Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 1)

முதல் ப்ரகரணம்

காருணிகனான ஸர்வேச்வரன் அறிவிலாமனிசர் உணர்வென்னும் சுடர் விளக்கேற்றிப் பிறங்கிருள் நீங்கி மேலிருந்த நந்தா வேதவிளக்கைக் கண்டு நல்லதும் தீயதும் விவேகிக்கைக்கு மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான கலைகளை நீர்மையினாலருள் செய்தான்.

இதில் முதல் சூர்ணையாலே “ஹர்த்தும் தமஸ் ஸதஸதீ ச விவேக்துமீசோ மாநம் ப்ரதீப மிவ காருணிகோ ததாதி” என்கிறபடியே, ஆகஸ்மிக க்ருபாவான ஸர்வேச்வரன் அஜ்ஞரான ஸம்ஸாரி சேதநர்க்கு ஸதஸத் விவேக பரிகரமாக சாஸ்த்ர ப்ரதாநத்தைப் பண்ணி யருளினபடியை அருளிச்செய்கிறார்.

ஸ்ரீரங்கராஜஸ்தவம் (உத்தரபாகம்-1) – ஹர்த்தும் தமஸ் ஸதஸதீ ச விவேக்துமீசோ மாநம் ப்ரதீப மிவ காருணிகோ ததாதி - கருணைக்கடலாகவும், மூன்று உலகங்களுக்கும் நாயகனாயும் உள்ள ஸர்வேச்வரன் அறியாமை என்ற இருளை நீக்குவதற்காகவும், நன்மை தீமைகளைப் பிரித்து அறியும் விவேகம் ஏற்படுவதற்காகவும் விளக்கு போன்ற ப்ரமாணங்களாகிய சாஸ்த்ரங்களை உண்டாக்கினான் - என்று கூறுவதற்கு ஏற்ப, எந்தவிதமான காரணமும் இன்றி கருணை காண்பிக்கும் ஸர்வேச்வரன், அறியாமையில் மூழ்கியபடி உள்ள ஸம்ஸாரத்தில் உழலும் மக்களுக்கு, நன்மை – தீமை என்பதைப் பகுத்தறியும் அறிவை அளிப்பதற்கு ஏற்ற கருவியாக உள்ள சாஸ்த்ரங்களை அளித்ததை முதல் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.

(காருணிகனான ஸர்வேச்வரன்) க்ருபா விசிஷ்ட ஸ்வதந்த்ரமென்றபடி. க்ருபாவானானாலும் ஸ்வதந்த்ரனன்றாகில் தான் நினைத்தபடி கார்யம் செய்யப்போகாது; கேவல ஸ்வதந்த்ரனானாலும் ஸம்ஸார மோக்ஷங்க ளிரண்டுக்கும் பொதுவான ஸ்வாதந்த்ர்யம் சேதநோஜ்ஜீவநார்த்தமான க்ருஷிக்கு உறுப்பாகமாட்டாது; ஆனபின்பு க்ருபாவிசிஷ்டமான ஸ்வாதந்த்ர்யமேயிறே ஸம்ஸாரி சேதநோஜ்ஜீவந விஷயமாக அவன் பண்ணும் க்ருஷிக்கு ஹேதுவாவது; அதவா, ஸர்வேச்வரனென்று ஈசேசிதவ்ய ஸம்பந்தத்தைச் சொல்லுகிறதாகவுமாம்; “க்ருபாயோகாச்ச சாச்வதாத்” என்ற வநந்தரம், “ஈசேசிதவ்ய ஸம்பந்தாத் அநிதம் ப்ரதமாதபி” என்கையாலே க்ருபாயோகமும் ஸம்பந்தமும் இரண்டும் ஸம்ஸாரி சேதந ஸம்ரக்ஷணார்த்த ப்ரவ்ருத்தி ஹேதுவிறே. க்ருபாயோகத்துக்கு மேலே ஸம்பந்தம் உக்தமாகையாலே ஸம்பந்த ப்ராதாந்யம் சொல்லிற்றாகிறது. இத்தால், இவை நம்முடையவையன்றோ வென்கிற அபிமாநத்தோடே பரது:க்கா ஸஹிஷ்ணுத்வ ரூபையான க்ருபையும் கூடுகையாலே உத்தரோத்தரம் சேதநோஜ்ஜீவநத்துக்கு க்ருஷி பண்ணிப் போருமவனென்றதாய்த்து. (அறிவிலா மனிசர்) “அறிவிலா மனிசரெல்லாம்” என்கிறபடியே அஜ்ஞாந தமோயுக்தரான சேதநர். “அந்தம் தம இவாஜ்ஞாநம்” என்னக்கடவதிறே. “ஹர்த்தும் தம:” என்று அஜ்ஞாநத்தைத் தமச்சப்தத்தாலே அருளிச்செய்தாரிறே. இத்தால் அநாத்ய ஜ்ஞாநாந்தகாரத்தாலே அபிபூதராய், அத்தாலே ப்ரக்ருத்யாத்ம விவேகம் முதலானவொரு விவேகமுமின்றிக்கே யிருக்கிற ஸம்ஸாரி சேதநரென்கை. (உணர்வென்னும் சுடர்விளக்கேற்றி) “உணர்வென்னு மொளிகொள் விளக்கேற்றி” என்றும், “ஞானச்சுடர் விளக்கேற்றினேன்” என்றும் சொல்லுகிறபடியே தைலவர்த்திகளா லுண்டான அழுக்கன்றிக்கே திணுங்கின தேஜஸ்ஸாயிருக்கிற ஜ்ஞாநமாகிற உஜ்ஜ்வல தீபப்ரகாசத்தை உடைத்தாய். ஜ்ஞாநத்தை விளக்கென்கிறது, ஸ்வபர ப்ரகாசகத்வமாகிற ஸ்வபாவ ஸாம்யத்தாலே. (பிறங்கிருள் நீங்கி) “பிறங்கிருள் நிறங்கெட” என்றும், “பின்னிவ்வுலகினில் பேரிருள் நீங்கி” என்றும் சொல்லுகிறபடியே, மிகுந்த அஜ்ஞாநாந்தகாரம் போய். (மேலிருந்த நந்தா வேதவிளக்கைக் கண்டு) “வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கு” என்றும், “நந்தாவிளக்கு” என்றும், “வேதவிளக்கினை” என்றும் சொல்லுகிறபடியே, வேதாந்தங்களில் ஸர்வஸ்மாத்பரனாக ப்ரகாசியா நிற்பானுமாய்; நித்யமாய் ஸ்வயம்ப்ரகாசமான ஜ்ஞாநத்தை ஸ்வரூபமாக உடையனுமாய், வேதைக ஸமதிகம்யனுமான தன்னை, “என் தக்கஞானக்கண்களாலே கண்டு” என்கிறபடியே ஜ்ஞாந சக்ஷுஸ்ஸாலே தர்சித்து. (நல்லதும் தீயதும் விவேகிக்கைக்கு) “இவையன்றே நல்ல இவையன்றே தீய” என்கிறபடியே, ஸதஸத் விவேகம் பண்ணுகைக்கு. “ஸதஸதீச விவேக்தும்” என்றாரிறே, “நல்லதும் தீயதும் விவேகிக்கைக்கு” என்கிற விது ஸாமாந்யேந விலக்ஷணா விலஷண விவேகத்தைக் காட்டுமேயாகிலும், இவ்விடத்தில், பகவத்விஷயம் நன்று, ஸம்ஸாரம் தீது என்று விவேகிக்கையைக் காட்டக்கடவது. “நந்தாவேத விளக்கைக் கண்டு நல்லதும் தீயதும் விவேகிக்கைக்கு” என்கையாலும், விவேக பலமான த்யாக ஸ்வீகார விஷயங்கள் ஸம்ஸார மோக்ஷங்களாகவே மேல்சொல்லுகையாலும், பகவத் விஷயத்தைக் கண்ட பின்பு ஸதஸத்விவேகம் பண்ணுகையாவது என்னென்னில்? ப்ரதிகோடி கண்டாலொழிய அதின் தோஷம் யதாவாகத் தோற்றாமையாலும், இத்தைப் பற்ற இது நன்று இது தீது என்னும்போது உபயகோடியும் கண்டுகொள்ள வேண்டுகையாலும் சொல்லிற்று. (மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான கலைகளை) “மறையாய் விரிந்த விளக்கை” என்றும், “துளக்கமில் விளக்கம்” என்றும் சொல்லுகிறபடியே, “அகாரோ வை ஸர்வா வாக்” என்கையாலே வேதரூபேண விஸ்த்ருதமாய்த்தது தானென்னும்படி ஸகலவேத காரணமாய், தனக்கொரு காரணமில்லாமையாலே சலநமின்றிக்கே ஸகலார்த்த ப்ரகாசகமாயிருக்கிற அகாரத்தில் நின்று முத்பந்தமாய், தீபாதுத்பந்த ப்ரதீபம் போலே “மாநம் ப்ரதீபமிவ” என்கிறபடியே த்யாஜ்யோபாதே யார்த்தங்களை ஸ்புடதரமாக ப்ரகாசிப்பியா நின்றுள்ள, “பன்னுகலை நால்வேதம்”, “கலைகளும் வேதமும்” இத்யாதியாலே சொல்லப்படுகிற ச்ருதியும் ததுபப்ரும் ஹணங்களுமான சாஸ்த்ரங்களை. “மறையாய் விரிந்த விளக்கை”, “துளக்கமில் விளக்கமாய்” என்று அகாரத்தை ஈச்வரனோடே ஸமாநாதிகரித்தது “அ இதி ப்ரஹ்ம” என்கிறபடியே வாச்ய வாசக ஸம்பந்தத்தாலே. (நீர்மையினாலருள் செய்தான்) நீர்மை – ஸ்வபாவம்; தன் ஸ்வபாவத்தாலே கொடுத்தானென்கை. அதாவது, தன் சேஷித்வ ஸ்வபாவத்தாலே யென்னுதல், காருணிகனான தன் க்ருபையாகிற ஸ்வபாவத்தாலே என்னுதல், ஸமுச்சயமாதல். பூர்வயோஜனை – நீர்மையினா லென்கிறதற்குப் பூர்வர்களிட்ட, பெரியதிருமொழி (2-8-5) வ்யாக்யாநத்திற்கும், “இந்த உதிரத்தெறிப்பு த்ரைகுண்ய விஷயமானவற்றுக்கு ப்ரகாசகம்” என்றிவர்தாம் மேலருளிச் செய்கிறதற்கும் சேரும். நடுவில் யோஜனை, “காருணிகனான” என்றிவர் ப்ரதமத்திலே யெடுத்ததுக்கும், “காருணிகோ ஸர்வேச்வர” என்று பட்டரருளிச் செய்ததற்கும் சேரும். மூன்றாம் யோஜனை, “காருணிகனான ஸர்வேச்வரன்” னென்கிற விடத்தில் சொன்ன இரண்டாம் யோஜனைக்குச் சேரும். ஆக இச்சூர்ணையால் அஜ்ஞரான ஸம்ஸாரி சேதனர் ஜ்ஞாந ப்ரகாசத்தையுடையராய், அந்தவஜ்ஞாநம் நீங்கித் தன்னைக் கண்டு ஸதஸத்விவேகம் பண்ணுகைக்கு உறுப்பாக, ஈச்வரன் சாஸ்த்ர ப்ரதாநம் பண்ணினபடியை தந்நிதாநத்தோடே அருளிச்செய்தாராய்த்து.

– (காருணிகனான ஸர்வேச்வரன்) - கருணை நிறைந்த ஸர்வேச்வரன், கருணையைக் கொண்டு தன்னை அடையாளம் காண்பிக்கலாம்படி உள்ளவன். யாருக்கும் கட்டுப்படாத சுதந்திரமானவன். மிகுந்த கருணை உள்ள ஒருவன் சுதந்திரம் இல்லையென்றால் தான் விரும்பும்படி செயலாற்ற இயலாது; கருணை இல்லாமல் வெறும் சுதந்திரம் மட்டுமே இருந்தால், ஸம்ஸாரத்தில் ஆழ்த்துதல் மற்றும் மோக்ஷம் அளித்தல் ஆகிய இரண்டுக்கும் காரணமான அந்த சுதந்திரம், ஸம்ஸாரத்தில் உள்ளவர்களைக் கரையேற்ற செயலாற்றாமல் இருந்துவிடும். ஆகவே கருணையுடன் கூடிய சுதந்திரம் என்பதே, ஸம்ஸாரம் என்னும் கடலில் சிக்கித் தவிப்பவர்களைக் கரையேற்றும் பொருட்டு அவன் செய்யும் செயல்களுக்கு காரணமாக உள்ளது. அல்லது ஸர்வேச்வரன் என்ற பதம் மூலம் ஏவுதல் மற்றும் ஏவப்படுதல் என்பதான ஸம்பந்தத்தைக் கூறுகிறார் என்றும் கொள்ளலாம். பாஞ்சராத்ர ஆகம நூலான லக்ஷ்மீதந்த்ரத்தில் – க்ருபாயோகாச்ச சாச்வதாத் - நித்யமான கருணையுடன் கூடி உள்ளதாலும் - என்று கூறியதைத் தொடர்ந்து, ஈசேசிதவ்ய ஸம்பந்தாத் அநிதம் ப்ரதமாதபி - ஏவுகிறவன், ஏவப்படுபவன் (பரமாத்மா, ஜீவாத்மா) என்னும் இவர்களுடைய ஸம்பந்தம் கொண்டவள் - என்று கூறுவதால், கருணையுடன் இருத்தல் மற்றும் ஸம்ஸாரிகளுடன் உள்ள ஸம்பந்தம் ஆகிய இரண்டும் ஸம்ஸாரிகள் கரையேறுவதற்காக ஸர்வேச்வரன் செய்யும் செயல்களுக்கான காரணங்கள் ஆகின்றன என்றும் கொள்ளலாம். இங்கு கருணையுடன் இருத்தல் என்பதைத் தொடர்ந்து ஸர்வேச்வரன் என்ற பதம் மூலம், பரமாத்மா-ஜீவாத்மா ஸம்பந்தம் உணர்த்தப்படுவதால், அத்தகைய ஸம்பந்தத்திற்கே முக்கியத்வம் கூறப்படுகிறது என்று கருத்து. இதன் காரணமாகவே ஸர்வேச்வரன் தனது திருவுள்ளத்தில், “இவை அனைத்தும் நம்முடைய உடைமை அல்லவோ?” என்று எண்ணுவதோடு நிற்காமல் துக்கத்தைப் பொறுக்க இயலாததாகிய கருணையுடன் சேர்வதால், மேன்மேலும் ஸம்ஸாரிகள் கரையேறும் பொருட்டு ஸர்வேச்வரன் முயன்றபடி உள்ளான் என்பது தெளிவாகிறது. – (அறிவிலா மனிசர்) – திருமாலை (13) - அறிவிலா மனிசரெல்லாம் – என்பதற்கு ஏற்றபடி அறியாமை என்ற இருளில் மூழ்கியவர்கள். விஷ்ணுபுராணம் (6-5-62) – அந்தம் தம இவாஜ்ஞாநம் – அறியாமை என்ற பொருள்களை மறைக்கவல்ல இருள் போன்றது - என்றது காண்க. ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் (உத்தர பாகம் -1) – ஹர்த்தும் தம: - இருளை அகற்றுவதற்காக - என்று அறியாமையை இருள் என்ற பதம் மூலம் உணர்த்தியது காண்க. ஆகவே எல்லையற்ற காலமாக அறியாமை என்னும் இருளால், “ஆத்மா வேறு, சரீரம் வேறு” என்பது போன்ற பகுத்தறிவு அற்றவர்களாக உள்ள ஸம்ஸாரிகள். – (உணர்வென்னும் சுடர்விளக்கேற்றி) - மூன்றாம் திருவந்தாதி (94) – உணர்வென்னு மொளிகொள் விளக்கேற்றி - என்றும், இரண்டாம் திருவந்தாதி (1) ஞானச்சுடர் விளக்கேற்றினேன் - என்றும் கூறுவதற்கு ஏற்ப எண்ணெய் மற்றும் திரி போன்றவற்றால் உண்டாகும் அழுக்கு இல்லாமல், தூண்டிவிடப்பட்டு எரிவதான சுடர் போன்று ஞானம் என்ற ப்ரகாசமான ஒளியை உடையதாய். ஞானம் என்பது தன்னையும் வெளிப்படுத்திக்கொண்டு, மற்றவற்றையும் வெளிப்படுத்துவதால், அதனை விளக்கு என்று ஒப்புமை கூறுகிறார். (பிறங்கிருள் நீங்கி) - பெரியதிருமொழி (5-7-3) – பிறங்கிருள் நிறங்கெட - என்னும், பெரியாழ்வார் திருமொழி (1-8-10) – பின்னிவ்வுலகினில் பேரிருள் நீங்கி – என்றும் கூறுவதற்கு ஏற்ப மிகுதியாகச் சூழ்ந்த இருளை விலக்கி. (மேலிருந்த நந்தா வேதவிளக்கைக் கண்டு) - பெரியாழ்வார் திருமொழி (4-3) - வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கு – என்றும், பெரிய திருமொழி (1-8-1) - நந்தாவிளக்கு - என்றும், திருவாய்மொழி (4-7-10) – வேதவிளக்கினை - என்றும் கூறுவது போன்று, வேதாந்தங்களில் உணர்த்தப்படும் அனைத்து உயிர்களின் ஆத்மாவாக உள்ளவனும், எப்போதும் ஒளியுடன் கூடியவனும், எப்போதும் வெளிப்பட்டபடி உள்ள ஞானம் நிறைந்தவனும், வேதங்களால் மட்டுமே அறியப்படுபவனும் ஆகிய ஸர்வேச்வரனாகிய தன்னை, திருவாய்மொழி (4-7-10) - என் தக்கஞானக்கண்களாலே கண்டு - என்று கூறுவதற்கு ஏற்ப ஞானம் என்னும் கண்களால் தரிசித்து. (நல்லதும் தீயதும் விவேகிக்கைக்கு) - பெரியதிருவந்தாதி (3) - இவையன்றே நல்ல இவையன்றே தீய - என்று கூறுவதற்கு ஏற்ப நன்மை தீமைகளைப் பிரித்தறியும் விவேகத்தின் பொருட்டு. ஸ்ரீரங்கராஜஸ்தவம் (1) – ஸதஸதீச விவேக்தும் - நல்லது தீயது எவை என்று அறிவதற்கும் - என்று உரைத்தது காண்க. “நல்லதும் தீயதும்” என்ற இந்தச் சொற்றொடர் பொதுவாக “சிறப்புடன் உள்ள பொருள், சிறப்பு இல்லாத பொருள்” என்று பிரித்து அறிவதையே உணர்த்தக்கூடியதாகும்; ஆனால் இங்கு அந்தச் செற்றொடர், “பகவத்விஷயம் என்பது நல்லது, ஸம்ஸாரம் என்பது தீயது” என்று பிரித்து உணர்த்துகிறது. இது எப்படி? காரணம், “நந்தாவேத விளக்கைக் கண்டு நல்லதும் தீயதும் விவேகிக்கைக்கு” என்று சூர்ணையில் கூறுவதாலும், பகுத்தறிவு காரணமாகத் தள்ளுவதற்கும் ஏற்பதற்கு என்றுள்ள விஷயங்கள் இந்த உலகவாழ்வு மற்றும் மோக்ஷம் ஆகியவையே ஆகும் என்று மேலே உரைக்க இருப்பதாலும் ஆகும். பகவத் விஷயத்தை அறிந்த பின்னர், நன்மைதீமை என்று பகுத்தறிவது என்றால் என்ன? நமக்கு விரோதமாக உளளவற்றைக் கண்டால் மட்டுமே அதில் தீமை உள்ளதை உள்ளது உள்ளபடி அறிய இயலும் என்பதாலும், அவ்விதம் காணவில்லை என்றால் தீமையைக் குறித்து உள்ளது உள்ளபடி அறிய இயலாது என்பதாலும், “இதனைப் பற்றினால் இந்த நன்மை உண்டாகும், இந்தத் தீமை ஏற்படும்” என்று உள்ளபோது இரண்டையும் குறித்து அறியவேண்டும் என்பதாலும் ஆகும். (மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான கலைகளை) - பெரியதிருமொழி (8-9-4) – மறையாய் விரிந்த விளக்கை - என்றும், திருச்சந்தவிருத்தம் (4) - துளக்கமில் விளக்கம் – என்றும் கூறுவதற்கு ஏற்ப, அகாரோ வை ஸர்வா வாக் – “அ” என்பதே அனைத்து வேதங்களாகவும் விரிந்தது - என்று கூறுவதால், வேதங்களாக விரிவடைந்து நின்றது தானே என்னும்படி அனைத்து வேதங்களுக்கும் காரணமாகவும், “அ” என்பதான தனக்கு வேறு எதுவும் காரணமாக இல்லாததால், அசைவு இன்றி அனைத்து பொருள்களையும் தனக்குள்ளே காண்பித்தபடி நிற்கும் “அ” என்பதில் இருந்து தோன்றியவையாகவும்; விளக்கிலிருந்து வெளிப்படும் பெரிய தீபம் போன்று, ஸ்ரீரங்கராஜஸ்தவம் (1) – மாநம் ப்ரதீபமிவ - பெரிய விளக்கு போன்ற சாஸ்த்ரத்தை - என்று கூறுவதற்கு ஏற்ப, தள்ளத்தக்கவை மற்றும் ஏற்கத்தக்கவை என்பதானவற்றை மிகவும் தெளிவாக விளக்கவல்ல, பெரியதிருமொழி (7-8-2) – பன்னுகலை நால்வேதம் – என்றும், பெரியதிருமொழி (2-8-5) – கலைகளும் வேதமும் - என்றும் உள்ள வரிகளால் கூறப்படும் ச்ருதியும், அவற்றின் ஆழ்பொருளை விளக்கவல்ல இதிகாசம் மற்றும் புராணம் என்பதான சாஸ்த்ரங்களை. பெரியதிருமொழி (8-9-4) – மறையாய் விரிந்த விளக்கை - என்றும், திருச்சந்தவிருத்தம் (4) - துளக்கமில் விளக்கமாய் – என்றும் உள்ள வரிகளில் அகாரத்தை ஸர்வேச்வரனோடு ஒப்புமைப்படுத்தி உரைத்தது ஏன் என்றால், அ இதி ப்ரஹ்ம – “அ” என்பது ப்ரஹ்மம் - என்றுள்ள ப்ரமாணத்தின்படி பொருளுக்கும் சொல்லுக்கும் உள்ள ஸம்பந்தம் காரணமாகவே ஆகும். (நீர்மையினாலருள் செய்தான்) - நீர்மை என்பது இயல்பாக உள்ளது; அதாவது தன்னுடைய ஸ்வபாவம் காரணமாக இந்தச் சாஸ்த்ரங்களை அளித்தான். இங்கு ஸ்வபாவம் என்பது என்ன? அனைத்து உயிர்களுக்கும் எஜமானனாக நின்று அவற்றை ஏவி தனது செயல்களை முடித்துக்கொள்ளும் ஸர்வேச்வரத் தன்மை ஆகும்; அல்லது மிகுந்த கருணை நிறைந்தவன் என்பதால், தனது கருணை என்னும் தன்மையால் ஆகும்; அல்லது இந்த இரண்டு தன்மைகளாலும் என்றும் கொள்ளலாம். இந்த மூன்றில், முதலாவதான ஸர்வேச்வரத் தன்மை என்பது பெரியதிருமொழி (2-8-5) – என்பதில் உள்ள “நீர்மையினால்” என்று சொல்லுக்கு நம் பூர்வர்கள் அருளிச்செய்த வ்யாக்யானத்தின் பொருளுக்கும், இதே நூலில் (13) – இந்த உதிரத்தெறிப்பு த்ரைகுண்ய விஷயமானவற்றுக்கு ப்ரகாசகம் - என்பதான சூர்ணைக்கும் பொருந்தும். இரண்டாவதாக அருளிச்செய்த கருணைத்தன்மை என்பது, “காருணிகனான” என்று இந்தச் சூர்ணையில் கூறியதற்கும், ஸ்ரீரங்கராஜஸ்தவம் (1) – காருணிகோ ஸர்வேச்வர - கருணை நிறைந்தவனாகிய ஸர்வேச்வரன் அளிக்கிறான் - என்று பட்டர் அருளிச்செய்ததற்கும் பொருந்தும். மூன்றாவது தன்மையாகக் கூறப்பட்ட இரண்டும் கலந்த நிலை என்பது, “காருணிகனான ஸர்வேச்வரன்” என்பதற்கு அருளிச்செய்யப்பட்ட இரண்டாவது பொருளுக்குப் பொருந்தும். ஆகவே இந்தச் சூர்ணையால், அறிவற்றவர்களான ஸம்ஸாரிகள் தங்களுடைய இயல்பான ஞானம் வெளிப்படப் பெற்றவர்களாகவும், அந்த அறியாமை நீங்கி ஸர்வேச்வரனாகிய தன்னை உணர்ந்து, நன்மைதீமைகளைப் பிரித்து அறியும்படி மாறுபவர்களாகவும் ஆவதற்குத் தேவையான சாஸ்த்ரங்களை ஸர்வேச்வரன் அளித்தமை குறித்து, அந்தச் செயலின் காரணத்துடன் விளக்கினார்.