Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 5)
முதல் ப்ரகரணம்
அநந்தக்லேச நிரதிசயாநந்த ஹேது – மறந்தேன் அறியகிலாதே உணர்விலேன் ஏணிலேன் அயர்த்தென்றும், உய்யும்வகை நின்றவொன்றை நன்கறிந்தனன் உணர்வினுள்ளே ஆம்பரிசென்றும் சொல்லுகிற ஜ்ஞாத்வய பஞ்சக ஜ்ஞாநாஜ்ஞாநங்கள்.
ஏவம்பூத துக்கமும் ஸுகமும் இவனுக்குண்டாகைக்கு ஹேது ஏதென்னச் சொல்லுகிறது (அநந்தேத்யாதி).
இப்படியாக உள்ள சுகமும் துக்கமும் உண்டாகக் காரணம் என்ன என்பதை அருளிச்செய்கிறார்.
அதாவது, “ஸம்ஸாரஸாகரம் கோரம் அநந்த க்லேச பாஜநம்” என்கிற ஸம்ஸார ப்ரயுக்த அனந்த துக்கஹேது – “மறந்தேனுன்னை முன்னம்” என்கிற பரவிஷயா ஜ்ஞாநமும், “என்னையறியகிலாதே” என்கிற ஆத்மவிஷயாஜ்ஞாநமும், “ஓடியுமுழன்று முயிர்களே கொன்றேனுணர்விலேன்” என்கிற விரோதி விஷயஜ்ஞாநமும், “பிறவி நோயறுப்பா னேணிலேனிருந்தேன்” என்கிற உபாய விஷயாஜ்ஞாநமும், “ஆழியங்கை யம்மானை யேத்தாதயர்த்து” என்கிற புருஷார்த்த விஷயஜ்ஞாநமுமாகிற ஜ்ஞாதவ்யார்த்த பஞ்சக ஜ்ஞாநாபாவம். “நிரஸ்தாதிசயாஹ்லாத ஸுக பாவைக லக்ஷணா” என்கிற பகவத் ப்ராப்தி ரூபமோக்ஷ ப்ரயுக்த நிரதிசய ஸுகஹேது, “நின்னை நெஞ்சிலுய்யும் வகை யுணர்ந்தேன்” என்கிற பரவிஷய ஜ்ஞாநமும், “நின்றவொன்றை யுணர்ந்தேன்” என்கிற ஆத்மவிஷய ஜ்ஞானமும், “அகற்ற நீ வைத்த மாயவல் லைம்புலன்க ளாமவை நன்கறிந்தனன்” என்கிற விரோதி விஷய ஜ்ஞாநமும், “அவனதருளாலுறல் பொருட்டு என்னுணர்வி னுள்ளே யிருத்தினேன்” என்கிற உபாய விஷய ஜ்ஞாநமும், “ஆம்பரிசறிந்து கொண்டு” என்கிற புருஷார்த்தவிஷய ஜ்ஞானமுமாகிற ஜ்ஞாதவ்யார்த்த பஞ்சக ஜ்ஞாநமென்கை. இத்தால் “ஜ்ஞாநாந்மோக்ஷ: அஜ்ஞாநாத் ஸம்ஸார:”. ஆகையாலே, “ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச் ச ப்ரத்யகாத்மந:, ப்ராப்த்யுபாயம் பலம் ப்ராப்தே: ததா ப்ராப்தி விரோதி ச; வதந்தி ஸகலா வேதாஸ்ஸேதிஹாஸ புராணகா:, முநயச்ச மஹாத்மாநோ வேதவேதார்த்த வேதிந:” என்கிறபடியே ஸகல சாஸ்த்ர தாத்பர்யமாய் ஆத்மோஜ்ஜீவநத்துக்கு அவச்ய ஜ்ஞாதவ்யமான அர்த்தபஞ்சகத்தையும் அறியாமையும் அறிகையுமே ஸம்ஸார மோக்ஷங்களுக்கு ஹேது வென்றதாயிற்று.
ஜிதந்தே ஸ்தோத்ரம் – ஸம்ஸாரஸாகரம் கோரம் அநந்த க்லேச பாஜநம் - மிகவும் கோரமானதும், எல்லையற்ற துன்பங்களுக்கு இருப்பிடமானதும் ஆகிய பிறவிப் பெருங்கடலை - என்று கூறுவதற்கு ஏற்ப பிறவிகளை முன்னிட்டுக் கொண்டு உண்டாகும் எல்லையற்ற துக்கங்களுக்கான காரணம் : பெரியதிருமொழி (6-2-2-) – மறந்தேனுன்னை முன்னம் – என்று கூறுவதற்கு ஏற்ப ஸர்வேச்வரன் குறித்து அறிவில்லாமையும், திருவாய்மொழி (2-9-9) - என்னையறியகிலாதே – என்று கூறுவதற்கு ஏற்ப ஆத்மா குறித்த அறிவில்லாமையும், பெரியதிருமொழி (1-6-6) – ஓடியு முழன்று முயிர்களே கொன்றே னுணர்விலேன் – என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரனைக் கைப்பற்றத் தடையாக உள்ள விரோதிகளைக் குறித்த அறிவில்லாமையும், பெரியதிருமொழி (1-6-1) - பிறவி நோயறுப்பா னேணிலேனிருந்தேன் – என்பதற்கு ஏற்ப அவனை அடைவதற்கான உபாயம் குறித்த அறிவில்லாமையும், பெரியதிருவந்தாதி (82) – ஆழியங்கை யம்மானை யேத்தாதயர்த்து - என்பதற்கு ஏற்ப அடையத்தக்க பேற்றைக் குறித்த அறிவில்லாமையும் ஆகிற அறியத்தக்கதான ஐந்து விஷயங்கள் குறித்த ஞானம் இல்லாமை என்பதே ஆகும். ஸ்ரீவிஷ்ணுபுராணம் (6-5-59) – நிரஸ்தாதிசயாஹ்லாத ஸுக பாவைக லக்ஷணா – நான்முகன் உள்ளிட்டவர்களுடைய உலகங்களில் உள்ள இன்பங்களையும் அற்பம் என்று தள்ளத்தக்க மேன்மையான ஆனந்தமே வடிவம் பெற்றது - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரனை அடைதல் என்பதான மோக்ஷத்தின் பொருட்டு ஏற்படும் எல்லையற்ற சுகங்களுக்கான காரணம் : பெரியதிருமொழி (6-3-6) - நின்னை நெஞ்சிலுய்யும் வகை யுணர்ந்தேன் - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரன் குறித்த ஞானமும், திருவாய்மொழி (8-8-4) – நின்றவொன்றை யுணர்ந்தேன் – என்பதற்கு ஏற்ப ஆத்மா குறித்த ஞானமும், திருவாய்மொழி (5-7-8) – அகற்ற நீ வைத்த மாயவல் லைம்புலன்க ளாமவை நன்கறிந்தனன் – என்பதற்கு ஏற்ப அவனை அடையத் தடையாக உள்ள விரோதிகள் குறித்த ஞானமும், திருவாய்மொழி (8-8-3) - அவனதருளாலுறல் பொருட்டு என்னுணர்வி னுள்ளே யிருத்தினேன் – என்பதற்கு ஏற்ப அவனை அடையும் உபாயம் குறித்த ஞானமும், திருமாலை (38) – ஆம்பரிசறிந்து கொண்டு – அடைய உள்ள புருஷார்த்தம் குறித்த ஞானமும் என்றுள்ள ஐந்துவிதமான ஞானம் ஆகும். இதன் மூலம் ஞானத்தால் மோக்ஷமும், அறியாமையால் பிறவியும் ஏற்படுகிறது என்றாகிறது. ஆகவே, ஹாரித ஸம்ஹிதை (9) - ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச் ச ப்ரத்யகாத்மந:, ப்ராப்த்யுபாயம் பலம் ப்ராப்தே: ததா ப்ராப்தி விரோதி ச; வதந்தி ஸகலா வேதாஸ்ஸேதிஹாஸ புராணகா:, முநயச்ச மஹாத்மாநோ வேதவேதார்த்த வேதிந: - அடையத்தக்கதான ஸர்வேச்வரனுடைய ஸ்வரூபம், அவனை அடையும் ஜீவாத்மாவின் ஸ்வரூபம், அவனை அடைவதற்கான வழி, அவனை அடைவதால் உண்டாகும் பயன், அவனை அடைவதற்குத் தடையாக உள்ள விரோதிகள் ஆகியவற்றை இதிஹாஸ புராணங்களுடன் கூடியதான அனைத்து வேதங்களும் கூறுகின்றன. வேதங்கள், வேதங்களுடைய ஆழ்பொருள்கள் ஆகியவற்றை அறிந்த முனிவர்களும் மஹாத்மாக்களும் இவ்விதமே உரைக்கின்றனர் – என்று கூறுவதற்கு ஏற்ப அனைத்து சாஸ்திரங்களுடைய ஆழ்பொருளாகவும், ஆத்மாவானது கரையேற அவசியமாக அறிந்து கொள்ள வேண்டியதாகவும் உள்ள இந்த ஐந்து விஷயங்களைக் குறித்து அறியாமை என்பது பிறவிக்குக் காரணம், அறிவது மோக்ஷத்திற்குக் காரணம் என்று கூறப்பட்டது.