Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (Pravesam 1)

முதல் ப்ரகரணம்

வ்யாக்யான ப்ரவேசம்

ஆசார்ய ஹ்ருதயம் வ்யாக்யான அவதாரிகை

ச்ரிய: பதியாய் ஸர்வஸ்வாமியான ஸர்வேச்வரன், நிரதிசயாநந்த மயமான ஸ்ரீவைகுண்டத்திலே, நித்ய நிர்மலஜ்ஞாநாதிகுணாகராய் ஸ்வச்சந்தாநுவர்த்தி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதரான நித்யஸூரிகளாலே அநவரத பரிசர்யமாண சரண நளிநனாய்க் கொண்டு எழுந்தருளியிராநிற்க, லீலாவிபூதியிலுள்ளார் அவர்களோபாதி தன்னை யநுபவிக்க ப்ராப்தி யுண்டாயிருக்க இழந்து கிடக்கிறபடியைக் கண்டு அதிவ்யாகுலனாய், இவர்களை யுஜ்ஜீவிப்பிக்கையிலுண்டான நசையாலே, “அசித விசேஷிதாந் ப்ரளயஸீமநி ஸம்ஸரத: கரணகளேபரைர்க் கடயிதும் தயமாநமநா:” என்கிறபடியே, கரணகளேபர விதுரராய் அசிதவிசேஷிதராய் அதஏவ போகமோக்ஷ சூந்யராய்க் கிடக்கிற தசையிலே தயமாந மநாவாய்க் கொண்டு, ஸ்வசரணகமல ஸமாச்ரயணோப கரணமான கரணகளேபரங்களைக் கொடுத்து ஜ்ஞான விகாஸத்தையும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தியையு முண்டாக்கி இந்த ஜ்ஞாநகார்யமான த்யாஜ்யோபாதேய விவேகபரிகரமாக “மாநம் ப்ரதீபமிவ காருணிகோ ததாதி” என்கிறபடியே, வேத ப்ரதாநத்தைப் பண்ணி, அநந்தரம் மந்வாதிகளுக்கந்தர்யாமியாய் நின்று, சேதநருடைய விசிஷ்ட வேஷவிஷயமான சாஸ்த்ரத்தை வெளியிட்டருளி, அந்த சாஸ்த்ராப்யாஸம் அநேக யோக்யதாஸாபேக்ஷமாய், சிரகால ஸாத்யமுமாயிருக்கையாலே துஷ்கரமா யிருக்கிற படியைத் திருவுள்ளம் பற்றி தாத்ருசயோக்யதா நிரபேக்ஷத்வதிகளாலே ஸுகரமுமாய் சேதந நிஷ்க்ருஷ்ட வேஷ விஷயமுமான திருவஷ்டாக்ஷர ப்ரஹ்மவித்யையை ஸ்வயமேவ வெளிப்படுத்தினவளவிலும் கார்யகரமாகாமையாலே, ஓலைப்புறத்திற் செல்லாத ராஜ்யத்தை எடுத்துவிட்டுச் செலுத்திக்கொள்ளும் ராஜாக்களைப்போலே நாமே சென்று திருத்தக் கடவோமென்று ராமக்ருஷ்ணாத்யவதாரமுகேந இவர்களிருக்கிற விடத்திலே தான் வந்து திருத்தப்பார்த்தவிடத்திலும் ஒருவரும் திருந்தக்காணாமையாலே விஜாதீயரான நம்மாலொருபடியாலும் இவர்களைத் திருத்தப் போகாதாயிருந்தது; இனி இணக்குப் பார்வையிட்டு ம்ருகம் பிடிப்பாரைப்போலே ஸஜாதியரைக் கொண்டே காரியம் கொள்ளுவோமென்று அறுதியிட்டு அதுக்கு, ஆமுதல்வரையுண்டாக்குகைக்காக ஸர்வபூத ஸுஹ்ருத்தான தன்னுடைய நிர்ஹேதுக ப்ரஸாதத்தாலே எங்கும் பார்த்து இலக்குக் காணாமல் வாராநிற்க, அந்தப் பார்வை தனக்குப் பள்ளமடையான தென்திசையிலே யானவளவிலே, “மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து” என்கிறபடியே ஜந்ம பரம்பரைகளிலே தோள் மாறி நித்யஸம்ஸாரியாய்ப் போருகிற விவர்மேலேபட, அந்த நிர்ஹேதுக கடாக்ஷ விசேஷ லப்த திவ்ய ஜ்ஞாந பக்திகரான வாழ்வார், தத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை விசத விசததர விசததமமாக அநுபவித்து அவ்வநுபவ பரீவாஹ ரூபேண பேசுகிற பாசுரமானது சோகவேக ஜநிதமான மாநிஷாதேத்யாதி ச்லோகம் ப்ரஹ்மாவின் ப்ரஸாதத்தாலே லக்ஷணோபேதமானாப்போலே பகவத்ப்ரஸாதமடியாக ஸர்வ லக்ஷணோ பேதமான ப்ரபந்தமாய்த் தலைக்கட்டிற்று. இதுதானும், த்ராவிடவேததயா விஸ்தீர்ணமாய் அநேகார்த்த ப்ரதிபாதக மாயிருக்கையாலே, இதில் தாத்பர்யார்த்தம் ஸர்வர்க்கும் ப்ரதிபத்தி விஷயமாகை அரிதென்று பார்த்து, இதிலர்த்த விசேஷங்களையும், இவற்றில் ஆழ்வார் திருவுள்ளக் கருத்தின் ப்ரகாரத்தையும் இவ்வாசார்ய ருசிபரிக்ருஹீதமான அர்த்தமே யெல்லார்க்கும் தஞ்சமென்னு மத்தையும், இவர் தம்முடைய பரமக்ருபையினாலே ப்ரகாசிப்பியா நின்று கொண்டு ஆசார்ய பரம்பரா ப்ராப்தமான இவ்வர்த்தங்கள் எல்லார்க்கும் ப்ரதிபத்தியோக்யமாம்படி அநதிஸங்ரஹாநதி விஸ்தரமாக இவ்வாசார்யஹ்ருதய ப்ரபந்தமுகேந அருளிச்செய்கிறார். “ஆத்யஸ்ய ந: குலபதே:” என்கிறபடியே வைதிக ஸந்தாநத்துக்கு ப்ரதமாசார்யரான ஆழ்வாரருளிச்செய்த திவ்ய ப்ரபந்தங்களில் அவருடைய திருவுள்ளக் கருத்துக்களை சொல்லுகையாலேயிறே இப்ப்ரபந்தத்துக்கு ஆசார்யஹ்ருதயமென்று நிரூபகமாய்த்து. இப்ப்ரபந்தத்தில் இவரருளிச் செய்கிற வாக்யங்களெல்லாம் அருளிச்செயல் சந்தைகளைச் சேர்த்தருளிச் செய்கிறது. மயர்வற மதிநலமருளப் பெற்றவர்கள் பேசின திவ்யஸூக்திகளாகையாலே ஆப்ததமமுமாய் அத்யந்த போக்யமுமா யிருக்கிறவிதுவே தமக்கு அநவரதாபிமதமாகையாலும், முகமறிந்தவன் கோத்தமுத்து பெருவிலையனாமாப்போலே சந்தைகளைத் தாம் சேர்த்த சாதுரியாலே அருளிச்செயலில் ரஸஜ்ஞர்க்கு இதில் அர்த்தத்திலுங் காட்டில் சப்தந்தானே மிகவு மினிதாயிருக்குமென்னு மபிப்ராயத்தாலும். ஆகையாலிப்ப்ரபந்தம் சப்தார்த்தங்க ளிரண்டின் ரஸத்தாலும் விசேஷஜ்ஞ ஜந மநோஹரமாயிருக்கும்.

பெரியபிராட்டியாரின் நாயகனும், அனைத்திற்கும் எஜமானனும் ஆகிய ஸ்ரீமந்நாராயணன் எல்லையற்ற ஆனந்தமயமாக உள்ள ஸ்ரீவைகுண்டத்தில், எப்போதும் உள்ளதாகவும் தோஷங்கள் அற்றதாகவும் உள்ள ஞானம் போன்ற பல குணங்களைக் கொண்டவராகவும், ஸர்வேச்வரனாகிய தன்னைக் குறித்த எண்ணத்தை மட்டுமே பின்பற்றிச் செல்லும் ஸ்வரூபம் – இருப்பு – செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டவராகவும் உள்ள நித்யஸூரிகளால் எப்போதும் கைங்கர்யம் செய்யப்படும் திருவடித்தாமரைகளை உடையவனாக எழுந்தருளியுள்ளான். இந்தப் பூமியில் உள்ள மற்றவர்களும் அந்த நித்யஸூரிகள் போன்று தன்னை அனுபவிக்கும்படியான ஸம்பந்தம் உள்ளவர்கள் என்றாலும், அவர்கள் அதனை அடையப் பெறாமல் இழந்து கிடப்பதைக் கண்டு மிகுந்த வருத்தம் கொண்டான். ஆகவே இவர்களை இந்தத் துக்கத்தில் இருந்து கரையேற்றவேண்டும் என்று ஆசை கொண்டான். ஸ்ரீரங்கராஜஸ்தவம் (உத்தரபாகம் - 41) – அசித விசேஷிதாந் ப்ரளயஸீமநி ஸம்ஸரத: கரணகளேபரைர்க் கடயிதும் தயமாநமநா: – ப்ரளயத்தின் முடிவில் அறிவற்ற அசேதன வஸ்துக்களுக்குச் சமமாகக் கிடக்கும் இந்த ஆத்மாக்களை அவற்றின் இந்த்ரியங்கள் மற்றும் சரீரங்கள் ஆகியவற்றுடன் சேர்க்கவேண்டும் என்று இரக்கம் நிறைந்த திருவுள்ளத்தனாக - என்று கூறுவதற்கு ஏற்ப, இந்த்ரிய சரீரங்கள் அற்றவர்களாக, அறிவற்ற அசேதனம் போன்றவர்களாக, அதன் விளைவாக இன்பங்களையும் மோக்ஷத்தையும் அனுபவிக்க இயலாதவர்களாக இந்த ஆத்மாக்கள் கிடக்கின்றன. அவற்றை நோக்கி இரக்கம் நிறைந்த மனத்துடன் துக்கம் கொள்கிறான். ஆகவே இந்த ஆத்மாக்கள் தனது திருவடித் தாமரைகளைப் பற்றுவதற்கு ஏதுவாக உள்ள இந்த்ரியங்களுடன் சேர்ந்த சரீரங்களை அளிக்கிறான். பின்னர் ஞானத்தை மலரும்படிச்செய்கிறான். செயல்புரிதல், செய்யாமல் இருத்தல் என்பதை ஏற்படுத்தி, ஞானத்தின் காரணமாக “இதனைச் செய்யவேண்டும், இதனைச் செய்யக்கூடாது” என்று பிரித்து அறியும் சக்தியை அளிக்கிறான். தொடர்ந்து ஸ்ரீரங்கராஜஸ்தவம் (உத்தரபாகம்) – மாநம் ப்ரதீபமிவ காருணிகோ ததாதி – பரமகருணை உள்ள ஸர்வேச்வரன் விளக்கு போன்றுள்ள ப்ரமாணமான சாஸ்த்ரங்களை அளித்தான் - என்று கூறுவதற்கு ஏற்ப வேத சாஸ்த்ரத்தை அளித்தான். அதன் பின்னர் மநு முதலானவர்களுக்கு அந்தர்யாமியாக நின்று சேதனர்களுடைய சரீரத்துடன் சேர்ந்த ஆத்மாவைக் குறித்த சாஸ்த்ரத்தை வெளியிட்டான். ஆனால் அந்தச் சாஸ்த்ரங்களைக் கற்பதற்குப் பலவிதமான தகுதிகள் தேவை என்பதாலும், அவற்றைக் கற்று அறிவதற்கு நீண்ட நாள்கள் அவசியம் என்பதாலும், அவற்றைக் கற்பது மிகவும் கடினம் என்று திருவுள்ளம் கொண்டான். அதனால் கற்பதற்கு மிகவும் எளிதாகவும், கற்பதற்குத் தகுந்த தகுதி ஏதும் அவசியம் இல்லாமல் உள்ளதாகவும், ஆத்மவிஷயத்தைப் பற்றி மட்டுமே உள்ளதாகவே இருக்கின்ற மந்த்ரமாகிய (அஷ்டாக்ஷரம்) ப்ரஹ்மவித்தையைத் தானே வெளிப்படுத்தினான். இவ்விதம் அஷ்டாக்ஷர மந்த்ரத்தை வெளியிட்டபோதிலும் அது பயன்படாமல் போவதைக் கண்டான். கட்டளைகள் பின்பற்றப்படாமல் உள்ள நாட்டினை தாங்களே நேரில் சென்று திருத்தும் அரசர்கள் போன்று, “நாமே அவர்களுடைய இருப்பிடத்தற்குச் சென்று அவர்களை திருத்திக் கொள்வோம்”, என்று திருவுள்ளம் கொண்டவனாக இராமன், க்ருஷ்ணன் முதலான அவதாரங்களை எடுத்து, இவர்கள் உள்ள இடத்திற்கு தானே வந்து திருத்த முயன்றான். அப்போதும் இவர்கள் திருந்தவில்லை. அதனைக் கண்ட ஸர்வேச்வரன், “இவர்களில் ஒருவனாக நாம் இல்லாதவரை இவர்களைத் திருத்த இயலாது. ஆகவே பெண் யானையைக் கொண்டு ஆண் யானையைப் பிடிப்பது போன்று, இவர்களுடைய இனத்தில் உள்ளவர்கள் மூலமே இவர்களைத் திருத்துவோம்”, என்று திருவுள்ளம் கொண்டான். அதற்காக “ஆமுதல்வன்” என்று கூறும்படியாக உள்ளவரை உண்டாக்கும் பொருட்டு, அனைத்து உயிர்களின் நன்மையில் மட்டுமே நோக்கமுள்ள தனது கருணையை எங்கும் படரவிட்டு ஆராய்ந்தபோதிலும் அவனுக்கு ஏற்றபடி யாரும் கிட்டவில்லை. அப்போது ஸர்வேச்வரனுடைய பார்வை தெற்குத்திசையில் சென்றது. அந்தப் பார்வையானது திருவாய்மொழி (2-6-8) – மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து - என்பதற்கு ஏற்ப பல பிறவிகள் இந்த ஸம்ஸாரத்தில் மாறிமாறி உழன்று நித்யஸம்ஸாரியாகக் கிடக்கும் ஸ்வாமி நம்மாழ்வார் மீது பதிந்தது. எந்தவிதமான காரணமும் இன்றி வெளிப்பட்டதான ஸர்வேச்வரனுடைய அந்தக் கடாக்ஷத்தினால் திவ்யமான ஞானத்தையும் பக்தியையும் ஆழ்வார் அடைந்தார். அப்படிப்பட்ட நிலையை அடைந்த ஆழ்வார் ஸர்வேச்வரனுடைய ஸ்வரூபம், ரூபம், குணங்கள், ஐச்வர்யங்கள் என்றுள்ள பலவற்றையும் தெளிவாகவும், விரிவாகவும் அனுபவித்தார். அத்தகைய அனுபவங்களை ஆழ்வாரால் தனக்குள்ளே அடங்கி வைக்க இயலாத காரணத்தால், அவை பொங்கிப் பாய்ந்து பாசுரங்களாக வெளிப்பட்டன. அந்தப் பாசுரங்கள், இராமாயணம் பாலகாண்டம் (2-15) – மாநிஷாத் - வேடுவனே! எந்த ஒரு காரணத்தால் நீ சேர்ந்திருந்த அன்றில் பறவைகளில் ஒரு பறவையைக் கொன்றாயோ அதே காரணத்தால் உனது ஆயுள் காலத்தில் அப்படிப்பட்ட சேர்த்திருத்தலை அடையமாட்டாய் – என்று தொடங்குவதான நான்முகன் அருளால் அனைத்து இலக்கணங்களும் ஒருங்கே அமைந்த இராமாயணம் போன்று, ஸர்வேச்வரனுடைய திருவருள் காரணமாக அனைத்து இலக்கணங்களும் நேர்த்தியாக அமையப்பெற்று விளங்கின. இத்தகைய ஆழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழியானது தமிழ்வேதம் என்பதால் மிகவும் விரிவாகப் பல பொருள்களை உள்ளடக்கி உரைப்பதாக இருக்கிறது. ஆகவே இதன் ஆழ்பொருள் என்பது அனைவருடைய அறிவுக்கும் எட்டுவது அரிது என்று அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் திருவுள்ளம் பற்றினார். ஆகவே இந்த தமிழ்வேதத்தில் கூறப்படும் அனைத்து ஆழ்பொருள்களையும், அவற்றை எவ்விதம் சிந்தித்து ஆழ்வார் அருளிச்செய்தார் என்பதையும், நம்மாழ்வாருக்கு விருப்பமானவை மட்டுமே அனைவருக்கும் புகலிடம் அளிக்கும் ஆழ்கருத்துக்கள் என்பதையும் தனது உயர்ந்த கருணை காரணமாக அனைவருக்கும் விளக்கவேண்டும் என்று எண்ணினார். அதனால் ஆசார்யபரம்பரை என்னும் ஸ்ரீமந்நாராயணன் தொடக்கமாக வந்துள்ள இந்தப் பரம்பரையில் தொடர்ந்து வந்தபடி உள்ளதான இந்த ஆழ்பொருள்கள் அனைத்தையும் அனைவரும் அறிந்து கொள்வதற்கு ஏற்றபடி, மிகவும் சுருக்காமலும் மிகவும் விரிவுபடுத்தாமலும் இந்த “ஆசார்ய ஹ்ருதயம்” என்ற நூல் மூலம் அருளிச்செய்தார். ஸ்வாமி ஆளவந்தார் ஸ்தோத்ரரத்னத்தில் (5) – ஆத்யஸ்ய ந: குலபதே: - நமது முன்னோராகிய குலத்தின் நாதனாகிய நம்மாழ்வாருடைய – என்று கூறுவதற்கு ஏற்ப உள்ள வைதிக குலத்தின் முதன்மை ஆசார்யராகிய ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த திவ்ய ப்ரபந்தங்களில், அவருடைய திருவுள்ளத்தில் மலர்ந்த ஆழ்பொருள்களை கூறுவதால் இந்த க்ரந்தம் “ஆசார்ய ஹ்ருதயம்” என்று பெயர் பெற்றது. மயர்வற மதிநலம் அருளிப்பெற்றவர்கள் உரைத்தவை என்ற காரணத்தினால் மிகவும் நம்பத் தகுந்தவையாகவும், மிகவும் இனிமையாகவும் உள்ள திவ்ய ப்ரபந்தங்கள் தம்மால் எப்போதும் விரும்பப்படுவதாக உள்ளதாலும், முத்துக்களின் தன்மைகளை நன்கு அறிந்தவன் கோர்த்த முத்துமாலை மிகுந்த விலைக்கு விற்பனை ஆவது போன்று, சொற்களை தான் ஒன்றாக இணைத்த சாதுர்யத்தால், அருளிச்செயல்களை ரசிப்பவர்களுக்கு அதன் பொருளைக் காட்டிலும் சொற்களே மிகவும் இனிமையாக இருக்கும் என்று எண்ணியதாலும் இந்த ப்ரபந்தத்தில் இவர் ஆழ்வார் அருளிச்செயல்களில் உள்ள சொற்களைக் கொண்டே தான் அருளிச்செய்த சூர்ணைகளை அமைத்துள்ளார். ஆகவே இந்த நூல், சொற்கள் மற்றும் சொற்களின் பொருள் ஆகிய இரண்டுவிதமான சுவைகளாலும் அறிஞர்களின் மனதிற்கு விரும்பத்தக்க மகிழ்வை அளிப்பதாக இருக்கும்.