Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 4)

முதல் ப்ரகரணம்

இவற்றுக்கெல்லை இன்புதுன்பளி பன்மா மாயத்தழுந்துகையும், களிப்புங் கவர்வுமற்றுப் பேரின்பத் தின்புறுகையும்.

இவைதான் கர்மாநுகுணமாக நின்ற நின்ற நிலைகளிலே யுண்டகையாலே இவற்றின் பரமாவதியைச் சொல்லுகிறது (இவற்றுக் கித்யாதி).

– இப்படிப்பட்ட சுகம், துக்கம் என்பவை அவரவர்கள் செய்த நன்மை மற்றும் தீமை என்ற கர்மங்களின் காரணமாக ஏற்படுவதால், இவற்றின் எல்லைகளை அடுத்து உரைக்கிறார்.

– அதாவது, துக்கத்துக்குப் பரமாவதி “இன்பு துன்பளி” என்று தொடங்கி. ஸுக துக்காவஹங்களாய் அநாதியாய் துஸ்தரமாயிருந்துள்ள ப்ரக்ருதி ஸம்பந்த நிபந்தநமான ஜந்மங்களின் நின்றும் ஒருகாலும் நீங்காமைக் குறுப்பானவையாய், பலவகைப்பட்டிருப்பனவாய், அகப்பட்டார் தப்பவரிதாமவையாய் “இன்னமுதெனத்” தோன்றி எத்தனையேனும் அறிவுடையாரையும் கலங்கப் பண்ணுகையாலே ஆச்சர்யங்களா யிருந்துள்ள சப்தாதி விஷயங்களிலே அகப்பட்டு “அழுந்துமா” என்கிறபடியே அநந்தக்லேச பாஜநமான ஸம்ஸாரத்திலே யழுந்துகை. ஸுகத்துக்குப் பரமாவதி “களிப்புங் கவர்வுமற்று” என்று தொடங்கிச் சொல்லுகிற அல்பாஸ்திரத்வாதி தோஷ துஷ்டமான விஷய லாபத்தாலே வரும் கர்வமும் ததலாபத்தாலே வரும் க்லேசமும் கழிந்து ஷட்பாவவிகாரங்களும் நீங்கி சுத்த ஸத்வதயா ப்ரகாசமாயிருக்கிற அப்ராக்ருத விக்ரத்தைப் பெற்று “அந்தமில் பேரின்பம்” என்கிறபடியே அபரிமிதாநந்த மயமான பரமபதத்திலே அடியார்கள் குழாங்களையுடன் கூடி “சுழிபட்டொடுஞ் சுடர்ச்சோதி வெள்ளத்து இன்புற்று” என்கிறபடியே அநவரத பகவத நுபவத்தாலே ஆநந்த நிர்ப்பரனா யிருக்கை யென்கை.

துக்கத்துக்கான எல்லையை முதலில் அருளிச்செய்கிறார். இது சூர்ணையில் “இன்பதுன்பளி” என்று தொடங்கி உரைக்கப்படுகிறது. இன்பம் மற்றும் துன்பம் வருவதும், கடப்பதற்கு எளிதாக உள்ள ப்ரக்ருதியின் ஸம்பந்தம் மூலம் ஏற்படும் பிற்விகளில் இருந்து விடுபட இயலாமல் உள்ளதற்குக் காரணமாக இருப்பதும், பலவிதமாக உள்ளதும், சிக்கிக் கொண்டவர்கள் தப்புவதற்குக் கடினமாக உள்ளதும், திருவாசிரியம் (3) மற்றும் திருவாய்மொழி (7-1-8) – இன்னமுது – என்று கூறுவதற்கு ஏற்ப உண்டாகி எந்த அளவு அறிவு நிரம்பியவர்களாக இருந்தாலும் அவர்களையும் கலங்கும்படிச் செய்வதால் வியப்பு ஏற்படுத்தும்படியாக உள்ளதும் ஆகிய உலக விஷயங்களில் அகப்பட்டுக்கொண்டு, திருவாசிரியம் (6) - அழுந்துமா – என்பதற்கு ஏற்றபடி எல்லையற்றதான பலவிதமான துன்பங்களுக்குக் காரணமாக உள்ள ஸம்ஸாரத்தில் மூழ்கி இருத்தல் என்பதாகும். அடுத்து சுகத்தின் எல்லையை அருளிச்செய்கிறார். திருவாய்மொழி (2-3-10) – களிப்பு – என்று தொடங்கி உரைக்கப்படும் அற்பமாக உள்ள தன்மை, நிலையற்றதாக உள்ள தன்மை முதலான தோஷங்கள் நிறைந்துள்ள புலன்கள் மூலம் கிட்டப்பெறும் இன்பங்களை அடைந்து, அவற்றை அனுபவிப்பதன் காரணமாக உண்டாகும் கர்வம், அவற்றை அனுபவிக்கப் பெறாமல் உள்ளதால் உண்டாகும் துக்கம் ஆகிய இரண்டும் நீங்கப் பெற்று, மற்ற இரண்டு குணங்களும் கலக்காத தூய்மையான ஸத்வகுணம் மட்டுமே நிறைந்ததான, இந்த உலகுடன் தொடர்பில்லாத ஒளி பொருந்திய சரீரத்தைப் பெற்று, திருவாய்மொழி (10-9-11) - அந்தமில் பேரின்பம் – என்பதற்கு ஏற்ப அளவற்ற இன்பங்கள் உள்ளதான பரமபதத்தில் ஸர்வேச்வரனுடைய அடியார்கள் கூட்டத்துடன் கூடி நின்று, திருவாய்மொழி (8-10-5) - சுழிபட்டொடுஞ் சுடர்ச்சோதி வெள்ளத்து இன்புற்று – என்பதற்கு ஏற்ப எப்போதும் ஸர்வேச்வரனை அனுபவித்தபடி உள்ளதால் ஆனந்தம் நிறைந்தவனாக உள்ள நிலையுடன் இருத்தல் என்பதாகும்.