Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 14)
முதல் ப்ரகரணம்
வத்ஸலையான மாதா பிள்ளை பேகணியாமல் மண் தின்னவிட்டு ப்ரத்யௌஷத மிடுமாபோலே எவ்வுயிர்க்கும் தாயிருக்கும் வண்ணமானவிவனும் ருசிக்கீடாகப் பந்தமும் பந்தமறுப்பதோர் மருந்தும் காட்டுமிறே.
இப்படி ஸம்பந்தமடியாகச் செய்தானாகில் மோக்ஷ ஹேதுவான சாஸ்த்ரங்களையே காட்டாதே ஐஹிகபாரஸௌகிக போக ஸாதநவிதாயகதயா பந்த ஹேதுவான சாஸ்த்ரங்களையும் காட்டுவானென்னென்னச் சொல்லுகிறது (வத்ஸலை யித்யாதி).
– இவ்விதம் தன்னுடன் நமக்கு உள்ள ஸம்பந்தம் காரணமாகவே அனைத்து சாஸ்த்ரங்களை அவன் வெளியிட்டான் என்றால், மோக்ஷத்திற்குக் காரணமாக உள்ள சாஸ்த்ரங்களை மட்டுமே அல்லவா வெளிப்படுத்தியிருக்கவேண்டும்? இந்த உலக இன்பம், ஸ்வர்க்கம் போன்ற இன்பம் ஆகியவற்றையும், அவற்றைப் பெறும் உபாயங்களையும் கூறும் காரணத்தால் பந்தப்படுத்தவல்ல சாஸ்த்ரங்களை அவன் ஏன் வெளிப்படுத்தவேண்டும் என்பதற்கான விடையை அருளிச்செய்கிறார்.
அதாவது, வாத்ஸல்யயுக்தையான பெற்ற தாயானவள் மண்ணை யாசைப்பட்ட பிள்ளை பேகணியாமல் முந்துற மண்ணைத் தின்னவிட்டுப் பின்னை அதுக்கு மாற்று மருந்திடுமாபோலே, “எவ்வுயிர்க்கும் தாயோன்” என்றும், “தாயிருக்கும் வண்ணமே” என்றும் சொல்லுகிறபடியே ஸகலாத்மாக்களளவிலும் மாத்ருவத் வத்ஸலனான விவனும் சேதநருடைய ருசிக்கீடாக பந்தகங்களையும் தர்சிப்பித்து, பின்னை பந்த நிவர்த்தக பேஷஜமானவற்றையும் தர்சிப்பிக்குமிறே யென்கை. இத்தால் இப்படிச் செய்தது ஸம்பந்த ப்ரயுக்த வாத்ஸல்ய கார்யமாகையாலே ஸம்பந்தக் கொத்தை வாரதென்றதாயிற்று.
தனது குழந்தையிடம் மிகுந்த வாத்ஸல்யம் கொண்டிருக்கும் ஒரு தாய், தனது குழந்தை மண்ணைத் தின்னவேண்டும் என்று விரும்பும்போது, அதனுடைய மனம் வருத்தம் அடையவிடாமல் மண்ணைத் தின்னவிட்டு, அதன் பின்னர் அதற்கான மருந்தை அளிப்பாள். அதே போன்று திருவாய்மொழி(1-5-3) - எவ்வுயிர்க்கும் தாயோன் – என்றும், பெரியதிருமொழி (11-6-6) - தாயிருக்கும் வண்ணமே - என்றும் கூறுவதற்கு ஏற்ப அனைத்து ஆத்மாக்களிடத்திலும் அவற்றின் தாய் போன்று வாத்ஸல்யம் நிறைந்த ஸர்வேச்வரன், சேதநர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப பந்தங்களை உண்டாக்கி, தொடர்ந்து அந்தப் பந்தங்களை நீக்கவல்ல வழிகளையும் காண்பித்துத் தருகிறான். இவ்விதம் இவன் செய்வது ஸம்பந்தம் காரணமாக ஏற்படும் வாத்ஸல்யத்தால் ஆகும் என்பதால், ஸம்பந்தம் காரணமாக எந்தவிதமான தோஷமும் வராது என்று கருத்து.