Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 13)

முதல் ப்ரகரணம்

இந்த உதரத்தரிப்பு த்ரைகுண்ய விஷயமானவற்றுக்கு ப்ரகாசகம்.

– இவ்வயந ஸம்பந்தமே கீழ்ச் சொன்ன சாஸ்த்ர ப்ரதாநத்துக்கு ஹேது வென்கிறது மேல் – (இந்தவித்யாதி).

இத்தகைய நாராயணன் ஸம்பந்தம் என்பதே முதல் சூர்ணையில் உரைத்தது போன்று, ஸர்வேச்வரன் நாம் கரையேற நமக்கு சாஸ்த்ரங்களை அளித்தற்கான காரணம் என்று இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.

– அதாவது, இந்த நாராயணத்வ ப்ரயுக்தமான குடல்துடக்கு, “த்ரைகுண்ய விஷயா வேதா:” என்கிறபடியே ஸத்வ ரஜஸ் தமோ ரூப குணத்ரய வச்யரான சேதநரை விஷயமாகவுடைய வேதங்களை ப்ரகாசிப்பிக்கைக்கு ஹேதுவென்றபடி. தம: ப்ரசுரராயும், ரஜய: ப்ரசுரராயும், ஸத்வ ப்ரசுரராயுமிருக்கும் வேதநருடைய ருச்யநுகுணமான புருஷார்த்த - தத்ஸாதநங்களையிறே பூர்வபாகத்தில் பரக்கச்சொல்லுகிறது. ஆகையால் (த்ரைகுண்ய விஷயமானவை) என்கிறது. இத்தால் (நீர்மையினால் அருள் செய்தான்) என்று கீழ்ச் சொன்ன சாஸ்த்ர ப்ரதாநத்துக்கு ப்ரதாந ஹேது ஸம்பந்த மென்றதாயிற்று.

உதரத் தரிப்பு என்றால் வயிற்றில் தாங்கி இருத்தல் என்பதான சரீர ஸம்பந்தம். “நாரங்கள் என்று கூறப்படும் அனைத்து சேதனர்களுக்கான இருப்பிடம்” என்ற பொருள்படும் நாராயணன் என்ற காரணத்தால் ஏற்பட்டதான உடல்-உயிர் ஸம்பந்தம் போன்ற தொடர்பு என்பதே, ஸ்ரீமத் பகவத்கீதை (3-45) - த்ரைகுண்ய விஷயா வேதா: - வேதங்கள் மூன்று குணங்கள் கொண்ட - என்று கூறுவதற்கு ஏற்ப ஸத்வம்-ரஜோ-தமஸ் என்ற மூன்று குணங்களால் வசப்பட்டு நிற்கும் மனிதர்களை இலக்காக உள்ள வேதங்களை அவன் வெளிப்படுத்தக் காரணமாக உள்ளது என்று கருத்து. தாமஸ குணம் நிறைந்தவர்களாகவும், ரஜோ குணம் நிறைந்தவர்களாகவும், ஸத்வ குணம் நிறைந்தவர்களாகவும் காணப்படும் சேதனர்களுக்கு, அவரவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்றபடியாக உள்ள பேறுகள், அந்தப் பேறுகளை அடைய வைக்கும் உபாயங்கள் ஆகியவற்றை வேதங்களுடைய முற்பாகம் விரிவாக உரைக்கிறது. அதனால்தான் வேதங்களை - த்ரைகுண்ய விஷயமானவை - மூன்று குணங்கள் கொண்ட மனிதர்களை இலக்காக உடையது - என்றார். இதன் மூலம், சூர்ணை (1) – நீர்மையினால் அருள் செய்தான் - என்று கூறப்பட்டபடி, சாஸ்த்ரங்களை வெளிப்படுத்தியதற்கான முதல் காரணம் இவனுக்கு நம்முடன் உள்ள ஸம்பந்தமே என்றாகிறது.