Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 12)
முதல் ப்ரகரணம்
ஒன்று கூடினதாய்ப் பற்றறுக்க மீண்டொழிகையாலே பழவடியே னென்னும தொன்றுமே ஒழிக்க வொழியாதது.
இப்படி அநாதியாகச் சொன்ன உபயஸம்பந்தமும் ஆத்மாவுக்கு நித்யமா யிருக்குமோ வென்கிற சங்கையிலே சொல்லுகிறது (ஒன்றித்யாதி).
இவ்விதம் எல்லையற்ற காலமாகத் தொடர்ந்தபடி உள்ளதான உலகத்துடனான ஸம்பந்தம், நாராயணனுடனான ஸம்பந்தம் ஆகிய இரண்டும் ஆத்மாவுக்கு எப்போதுமே இருக்குமோ என்று சந்தேகத்திற்கு விடை அளிக்கிறார்.
அதாவது அசித்ஸம்பந்தம், “பெருந்துய ரிடும்பையில் பிறந்து கூடினேன்” என்கையாலே ஆத்மாவுக்கு ஸ்வரூபமன்றிக்கே வந்தேறியாய், “வினை பற்றறுக்கும்” என்று ஒரு ஸர்வசக்தி ஸவாஸநமாகப்போக்க, “அடைந்த வருவினையோடல்லல் நோய் பாவம் மிடைந்தவை மீண்டொழிய” என்கிறபடியே நிவ்ருத்தமாய் விடுகையாலே, “திருமாலே நானு முனக்குப் பழவடியேன்” என்னும்படி அநாதியாயிருக்கிற சேஷசேஷி பாவரூப பகவத் ஸம்பந்த மொன்றுமே, “உறவேல் நமக்கிங்கொழிக்க வொழியாது” என்கிறபடியே ஈச்வரனாலும் சேதநனாலும் கழிக்கப் பார்த்தாலும் கழிக்கப் போகாத தென்கை. இத்தால் அசித்ஸம்பந்தம் ஆகந்துகமாய் நிருபாதிக மாகையாலே நித்யமா யிருக்கு மென்றதாயிற்று. ஆனால் ஆகந்துகமான வித்தை அநாதி யென்பா னென் னென்னில்; வந்தேறின காலத்துக்கு அடி தெரியாமையாலே அநாதியென்று ப்ரமாணங்கள் சொல்லுகையாலே ஒருநாள் வரையிலே பகவத் ப்ரஸாதத்தாலே அது கழியக் காண்கையாலே வந்தேறி யென்னுமிடம் நிச்சிதமிறே.
இந்த உலகத்துடனான ஸம்பந்தம் என்பது பெரியதிருமொழி (1-1-1) - பெருந்துய ரிடும்பையில் பிறந்து கூடினேன் - என்று கூறுவதற்கு ஏற்ப ஆத்மாவுக்கு இயற்கையாக இல்லாமல், நடுவில் வந்து சேர்ந்ததாகும். ஆகவே அதனைப் பெரிய திருமொழி (11-4-9) - வினை பற்றறுக்கும் - என்பதற்கு ஏற்ப அனைத்து சக்தியும் கொண்ட ஸர்வேச்வரன் வாசனையுடன் நீக்கிவிடும்போது, முதல் திருவந்தாதி (59) - அடைந்த வருவினையோடல்லல் நோய் பாவம் மிடைந்தவை மீண்டொழிய - என்பதற்கு ஏற்ப நீங்கிவிடுகிறது. ஆகவே, திருப்பல்லாண்டு (11) - திருமாலே நானு முனக்குப் பழவடியேன் - என்பதற்கு ஏற்ப எல்லையற்ற காலமாக இருந்து வருவதான அடிமை-எஜமானன் என்ற ரீதியில் உள்ள பகவத் ஸம்பந்தம் மட்டும், திருப்பாவை(28) - உறவேல் நமக்கிங்கொழிக்க வொழியாது - என்று கூறுவதற்கு ஏற்ப, ஸர்வேச்வரனாலும் நம்மாலும் நீக்க நினைத்தாலும் நீக்க இயலாத ஒன்றாகும். இதன் மூலம் - உலகத்துடனான ஸம்பந்தம் என்பது நடுவில் வந்து சேர்ந்ததாகவும், கர்மம் காரணமாக ஏற்பட்டதாலும் ஒரு காலகட்டத்தில் அழிந்து விடுவதாகும்; ஆனால் நாராயணனுடனான ஸம்பந்தம் என்பது எல்லையற்ற காலமாகத் தொடர்ந்தபடி உள்ளதாலும், எந்தவிதமான காரணமும் இன்றி உண்டானதாலும் எப்போதும் அழியாமல் இருக்கும் - என்று உணர்த்தப்பட்டது. ஆனால் நடுவில் வந்து சேர்ந்த உலகத்துடனான ஸம்பந்தம் என்பதை “அநாதி = எல்லையற்ற காலம்” என்று ஏன் கூறவேண்டும்? இதன் காரணம் - எப்போது வந்து சேர்ந்தது என்று அறியாத காரணத்தால், “எல்லையற்ற காலம்” என்று ப்ரமாணங்கள் கூறுவதால் ஆகும். மேலும் ஏதோ ஒரு நாளில் அது ஸர்வேச்வரனுடைய க்ருபை காரணமாகக் கழிந்து விடுவதால், நடுவில் வந்து சேர்ந்தது என்பது உறுதியாகிறது.