Acharya Hridayam - தனியன்கள் (Thaniyan 5)
தனியன்கள்
பொதுத் தனியன்கள்
பூதம் ஸரச்ச மஹதாஹ்வய பட்டநாத ஸ்ரீபக்திஸார குலசேகர யோகிவாஹாந் பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ர மிச்ராந் ஸ்ரீமத் பராங்குச முநிம் ப்ரணதோஸ்மி நித்யம்
(ஸ்வாமி பராசரபட்டர் அருளிச்செய்தது) பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், யதிகளின் தலைவரான இராமாநுசர், பக்தி என்ற செல்வம் கொண்ட நம்மாழ்வார் ஆகியோரை நான் எப்போதும் வணங்குபவன் ஆவேனாக. விளக்கம் – இங்கு ஆழ்வார்களின் வரிசையில் உடையவரைக் கூறிய பின்னர், நம்மாழ்வாரைக் கூறியது காண்க. இது ஏன்? ஆழ்வார்களுக்கு சரீரமாக நம்மாழ்வாரையும், அவரது ஒவ்வொரு உறுப்பாக மற்ற ஆழ்வார்களையும் கூறுவது மரபு. இந்த வரிசையில் பூதத்தாழ்வார் = நம்மாழ்வாரின் திருமுடி, பொய்கையாழ்வார் = ஒரு கண், பேயாழ்வார் = மற்றொரு கண், பெரியாழ்வார் = திருமுகம், திருமழிசையாழ்வார் = திருக்கழுத்து, குலசேகராழ்வார் = ஒரு திருக்கரம், திருப்பாணாழ்வார் = மற்றொரு திருக்கரம், தொண்டரடிப்பொடியாழ்வார் = திருமார்பு, திருமங்கையாழ்வார் = திருஉந்தி, உடையவர் = திருவடிகள் என்று கொள்வர்.