Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 15)
முதல் ப்ரகரணம்
அதுதானும் ஆஸ்திக்ய விவேக அந்யசேஷத்வ ஸ்வஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தி பாரதந்த்ர்யங்களை யுண்டாக்கின வழி.
இப்படி வாத்ஸல்யத்தாலே செய்தானாகிலும் குணத்ரய வச்யரான சேதநருக்கு ருச்யநுகுணமான பலஸாதநங்களை விதிக்கிற பந்தக சாஸ்த்ரங்களையும் தர்சிப்பித்தால் அவர்கள் ஸம்ஸரித்தே போகைக்குடலாகாதோ வென்ன அதுவும் க்ரமேண அவர்க ளீடேறுகைக்கு இட்டவழி யென்கிறார் மேல் – (அதுதானு மித்யாதி).
இவ்விதம் அவர்களிடம் கொண்ட அன்பு காரணமாகச் செய்கிறான் என்றாலும், மூன்று குணங்களுக்கு வசப்பட்டு நிற்கும் மனிதர்களுக்கு, அவரவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப பலன்களை அளிக்கவல்லதான, பிறவியில் கட்டுண்டு கிடக்க வழி செய்யும் சாஸ்த்ரங்களை அளிப்பதால், அந்த மனிதர்கள் அந்த சாஸ்த்ரங்கள் காரணமாகவே பிறவியில் உழன்றபடி உள்ளதற்குக் காரணமாகிவிடும் அல்லவோ என்ற கேள்வி எழலாம். இதற்கு - அப்படிப்பட்ட சாஸ்த்ரங்களை ஏற்படுத்தியது, அவர்களைப் படிப்படியாகக் கரை ஏற்றுவதற்கான வழியே ஆகும் - என்று விடை அளிக்கிறார்.
– அதாவது, மோசக சாஸ்த்ர மாத்ரத்தை தர்சிப்பியாதே ச்யேநவிதி முதலான பந்தக சாஸ்த்ரங்களையும் தர்சிப்பித்ததுதானும் தம:ப்ரசுரராய் அர்த்தார் ஜநத்துக்காகப் பரஹிம்ஸாசீலராய்த் திரிகிற நாஸ்திகரைக் குறித்த மோஷத்தை விதித்தால், அவர்களுக்கு அது ருசியாமையாலே அந்த பரஹிம்ஸா ரூபமான அபிசார கர்மத்தை, “ச்யேநேநாபிசரந் யஜேத” என்று விதித்து தத்பலஸித்தியாலே அவனுக்கு “சாஸ்த்ரமுண்டு” என்கிற ஆஸ்திக்யத்தை யுண்டாக்கி, ஆஸ்திகனான பின்பு “ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்ககாமோ யஜேத” இத்யாதிகளாலே ஸ்வர்க்காதி புருஷார்த்த தத்ஸாதநங்களை விதித்து அவ்வழியாலே ப்ரக்ருத்யாத்ம விவேகத்தை யுண்டாக்கியும் இப்படியாலே அந்ய சேஷத்வ நிவ்ருத்தியை யுண்டாக்கி, அநந்தரம் பரமாத்ம போக வைலக்ஷண்யத்தையும் தத்ப்ராப்தி ஸாதந பக்தியையும் காட்டி, அவ்வழியாலே ஸ்வஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தியை யுண்டாக்கியும், அநந்தரம் உபாயாந்தர துஷ்கரத் வாதிகளாலே தளருமளவில் ஸ்வயத்ந நிர்வ்ருத்தி ரூப ப்ரபத்தியிலே மூட்டி ஸ்வரூப யாதாத்ம்ய வேஷமான பாரதந்த்ர்யத்தை யுண்டாக்கியும் இப்படி க்ரமத்திலே ஈடேறுகைக்கு இட்ட வழியிறே என்றபடி. “இவை கிட்டமும் வெட்டுவேளானும் போலே” என்று தொடங்கி இவ்வளவாக, ஸம்ஸார மோக்ஷ காரண பரம்பரைகளிலே சரமாவதிகளான அசிதயந ஸம்பந்தங்கள் ஆத்மவஸ்துவுக்குச் செய்யுமவைகளும், அதில் அசித்ஸம்பந்தம் அநித்யம் அயநஸம்பந்தமே நித்யமென்றும், அந்த அயநஸம்பந்தம் கீழ்ச் சொன்ன சாஸ்த்ர ப்ரதாநத்துக்கு ஹேதுவென்றும், அதில் மோசக சாஸ்த்ரமாத்ரமன்றிக்கே பந்தக சாஸ்த்ரத்தையும் தர்சிப்பித்தது, வத்ஸலனாகையாலே சேதந ருச்யநுகுணமாக வென்றும், அதுதானும் க்ரமத்திலே அவர்கள் உஜ்ஜீவிப்பிக்கைக்கு இட்டவழியென்றும் சொல்லிற்றாயிற்று.
அதாவது பந்தங்களிலிருந்து வெளியேற்றவல்ல சாஸ்த்ரங்களைத் தொடக்கத்தில் காண்பித்துக் கொடுக்கவல்ல, ச்யேந யாகம் போன்றவற்றை வெளிப்படுத்திக் கொடுப்பது ஏன் என்றால் - தாமஸ குணத்தில் எப்போதும் ஈடுபட்டவராக, பொருள் ஈட்டும் பொருட்டு மற்றவர்களைத் துன்புறுத்தியபடி திரிகின்ற நாஸ்திகர்களுக்கு மோக்ஷ சாஸ்த்ரங்களை வெளிப்படுத்தினால் அவர்களுக்கு அதில் எந்தவிதமான ஈடுபாடும் உண்டாகாது. ஆகவே, மற்றவர்களைத் துன்புறுத்துவதான அபிசாரகர்மத்தை, ஆபஸ்தம்ப ஸூத்ரம் – ச்யேநேநாபிசரந் யஜேத – விரோதிகளை அழிக்க எண்ணுபவன் சியேநம் என்ற பெயர் கொண்ட யாகத்தை நடத்தித் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வானாக - என்று விதித்து, அந்த யாகத்தின் பலனை அவன் அனுபவிப்பதன் மூலமாக அவனுடைய மனதில் “சாஸ்த்ரங்கள் உண்டு” என்ற நம்பிக்கையை ஸர்வேச்வரன் ஏற்படுத்துகிறான். இப்படியாக அவனை ஆஸ்திகனாக்கிய பின்னர், ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்ககாமோ யஜேத - ஸ்வர்க்கம் விருப்புபவன் ஜ்யோதிஷ்டோமம் என்னும் யாகத்தை இயற்றுவானாக - போன்ற விதிகள் மூலமாக ஸ்வர்க்கம் போன்ற பேறுகளை அடைவதற்கு உறுப்பான சாதனங்களை விதிக்கிறான். அதன் மூலம் அவனுக்கு ஆத்மாவும் சரீரமும் வெவ்வேறு என்ற விவேகத்தை ஏற்படுத்தி, இந்த விவேகம் பிறந்த பின்னர் ஆத்மா மூலம் கிட்டவல்ல இன்பத்தை உணர்த்துகிறான். அதன் பின்னர் ஸ்வர்க்கம் போன்ற மற்ற இன்பங்களிலிருந்து அவனை விடுவித்து, தொடர்ந்து ஸர்வேச்வரனுடன் கூடியிருத்தல் என்ற இன்பத்தின் மேன்மையை உணர்த்தி, அதனை அடைய வைக்கவல்ல உபாயமான பக்தியைக் காண்பிக்கிறான். அதன் மூலம் “தான் தனக்கே அடிமை” என்பதான அவனுடைய எண்ணத்தை மாற்றி, தொடர்ந்து நிலைநிற்பதற்கு மிகவும் கடினமான உபாயமாக உள்ள பக்தி போன்றவற்றில் ஈடுபட்டு அவன் தளர்ந்து போகும்போது, அவனுடைய முயற்சி இல்லாமல் கிட்டவல்லதான ப்ரபத்தி என்பதில் அவனைத் திருப்புகிறன். அதனைத் தொடர்ந்து ஆத்மாவின் இயல்பான “ஸர்வேச்வரனுக்கு மட்டுமே ஆத்மா வசப்பட்டது” என்பதான நிலையை அவனுக்கு உணர்த்துகிறான். இப்படியாகப் படிப்படியாக அவனைக் கரையேற்ற ஸர்வேச்வரன் செய்யும் செயல்பாடு இதுவாகும். ஆக சூர்ணை (11) - இவை கிட்டமும் வெட்டுவேளானும் போலே - என்று தொடங்கி, இந்தச் சூர்ணை முடிய - ஸம்ஸாரம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றுக்குக் காரனமாக உள்ளதான ப்ரக்ருதி ஸம்பந்தம் மற்றும் நாராயண ஸம்பந்தம் ஆகியவை ஆத்மாவுக்குச் செய்யும் செயல்கள் இவை என்றும்; அவற்றில் ப்ரக்ருதி ஸம்பந்தம் நித்யம் அல்லாதது, நாராயண ஸம்பந்தமே நித்யமானது என்றும்; கீழே உரைத்தது போன்று ஸர்வேச்வரன் சாஸ்த்ரங்களை வெளிப்படுத்த முதன்மையான காரணம் நாராயண ஸம்பந்தமே ஆகும் என்றும்; அந்த சாஸ்த்ரங்களில் மோக்ஷ சாஸ்த்ரங்கள் மட்டும் அல்லாமல் பந்தம் ஏற்படுத்தவல்ல சாஸ்த்ரங்களையும் வெளிப்படுத்தியதன் காரணம், தாய் போன்றவன் என்பதால் அவரவர்களுடைய விருப்பத்திற்கு வெளிப்படுத்தினான் என்றும்; இவ்விதம் அவன் செய்ததும் அவர்களைப் படிப்படியாகக் கரை ஏற்ற அவன் செய்த வழியாகும் என்றும் கூறப்பட்டது.