திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 9)

ஏழாம்பத்து

மூன்றாம் திருவாய்மொழி

சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்! * அன்னையர்காள்! என்னைத் தேற்ற வேண்டா * நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு? * நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை ** கார்வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட * கண்ணபிரான் வந்து வீற்றிருந்த * ஏர் வள ஒண் கழனிப் பழனத் * தென் திருப்பேரெயில் மாநகரே

– என்னைப் போன்று எனது நிலைமையைக் கண்டு, எனக்குச் சமமான துக்கம் அடைந்தபோதிலும் எனக்கு நன்மை கூறுவதாக எண்ணி விலக்கப் பார்க்கும் தோழிகளே! எனக்கு நன்மையை உபதேசிப்பதாக எண்ணும் தாய்மார்களே! நீங்கள் என்னைத் தோற்ற வேண்டிய அவசியம் இல்லை (தேற்றுதல் என்றால், “இப்படிப்பட்ட ஒரு செயலில் ஈடுடுபடுதலானது பெண்மைத்தன்மைக்கு ஏற்றது அல்ல. இது நிறைவேறாமலும் போகும். ஆகவே இதனை விடுவாயாக” என்று கூறுதல் ஆகும்). எனது இந்த நிலையில், என்னைத் தேற்றும் விதமாக நீங்கள் என்ன சொற்களைக் கூறியபடி உள்ளீர்கள்! நான் தேறுவதற்கு அடிப்படைத் தேவையான எனது நெஞ்சமும் அடக்கமும் எனக்கு இல்லை. எனது நெஞ்சம் அங்கு சென்ற பின்னர், எனது தேறுதல் என்பதும் அங்கு சென்றது. ஆகவே எனது நெஞ்சத்தையும் அடக்கத்தையும் அபகரிப்பதன் அடிப்படையாக உள்ள கார்மேகம் போன்ற வடிவத்தையும், ப்ரளய ஆபத்தில் சூழ்ந்த கடல் நீரிலிருந்து இந்த ஜகத்தை உட்கொண்டு ஆபத்து காலத்தில் உதவிய தன்மையையும், அடியார்களுக்கு உபகாரம் செய்யும் பவ்யதையையும் கொண்ட க்ருஷ்ணனானவன் இங்கு வந்து வீற்றுள்ள இடமும், ஏர்முனைகள் நிறைந்து காண்பதற்கு இனிமையான கழனிகள் நிறைந்த இடமும், நீர் நிலைகள் பொருந்திய இடமும் ஆகிய தென்திருப்பேரெயில் என்ற மஹாநகரத்தை நான் சென்று அடைவேன்.

நீங்கள் இனி என்னைத் தேற்றி ப்ரயோஜநமில்லை. தென்திருப்பேரெயிலைப் போய்ப்புகக்கடவேன் என்கிறாள்.

– நாயகியானவள் தாய்மார்களிடமும் தோழிகளிடமும், “நீங்கள் இனி என்னைத் தேற்றியபடி உள்ளதால் எந்தப் பயனும் இல்லை. நான் தென்திருப்பெரெயில் நகரத்திற்குச் சென்று சேர்வேன்”, என்கிறாள்.

(சேர்வன் சென்று) உன்னாற்றாமையாலே சில சொல்லுகிறாயாகில் இது கடைப்படவற்றே? என்ன; “அவச்யம் அங்கே புக்கல்லது விடேன்” என்கிறாள். (என்னுடைத் தோழிமீர்காளித்யாதி) எனக்காயிருப்பாரும், என்னைத் தங்களுக்காக நினைத்திருப்பாரும் ஒன்றுஞ் சொல்லவேண்டா. தோழிமாரோடு தாய்மாரோடு வாசியில்லை காணும் இவளைத் தேற்றப் போகாமைக்கு. அஜ்ஞரோ வ்யவஸிதரை உபதேசத்தாலே மீட்கப் பார்ப்பார்? விஷயாதீனமாக வருகிறத்தை ஸாதகத்திலே செலவெழுதுகிறவர்களோ எனக்கு வார்த்தை சொல்லுவார்? இவள் தன்னை மறந்து, அவனையே பார்த்துப் பேசுகிறாள்; அவர்கள் அவனை மறந்து, தந்தாமையே பார்த்து மீட்கத் தேடுகிறார்கள். (நீர்களுரைக்கின்றதென் இதற்கு) கலங்கினாரோ தெளிந்தாரைத் தேற்றுவார்? நீங்கள் நிற்கிற நிலையெது? என் நிலையெது? போகையிலே துணிந்திருக்கிற என்னை, “புறப்படுகை பழி” என்றிருக்கிற நீங்கள் சொல்லுவதென்? (இதற்கு) எனக்கோடுகிற தசைக்கு. ஆனாலும் நெஞ்சும் அடக்கமுமுடையார்க்கு இது வார்த்தையோ? நாங்கள் சொன்னபடி செய்து எங்கள் வழியே ஒழுகவேண்டாவோ? என்ன; (நெஞ்சும் நிறைவுமெனக்கிங்கில்லை) அது வேணுமாகில் அங்கே போய்ச் சொல்லுங்கோள். மநஸ்ஸும் அடக்கமும் அவன் பக்கலின. நிறைவாவது அடக்கம். நெஞ்சாவது அது இட்டு வைக்கும் கலம். (கார்வண்ணனித்யாதி) நெஞ்சும் நிறைவும் எனக்காம்படியாயோ அவன்படி இருக்கிறது? (கார்வண்ணன்) தாய்மார் தோழிமாரானவர்கள் வார்த்தை கேளாதபடியாக வடிவு படைத்தவன். வெறும் வடிவழகேயோ உள்ளது? என்னில், (கார்க்கடல் ஞாலமுண்ட) தளர்ந்தார் தாவளம். ஆபத்து வந்தால் ரக்ஷித்து விடுமத்தனையோ? என்னில் (கண்ணபிரான்) தன்னைப் பிறர்க்காக்கி வைக்கும் உபகாரகன். (வந்து வீற்றிருந்த) தன் ஐச்வர்யமெல்லாம் தோற்றும்படியிருந்த. (ஏரித்யாதி) ஏரினுடைய ஸம்ருத்தியையுடைத்தாய், அழகிதான கழனியையும் நீர்நிலங்களையுமுடைய திருப்பேரெயிலாகிற மாநகரிலே சென்று சேர்வன். உங்கள் தடைக்கு மீளுதல், அவ்வழியில் நிற்றல் செய்யேன். என்னைத் தேற்றவேண்டா. வளமென்று மிகுதிக்குப் பேர்.

– (சேர்வன் சென்று) - தாய்மார்கள் இவளிடம், “நீ உனது பிரிவற்றாமை காரணமாக இவ்விதம் பலவற்றையும் கூறினாய். ஆனால் இவை நிறைவேறக்கூடியதோ?”, என்றனர்; இதற்கு இவள், “நான் அவசியம் அங்கு சென்று சேர்வேன். அதுவரை ஓயமாட்டேன்”, என்கிறாள். (என்னுடைத் தோழிமீர்காளித்யாதி) – “தோழிமீர்கள்" என்று மட்டுமே கூறாமல் “என்னுடைத் தோழிமீர்கள்” என்று ஏன் கூறவேண்டும் என்பதற்கு விடை தருகிறார்; எனக்காக உள்ளவர்களாக எண்ணுபவர்கள் ஏதும் சொல்லவேண்டாம்; “அன்னையர்காள்” என்று மரியாதையுடன் அழைப்பது ஏன்? என்னைத் தங்களுக்கு மட்டும் உரியவள் என்று எண்ணுவதால் இவ்விதம் கூறினாள்; அவர்களும் ஏதும் கூறவேண்டாம் என்கிறாள். தாய்மார்கள் நீங்கலாகத் தோழிமார்கள் கூட இவளைத் தேற்ற இயாலாதோ என்றால், இந்த விஷயத்தில் தோழிமார்கள் மற்றும் தாய்மார்கள் என்ற வேறுபாடு இல்லை என்று கருத்து. அறிவற்றவகள், முற்றும் உணர்ந்த ஞானிகளை, உபதேசம் கூறி மாற்ற இயல்வார்களோ? பகவத் விஷயம் காரணமாக வருவதை, ஸாதனங்கள் மூலம் வருவதாக எண்ணுபவர்களோ எனக்குத் தேற்ற சொற்க்ளைக் கூறவல்லவர்கள் ஆகிறார்கள்? இவள் தன்னை மறந்து, தங்களை மட்டுமே எண்ணியவர்களாக, இவளை மீட்க வழி பார்க்கிறார்கள். – (நீர்களுரைக்கின்றதென் இதற்கு) கலங்கியபடி உள்ளவர்களோ தெளிவாக உள்ளவர்களைத் தேற்றமுடியும்? நீங்கள் நிற்கும் நிலை என்ன? எனது நிலை என்ன? அங்கு செல்வதற்குத் தயாராக நிற்கும் என்னை நோக்கி, “நீ புறப்பட்டால் பழி ஏற்படும்”, என்று கூறும் நீங்கள், என்ன சொல்ல முயல்கிறீர்கள், (இதற்கு) - எனக்கு எப்போதும் ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு. இதனைக் கேட்ட தாய்மார்கள், “ஆனால், நல்ல நெஞ்சமும், தக்க அடக்கமும் கொண்டுள்ளவர்களுக்கு ஏற்ற சொற்களா இவை? நாங்கள் கூறியவற்றைக் கேட்டு எங்கள் வழியே பின்பற்ற வேண்டாமோ?”, என்றார்கள். இதற்கு இவள் விடை தருகிறாள். (நெஞ்சும் நிறைவுமெனக்கிங்கில்லை) - அப்படிப்பட்ட எனது தன்மையும் நிலையும் எனக்கு ஏற்படவேண்டும் என்று நீங்கள் எண்ணினால், அங்கு சென்று கூறுங்கள். எனது மனமும் அடக்கமும் அவனிடம் உள்ளன. நிறைவு என்பது அடக்கம்; நெஞ்சம் என்பது அதனை இட்டு வைக்கின்ற பாத்திரம். – (கார்வண்ணனித்யாதி) - என்னுடைய நெஞ்சமும் அடக்கமும் எனக்கு ஏற்றபடியாகவோ அவனிடம் உள்ளது? (கார்வண்ணன்) - தாய்மார்கள் மற்றும் தோழிமார்களுடைய சொற்களைக் கேட்காதபடியாகச் செய்யவல்ல அழகான வடிவு கொண்டவன். அவனிடம் வெறும் வடிவழகு மட்டும்தானோ உள்ளது என்றால், விடை தருகிறாள்; (கார்வண்ணன்) - அப்படி அல்ல, தளர்ந்தவர்களுக்கு ஆதாரமாக உள்ளவன். சரி, ஆபத்து வந்தால் காப்பாற்றும் அந்தத் தன்மை மட்டும்தானோ உள்ளது என்பதற்கு விடை தருகிறாள்; (கண்ணபிரான்) - தன்னையே மற்றவர்களுக்கு என்று செய்து வைத்த உபகாரகன். (வந்து வீற்றிருந்த) - தனது அனைத்து ஐச்வர்யங்களும் முற்றிலுமாக வெளிப்படும்படியாக உள்ள. (ஏரி இத்யாதி) - ஏர்களுடைய நிறைவைக் கொண்ட அழகு நிறைந்த கழனிகளையும், நீர் நிலங்களையும் கொண்டதாக உள்ள தென்திருப்பெரெயில் என்ற மாநகரத்திற்கு நான் சென்று சேர்வேன். உங்களுடைய தடையைக் கேட்டு மீறுதல், நீங்கள் மீட்க முயலும் வழியில் நிற்றல் போன்றவற்றைச் செய்யமாட்டேன், என்னைத் தேற்ற முயலவேண்டாம். வளம் என்றால் மிகுதி என்று பொருள்.