பெரியாழ்வார் திருமொழி - முதல்பத்து (பாசுரம் 17)
முதல்பத்து
இரண்டாம் திருமொழி
பருவம் நிரம்பாமே * பார் எல்லாம் உய்யத் * திருவின் வடிவு ஒக்கும் * தேவகி பெற்ற ** உருவு கரிய * ஒளி மணி வண்ணன் * புருவம் இருந்த ஆ காணீரே * பூண் முலையீர் வந்து காணீரே
– பருவம் அடைவதற்கு முன்னமே, அதாவது தொட்டிலில் கிடக்கும் பருவத்திலேயே, உலகங்கள் எல்லாம் நல்வழியில் செல்ல, பெரியபிராட்டியாரின் இயல்பினைத் துல்லியமாக உடைய தேவகிப்பிராட்டி நோன்பு இருந்து பெற்ற பிள்ளையும், ரூபத்தில் கருமையானவனும், ஒளி மின்னுவதுமான நீலமணி போன்ற வடிவினைக் கொண்டவனும் ஆகிய க்ருஷ்ணனின் திருப்புருவங்களின் அழகினைக் காணுங்கள், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட முலைகளை உடைய பெண்களே நீங்கள் வந்து காணுங்கள்.
திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேச அவதாரிகை - திருக்கண்களில் நின்றும் திருப்புருவத்தில் பெருகுகிறார். மாமுனிகள் வ்யாக்யான அவதாரிகை - திருக்கண்களினழகை யநுபவித்த வநந்தரம் திருப்புருவத்தினழகை அநுபவிக்கிறார்.
– திருக்கண்களின் அழகினை அனுபவித்த பின்னர் திருப்புருவத்தின் அழகினை அனுபவிக்கிறார்.
திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேசம் - (பருவமித்யாதி) திருவின் வடிவொக்கும் தேவகி, பருவம் நிரம்பி ரக்ஷகனாகாதிருக்கச் செய்தேயும் பாரெல்லாம் உஜ்ஜீவிப்பிப்பதாக நோற்றுப் பெற்ற. (உருவுகரிய வித்யாதி) மிக்க ப்ரகாசத்தையுடைய நீலரத்தம்போலே யிருக்கிற திருமேனியையுடைய க்ருஷ்ணனுடைய திருப்புருவங்களில் அழகைக் காணீரென்கிறார். கீழ் “அமுதன்ன தேவகி” என்றத்தை “திருவின் வடிவொக்கும் தேவகி” என்று சாப்தமாக வருளிச்செய்கிறார். திருவின் வடிவொக்குகையாவது வைதர்ம்யத்தில் ஏகதேச த்ருஷ்டாந்தம். “பூண்முலை” என்றது ப்ரகாசகமான ஆத்மபூஷணம்; அதாவது பராவரகுருக்கள் ப்ரகாசிப்பித்ததிறே. மாமுனிகள் வ்யாக்யானம் - (பருவமித்யாதி) சக்ரவர்த்தித் திருமகனைப்போலே பருவம் நிரம்பின பின்பு விரோதிகளை நிரஸித்து லோகத்தை உஜ்ஜீவிப்பிக்கையன்றிக்கே, பருவம் நிரம்புவதுக்கு முன்னே “திண் கொளசுரரைத் தேய” வளருகையாலே லோகமெல்லாம் உஜ்ஜீவிக்கும்படியாக, பூதநா சகட யமளார்ஜுகாதிகளைத் தொட்டில் பருவமே பிடித்திறே நிரஹித்துச் சென்றது. (திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற) லக்ஷ்மீ துல்ய ஸ்வபாவையான தேவகிப்பிராட்டி இப்படிக்கீடாக நோற்றுப் பெற்ற. திருவின் வடிவொக்கு மென்கையாலே கீழ் “உள்ளமுதன்ன தேவகி” என்றது இங்கே ஸ்பஷ்டமாயிற்றதிறே. (உருவித்யாதி) ரூபத்தால் கரியதாய் உஜ்ஜ்வலமாயிருந்துள்ள மணி போன்ற வடிவையுடையவனுடைய. (புருவமித்யாதி) மத நன் கருப்புச்சிலை போலேயிருக்கிற திருப்புருவங்களினழகைக் காணுங்கோள். ஆபரணாலங்க்ருதமான முலையையுடைய நீங்கள் வந்து காணுங்கோள்.
– (பருவம் இத்யாதி) - பருவம் நிரம்பிய பின்பு, அஸுரர்களை அழித்து உலகத்தை தர்ம வழியில் நடத்தும் சக்ரவர்த்தித் திருருமகனான இராமனைப் போன்று அல்லாது, பருவம் நிரம்புவதற்கு முன்னமே பெரியாழ்வார் திருமொழி (1-2-16) - திண் கொள் அசுரரைத் தேய – என்பதற்கு ஏற்ப அழிக்க வளர்ந்து, உலகமெல்லாம் தர்ம வழியில் செல்வதற்காக; அதவது, தொட்டில் பருவத்திலேயே பூதனை, சகடன், யமளார்ஜுனன் போன்ற அசுரர்களை அழித்து நன்மை உண்டாக்க. (திருவின் வடிவு ஒக்கும்) - மஹாலக்ஷ்மியின் துல்லியமான இயல்பைக் கொண்ட தேவகிப்பிராட்டி [(பெரியாழ்வார் 1-2-1) - அசோதைக்குப் போத்தந்த – அசோதையிடம் போகவிட்டு வளர்க்க], நோன்பு இருந்து பெற்ற பிள்ளையானவனும்; “திருவின் வடிவு ஒக்கும்” என்பது பெரியாழ்வார் திருமொழி (1-2-1) - சீதக் கடல் உள் அமுது அன்ன தேவகி” என்பதனை உறுதிபட ஆக்கியது. [ அதாவது ,”பரித்ராணாய சாதூணாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்....ஸம்பவாமி யுகே யுகே” (கீதை 4-8) - அசுரர்களை அழித்து, சாதுக்களைக் காப்பேன் - இதற்காகவே இவ்வுலகில் திருஅவதாரம் பண்ணுவேன் என்று நாரயணன் ஸங்கல்பம் செய்ய வைப்பது மஹாலக்ஷ்மியின் இச்சையாலே என்பது உறுதியாக தெளிவாகிறது] .(உருவித்யாதி) - ரூபத்தில் கருமையானதும், மின்னிப் ப்ரகாசிக்கும் நீல மணி போன்ற வடிவை உடையவனுமான இந்தக் க்ருஷ்ணனுடைய. (புருவம் இத்யாதி) - [காணக்கான] மன்மதனின் கருப்பு வில்லானது ஈர்ப்பது போன்று ஈர்க்கும் திருப்புருவங்களின் அழகைக் காணுங்கள். (பூண்முலை) - ஆத்மாவின் ஆபரணமானதும், க்ருஷ்ணன் தாய்ப்பால் பருகுவதற்காக ஆன ஒளிமிக்க அன்பினை வெளிப்படுத்தும் முலைகளை உடைய நீங்கள் வந்து காணுங்கள்.