Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 11)

முதல் ப்ரகரணம்

இவை கிட்டமும் கேட்டுவேளானும்போலே ஒண்பொருள் பொருளல்லாத(வை) என்னாதே நானிலாத யானுமுளனாவனென்கிற ஸாம்யம் பெறத் தின்றூதி அந்தமும் வாழ்வுமாகிற ஹாநி ஸத்தைகளை யுண்டாக்கும்.

– இவ்வுபய ஸம்பந்தமும் ஆத்மவஸ்துவுக்குச் செய்யுமவற்றைச் சொல்லுகிறது மேல் (இவை என்று தொடங்கி).

மேலே கூறப்பட்டதான உலகத்துடனான ஸம்பந்தம், நாரயணனுடனான ஸம்பந்தம் ஆகிய இரண்டும் ஆத்மாவுக்கு உண்டாக்கவல்ல தீமைகளையும் நன்மைகளையும் அருளிச்செய்கிறார்.

– அதாவது, அசித்ஸம்பந்தம் – தன்னோடே சேர்ந்த மாணிக்யத்தை ஒளியறத் தின்று உருவழித்துத் தன்னைப் போலேயாக்கும் கிட்டம்போலே, “அந்நலத் தொண் பொருள்” என்கிற விலக்ஷண ஜ்ஞாந குணகமாய் ஸ்வயம்ப்ரகாசமான வஸ்துவென்று இதின் சீர்மை பாராதே, “இல்லது” என்றும், “யந்நாஸ்தி” என்றும் சொல்லுகிற தன்னோடே, “நானிலாத” என்கிற ஸாம்யம் பெறும்படியாக ஜ்ஞான லேசமறத் தின்று, “அந்தமும் வாழ்வும்” என்கிறவற்றில் அந்தமாகிற ஹாநியை யுண்டாக்கும் – “அஸந்நேவ ஸ பவதி” என்கிறபடியே ஸத்தாஹாநியைப் பண்ணுமென்கை. அயந ஸம்பந்தம் – “கீட: பேசக்ருதா ருத்த: குட்யாந்தரநுசிந்தயந், ஸம்ரம்ப பயயோகேந விந்ததே தத்ஸரூபதாம்” என்கிறபடியே ஏதேனுமொரு கீடத்தைக் கொண்டு வந்து வைத்தூதி ஸ்வஸாம்யாபந்நமாக்கும் வேட்டுவேளானைப் போலே, “பொருளல்லாத வென்னை” என்கிறபடியே ஜ்ஞாநாபாவத்தாலே அவஸ்து சப்த வாச்யமாய்க் கிடக்கிறவிதின் சிறுமை பாராதே ஸ்வரூபேண விபுவான தன்னோடு “பரமம் ஸாம்யமுபைதி” என்கிறபடியே, “உள்ளவுலகளவும் யானுமுளனாவன்” என்று ஜ்ஞாநத்வாரா வரும் விபுத்வ ஸாம்யம் பெறும்படி தன்னிறமாகவூதி வாழ்வாகிற ஸத்தையை யுண்டாக்கு மென்கை. “ஸந்தமேநம் ததோ விது:” என்று பகவத் ஜ்ஞாநாநந்தரம் ஆத்மஸத்தா ஸித்தியாகச் சொல்லிற்றே.

– முதலில் உலகத்துடனான ஸம்பந்தம் குறித்து அருளிச்செய்கிறார். ஓர் உலோகக்கட்டியானது தன்னுடன் சேர்ந்த மாணிக்கத்தை அதன் ஒளியை மங்கும் படியாகச் செய்து தன்னைப் போன்று மாற்றுவது போன்று, உலகத்துடனான ஸம்பந்தம் ஆத்மாவுக்குக் கேடு ஏற்படுத்தும். எப்படி? திருவாய்மொழி (1-2-4) – இல்லது - என்றும், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (2-12-37) - யந்நாஸ்தி – எந்த ஒரு அசித் வஸ்து இல்லை என்றுள்ள சொல்லால் கூறப்படுகிறதோ – என்றும் கூறுவதற்கு ஏற்ப உள்ளதான உலகம் என்ற அசித்தான தன்னுடன், திருசந்தவிருத்தம் (65) - நான் இலாத – என்று கூறுவதற்கு ஏற்ப ஆத்மாவுக்கு இல்லாத தன்மையானது அதற்கு உள்ளது என்று உரைக்கும்படியான ஒப்புமையை அதற்கு ஏற்படுத்தி, ஞானம் என்பதை முற்றிலுமாக அழித்து, பெரிய திருமொழி (5-7-2) - அந்தமும் வாழ்வும் – என்பதற்கு ஏற்ப முடிவாக உள்ள தாழ்ச்சியை ஏற்படுத்தும். அதாவது தைத்திரீய உபநிஷத் – அஸந்நேவ – இல்லாத பொருள் ஆகிறான் - என்பது போன்று இருப்பு என்ற நிலைக்கே தீமையை ஏற்படுத்திவிடும். மாறாக நாராயணனுடனான ஸம்பந்தம் என்பது கீட: பேசக்ருதா ருத்த: குட்யாந்தரநுசிந்தயந், ஸம்ரம்ப பயயோகேந விந்ததே தத்ஸரூபதாம் - குளவியால் கொண்டு வரப்பட்டு அடைக்கப்பட்ட புழுவானது, அச்சம் போன்றவற்றால் அந்தக் குளவியின் உருவத்தை அடைகிறது – என்பதற்கு ஏற்ப, ஏதேனும் ஒரு புழுவைக் கொண்டு வந்து தனது கூட்டில் வைத்து, அதனை ஊதி, தனது உருவத்தை அது பெறுமாறு செய்யும் குளவியைப் போன்று, திருவாய்மொழி (5-7-3) - பொருளல்லாத வென்னை – என்பதற்கு ஏற்றபடியாக ஞானம் இல்லாத காரணத்தால் “இல்லாத பொருள்” என்று கூறப்படுவதான ஆத்மாவை, அவ்விதம் கிடக்கும் காரணத்தால் அதன் தாழ்ந்த நிலையை ஆராயாமல், எங்கும் உள்ளவன் என்று ஸ்வரூபம் கொண்ட ஸர்வேச்வரனாகிய தன்னுடன், முண்டக உபநிஷத் (3-1-1) – பரமம் ஸாம்யமுபைதி – ப்ரஹ்மத்துடன் ஒப்புமை அடைகிறான் – என்று கூறுவதற்கு ஏற்ப, பெரியதிருவந்தாதி (76) – உள்ளவுலகளவும் யானுமுளனாவன் - என்ற பாசுரத்தில் கூறுவதற்கு ஏற்ப, ஞானம் காரணமாக உண்டாகவல்ல எங்கும் பரந்து நிற்கும் தன்மை என்பதுடன் ஒப்புமை ஏற்படும்படியாகத் தனது குணங்களை ஊதி, ஆத்மாவாகிய அது “இருப்பு” என்ற நிலையை ஏற்படுத்தும். தைத்திரீய ஆனந்தவல்லீ – ஸந்தமேநம் ததோ விது: - பரம்பொருளை அறிந்தவன் உள்ளவன் என்றாகிறான் - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரனைக் குறித்த ஞானம் உண்டான பின்னர் ஆத்மாவானது “உள்ளவன்” என்ற நிலையை அடைகிறான் என்று கருத்து.