Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 9)
முதல் ப்ரகரணம்
கர்மக்ருபாபீஜம் பொய்ந்நின்ற அருள்புரிந்த வென்கிற அவித்யா ஸௌஹார்தங்கள்.
இவைதனக்கடி யேதென்னச் சொல்லுகிறது – (கர்மேத்யாதி).
இரண்டுவிதமான வலிமையான வினைகள் மற்றும் ஸர்வேச்வரனுடைய கடாக்ஷம் ஆகியவற்றுக்குக் காரணம் என்ன என்று அருளிச்செய்கிறார்.
– அதாவது, கர்மத்துக்கு பீஜம், “பொய்ந்நின்ற ஞானம்” என்கிற அவித்யை; க்ருபைக்கு பீஜம் “அருள்புரிந்த சிந்தை” என்கிற ஸௌஹார்தம் என்கை. “ஈச்வரஸ்ய ச ஸௌஹார்தம்” என்று இவ்வாத்மோஜ்ஜீவநத்துக்கு அவன் க்ருஷி பண்ணுகையில் இழிகைக்கு மூல காரணமாக ஸௌஹார்தத்தைச் சொல்லிற்றே. இஸ் ஸௌஹார்த்த மடியாகவாயிற்று இவ்வாத்ம விஷயமாக அவன் திருவுள்ளத்தில் இரக்கம் பிறப்பது.
இரண்டு வலிமையான வினைகள் ஏற்படக் காரணம், திருவிருத்தம் (1) - பொய்ந்நின்ற ஞானம் - என்பதற்கு ஏற்ப உள்ள அறியாமை ஆகும். ஸர்வேச்வரனுடைய க்ருபைக்குக் காரணம், இரண்டாம் திருவந்தாதி (59) - அருள்புரிந்த சிந்தை - என்பதில் கூறப்பட்டதான சிநேகம் ஆகும். ஈச்வரஸ்ய ச ஸௌஹார்தம் – ஸர்வேச்வரனுடைய சிநேகமும் – என்றுள்ள வாக்கியம் மூலம் ஆத்மாவைக் கரையேற்ற அவன் செய்யும் முயற்சியில் அவனை ஈடுபட வைப்பதற்கான காரணம் இந்தச் சிநேகமே ஆகும் என்று உரைக்கப்பட்டது. இப்படிப்பட்ட சிநேகமே ஆத்மா குறித்து அவன் தனது திருவுள்ளத்தில் கொள்ளும் இரக்கத்திற்குக் காரணமாகிறது.