திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 8)

ஏழாம்பத்து

மூன்றாம் திருவாய்மொழி

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடி * கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக் கொண்டு * அலர் தூற்றிற்று அது முதலாக் * கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ! ** மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் * நீள் விசும்பும் கழியப் பெரிதால் * தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த * தென் திருப்பேரெயில் சேர்வன் சென்றே

எனது சரீரத்தில் காணப்பட்ட நிறம் இழத்தல் போன்ற பலவற்றையும் மட்டுமே பார்த்தவர்களாக, தாய்மார்கள் மற்றும் ஊரில் உள்ளவர்கள் என்பதான வேறுபாடு ஏதும் இல்லாமல், அனைவரும் சேர்ந்து நின்று ஒரே குரலாக, காண்பவர்கள் களைப்பைப் போக்கவல்ல கடல் போன்று கறுத்த வடிவம் கொண்டவனுடன் நான் சேர்ந்ததால் எனக்கு இப்படிப்பட்ட உருக்குலைதல் ஏற்பட்டது என்று பழி கூறித் தூற்றினர். எனது தோழியே! அத்தகைய பழிச்சொற்களையே காரணமாகக் கொண்டு, எனது காதலானது மேன்மேலும் பெருகியது. எனது இத்தகைய காதலைச் சொற்கள் கொண்டு கூறுகிறேன்; மண் நிறைந்த இந்தப் பூமியையும், இதனைச் சூழ்ந்துள்ள ஏழு ஸமுத்திரங்களும் என்பதாக உள்ள இவை அனைத்திற்கும் இடம் அளிக்கவல்லதாக உள்ள ஆகாசத்தையும் விட மிகப் பெரியதாக எனது காதல் வளர்ந்து நிற்கிறது. ஆகவே, தெளிந்த அலைகளுடன் கூடிய நீரானது சூழ்ந்து நிற்கும்படியாக, இவ்விதம் எனது காதலைப் பெரிதாக வளர்த்தவன் இருக்கும் தென்திருப்பேரெயிலில், எனது துக்கம் நீங்கும்படியாக நான் சென்று சேர்வேன்.

எனக்கு “அவனைக் காணவேணும்” என்னும் அபிநிவேசம் கடலில் மிகப் பெரிது என்னுமளவன்றிக்கே, அறமிக்கது. ஆனபின்பு, நீங்களாக இசையிகோளாகில், தன் வேண்டப்பாடு தோற்ற எழுந்தருளியிருக்கிற தென்திருப்பேரெயிலை நான் போய்ப் புகுவேனென்கிறாள்.

– எனக்கு, “அவனைக் காணவேண்டும்” என்பதாக உள்ள காதலானது, “கடலைக் காட்டிலும் மிகவும் பெரியது” என்பது மட்டுமே அல்லாமல், அளவிட இயலாததும் ஆகும். ஆகவே நீங்களாகவே என்னை அங்கு கொண்டு சென்று சேர்க்கப் புறப்படவில்லை என்றால், தனது பெருமையும் மேன்மையும் வெளிப்படும்படியாக அவன் எழுந்தருளியுள்ள தென்திருப்பேரெயில் நகரத்திற்கு நானே சென்று புகுவேன் என்கிறாள்.

(கண்டதுவே கொண்டு) அவன் பேர் சொல்லுதல், “தலையில் வணங்கவுமாங்கொலோ?” என்று ஒரு ப்ரணாமஞ் செய்தல் செய்யுமிறே; அம்மாத்ரத்தையே கொண்டு, புறவிதழ் கண்டு படுகிறபடி இதுவானால், அகவாயிலோடுகிறது அறியில் என்படுவர்கள்? (எல்லாருங் கூடி) பரிவரோடு, ஹிதகாமரோடு, “இவையிரண்டுந்தான் என்?” என்று இருப்பாரோடு வாசியறக் கூடி. பிறரைப் பழி சொல்லவென்னில் தம்மில் தாம் சேராதவர்களும் சேர்வர்களிறே. (கார்க்கடல்வண்ணனோடு என் திறத்துக் கொண்டு) இவள் நிறம் விவர்ணமாம்போது அவன் திறத்தே இழந்ததாக வேண்டாவோ? கடல் ஏறி வடிந்தவிடமென்று தோற்றுகிறதில்லையோ? என்னிடையாட்டத்தை ச்ரமஹரமான நிறத்றையுடையவனோடே கூட்டி. (அலர் தூற்றிற்றது முதலாகக் கொண்ட என் காதலுரைக்கில்) இவர்கள் பேசாதிருந்தார்களாகில் நானும் ஸுகமேயிரேனோ? நான் பழிக்கு அஞ்சி மீளுவேனென்று காணும் இவர்கள் பழி சொல்லப்புக்கது. (அலர் தூற்றிற்று) அலர் தூற்றினார்கள். (அது முதலித்யாதி) அதுதானேயடியாகக் கொண்ட என் காதலானது சதசாகமாகப் பணைக்கப் புக்கது. (காதலுரைக்கில்) தன் காதல் தன்னாலும் சொல்லி முடியவொண்ணாது காணும். “யதோ வாசோ நிவர்த்தந்தே” என்கிற விஷயத்தைச் சொல்லிலும் இவள் காதல் பேச்சுக்கு நிலமன்று. இக்காதலுக்கு விஷய பூதனானவனையும் விளாக்குலை கொள்ளவற்றான காதலிறே. “சுடர்ஞானவின்பம்” என்று பகவதானந்தத்தைக் சொல்லி வைத்து, “அதனிற் பெரியவென்னவா” என்றதிறே. (தோழீ) இக்காதலை விளைக்கைக்கு நீ பண்ணும் க்ருஷியறிதியிறே; இது இருந்தபடி பாராய். (மண்திணி ஞாலமித்யாதி) “காதல் கடலில் மிகப் பெரிதால்” என்றவிடம் ஓராதே சொன்னோம். ஆனால் எங்ஙனே சொல்லும்படி என்னில்? பெரியவற்றில் பெரியதென்னுமித்தனையல்லது, ஒரு பாசுரமிட்டுச் சொல்லலாவதில்லை. மண்ணாலே நெருங்கின பூமியென்றபடி. அத்தையும் சூழ்ந்த கடலேழும், அவற்றுக்கெல்லாம் அவகாசமான ஆகாசமும், இவை இத்தனைக்கும் அவ்வருகு பட்டிருக்கை. இப்படி காதல் கரைபுரண்டால் செய்யப்பார்த்ததென்? என்ன; (தெண்திரை இத்யாதி) இக்காதல் மறுநனையும்படியான விஷயம் இருந்தவிடத்தே போய்ப் புகுமத்தனை. தெளிந்த திரைகளாலே சூழப்பட்டு அவன் வீற்றிருந்த தென்திருப்பேரையிலே போய்ப்புகுமத்தனை. “தஸ்யோபவநஷண்டேஷ நாநா புஷ்ப ஸுகந்திஷு | விஹ்ருத்யஸலிலக்லிந்நா தவாங்கே ஸமுபாவிசம்” என்கிறபடியே அநுபவயோக்யமான தேசத்திலே போய்ப்புகக் கடவோம். (சேர்வன் சென்றே) இனிப் பகட்டால் தீராது, புக்கல்லது விடேன். ஆள்விடுதல், அவன் வரவு பார்த்திருத்தல் செய்யேன். (சென்றே சேர்வன்) இனி எதிரே அவன் வரிலும் மீளேன். அவனைச் சேருகையன்று உத்தேச்யம், அங்கே சென்று கிட்டுகை.

(கண்டதுவே கொண்டு) - இவளிடம் என்ன மாற்றங்களைத் தாய்மார்களும் ஊரார்களும் கண்டனர் என்பதைக் கூறுகிறாள். அவனுடைய திருநாமங்களைக் கூறுதல் மற்றும் தலையால் வணங்குதல் என்பதாக அவன் குணங்களில் ஈடுபடுதல் ஆகியவற்றை மட்டும் கண்டனர்; இதனை மட்டுமே கண்டு, அதாவது புறக்காட்சியில் தென்படுவது மட்டுமே கண்டு பழி கூறுகிறார்கள்; எனது நெஞ்சத்தில் உள்ளவற்றை அறிந்தால் என்ன செய்வார்களோ? (எல்லாருங் கூடி) – எனக்காகப் பரிந்தபடி உள்ளவர்கள், எனக்கு நன்மையை உண்மையில் விரும்புபவர்கள் மற்றும் “இந்த இரண்டும் என்றால் என்ன?” எனது கேட்பவர்கள் என்பதாகப் பலரும், எந்தவிதமான வேறுபாடும் இன்றி ஒன்றாகத் திரண்டு. ஆனால் தாய்மார்கள் மற்றும் தோழிமார்கள் அல்லாமல், இவள் விஷயத்திற்காக ஊரில் உள்ள மற்றவர்களும் ஒன்றாகக் கூடுவார்களோ என்பதற்கு விடை தருகிறாள்; மற்றவர்களைக் குறித்துப் பழி உரைக்கவேண்டும் என்றால், ஒருவருடன் ஒருவர் சேராதவர்களும் கூட ஒன்றாகச் சேர்வார்கள் அல்லவோ? (கார்க்கடல்வண்ணனோடு என் திறத்துக் கொண்டு) - இவள் கார்கடல் வண்ணம் கொண்டவனிடம் மிகுந்த காதல் கொண்டவளானாள் என்பதை மற்றவர்கள் அறிந்தது எப்படி என்று கூறுகிறார்; இவளுடைய நிறமானது பசலை ஏறியபடி இருப்பதால், அவன் விஷயத்தில் இவள் தன்னை இழந்ததை அறியலாம் அல்லவோ? இதனை என்ன காரணத்தால் அறியலாம் என்றால், கடலானது கரையில் ஏறி வடிந்ததை அந்த மண்ணில் உள்ள நிற வேறுபாடு மூலம் அறியாமல் அல்லவோ? என்னுடைய செயல்பாடுகளை, காண்பவர் களைப்பைப் போக்கவல்ல அவனுடைய நிறத்துடன் சேர்க்கிறார்கள். (அலர் தூற்றிற்றது முதலாகக் கொண்ட என் காதலுரைக்கில்) - அவர்கள் இவ்விதம் ஏதும் பேசாமல் இருந்தால் நானும் ஸுகமாக இருக்கமாட்டேனோ? அவர்கள் இவ்விதம் பழி கூறுவதால், அவர்களுக்குக் கிட்டக்கூடிய பலன் என்ன என்பதைக் கூறுகிறாள். நான் இவர்களுடைய பழிக்கு அஞ்சியவளாக, அவன் விஷயத்திலிருந்து இவர்களிடம் மீண்டும் வந்து விடுவேன் என்று எண்ணி அல்லவோ இவர்கள் இவ்விதம் பழி கூறுகிறார்கள்? (அலர் தூற்றிற்று) - பழியைத் தூற்றினார்கள். – (அது முதலித்யாதி) - இத்தகைய பழிச்சொற்களையே காரணமாகக் கொண்டு, எனது காதலானது நூறு கிளைகள் கொண்டதாகப் பணைத்து நின்றது. (காதல் உரைக்கில்) - தனது காதலைத் தன்னாலும் கூற முடிக்க இயலாது என்பதை உணர்த்துகிறாள். அதாவது உபநிஷத்தில் – யதோ வாசோ நிவர்த்தந்தே - எந்த ஒரு ஆனந்தம் குறித்து உரைக்க இயலாமல் வாக்கு திரும்பியதோ - என்று கூறப்படும் அந்த விஷயத்தைக் குறித்தும் கூட கூறி முடிக்க இயன்றாலும், இவளுடைய காதலானது கூறி முடிக்க இயலாததாகும். இந்தக் காதலுக்கு யார் விஷயமாக உள்ளானோ, அவனையும் சேர்த்து உள்ளே இழுத்துக் கொள்ளவல்லதாக உள்ள காதல். அவனையும் இழுக்க வல்லாதா என்றால், திருவாய்மொழி (10-10-10) – சுடர் ஞான இன்பம் - என்று பகவத் ஆனந்தத்தைக் கூறிய பின்னர், திருவாய்மொழி (10-10-10) – அதனில் பெரிய என் அவா - என்றார் அல்லவோ? – (தோழீ) - எனது இந்தக் காதலை விளைப்பதற்கு நீ செய்த செயல்கள் அனைத்தும் நீ அறிவாய் அல்லவோ? இப்போது இது உள்ள நிலையைப் பார்ப்பாயாக. இதனைக் கேட்ட தோழியானவள், “முன்பு இந்தக் காதலானது கடலைக் காட்டிலும் பெரியதாக உள்ளது என்று கூறினாய். இவ்விதம் கூறிய நீ, இப்போது இப்படியாகக் கூறுவது ஏன்?”, என்றாள். இதற்கு நாயகி விடை தருகிறாள்; (மண்திணி ஞாலமித்யாதி) – “இந்தக் காதலானது கடலைக் காட்டிலும் பெரியது” என்று முன்பு தயங்காமல் கூறினேன். ஆனால் அதனை நான் எப்படிக் கூறினேன் என்றால், “பெரியவற்றைக் காட்டிலும் பெரிதாக உள்ளது. ஆகவே இதனைச் சொற்கள் கொண்டு கூற இயலாது” என்பதால் ஆகும். மண்ணால் நெருங்கியபடி உள்ள பூமியும், அதனைச் சூழ்ந்துள்ள ஏழு கடலும், அவற்றை முழுவதாகத் தன்னுள் கொண்டுள்ள ஆகாசமும் ஆகிய இவை அனைத்திற்கும் அப்பால் உள்ளதாக இருந்தது. “சரி, இப்படிக் காதல் கரை புரண்டு நிற்கிறது. என்ன செய்யப் போகிறாய்?”, என்பதற்கு விடை தருகிறாள். – (தெண்திரை இத்யாதி) - இந்தக் காதலானது இவ்விதம் பெருகும்படியாக உள்ளதற்குக் காரணமாக உள்ள விஷயம் இருக்கும் இடத்திற்குச் செல்வேன். தெளிந்த அலைகள் சூழ்ந்தபடி உள்ள தென்திருப்பெரெயிலில் வீற்றிருக்கும் அந்த இடத்திற்குச் செல்வேன். ஸுந்தரகாண்டம் (38-14) - தஸ்யோபவநஷண்டேஷ நாநா புஷ்ப ஸுகந்திஷு | விஹ்ருத்யஸலிலக்லிந்நா தவாங்கே ஸமுபாவிசம் - பலவிதமான மலர்களுடைய சிறந்த நறுமணம் நிறைந்த அந்தச் சித்ரகூட மலையில் உள்ள பல நந்த்யாவனங்களில் விளையாடி, வியர்த்து, வாட்டம் அடைந்து, உமது மடியில் படுத்துக் கொள்வேன் – என்று கூறுவதற்கு ஏற்ப, அனுபவம் ஏற்படத் தகுதியாக உள்ள திவ்யதேசத்தில் சென்று புகுவேன். (சேர்வன் சென்றே) - இனி என்னுடைய பகட்டால் இந்த வேதனை தீராது. நான் அங்கு புகுதல் அல்லாமல் ஓயமாட்டேன். அவனிடம் தூது அனுப்புதல், அவன் வரும்வரை காத்திருத்தல் போன்றவற்றைச் செய்யமாட்டேன்; அதாவது பொத்திருக்கமாட்டேன். (சென்றே சேர்வன்) - இனி என் முன்பாக அவன் இங்கு வந்தாலும் நான் திரும்பமாட்டேன். அவனுடைய சேருதல் எனக்கு இலக்கு அல்ல, அங்கு சென்று அவனுடன் சேருதல் என்பதே இலக்காகும்.