Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 10)

முதல் ப்ரகரணம்

ஏதந் நிமித்தம் முன்னமே முதல் முன்னமேயான அசிதயநாநாதி ஸம்பந்தங்கள்.

இந்த அவித்யா ஸௌஹார்தங்கள் தனக்கு அடியேதென்னச் சொல்லுகிறது (ஏதந் நிமித்த மித்யாதி).

– கடந்த சூர்ணையில் உரைத்த அறியாமை மற்றும் ஸர்வேச்வரனுடைய சிநேகம் ஆகியவற்றுக்குக் காரணம் என்ன என்பதை அருளிச்செய்கிறார்.

ஏதச்சப்தத்தாலே இரண்டையும் பராமர்சிக்கிறது. அதாவது - அவித்யைக்கு நிமித்தம், “மூதாவியில் தடுமாறுமுயிர் முன்னமே” என்கிற அநாதியான அசித் ஸம்பந்தம். ஸௌஹார்த்ததுக்கு நிமித்தம், “அடியேனடைந்தேன் முதல் முன்னமே” என்கிற அநாதியான அயந ஸம்பந்தமென்கை. அயந சப்தத்தாலே ஈச்வரனைச் சொல்லுகிறது. நாராயணனிறே. ஆக அநாத்யசித் ஸம்பந்தமடியாக அவித்யையாய் அதடியாக புண்யபாப ரூப கர்மாமாய், அதடியாக அஜ்ஞாந ஹேதுவான ஜந்மமாய், அதடியாக ரஜஸ்தமோ வ்ருத்தியாய், அத்தாலே அர்த்த பஞ்சகஜ்ஞாநாபாவமாய், அதடியாக “அஜ்ஞாநாத் ஸம்ஸார:” என்கிறபடியே ஸம்ஸார துக்கம் வரும். அநாத்யயந ஸம்பந்தமடியாக பகவத் ஸௌஹார்தமுண்டாய், அதடியாக க்ருபையுண்டாய், அதடியாக விசேஷ கடாக்ஷ முண்டாய், அதடியாக ஸத்வ வ்ருத்தியுண்டாய், அதடியாக அர்த்தபஞ்சக ஜ்ஞாந முண்டாய், அதடியாக “ஜ்ஞாநாந் மோக்ஷ:” என்கிறபடியே மோக்ஷ ஸுகமுண்டா மென்றதாய்த்து.

சூர்ணையில் உள்ள “ஏதத்” என்ற பதம் மேலே கூறப்பட்ட அறியாமை மற்றும் சிநேகம் ஆகிய இரண்டையும் உணர்த்துகிறது. அதாவது அறியாமைக்குக் காரணம் திருவிருத்தம் (95) – மூதாவியில் தடுமாறுமுயிர் முன்னமே - என்பதில் உள்ள “முன்னமே” என்னும் சொல் மூலம் உணர்த்தப்படுவதான எல்லையற்ற காலமாக இருந்து வரும் இந்த உலகத்துடனான ஸம்பந்தம் ஆகும். ஸர்வேச்வரனுடைய சிநேகத்திற்குக் காரணம், திருவாய்மொழி (2-2-6) - அடியேனடைந்தேன் முதல் முன்னமே - என்பதற்கு ஏற்ப எல்லையற்ற காலமாக உள்ள ஸர்வேச்வரனுடைய ஸம்பந்தம் ஆகும். சூர்ணையில் உள்ள “அயந” என்ற பதம் ஈச்வரனை உணர்த்துவதாகும்; “நாராயணன்” என்று கருத்து. ஆகவே எல்லையற்ற காலமாக உள்ள உலகின் தொடர்பினால் அறியாமை ஏற்படுகிறது; அந்த அறியாமை காரணமாக புண்ணியபாவ கர்மங்கள் ஏற்படுகின்றன; அந்தக் கர்மங்களின் காரணமாக அறியாமையின் அடிப்படையான பிறவி ஏற்படுகிறது; அந்தப் பிறவி காரணமாக ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களுடைய மிகுதி ஏற்படுகிறது; அந்தக் குணங்கள் காரணமாக அறியவேண்டியதான ஐந்து விஷயங்கள் குறித்து அறியாமல் உள்ள நிலை ஏற்படுகிறது; இந்த நிலையின் காரணமாக, அஜ்ஞாநாத் ஸம்ஸார: - அறியாமையால் ஸம்ஸாரம் ஏற்படுகிறது - என்பதான ஸம்ஸாரம் உண்டாகி துக்கம் ஏற்படுகிறது என்று கருத்து. எல்லையற்ற காலமாகத் தொடர்ந்தபடி உள்ள நாராயணனுடைய ஸம்பந்தம் காரணமாக அவனுடைய சிநேகம் கிட்டுகிறது; அதன் காரணமாக அவனுடைய க்ருபை ஏற்படுகிறது; அதன் காரணமாக அவனுடைய கடாக்ஷம் உண்டாகிறது; அதன் காரணமாக ஸத்வம் தழைத்து ஓங்குகிறது; அதன் காரணமாக அறியவேண்டிய ஐந்து விஷயங்கள் குறித்த ஞானம் ஏற்படுகிறது; அதன் விளைவாக, ஜ்ஞாநாந் மோக்ஷ: – ஞானத்தால் மோக்ஷம் கிட்டும் – என்பதற்கு ஏற்ப மோக்ஷ சுகம் உண்டாகிறது கருத்து.