Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 7)
முதல் ப்ரகரணம்
ஸத்வாஸத்வ நிதாநம் இருள் தரும் அமலங்களாகவென்னும் ஜன்மஜாயமாந கால கடாக்ஷங்கள்.
இவற்றுக்கு நிதாநமேதென்னச் சொல்லுகிறது (ஸத்வேத்யதி).
இவ்விதம் ஒரு சிலர் ஸத்வத்திலும், சிலர் மற்ற இரண்டு குணங்களிலும் நிலை நிற்பதற்கான காரணம் என்ன என்பதை அருளிச்செய்கிறார்.
அதாவது ஸத்வேதரங்களான ரஜஸ்தமஸ்ஸுக்களுக்கு நிதாநம் “இருள் தருமா ஞாலத்துளினிப் பிறவி” என்கிற அஜ்ஞாநாவஹமான ஸம்ஸாரத்தில் ஜந்மம். ஸத்வத்துக்கு நிதாநம் “ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யேத் மதுஸூதந:, ஸாத்விகஸ் ஸ து விஜ்ஞேயஸ் ஸ வை மோக்ஷார்த்த சிந்தக:” என்கிறபடியே ஜாயமாந காலத்தில் “அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும்” என்கிற நிர்மலத்வகரமான பகவத் கடாக்ஷ மென்கை.
ஸத்வகுணத்துக்கு எதிர்த்தட்டாக உள்ள ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய இரண்டில் நிலைநிற்பதற்கான காரணம் திருவாய்மொழி (10-6-1) - இருள் தருமா ஞாலத்துள் இனிப்பிறவி – என்பதற்கு ஏற்ப உள்ளதான அறியாமை என்பது விளையும் இடமாக உள்ள இந்த ஸம்ஸாரத்தில் உண்டாகும் பிறவி ஆகும். ஸத்வ குணத்திற்கான காரணம் மஹாபாரதம் மோக்ஷபர்வம் - ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யேத் மதுஸூதந:, ஸாத்விகஸ் ஸ து விஜ்ஞேயஸ் ஸ வை மோக்ஷார்த்த சிந்தக: - இந்த உலகில் பிறக்கும்போதே யார் ஒருவன் மதுசூதனனால் கடாக்ஷிக்கப்படுகிறானோ அவன் ஸத்வ குணம் உள்ளவனாக ஞானம் நிரம்பியவனாக ஆகிறான். அவனே மோக்ஷம் பெறும் மனம் உள்ளவன் - என்று கூறுவதற்கு ஏற்ப, பிறக்கும் நேரத்திலேயே திருவாய்மொழி (1-9-9) – அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும் – என்று கூறும்படி தூய்மை அடையச் செய்வதான ஸர்வேச்வரனுடைய கடாக்ஷம் ஆகும்.