Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 2)
முதல் ப்ரகரணம்
விவேகபலம் வீடுபற்று.
இவ்விவேகத்திற்குப் பலமேதென்னச் சொல்லுகிறது, (விவேகேத்யாதி).
– இப்படிப்பட்ட பகுத்தறிவினால் ஏற்படும் பயன் என்ன என்பதை அருளிச் செய்கிறார்.
– அதாவது, இப்படி யவன் கொடுத்த சாஸ்த்ர ஜந்ய ஜ்ஞாநத்தாலே நல்லதும் தீயதும் விவேகிக்கைக்குப் பலம், த்யாஜ்யத்தை விடுகையும் உபாதேயத்தைப் பற்றுகையு மென்கை. த்யாக ஸ்வீகார மென்னாதே வீடுபற்றென்கையாலே “வீடுமின் முற்றவும்”, “அற்றிறைபற்று” என்று ஆழ்வார் பாசுரத்தை யுட்கொண்டருளிச் செய்தமை தோற்றுகிறது.
அவன் நமக்கு அளித்த சாஸ்த்ரங்கள் மூலம் ஏற்பட்ட ஞானத்தால், “நல்லது எது தீயது எது” என்று பகுத்தறிய இயல்கிறது. இதன் பயன் என்னவென்றால் - கைவிடத்தக்கது எது, ஏற்கத்தக்கது எது என்று அறிவதே ஆகும். “விடுதல், பற்றுதல்” என்று கூறாமல் சூர்ணையில் “வீடு பற்று” என்று ஏன் கூறினார்? இதன் காரணம் நம்மாழ்வார் திருவாய்மொழியில் (1-2-1) – வீடுமின் முற்றவும் என்றும், (1-2-5) – அற்றிறை பற்று - என்றும் அருளிச்செய்ததைத் திருவுள்ளத்தில் கொண்டதால் ஆகும்.