரம் செய்தவன் என்பதால், அன்னம் ஒன்று நீரில் கலந்து நிற்கும் பாலைத் தனியே பிரித்து எடுக்கும் செயல் போன்று, பெரிய திருமொழி (6-10-6) - நானும் சொன்னேன் நமரு முரைமின் - என்பதற்கு ஏற்ப அனைவருக்கும் ஏற்றபடியான பால் போன்றுள்ள இந்தத் திருமந்த்ரத்தை, திருவாய்மொழி (1-8-10) - ஓதம் போல் கிளர் வேதநீரனே - என்பதற்கு ஏற்ப பாலைப் பிரித்து எடுப்பது போன்று எடுத்தான். பெரிய திருமொழி (6-10-3) - அமுதங் கொண்ட பெருமான் - என்பதற்கு ஏற்ப அசுரர்களைக் கண்டு அச்சம் கொண்டவர்களாக, இறவாமை விரும்பியவர்களாக உள்ள தேவர்களைப் பாதுகாப்பதற்காக திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தது போன்று, ஸம்ஸாரத்தைக் கண்டு அச்சம் கொண்டு மோக்ஷத்தை அடைய விரும்புபவர்களைக் காப்பாற்றுவதற்காக மேன்மை உள்ளதாகவும், இன்பம் அளிப்பதாகவும், ஸம்ஸாரத்தை நீக்குவதால் அமிர்தம் போன்றதாகவும் இருக்கிற திருமந்த்ரத்தை, பெரியாழ்வார் திருமொழி (4-3-11) – நால்வேதக் கடலமுதை - என்பதற்கு ஏற்ப அமிர்தத்தைத் திருப்பாற்கடலிலிருந்து எடுப்பது போன்று எடுத்தான். – இப்படியாக அனைத்து வேதங்களுடைய சாரமாக உள்ள இந்தத் திருமந்த்ரத்தைத் தானாகவே எடுத்து, பெரிய திருமொழி (1-4-4) - அமரர் பெரு விசும்பருளும் பேரருளாளன் வதரியாச்சிராமத் துள்ளான் - என்பதற்கு ஏற்ப நித்யஸூரிகளுக்கு இனியதாக உள்ளதும், “பரமாகாசம்” என்று போற்றப்படுவதும் ஆகிய பரமபதத்தை அளிப்பதாகிய தனது காரணம் இன்றிப் பொங்கிப் பெருகும் க்ருபை காரணமாக, பெரிய திருமொழி (10-6-1) - நரநாரணனா யுலகத் தறநூல் சிங்காமை விரித்தவன் - என்று கூறுவதற்கு ஏற்ப பத்ரிநாத் என்ற திவ்யதேசத்தில் நரநாராயண ரூபமாகத் தானே அவதரித்து, தானே சிஷ்யனும் தானே ஆசார்யனுமாய் நின்று, ஆத்மாவின் ஸ்வரூபத்தை உணர்த்தவல்ல சாஸ்த்ரம் எந்தவிதத்திலும் குறைந்து விடாமல், தனது உபதேச முறைகளால் நன்றாக விரியும்படியாக அருளிச்செய்தான்.