திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 11)

ஏழாம்பத்து

மூன்றாம் திருவாய்மொழி

ஊழி தோறு ஊழி உருவும் பேரும் * செய்கையும் வேறவன் வையம் காக்கும் * ஆழி நீர் வண்ணனை அச்சுதனை * அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன ** கேழில் அந்தாதி ஓர்ஆயிரத்துள் * இவை திருப்பேரெயில் மேய பத்தும் * ஆழி அங்கையனை ஏத்த வல்லார் * அவர் அடிமைத் திறத்து ஆழியாரே

– ஒவ்வொரு கல்பங்களிலும் வெவ்வேறு திருநாமங்களையும் செயல்களையும் கொண்டவனாக இந்த ஜகத்தைக் காப்பாற்றியபடி உள்ளவனும்; ஸமுத்ர நீர் போன்று பசுமையாக உள்ளதும், அவனுக்கே உரியதும் ஆகிய திருமேனியைக் கொண்டவனும்; தன்னால் காக்கப்பட வேண்டியவர்களை எப்போதும் நழுவ விடாமல் உள்ளவனும் ஆகிய அச்சுதனைக் குறித்து, இந்த ஜகத்துக்கே ஆபரணம் போன்றுள்ள ஆழ்வார்திருநகரியின் நிர்வாஹகராகிய நம்மாழ்வார் அருளிச்செய்த ஆயிரம் அந்தாதிகளில், திருப்பேரெயில் குறித்த இந்தப் பத்துப் பாசுரங்கள் முலம், திருக்கரமும் திருவாழியும் என்பதாக உள்ள ஸர்வேச்வரனைப் புகழ்ந்து துதிக்க வல்லவர்கள், அவனிடமும் அவனுடைய அடியார்களிடமும், சக்கரத்தாழ்வான் போன்ற கைங்கர்யத்தன்மை கொண்டவராக இருப்பார்கள்.

நிகமத்தில் இத்திருவாய்மொழி கற்றார் பகவத் கைங்கர்யத்திலே மிகவும் அவகா ஹித்தாரென்கிறார்.

– “இந்தத் திருவாய்மொழியைக் கற்றவர்கள், பகவத் கைங்கர்யத்தில் ஆழமாக மூழ்கியவர்கள் ஆவர்”, என்கிறார்.

(ஊழியித்யாதி) ஆச்ரித ரக்ஷணார்த்தமாக கல்பந்தோறும் திருமேனியும் திருநாமமும் சேஷ்டிதங்களும் வேறுபடக் கொள்ளுமவன். இதுக்கு ப்ரயோஜாமென்? என்னில், (வையங்காக்கும்) ஜகத் ரக்ஷணார்த்தமாக (ஊழிதோறூழியித்யாதி) அப்படியே ரக்ஷித்திலனாகில் இப்படி விச்வஸிப்பாரில்லையே இவனை “ரக்ஷகன்” என்று. (ஆழி நீர்வண்ணனை) நோக்காதே படுகொலையடிக்கிலும் விடவொண்ணாத வடிவு. வேறுபடாதே அங்குள்ளார்க்குக் காட்சி கொடுக்கும் அஸாதாரண விக்ரஹத்தைச் சொல்லுகிறது. (அச்சுதனை) அவ்வடிவு தனக்கு ஒருநாளும் அழிவில்லையென்னுதல்; பற்றினாரை ஒருநாளும் விடானென்னுதல். (அணி குருகூர்) ஆபரணமான திருநகரி (கேழிலந்தாதி) ஒப்பில்லாத அந்தாதி. தம்மாலும் பிறராலும் மீட்கவொண்ணாதபடி பகவத்விஷயத்திலுண்டான வ்யவஸாயத்தைச் சொன்ன பத்தாகையாலே ஒப்பின்றிக்கே இருக்கிறபடி. ஒப்பில்லாத ஆயிரத்துள் திருப்பேரெயிலிலே சேர்ந்த இப்பத்தைக் கொண்டு. (ஆழியங் கையனை யேத்தவல்லார்) இதெல்லாவற்றாலும் சொல்லிற்றாயிற்று, கையுந்திருவாழியுமான வழகிலே இவர் அகப்பட்டபடி, அல்லாத அழகுகள் ஒருபடியும் இது ஒருபடியுமாயிருக்கை; இது கைமேலே யநுபவித்துக் காணலாமே. (அவரடிமைத் திறத்தாழியாரே) அடிமை வர்க்கத்தில் திருவாழியின் தன்மையை யுடையவரென்னுதல்; அடிமையிடையாட்டத்தில் ஒருவரால் மீட்கவொண்ணாதபடி உட்புகுவரென்னுதல்.

– (ஊழியித்யாதி) - தனது அடியார்களைக் காப்பாற்றுவதற்காக ஒவ்வொரு கல்பத்திலும் பல திருமேனிகளும் பல செயல்களும் என்பதாக, வெவ்வேறாகக் கொள்பவன். இவ்விதம் வெவ்வேறாகக் கொள்வதன் பயன் என்ன என்பதைக் கூறுகிறார்; (வையம் காக்கும்) - இந்த ஜகத்தைக் காப்பாற்றுதல் என்பதற்காக ஆகும். (ஊழிதோறூழியித்யாதி - இப்படியாகக் காக்கவில்லை என்றால், அவனை “ரக்ஷகன்” என்று யாரும் விச்வாஸம் கொள்ளமாட்டார்கள் அல்லவோ? (ஆழி நீர்வண்ணனை) - அவன் இவ்விதம் காப்பாற்றாமல், துன்பம் ஏற்படும்படிச் செய்தாலும் கூட, விட இயலாதபடி உள்ள வடிவழகைக் கொண்டவன். இங்குள்ளவர்கள் மற்றும் அங்குள்ளவர்கள் என்ற வேறுபாடு இன்றி அனைவருக்கும் காட்சி கொடுத்தபடி உள்ள, அவனுக்கே உரிய திருமேனியைக் கூறுகிறார். – (அச்சுதனை) - அத்தகைய வடிவத்திற்கு எப்போதும் அழிவில்லை. தன்னைப் பற்றியவர்களை ஒருபோதும் விடாமல் உள்ளவன். (அணி குருகூர்) - இந்த ஜகத்திற்கு ஆபரணமாக உள்ள ஆழ்வார்திருநகரி. (கேழில் அந்தாதி) - ஒப்பற்ற அந்தாதி. தன்னாலும் மற்றவர்களாலும் கூட மீட்டு எடுக்க இயாலாதபடி உள்ள பகவத் விஷயத்தில் உண்டான உறுதியைக் கூறிய பத்து என்பதால், ஒப்பில்லாதபடி இருத்தல். ஒப்பற்ற ஆயிரத்தில் திருப்பேரெயிலைச் சேர்ந்து இந்தப் பத்து பாசுரம் மூலம். (ஆழியங் கையனை யேத்தவல்லார்) - இந்தத் திருவாய்மொழி அனைத்தாலும் கூறப்பட்டது என்னவென்றால் , “திருக்கரமும் திருவாழியும்” என்பதாக உள்ள வடிவழகில் இவர் ஆட்பட்ட விதத்தையே ஆகும்; ஆனால் “தாமரைக்கண்ணன்”, “செங்கனிவாய்”, “செஞ்சுடர் நீள்முடி” என்று பலவும் கூறப்பட்டதே என்ற கேள்விக்கு விடை தருகிறார்; திருக்கரமும் திருச்சக்கரமும் என்பது தவிர உள்ள மற்ற அழகுகள் அனைத்தும் தராசின் ஒரு தட்டு போன்றும், இந்த அழகு மற்றொரு தட்டு போன்றும் உள்ள நிலை. இதனைக் “கைமேல் பலன்” என்பது போன்று அனுபவித்துக் காணலாம்படி உள்ளது. (அவரடிமைத் திறத்தாழியாரே) - இதற்கு இரண்டுவிதமாகப் பொருள் கூறுகிறார். அடிமைகளுடைய கூட்டத்தில், சக்கரத்தாழ்வானுடைய தன்மையைக் கொண்டவராக இருத்தல் என்பது ஒரு பொருள்; அடிமைகள் செய்யும் செயல்களிலிருந்து இவரை யாராலும் மீட்டு எடுக்க இயலாதபடி ஆவர் என்பது இரண்டாவது பொருள் ஆகும்.