Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 6)

முதல் ப்ரகரணம்

இவற்றுக்குக் காரணம் இரண்டிலொன்றினில் ஒன்றுகைகள்.

இவ்வஜ்ஞாநாதிகள் தனக்கு அடியேதென்னச் சொல்லுகிறது (இவற்றுக்குக் காரண மித்யாதி).

– இவற்றுக்கு இப்படியாக உள்ள ஐந்து விஷயங்கள் குறித்து அறியாமல் இருப்பதற்கும், அறிவதற்கும் காரணம் என்ன என்பதை அருளிச்செய்கிறார்.

– அதாவது, இவ்வர்த்தபஞ்சக அஜ்ஞாநத்துக்குக் காரணம் முத்திறத்து வாணியத்திரண்டி லொன்றுகையாகிற ரஜஸ்தம:ப்ரசுரதை. இவ்வர்த்த பஞ்சக ஜ்ஞாநத்துக்குக் காரணம் முக்குணத்திரண்டவை யகற்றி ஒன்றினில் ஒன்றுகையாகிற ஸத்வ ப்ரசுரதை யென்கை. ரஜஸ்தமஸ்ஸுக்கள் அந்யதாஜ்ஞாந விபரீதஜ்ஞாந ஹேதுவாய், ஸத்வம் யதாஜ்ஞாந ஹேதுவாயிறேயிருப்பது.

– இந்த ஜந்து விஷயங்கள் குறித்து அறியாமல் உள்ள அஜ்ஞானத்திற்குக் காரணம், திருச்சந்தவிருத்தம் (68) – முத்திறந்து வாணியத்து இரண்டில் ஒன்றும் நீசர்கள் - என்பதற்கு ஏற்ப மூன்று குணங்களுக்குள் ரஜஸ் மற்றும் தமஸ் என்ற இரண்டில் ஏதேனும் ஒன்றில் ஆழ்ந்திருப்பதால் ஆகும். இந்த ஐந்து விஷயங்கள் குறித்து அறிவதான ஞானத்துக்குக் காரணம், திருவெழுகூற்றிருக்கை (17) - முக்குணத்து இரண்டவை அகற்றி என்னில் ஒன்றி நின்று - என்று கூறுவதற்கு ஏற்ப மூன்று குணங்களுக்குள் ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றை விலக்கி, ஸத்வகுணத்தில் ஒன்றி நிற்பதாகும். ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய இரண்டும் ஒரு பொருளின் தன்மையை வேறுவிதமாக அறிவித்தல் என்பதான அந்யதா ஞானத்திற்கும், பொருளையே மாற்றி உணர்த்தல் என்பதான விபரீத ஞானத்திற்கும் காரணமாக இருப்பதாகும். ஸத்வம் என்பது உண்மையான ஞானத்துக்குக் காரணமாக இருக்கும்.