Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 8)
முதல் ப்ரகரணம்
இவற்றுக்கு மூலம் இருவல்லருள் நல்வினைகள்.
– இவை தனக்கு மூலமேதென்னச் சொல்லுகிறது – (இவற்றுக்கு மூலமித்யாதி).
ஸம்ஸாரத்தில் ஏற்படும் பிறவி, பிறக்கும்போதே ஸர்வேச்வரனுடைய அருள் பார்வை ஆகியவை ஏற்படுவதற்குக் காரணம் என்ன என்பதை அருளிச்செய்கிறார்.
– அதாவது, இஜ்ஜந்மத்துக்கு மூலம், “சார்ந்தவிரு வல்வினை” என்று ஆத்மாவோடு பிரிக்கவொண்ணாதபடி பொருந்திக் கிடக்கிற ப்ரபலங்களான புண்ய பாபங்கள். இக்கடாக்ஷத்துக்கு மூலம் “தொல்லருள் நல்வினை” என்கிற அவனுடைய ஸ்வாபாவிக க்ருபையாகிற ஸுக்ருதம் என்கை. (இருவல்லருள் நல்வினைகள்) என்றது இரு வல்வினையும் அருள்நல்வினையு மென்றபடி.
இந்த ஸம்ஸாரத்தில் பிறவி ஏற்படுவதற்கான மூலகாரணம், திருவாய்மொழி (1-5-10) - சார்ந்தவிரு வல்வினை - என்று கூறுவதற்கு ஏற்ப ஆத்மாவிடமிருந்து பிரிக்க இயலாதபடி பொருந்திக் கிடக்கும் வலிமையுள்ளதான புண்ணிய பாவங்கள் ஆகும். பிறக்கும்போதே ஸர்வேச்வரனுடைய கடாக்ஷம் கிட்டுவதற்கான மூல காரணம், திருவாய்மொழி (5-9-10) - தொல்லருள் நல்வினை - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரனிடம் இயல்பாகவே அமைந்துள்ள கடாக்ஷம் என்னும் புண்ணியம் ஆகும். சூர்ணையில் “இருவல்லருள் நல்வினைகள்” என்பதன் மூலம், இரண்டு வலிமையான புண்ணிய பாவங்கள் மற்றும் ஸர்வேச்வரனுடைய கடாக்ஷம் என்பதையும் கூறினார்.