திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 6)
ஏழாம்பத்து
மூன்றாம் திருவாய்மொழி
காலம் பெற என்னைக் காட்டுமின்கள் * காதல் கடலின் மிகப் பெரிதால் * நீல முகில் வண்ணத்து எம்பெருமான் * நிற்கும் முன்னே வந்து என் கைக்கும் எய்தான் ** ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த * நான்மறையாளரும் வேள்வி ஓவா * கோலச் செந்நெற்கள் கவரி வீசும் * கூடு புனல் திருப்பேரெயிற்கே
– காளமேகம் போன்று தாராள மனம் கொண்ட இயல்பை வெளிப்படுத்தும் வடிவழகைக் காண்பித்து என்னைத் தனக்கே என அடிமையாக்கிக் கொண்ட எனது ஸ்வாமியானவன், என் முன்பாக கலந்து நிற்பான். வந்து நிற்கும் அவன், தானே என் மீது விழுந்து என்னை அணைத்துக் கொள்ளுதல் என்பது போன்றவற்றைச் செய்யாமல் இருப்பதுடன் மட்டும் அல்லாமல் கைக்கு எட்டாதபடி உள்ள மேகம் போன்று தூரமாக நிற்பான். ஆக, காதலானது கடலைக் காட்டிலும் மிகவும் பெரியதாகவே உள்ளது. இவ்விதம் உள்ளதால், இந்தப் பூமியில் அவன் தனது வடிவழகுடன் வந்து, தனது தாராள குணமானது வெளிப்பட்டபடி வீற்றிருக்கும் இடமும்; அங்கு வாழ்கின்ற அனைத்து நான்கு வேத விற்பன்னர்கள், அவனுடைய ஆராதனை ரூபமாக எப்போதும் வைதீக முறைப்படி நடக்கும் இடமும்; காண்பதற்கு இனிமையான செந்நெற் கதிர்களானவை சாமரம் வீசுவது போன்று அசையும்படியாக அதற்கு ஏற்றவிதமாக நிறைந்துள்ள தண்ணீர் வளம் நிறைந்த இடமும் ஆகிய திருப்பேரெயில் நகரத்திற்கு, காலதாமதம் பொறுக்க இயலாதபடி உள்ள என்னை, விரைந்து அழைத்துச் சென்று காண்பீப்பீர்களாக.
நீங்கள் “கொடுபோவோமோ அல்லோமோ?” என்று விசாரிக்கும் தசையன்றிக்கே, எனக்கு அபிநிவேசமானது அறமிக்கது; எனக்கு இங்குத் தரிப்பு அரிது; ஈண்டென என்னைத் தென்திருப்பேரையிலே கொடுபுக்கு மகரநெடுங்குழைக்காதனைக் காட்டுங்கோளென்கிறாள்.
– இவள், “நீங்கள் உங்கள் மனதில், ‘இவளை அங்கு கொண்டு செல்லலாமா அல்லது வேண்டாமா’, என்பது போன்ற ஆராய்ச்சிகள் செய்தபடி உள்ளீர்கள். ஆனால் எனது நிலையானது அது போன்று இல்லை. எனது காதலானது அறம் நிறைந்தது ஆகும். எனக்கு இங்கு உயிர் தரித்திருத்தல் என்பது கடினமே ஆகும். ஆகவே நீங்கள் என்னை இப்போதே தென்திருப்பேரெயில் நகரத்திற்கு கொண்டு சென்று, மகரநெடுங்குழைக்காதனைக் காண்பீப்பீர்களாக”, என்கிறாள்.
(காலம் பெறவென்னைக் காட்டுமின்கள்) குடிக்குப் பரிஹாரமன்றாகிலும் எனக்குப் பரிஹாரம் இதல்லதில்லை. இனி என் மேல் குற்றமில்லை. என் ? இப்படிக் கடுக வேண்டுவானென்? என்னில், (காதல் கடலின் மிகப் பெரிதால்) இக்காதல் அளவுபட்டோ இருக்கிறது? முதற் சொன்ன வார்த்தையைக் காணுங்கோள். நீங்கள் நினைக்கிறத் “கடல் புரைய” என்றாளே. ஒரு காரியப்பாட்டாலே விளைந்தது போலன்றிறே உகப்பாலே விளைந்திருப்பது. – “ஆனாலும் காதலையளவுபடுத்தி, நாங்கள் சொல்லுகிற வார்த்தையைக் கேட்டு எங்களோடே ஒழுக வேண்டாவோ?” என்ன, (நீலமுகில்வண்ணத் தெம்பெருமான்) நான் உங்கள் வழியே போகவோ? இவன் வழியே போகவோ? என்னை அப்படி சேர்த்து விட வந்து முன்னே நிற்க, நான் மீளும்படியென்? அப்படியாலே அவன் துவக்கா நிற்க, உங்கள் வார்த்தையைக் கேட்கவோ? ச்ரமஹரமான வடிவைக் கொண்டு முன்னே நின்று காதலுக்கு வர்த்தகனாகா நின்றான். இக்காதலை ஒருபடியே வளர்க்கிறதிறே. “கடல் புரைய விளைவித்த”தும் காரமர் மேனியிறே. (நிற்கும் முன்னே வந்து) இவன் கிட்ட நின்றிலனாகில் நான் உங்கள் வார்த்தை கேட்டு மீளேனோ? ஆனால் உனக்குப் பொல்லாதோ? என்ன, (என் கைக்கு மெய்தான்) அழகிதிறே, எனக்கு இப்படி தரப் பெறில். வார்த்தை சொல்லுதல், அணைத்தல் செய்யாமையேயன்று; என் கைக்கும் எட்டுகிறிலன். இனி நீ செய்யப் பார்த்ததென்? என்ன; உருவெளிப்பாடன்றியிலே கண்ணாலே கண்டநுபவிக்கலாந் தேசத்திலே போகப் பார்த்தேன். – (ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த) தூரப் போய்க் காணவேண்டாதபடி பரமபதத்தில் ஐச்வர்யமெல்லாம் இங்கே தோற்றும்படியிருந்த. (நான்மறையாளரும் வேள்வியோவா) வேதார்த்தவித்துக்களும் ஸமாராதநத்திலே நிரந்தரமாக ப்ரவ்ருத்தனார்கள். என்னோடு ஸஜாதீயரும், தந்தாமுக்கு வகுத்த கைங்கர்யம் பெற்று வர்த்தியாநிற்பர்கள். (கோலச்செந்நெல் இத்யாதி) வ்ருஷ்ட்யந்நாதி விஷயமாக அங்குள்ளார்க்கு யத்நிக்க வேண்டாதேயிருக்கை. அவை ஆநுஷங்கிக பலமாய் வருமத்தனை; “நீள்செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும்” என்றும், “அங்கங்கேயவை போதரும்” என்றும் சொல்லக்கடவதிறே. தர்சநீயமான செந்நெற்களானவை அங்குத்தைக்குக் கவரி வீசினாற்போலே அசையாநிற்கும். (கூடு புனல் திருப்பேரெயிற்கே) ஆற்றுநீர், ஊற்றுநீர், வர்ஷஜலம் இவை மூன்றும் கூடியிருக்கையாலே ஜல ஸம்ருத்தியை யுடைத்தாயிருக்கை. (திருப்பேரெயிற்கே – காலம் பெறவென்னைக் காட்டுமின்கள்) என் விடாய் தீர ச்ரமஹரமான தேசத்திலே கொடுபோய்ப் பொகடப் பாருங்கோள். அங்குள்ள செந்நெலுக்கு நீர் தாரகமா யிருக்குமாப்போலே, இவளுக்கும் அவ்வூரில் காட்சியே தாரகமாயிருக்கிறபடி.
– (காலம் பெறவென்னைக் காட்டுமின்கள்) - கடந்த பாசுரத்தில் "காலம் பெற" என்று கூறிய பின்னர் இங்கு மீண்டும் கூறுவதற்கான கருத்தை வ்யாக்யானத்தில் உள்ள "குடிக்கு" என்று தொடங்கும் இரண்டு வாக்கியங்களில் கூறுகிறார். இந்தக் குலத்திற்கு இத்தகைய செயலானது பரிஹாரம் இல்லை என்றாலும், எனக்கு இது அல்லாமல் வேறு பரிஹாரம் ஏதும் இல்லை. இனி என் மீது எந்தக் குற்றமும் இல்லை. ஏன் இவ்விதம் அவசரம் கொள்ளவேண்டும் என்பதற்கு விடை தருகிறாள்; (காதல் கடலின் மிகப் பெரிதால்) - இந்தக் காதலானது ஒரு அளவில் அடங்கி உள்ளதோ? முன்பு கூறப்பட்ட சொற்களாகிய திருவாய்மொழி (5-3-4) - காதல் கடல் புரைய விளைவித்த - என்ற சொற்களையே எண்ணியபடி நீங்கள் உள்ளீர்கள். ஆனால் ஒரு ஸாதனம் மூலம் ஏற்பட்ட பக்தி போன்று அல்லாமல் இவளுடைய பக்தியானது கரை புரண்டு இருப்பதற்குக் காரணம் என்ன என்பதைக் கூறுகிறார்; இந்தக் காதலானது, ஒரு குறிப்பிட்ட பலனை எண்ணி விளைந்த ஸாதன பக்தி போன்று அல்லாமல், உகப்பு காரணமாக விளைந்ததால் ஆகும். – இதனைக் கேட்ட தாய்மார்கள், "ஆயினும் நீ உனது இந்தக் காதலை அளவுபடுத்திக் கொண்டு, நாங்கள் கூறுகிற சொற்களை கேட்டு, எங்களுடன் இருக்க வேண்டாமா?", என்றனர். இதற்கு விடை தருகிறாள்; (நீலமுகில் வண்ணத்து எம்பெருமான்) - நான் உங்கள் வழி போகவேண்டாமோ அல்லது இவன் வழி போகவேண்டுமோ? என்னை அவன் இவ்விதம் தனது திருமேனியுடன் சேர்த்து விடுவதற்காக என் முன்னே வந்து ஈடுபடுத்தியபடி நிற்கும்போது, நான் மீள்வது எப்படி? இவ்விதம் அவன் தனது திருமேனியுடன் நிற்கும்போது நான் உங்கள் சொற்களைக் கேட்பேனோ? காண்பவர்கள் களைப்பைப் போக்கும்படியான ஒரு வடிவத்தைக் கொண்டு என் முன்பாக வந்து நின்று, எனது இந்தக் காதலை அவன் வளர்த்தபடி உள்ளான். எனது காதலை ஒரேவிதமாக வளர்த்தபடி உள்ளான்; அதாவது தனது திருமேனியால் மட்டுமே வளர்த்தபடி உள்ளான். ஆனால் காதலை இவன் திருமேனி வளர்க்குமோ என்பதற்கு விடை, திருவாய்மொழி (5-3-4) - கடல் புரைய விளைவித்த - என்பதாக உள்ள இவன் திருமேனி அல்லவோ? (நிற்கும் முன்னே வந்து) - இவன் எனக்குக் கிட்டும்படியாக அருகில் வந்து நிற்கவில்லை என்றால், நான் உங்களுடைய சொற்க்ளை ஏற்று மீண்டு வரமாட்டேனோ? இதனைக் கேட்ட தாய்மார்கள், "ஆனால் இது உனக்குத் தோஷம் ஆகாதோ?", என்பதற்கு விடை தருகிறாள். (என் கைக்கு மெய்தான்) - இவ்விதம் என் முன்பாக நான் அடையும்படியாக வந்து நிற்பது அழகு அல்லவோ? ஆயினும் என்னிடம், "சில சொற்கள் கூறுதல், அணைத்தல்" போன்றவற்றைச் செய்யாமல் இருப்பது மட்டுமே அல்ல; எனது கைக்கும் எட்டாமல் உள்ளான். இதனைக் கேட்ட தாய்மார்கள், "இனி நீ என்ன செய்யப் போகிறாய்?", என்றனர். இதற்கு இவள், "எப்போதும் என் மனக்கண்களால் மட்டுமே கண்டபடி உள்ள அவனை நேரடியாகக் கண்களால் எனக்கு அனுபவிக்கும்படியான திவ்யதேசத்திற்குச் செல்ல முயல்கிறேன்", என்றாள். – (ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த) - மிகவும் தொலைவில் சென்று காணவேண்டியபடியான பரமபதத்தில் உள்ள ஐச்வர்யம் முழுவதும் இங்கேயே வெளிப்படும்படியாக. (நான்மறையாளரும் வேள்வியோவா) - வேதங்களின் ஆழ்பொருளை நன்கு கற்றறிந்தவர்கள், அந்த வேதங்கள் மூலமே அவனை ஆராதனை செய்தபடி, எப்போதும் இந்த விஷயத்திலேயே ஈடுபட்டபடி உள்ளனர். என்னைப் போன்று மற்ற எதனையும் கருதாமல் உள்ளவர்களும், தங்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கைங்கர்யங்களைப் பெற்று வாழ்கிறார்கள். (கோலச்செந்நெல் இத்யாதி) - மழை மற்றும் உணவு ஆகியவற்றுக்காக அங்குள்ளவர்கள் பெரிய முயற்சி ஏதும் செய்யவேண்டாம் என்னும்படி நிலை உள்ளது; அவை தானாகவே வருபவையாக உள்ளன; இதற்கு ப்ரமாணம் பெருமாள்திருமொழி (5-9) - நீள்செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் - என்றும், பெரியாழ்வார் திருமொழி (5-1-4) - அங்கங்கேயவை போதரும் - என்றும் உள்ளவை ஆகும். காண்பதற்கு இனிமையாக உள்ள செந்நெல் பயிர்களானவை அவனுக்குச் சாமரம் வீசுவது போன்று அசைந்தபடி உள்ளன. – (கூடு புனல் திருப்பேரெயிற்கே) - ஆற்று நீர், ஊற்று நீர் மற்றும் மழை நீர் ஆகிய மூன்றும் எப்போதும் ஒன்றாகச் சேர்ந்தபடி உள்ளதால் நீர் ஸம்ருத்தியாக உள்ள நிலை. (திருப்பேரெயிற்கே – காலம் பெறவென்னைக் காட்டுமின்கள்) - எனது தாகம் தீரும்படியாக, களைப்பைப் போக்கும்விதமாக, அந்தத் திவ்யதேசத்தில் என்னைக் கொண்டு சேர்ப்பீராக. அங்குள்ள செந்நெல் பயிர்கள் பிழைப்பதற்கு நீரானது காரணமாக உள்ளது போன்று, இந்த ஊரின் காட்சியே இவள் பிழைக்கக் காரணமாக உள்ளது.