திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 7)

ஏழாம்பத்து

மூன்றாம் திருவாய்மொழி

பேர் எயில் சூழ் கடல் தென் இலங்கை * செற்ற பிரான் வந்து வீற்றிருந்த * பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப் * பேர்த்து வர எங்கும் காண மாட்டேன் ** ஆரை இனி இங்கு உடையம்? தோழீ! * என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை * ஆரை இனிக் கொண்டு என் சாதிக்கின்றது? * என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே

– பெரிய மதிள்களால் சூழப்பட்டு, அதற்கு அகழியாக உள்ள கடலைக் கொண்டதான தென்இலங்கையை அழித்து உபகாரம் செய்த அவன், தனது களைப்பு தீரும்படியாக வந்து, அந்த வெற்றியானது வெளிப்படும்படியாக வீற்றுள்ள தென்திருப்பேரெயில் நகரத்திற்குச் சென்று புகுந்த எனது நெஞ்சமானது அவனைத் தேடி மீண்டும் என்னிடம் திரும்புதல் என்பதை நான் எங்கும் காண இயலவில்லை. எனது துக்கத்தில் பங்கு கொள்ளும் என் தோழியே! இவ்விதம் உள்ளபோது எனது இந்த நிலையில் என்னை நியமிக்கவல்ல தாய்மார்களையும், என் மீது பழி கூறும் ஊரார்களையும் விடுத்து, நமக்குத் துணையாக நாம் வேறு யாரைக் கொண்டுள்ளோம்? அங்கு சென்ற எனது நெஞ்சத்தை மீண்டும் அழைத்து வந்து என்னிடம் தருவதற்கு வேறு யாரும் இல்லை. எனது நெஞ்சமும் எனக்கு உதவாமல், நீயும் தளர்ந்த பின்னர், நான் யார் மூலமாக என்ன பயனை எதிர்ப்பார்க்கமுடியும்? ஆகவே எனது நெஞ்சம் கண்ட அந்த விஷயத்தையே நானும் நாடிச் சென்று கண்டேன்.

– “அஹஞ்சாநுகமிஷ்யாமி லக்ஷ்மணேந கதாம் கதிம்” என்ற பெருமாளைப்போலே இப்பிராட்டியும் “என்னெஞ்சு தரிக்கைக்கு விரகு பார்த்துத் திருப்பேரெயிலிலே புக்காப்போலே நானும் அங்கே புகுமத்தனை” என்கிறாள். (பேரெயில் இத்யாதி) கீழில் அளவுகள் குலைந்த பின்பு இனி நான் செய்யப் பார்த்ததிது என்கிறாள்.

உத்தரகாண்டத்தில் – அஹம் ச அநுகமிஷ்யாமி லக்ஷ்மணேந கதாம் கதிம் - லக்ஷ்மணன் சென்ற வழியை நானும் பின்பற்றுகிறேன் - என்று கூறிய இராமனைப் போன்று, இந்தப் பராங்குசநாயகியும், “எனது நெஞ்சமானது தான் பிழைப்பதற்கு ஏற்ற வழியைப் பார்த்து, திருப்பேரெயிலில் புகுந்தது. அதனைப் போன்றே நானும் அங்கு செல்கிறேன்”, என்கிறாள். எனது நிறம் தொடக்கமான அனைத்தையும் இழந்து, எனக்குப் பேச்சுத் துணையாக உள்ள நெஞ்சத்தையும் இழந்து, தாய்மார்கள் என்னைக் கொண்டு சென்று காண்பிப்பதற்கு ஒப்புக்கொள்ளாமல் இருப்பதுடன் மட்டும் அல்லாமல் விலக்கவும் செய்தபடி உள்ளபோது, இனி நான் செய்ய முயல்வது இதுவே ஆகும்”, என்கிறாள்.

– (பேரெயில்) பெரிய மதிள். (சூழ்கடல்) மதிளுக்கு அகழாம்படி அம்மதிளைச் சூழ்ந்த கடலையுடைத்தாய், கேட்கவஞ்சும்படியான ஊரை மூலையடியே நடக்கப் பண்ணின உபகாரகன். (வந்து வீற்றிருந்த) அப்போது முகம் மாற வைத்த இழவு தீர அணைக்கலாம்படி கிட்ட வந்திருக்கிற. “விமலசசாங்க நிபாநா” என்கிறபடியே - எப்போது பெருமாள் முகம் வைக்கவொண்ணாதபடி கொடியராயிருந்தார், அவ்வளவிலும் இவள் மறுவற்ற சந்த்ரமண்டலம்போலே முகத்தில் குளிர்த்தி மாறாதேயிருந்தாள். “தீபோநேத்ராதுரஸ்யேவ ப்ரதிகூலாஸி மே த்ருடம்”; இதுக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும்படி “நேத்ர தோஷத்தால் வந்தது போக்கி, தீப தோஷத்தால் வந்ததன்று” என்று. (செற்ற பிரான் வந்து வீற்றிருந்த) ப்ரதிகூல நிரஸநம் பண்ணி விடாய்த்து வந்திருக்கும்; “பர்த்தாரம் பரிஷஸ்வஜே” என்னும்படியே சிசிரோபசாரம் பண்ணப் போகவேணும். (பேரெயிற்கே இத்யாதி) அவனிருந்த திருப்பேரையிலே புக்குத் தேடி என்னெஞ்சானது ஓரிடத்திலும் மீண்டு வரக்காண்கிறிலேன். மீளவொண்ணாத லங்கையிலே புக்க திருவடியும் மீண்டு வந்தான்; அணித்தான இவ்வூரிலே புக்க நெஞ்சு மீண்டு வரக் காண்கிறிலேன். நெஞ்சுங்கூட வாராத பின்பு அவன் வாராமை சொல்ல வேண்டாவிறே, நெஞ்சின் வரவு பார்த்துக் கண் மறைந்துகாணும் இவள் நிற்கிறது. (மாட்டேன்) கண்டு ஜீவியாதே நான் இங்ஙனே முடிந்து போமித்தனையாகாதே. – அபிமதன் வருந்தனையும், அவனுக்காக வ்ருத்த கீர்த்தனம் பண்ணி தரித்திருக்க வேண்டாவோ? என்னில், (ஆரையினியிங்குடையந் தோழீ) நெஞ்சமில்லாதவன்று இனியாருண்டு? (தோழீ) “நெஞ்சிலண்ணியள் நானோ” என்றாயாகில், நீயானாயே. இப்போது நான் இங்கில்லையோ? (என்னெஞ்சங் கூவவல்லாருமில்லை) நெஞ்சை மீட்கைக்கு நீ வேணுமே, செஞ்சை யவனுக்காக்கின நீ வேணுமே எனக்கு ஆக்கும் போதும்; உன் தசையிது, உனக்குக் கால்கள் நடை தாராது; அல்லாதார்க்கு “கூட்ட வேணும்” என்னும் வரையில்லை; ஆர் நெஞ்சையழைப்பார்? (ஆரையினிக் கொண்டென் சாதிக்கின்றது) ஆரைக் கொண்டுதான் சாதிப்பது? இனி ஸாத்யந்தான் எது? நெஞ்சும் அவனும் வந்தால் இனி நான்தான் உண்டாக வேணுமே? இங்கு வெறுந்தறையாயிறே கிடக்கிறது. ஆனால் செய்யப் பார்த்ததென்? என்னில் (என்னெஞ்சங் கண்டதுவே கண்டேனே) மீளாத நெஞ்சு போன வழியே போகப் பார்த்தேன். “அத்யைவாஹம் கமிஷ்யாமி லக்ஷ்மணேந கதாம்கதிம்” என்கிறபடியே நெஞ்சு போன வழியே போகப் பார்த்தேன்.

– (பேரெயில்) - பெரிய மதிள். (சூழ்கடல்) - அந்த மதிளுக்கு ஏற்ற அகழி என்று கூறலாம்படி அந்த மதிளைச் சூழ்ந்துள்ள கடலைக் கொண்டதாக உள்ளதும், அதன் பெயரைக் கேட்டாலே அனைவரும் அஞ்சும்படியாக உள்ளதும் ஆகிய இலங்கையை, முற்றிலுமாகத் தகர்த்த உபகாரன். (வந்து வீற்றிருந்த) - இராவணனை வதைத்த பின்னர், இந்த ஸீதைக்கு முகம் காண்பிக்காமல் இருந்த இழப்பானது தீரும்படியாக, இப்போதே சென்று அணைத்துக் கொள்ளலாம்படி அருகில் வந்துள்ள. இராவணனை வதைத்த பின்னர் ஸீதை இராமனிடம் அழைத்து வரப்பட்டபோது, அவன் தனது திருமுகத்தைக் காண்பிக்காமல் மாற வைத்தபோது இவள் எவ்விதம் இருந்தாள் என்றால் யுத்தகாண்டம் (114-36) – விமல சசாங்க நிபாநா - களங்கம் இல்லாத நிலவு போன்ற திருமுகம் கொண்டவளாக – என்பதாக இருந்தாள். அதாவது, அப்போதும் கூட இவள், களங்கம் அற்ற சந்த்ரன் போன்று முகத்தில் தனது குளிர்ச்சி மாறாமல் இருந்தாள்; ஆனால் அந்தச் சூழலிலும் இவள் இவ்விதம் இருக்கக் காரணங்கள் என்ன என்பதைக் கூறுகிறார்; நீண்டகாலம் பிரிந்த பின்னர் மீண்டும் இராமனைக் காணக் கிடைத்த மகிழ்வும், வேறு யாருடைய தீண்டுதல் என்ற தோஷம் இன்மையும், “எஜமானனுடைய செயல்களில் உள்ள காரணம் என்ன என்று ஆராய்ந்து என்ன ஆகப்போகிறது?” என்ற எண்ணமும் காரணங்கள் ஆகும். இராமன் தனது திருமுகத்தை மாற வைத்துக் கொண்டதற்கான ப்ரமாணம் யுத்தகாண்டம் (115-17) - தீபோ நேத்ராதுரஸ்ய இவ ப்ரதிகூலாஸி மே த்ருடம் - கண்களில் நோய் உள்ளவனுக்கு விளக்கு ஒளி போன்று எனக்கு நீ ப்ரதிகூலமாக உள்ளாய் என்பது நிச்சயம் - என்று இராமன் கூறியதாகும். இங்கு கூறிய உதரணம் மூலமாக, ஸீதையிடம் தோஷம் இல்லை என்பதை பரமாசாரியராகிய ஆளவந்தார் கூற்றிலிருந்து உரைக்கிறார்; அவர் கூறுவதாவது, “கண்களின் தோஷத்தால் வந்ததை விலக்கி, தீபத்தின் தோஷத்தால் வந்தது அல்ல” என்பதாகும். – (செற்ற பிரான் வந்து வீற்றிருந்த) - “இலங்கையை வெற்றி கொண்ட பிரான் வந்து வீற்றுள்ள திருப்பேரெயில் நகரத்திற்குச் செல்லவேண்டும்” என்று துடித்தபடி உள்ளவளுடைய எண்ணத்தைக் கூறுகிறார். இவள் தனது மனதில், “விரோதிகளை அழித்த பின்னர் மிகவும் களைப்புடன் வந்திருப்பான். ஆகவே ஆரண்யகாண்டம் (30-40) - பர்த்தாரம் பரிஷஸ்வஜே - கணவனைத் தழுவிக் கொண்டாள் - என்பதற்கு ஏற்ப அவனுக்கு ஏற்ற பணிவிடைகள் பலவற்றையும் செய்வதற்கு அங்கு செல்லவேண்டும்”, என்று எண்ணினாள். (பேரெயிற்கே இத்யாதி) - அவன் உள்ள திருப்பேரெயிலில் புகுந்து தேடியபடி இருந்த எனது நெஞ்சமானது அங்கிருந்து திரும்பி வருதலை நான் எந்த இடத்திலும் காணவில்லை. மீண்டு வருவதற்கு அரியதாக இருந்த இலங்கைக்குச் சென்ற அனுமன் கூட மீண்டு வந்தான்; ஆனால் மிகவும் அருகில் உள்ள இந்த ஊருக்குள் சென்ற எனது நெஞ்சமானது என்னிடம் மீண்டு வருதலைக் காண இயலவில்லை. அவனிடம் தூது சென்ற எனது நெஞ்சம் கூட என்னிடம் மீண்டு வராமல் உள்ளபோது, அவனுடைய வரவு குறித்துக் கூறவும் வேண்டுமோ? தனது நெஞ்சத்தின் வரவை எதிர்நோக்கித் தனது கண்கள் பூத்து நிற்கிறாள். (மாட்டேன்) – அல்லது, “கண்டு உயிர் பிழைக்காமல், நான் இவ்விதமே முடிந்து போவது ஏற்படுமோ?”, என்று எண்ணுவதாகவும் கொள்ளலாம். – “ஆனால் தனது காதலன் வரும் காலம் முடிய, அவனுக்காக அவன் செய்த செயல்களைக் குறித்து எண்ணியபடியும் பாடியபடியும் இருந்து உயிர் தரிக்க வேண்டாமோ?”, என்பதற்கு விடை தருகிறாள். (ஆரையினியிங்குடையந் தோழீ) - எனது நெஞ்சமும் கூட என்னிடம் இல்லாதபோது எனக்கு வேறு யார் உள்ளனர்? (தோழீ) – இதற்குத் தோழியானவள், “உனது நெஞ்சத்தைக் காட்டிலும் உனக்கு அருகில் உள்ளவள் நான் அல்லவோ?”, என்றாள். இதற்கு நாயகி, “நீ தோழியாகவே இருந்தாய். அதாவது எனது துக்கத்தைக் கண்டு நீ எனக்கு முன்னரே தளர்ந்து கிடந்தாய்”, என்றாள். இதற்கு அந்தத் தோழி, “இப்போது நான் இங்கு இல்லையோ? உனது நெஞ்சத்தை நீ அழைத்துக் கொள்வதற்கு என்ன குறை?”, என்றாள். இதற்கு நாயகி, (என் நெஞ்சங் கூவவல்லாருமில்லை) - எனது நெஞ்சத்தை மீட்டு எடுப்பதற்கு நீ வேண்டுமே”, என்றாள்; இதற்குத் தோழி, “உனது நெஞ்சத்தை மீட்க நான் வேண்டுமோ?”, என்றாள்; இதற்கு, நாயகி, “எனது நெஞ்சத்தை அவனுக்கு என்று செய்தவள் நீ ஆவாய். ஆகவே அதனை மீண்டும் எனக்கு என்று செய்வதற்கு நீ வேண்டும் அல்லவோ?”, என்றாள். இதற்குத் தோழியானவள், “இந்த உதவியை நான் செய்யமாட்டேனோ?”, என்பதற்கு நாயகி, “உன் நிலை இதுவாகும்; அதாவது உனக்குக் கால்கள் நடை தராது” என்றாள். சரி, வேறு சிலரை அழைத்துச் செல்லலாம் அல்லவோ என்பதற்கு விடை தருகிறாள்; மற்றவர்களுக்கு என்னை அவனுடன் சேர்க்கவேண்டும் என்ற வேகம் இல்லை. இப்படி உள்ளபோது வேறு யார் நெஞ்சத்தை அழைப்பார்கள்? (ஆரையினிக் கொண்டென் சாதிக்கின்றது) – யாரைக் கொண்டு நான்ன் இனி இதனைச் சாதிக்க இயலும்? இனி சாதிக்க வேண்டியதுதான் என்ன உள்ளது? பாசுரத்தில் “ஆரை இனி இங்கு உடையம்” என்று கூறியதற்கும், வ்யாக்யானத்தில் “யாரை இனிக் கொண்டு” என்று கூறியதற்கும் என்ன வேறுபாடு என்பதைக் கூறுகிறாள்; நெஞ்சமும், அவனும் சேர்ந்து வந்தால், நான் இருக்கவேண்டும் அல்லவோ? முன்பு தோழியும் இல்லை என்றவள், இங்கு தானும் இல்லை என்கிறாள். இங்கு வெறும் தரையாக அல்லவோ உள்ளேன்? சரி, அப்படியானால் செய்ய முயல்வது என்ன என்பதைக் கூறுகிறாள்; (என்னெஞ்சங் கண்டதுவே கண்டேனே) - என்னிடம் திரும்பாமல் சென்ற நெஞ்சம் போன வழியே நான் செல்லப் பார்த்தேன்; அதாவது உத்தரகாண்டத்தில் – அஹம் ச அநுகமிஷ்யாமி லக்ஷ்மணேந கதாம் கதிம் - லக்ஷ்மணன் சென்ற வழியை நானும் பின்பற்றுகிறேன் - என்று கூறிய இராமனைப் போன்று, நானும் செல்லப் பார்க்கிறேன்.