திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 10)

ஏழாம்பத்து

மூன்றாம் திருவாய்மொழி

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் * நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள்! * சிகர மணி நெடு மாட நீடு * தென் திருப்பேரெயில் வீற்றிருந்த ** மகர நெடுங்குழைக் காதன் மாயன் * நூற்றுவரை அன்று மங்க நூற்ற * நிகர் இல் முகில் வண்ணன் நேமியான் * என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே?

– எனக்குத் தோழிமார்கள் என்று பெயரளவில் மட்டுமே கூறிக்கொண்டு, எனக்கு நன்மை கூறுவதாக எண்ணியபடி என்னை நியமிக்க முனைபவர்களே! சிகரம் போன்று மணிகளால் பதிக்கப்பட்ட ஓங்கிய மாடங்கள் கொண்டதும், அவன் நீண்ட காலம் வசித்தபடி உள்ளதும் ஆகிய தென்திருப்பேரெயில் நகரத்தில் எழுந்தருளியுள்ளவனும், மகரம் போன்ற வடிவுள்ள பெரிய குழை என்ற ஆபரணத்தைக் கொண்ட செவிகள் உடையவனும், அந்த ஆபரணத்தின் அழகு போன்றே வியக்க வைக்கும் குணங்களையும் லீலைகலையும் கொண்டவனும், தனது அடியார்களாகிய பாண்டவர்களின் விரோதிகளாகிய துரியோதனன் உள்ளிட்ட நூறு கௌரவர்களை அன்று மஹாபாரதப் போரில் மடியும்படியாகச் செய்தவனும், அதன் காரணமாக ஒப்பற்ற காளமேகம் போன்ற வடிவத்தில் மகிழ்ச்சியும் மேன்மையும் கொண்டவனும், அடியார்களைக் காப்பதற்காக சக்கரத்தாழ்வானைக் கொண்டவனும் ஆகிய அவன், இத்தகைய ஈடில்லாத பல செயல்களையும் காண்பித்து எனது நெஞ்சத்தை எத்தனை காலமாக அபகரித்தபடி உள்ளான்! அவன் வீற்றுள்ள நகரம், நாடு, அங்குள்ளவர்கள் என்ற வேறுபாடு காணாமல் நான் நேரடியாக அங்கு சென்று ஆராய்வேன்.

– “இருந்ததே குடியாக நாட்டார் உன்னைப் பழி சொல்லார்களோ?” என்று தோழிமார்கள் சொல்ல, “அவர்களன்றே எனக்குத் தேட்டம்?” என்கிறாள்.

– இவளிடம் தோழிமார்கள், "நாட்டில் உள்ள அனைவரும் உன்னைப் பழி பேச மாட்டார்களோ?", என்றார்கள். இதற்கு இவள், "அவர்களை அல்லவோ நான் தேடியபடி உள்ளேன்!", என்கிறாள்.

(நகரமும் நாடும் இத்யாதி) உன் துணிவு துணிவாக, நாட்டார் நகரத்தார் மற்றுமுள்ளாரும் எல்லாம் அறிந்து பழி சொல்லுகிறார்களிறே என்ன; எனக்குத்தான் அவனையோ தேட்டம்? நகரம், நாடு, பத்தநாதிகள் இவற்றிலுள்ளாருடைய பழியேயன்றே எனக்குத் தேட்டம்? (தேர்வேன்) தேடுகிறேனென்றபடி. நீங்கள் சேரிகோளாகில், அவன் தானாக வாரானாகில், அவனுடனே கூட்டிப் பழி சொல்லுகிற இவர்களன்றே ஸத்தையை நோக்குகிறார்கள்; “அலரெழவாருயிர் நிற்கும்” என்றானிறே. பிறவும் - மற்றுமுள்ளனவும். (நாண் எனக்கில்லை) லஜ்ஜை இங்கில்லாமையேயன்று; அங்குப் போனாலுமில்லை. இவ்வ்யக்திதன்னில் முதலிலேயில்லாமை. (என் தோழிமீர்காள்) இது நான் உங்களுக்குச் சொல்லியறிய வேண்டும்படியாவதே! (சிகரம் இத்யாதி) பர்வத சிகரங்களைக் கொடுவந்து வைத்தாற்போல ஓக்கமுடைத்தாய், ரத்நமயமான மாடங்களையுடைய பெரிதான தென்திருப்பேரையிலே வீற்றிருந்த. (மகரநெடுங்குழைக்காதன்) மகராகாரமான பெரியவாபரணத்தையுடைய கர்ணபாசங்களை யுடையவன். அவனுடைய ஓரோவவயவங்களிலே படிந்தாரை மீட்கலாயோ விருப்பது? (மாயன்) சொல்லிச் சொல்லாத தேஹகாந்தியையும் ஆத்மகுணங்களையும் நினைக்கிறது. (மாயன்) ஆச்ரித பக்ஷபாதம். (நூற்றுவரை அன்று மங்க நூற்ற) சிலரையழிக்க நினைத்தால் ஒன்றும் சேஷியாதபடி யழிக்குமவன். துர்யோதநாதிகளை பாரத ஸமரம் ப்ரவ்ருத்தமானவன்று நசிக்கும்படி மந்த்ரித்த. (நிகரில் முகில்வண்ணன்) ஒப்பில்லாத காளமேகம் போலேயிருக்கிற வடிவழகு. இத்தால் விரோதியை வளர்த்தாலும் விடவொண்ணாத வடிவழகு என்கை. (நேமியான்) ஆச்ரித விரோதிகளைப் போக்கும்போது பகலை இரவாக்கும் பரிகரத்தையுடையவன். திருவாழியைக் கொண்டு பீஷ்மாதிகளையும் தொடராநிற்குமிறே. (நிகரில் முகில்வண்ணன் நேமியான்) துர்யோதநாதிகளுக்கு மின்னும் இடியுமாய், பாண்டவர்கள் ஆர்த்தி தீர வர்ஷித்து நின்றபடி. அவன் உன் விரோதிகளைப் போக்கிக் கூட நினையாத பின்பு, அவன் தானே வந்து உன் காலிலே விழும்படி மந்த்ரித்தாலோ? என்ன, (என்னெஞ்சங் கவர்ந்தெனை யூழியானே) அதுக்கீடான பரிகரமிழந்து நான் எத்தனை காலமுண்டு? வடிவழகையும் ஆயுதச்சேர்த்தியையுங் காட்டி என் நெஞ்சை யபஹரித்துப்போய் எத்தனை காலத்தான்? (எனையூழியானே) அநேக கல்பமுண்டு. துர்யோதநாதிகளை வெல்ல எண்ணினாப்போலே என்னெஞ்சை யபஹரிக்கைக்கு எத்தனை காலமெண்ணினானோ?

(நகரமும் நாடும் இத்யாதி) - "உன்னுடைய துணிவு காரணமாக உனது செயல்கள் அனைத்தும் மற்றவர்களால் அறியப்பட்டு, அதன் விளைவாக நாட்டில் உள்ளவர்கள், நகரத்தில் உள்ளவர்கள், மற்ற இடங்களில் உள்ளவர்கள் என்று அனைவரும் பழி கூறுகிறார்கள்", என்று தோழிமார்கள் கூறினார். இதற்கு இவள் விடை தருகிறாள். என்னுடைய தேடுதல் என்பது அவனோ? அல்லவே! நகரம், நாடு, மற்ற இடங்கள் என இவற்றில் உள்ளவர்களுடைய பழிச்சொற்களை அல்லவோ நான் தேடுகிறேன்? (தேர்வேன்) - தேடுகிறேன். நீங்கள் என்னை அவனுடன் சேர்க்காதவர்கள் என்றுள்ளபோது, அவனும் வராமல் உள்ளபோது, அவனுடன் என்னைச் சேர்த்து வைத்து, பழி கூறும் இவர்கள் அல்லவோ என்னுடைய இருப்பிற்குக் காரணமாக உள்ளனர்! இப்படிப்பட்ட பழிச்சொல்லானது இருப்பை உறுதியாக்கும் என்பதற்கு ப்ரமாணம் திருக்குறள் (1141) - அலரெழவாருயிர் நிற்கும் - என்பதாகும். (நாண் எனக்கில்லை) - "இங்கு இல்லை" என்று கூறாமல், "எனக்கு இல்லை" என்று கூறியதன் கருத்தை அருளிச்செய்கிறார்; நாணமானது இங்கு உள்ளபோது மட்டுமே இல்லை என்பது இல்லை; அங்கு சென்றாலும் இல்லை; அதாவது எனது இந்தச் சரீரத்தில் தொடக்கம் முதலாகவே இல்லை; (என் தோழிமீர்காள்) - எனது சிந்த நிலையை உங்களுக்கு நான் கூறிய பின்னர் மட்டுமே உங்களுக்கு அறியும்படி ஆனதே! (சிகரம் இத்யாதி) - மலைகளுடைய நீண்ட சிகரங்களைக் கொண்டு வந்து வைத்தது போன்று உயரத்தைக் கொண்டதாகவும், இரத்தினமயமாக உள்ளதாகவும் காணப்படும் மாடங்கள் கொண்ட பெரிய தென்திருப்பேரெயிலில் வீற்றிருந்த. (மகரநெடுங்குழைக்காதன்) -மகரத்தின் வடிவம் கொண்ட பெரிய தோடு ஆபரணத்தைக் கொண்ட செவிகள் உடையவன். இப்படியாக அவனுடைய ஒவ்வொரு அவயவங்களிலும் தனித்தனியாகப் படிந்தபடி உள்ளவர்களையோ மீட்க இயலும்? (மாயன்) - ஆச்சர்யத்தை உடையவன். இன்ன காரணம் என்று சிறப்பித்து கூறாமல் "மாயன்" என்று பொதுவாக உரைத்ததன் காரணத்தைக் கூறுகிறார்; உரைத்தும் உரைக்கப்படாத திருமேனியின் காந்தியையும், ஆத்மகுணங்களையும் எண்ணுகிறாள். (மாயன்) - அடியார்களிடம் மட்டுமே பக்ஷபாதம் காணாதபடி உள்ளவன். (நூற்றுவரை அன்று மங்க நூற்ற) - ஒரு சிலரை அழிக்கவேண்டும் என்று தீர்மானித்தால், யாரும் மீதம் இல்லாதபடி முற்றிலுமாக அழிப்பவன். துரியோதநன் போன்றவர்களை மஹாபாரத யுத்தம் நிகழ்ந்த நேரத்தில் அழியும்படியாகச் செய்த. (நிகரில் முகில்வண்ணன்) - ஒப்பற்ற காளமேகம் போன்ற வடிவழகு கொண்டவன். இதன் மூலம் இவன் விஷயத்தில் விரோதத்தை வளர்த்துக் கொண்டாலும், விட இயலாத வடிவழகு என்பது கூறப்பட்டது. (நேமியான்) - அடியார்களாக இருந்தாலும், அடியார்களுடைய விரோதிகளாக இருந்தாலும், இந்தச் சக்கரத்தைக் கொண்டே வெல்கிறான் என்பதைக் கூறுகிறார்; அடியார்களுடைய விரோதியைப் போக்கும்போது, இந்தச் சக்கரத்தாழ்வான் மூலம் சூரியனை மறைத்து, பகலை இரவாக்கும்படிச் செய்பவன். இந்தச் சக்கரத்தாழ்வானைக் கொண்டு பீஷ்மர் போன்றவர்களையும் தொடர்ந்தபடி இருப்பவன். – (நிகரில் முகில்வண்ணன் நேமியான்) - துரியோதனன் போன்றவர்களுக்கு மின்னலும் இடியுமாக, பாண்டவர்கள் துன்பம் நீங்கும்படி அவர்களுக்கு மழை போன்று உள்ளவன். இதனைக் கேட்ட தோழிமார்கள், "அவன் உனது விரோதிகளைப் போக்கவும் கூட நினைக்காதபடி உள்ளபோது, அவன் தானாகவே உனது காலில் விழும்படியாக நீ செய்தால் என்ன?", என்றனர். இதற்கு இவள் விடை தருகிறாள்; (என்னெஞ்சங் கவர்ந்தெனை யூழியானே) - அதற்கு ஈடான சக்திகளை நான் இழந்து எத்தனை காலம் ஆயிற்று! தனது வடிவழகையும், ஆயுதங்களுடைய சேர்த்தி அழகையும் எனக்குக் காண்பித்து, எனது நெஞ்சத்தை அபகரித்துச் சென்று எத்தனை காலம் ஆயிற்று! (எனையூழியானே) - பல கல்பங்கள் ஆயிற்று. துரியோதனன் போன்றவர்களை வெல்வதற்கு எத்தனை காலம் ஆலோசித்தானோ என்பது போன்று, எனது நெஞ்சத்தை இவ்விதம் அபகரிக்க எத்தனை காலமாக எண்ணியபடி இருந்தானோ?