பெரியாழ்வார் திருமொழி - முதல்பத்து (பாசுரம் 18)
முதல்பத்து
இரண்டாம் திருமொழி
மண்ணும் மலையும் * கடலும் உலகேழும் * உண்ணுந் திறத்து * மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு ** வண்ணம் எழில் கொள் * மகரக் குழை இவை * திண்ணம் இருந்த ஆ காணீரே * சே இழையீர் வந்து காணீரே
– பூமியையும், மலைகளையும், கடல்களையும், ஏழுலகங்களையும் திருவயிற்றில் வைக்கும்போது உவந்து திருவயிற்றிலே வைத்த பாலகனது, அழகிய நிறம் கொண்ட மீன் போன்ற வடிவுடைய கண தோடுகளையும், அது வசீகரிக்கும் ஆற்றலையும் வந்து காணுங்கள், அழகிய ஆபரணங்களை உடைய பெண்களே நீங்கள் வந்து காணுங்கள்.
திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேச அவதாரிகை - திருப்புருவத்தினின்றும் திருமகரக்குழையிலே போகிறார். மாமுனிகள் வ்யாக்யான அவதாரிகை - திருப்புருவத்தினழகை யநுபவித்த வநந்தரம், திருமகரக்குழையினழகை அநுபவிக்கிறார்.
– திருப்புருவத்தின் அழகினை அனுபவித்த பின்னர், மீன் போன்ற தோடுகளின் அழகினை அனுபவிக்கிறார்.
திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேசம் - (மண்ணித்யாதி ஸர்வாதாரமான பூமியும், பூதரங்களும், பூமிக்கு ரக்ஷகமாகச் சூழ்ந்த ஸமுத்ரங்களும் மேலும் கீழுமான பதினாலு லோகங்களும். (உண்ணும் திறந்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு) மகிழ்ச்சியாவது - ஸம்ஸாரிகளுடைய பாபகரணங்கள் ஒடுக்கப் பெற்றோமென்கை. அழகிய நிறத்தையுமுடைத்தாய் கண்டவர்களுடைய சித்தத்தை அபஹரித்தால் வாங்கவொண்ணாத திண்மையிறே. (சேயிழை) பூர்வவத். மாமுனிகள் வ்யாக்யானம் - (மண்ணுமித்யாதி) ஸர்வாதாரமான பூமியும், பூமிக்காதாரமான பர்வதங்களும், பூமிக்கு ரக்ஷகமான ஸமுத்ரங்களும், மற்றுமுண்டான ஸகல லோகங்களும் ப்ரளயங் கொள்ளாதபடி திருவயிற்றிலே வைக்கிறவளவில், “இவற்றை ரக்ஷிக்கப் பெற்றோமே'” என்னும் உகப்பாலே இதுவே தாரகமாகத் திருவயிற்றிலே வைத்த பாலகனுக்கு. (வண்ணமித்யாதி) திருமேனிக்குப் பரபாகமான திருநிறத்தையும் ஸ்வஸம்ஸ்த்தாந வைசித்ரியால் வந்த அழகையுமுடைய திருமகரக்குழைகளான இவற்றினுடைய, கண்டவர்கள் கண்ணையும் செஞ்சையும் கவரும்படியான திண்மையிருக்கிறபடியைக் காணுங்கோள்; அழகிய ஆபரணங்களாலே அலங்க்ருதைகளான நீங்கள் வந்து காணுங்கோள்.
– (மண்ணும்) அனைத்திற்கும் ஆதாரமான பூமியும், பூமிக்கு ஆதாரமான மலைகளும், பூமியைக் காக்கும் கடல்களும், மேலும் கீழும் உள்ள மற்ற லோகங்களும். (உண்ணும் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு) – அழியாதபடியாக தனது திருவயிற்றிலே வைக்கும்போது, “இவற்றைக் காப்பாற்றும் வாய்ப்பு கிட்டியதே” என்று மகிழ்ந்தும்; ஸம்ஸாரிகளுடைய வினைப்பயனாய் உள்ள மனம் முதலான இந்த்ரியங்களையும், அவ்வினைகும் காரணமான அழுக்கு உடம்பையும் ஒடுக்கும் வாய்ப்பு கிட்டியதே என்று மகிழ்ந்தும்; இந்த மகிழ்வினாலே, கீதை (18-8) - ஞாநீ து ஆத்மைவ மே மதம் – ஞானியே அனது ஆத்மா - என்று அவனே தன் வாயால் சொல்லும்படியாக அடியார்களையும் அவர்களின் லோகங்களையும் தனது உயிர்த் தரிப்பதற்காகத் தன்னுடனேயே தனது திருவயிற்றில் வைத்த பாலகனது. (வண்ணம் இத்யாதி) திருமேனிக்கு மேன்மையளிக்கும் வண்ணத்தையும், தன்னுடைய திருமேனியின் ஆச்சர்யமான அழகையும் கொண்டு விளங்கும் மீன் போன்ற கணத்தோடுகளையும், கண்டவர்களது சித்தத்தை அபகரிக்கும் அதன் ஆற்றலையும் காணுங்கள், அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நீங்கள் வந்து காணுங்கள்.