திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 5)
ஏழாம்பத்து
மூன்றாம் திருவாய்மொழி
முனிந்து சகடம் உதைத்து * மாயப் பேய் முலை உண்டு மருது இடை போய் * கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த * கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் ** முனிந்து இனி என் செய்தீர்? அன்னைமீர்காள்! * முன்னி அவன் வந்து வீற்றிருந்த * கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே * காலம் பெற என்னைக் காட்டுமினே
– தாய்ப்பால் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தால் சீற்றம் கொண்டு, அதன் காரணமாகத் தனது திருவடிகளை நிமிர்த்து, சகடாஸுரனை உதைத்து; தாய் வடிவம் கொண்டபடி வந்த பேயான பூதனை முடியும்படியாக அவளிடம் தாய்ப்பால் பருகி; இரண்டாக நிற்கும் மருதமரங்கள் நடுவில் சென்று; பழுத்த விளா மரத்தில் கன்றாக வந்த அஸுரனை அடித்து; இப்படியாகப் பலவற்றையும் செய்த க்ருஷ்ணனாகிய பெரும் உதவிகள் செய்தபடி உள்ளவனுக்கு எனது பெண்மைத்தன்மையை நான் இழந்தேன். தாய்மார்களே! எனது இந்த நிலையை நீங்கள் அறிந்துள்ளபோதிலும், எனது விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் நடக்கவில்லை, உங்கள் விருப்பமும் நிறைவேறவில்லை! என்ன கார்யம் செய்கிறீர்கள்? எனது விருப்பம் என்னவென்று நீங்கள் கேளுங்கள்; அவன் முன்னரே வந்து வீற்றிருக்கும், பழங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்துள்ள திருப்பேரெயில் என்ற திவ்யதேசத்திற்குச் செல்வதற்கு ஏற்ற காலம் என்பது போன்ற முறைப்படி காத்திருக்க இயலாத என்னை, மேலும் காலதாமதம் செய்யாமல் கொண்டு சென்று காண்பீர்களாக.
– “இங்ஙனே விரைகை ஸ்த்ரீத்வத்துக்குப் போராதுகாண்” என்று தாய்மார் அலைக்க, “அதுவும் பண்டே போயிற்று; ப்ரயோஜநமில்லாத தசையிலே கொடுபோக நில்லாதே, என்னை ஏற்கவே கொடு போய்த் தென்திருப்பேரெயிலிலே விடுங்கோள்” என்கிறாள். முனிகிறதுதான் எனக்கு ஹிதம் பார்த்தேயானால் என் ஹிதத்திலே ப்ரவர்த்திக்கப் பாருங்கோள்.
– தாய்மார்கள் இவளை நோக்கி, “இப்படி நீ விரைவு கொள்ளுதல் என்பது உனது பெண்மைத்தன்மைக்கு ஏற்புடையது அல்ல”, என்றனர். இதற்கு இவள், "அத்தகைய எனது பெண்மைத்தன்மை முன்பே போயிற்று. எந்தவிதமான ஒரு ப்ரயோஜனமும் இல்லாத நிலையில் நான் உள்ளபோது என்னைக் கொண்டு சென்று தென்திருப்பேரெயிலில் சேர்க்க நீங்கள் முயற்சிக்காமல், அதற்கு முன்பாகவே கொண்டு சேர்ப்பீர்களாக. என்னைக் கோபித்தல் என்பது எனது நலத்தில் அக்கறை கொண்டே ஆகும் என்றால், எனது நிலத்தில் உண்மையாகவே ஈடுபட முயல்வீர்களாக”, என்கிறாள்.
(முனிந்து இத்யாதி) என்னினைவு தன்னை புத்தி பண்ணுங்கோள்; அவன் முனிவிலே யகப்பட்ட நான் இனியுங்கள் முனிவுக்கு மீளுவனோ? ஹிதமுமாய் ப்ரியமுமான முனிவிலே யகப்பட்ட நான் அஹிதமுமாய் அப்ரியமுமான உங்கள் முனிவுக்கு மீளுவனோ? (முனிந்து சகடமுதைத்து) முலை வரவு தாழ்த்ததென்று சீறி நீட்டின திருவடிகளுக்கு இலக்காய்ப் பொடிபட்டதாயிற்று சகடம். “ஸ்தந்யார்த்தீ ப்ரருரோதஹ”இறே. (மாயப்பேய் முலையுண்டு) “முலையை நினைத்துச் சீறினான்” என்று முலை கொடுக்கத் தாய் வடிவு கொண்டு வந்த வஞ்சநையான பேய்ச்சியை முடித்து. (மருதிடை போய்) முலையுண்டால் தவழுமத்தனையிறே. புறம்பு நின்றும் வந்து நலிகையன்றிக்கே, நின்றவிடத்தே நின்று தப்பாமே கொல்ல நினைத்த யமளார்ஜுநங்களைப் பொடிபடுத்தி. (கனிந்த இத்யாதி) அஸுராவேசத்தாலே ஒன்று கனிந்த விளவாய், ஒன்று கன்றாய் நின்றது; அதிலே யொன்றையிட்டு ஒன்றையெறிந்து இரண்டையும் முடித்த. (கண்ணபிரானுக்கென் பெண்மை தோற்றேன்) அழியுமவற்றையும் அழித்தான், அழியாதவற்றையும் அழித்தான். வன்மையாலே யழித்தான் அவற்றை; மென்மையாலே யழித்தான் இவற்றை. (பிரானுக்கு) அவற்றின் கையில் தான் அகப்படாதே தப்பித் தன்னைத் தந்தவுபகாரத்துக்கு எழுதிக் கொடுக்கிறாள் காணும். சேஷியான தன்னையுண்டாக்கி, என்னை சேஷத்வத்தினுடைய எல்லையிலே நிறுத்தினான். “பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி” என்கிற அவதாரங்களோபாதி பரப்புப் போருங்காணும் இவ்வவதாரத்தில் இவளைப் பெறுகைக்குப் பண்ணின ப்ரவ்ருத்திகளும் அவனுக்கு. ஆச்ரித வாத்ஸல்ய கார்யமான முனிவிறே. (கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன்) “அதோஸ்மி லோகே வேதேச ப்ரதித: புருஷோத்தம:” என்றும், “ஜாநாதி புருஷோத்தமம்” என்றுஞ் சொல்லுகிற தன்னுடைய பும்ஸ்த்வத்தைக் காட்டிக்காணும் இவளுடைய ஸத்ரீத்வத்தை யபஹரித்தது! (பெண்மை தோற்றேன்) தோலாதது தோற்றேன். (முனிந்தினியித்யாதி) இனி மீட்கலாமென்றே நினைக்கிறது? மீட்க நினைக்கிற நீங்கள் அவனுடைய அபதாநங்களுக்கு முன்னேயன்றே மீட்கப் பார்ப்பது? (என் செய்தீர்) எனக்கு அநுகூலைகளானீரல்லீர்; மீட்கத் தொடங்கினது தலைக்கட்டிற்றன்று. (அன்னைமீர்காள்) ஜந்ம ப்ரப்ருதி என் ப்ரக்ருதியறிந்து போருகிற நீங்கள் மீட்கப் பார்ப்பதே! அவன் பண்ணின உபகாரங்களை யறியாமையிறே நீங்கள் பொடிகிறது. “அவன் பண்ணின வுபகாரம் மறக்கவொண்ணாதாகில் நினைக்கிறாய். பெற்று வளர்த்த எங்களுடைய உபகாரமும் நினைக்க வேணுங்காண்!” என்ன, (முன்னியவன் வந்து வீற்றிருந்த) உபகாரத்தில் முற்பாடன் அவன் காணுங்கோள். (முன்னி) முற்பாடனாய் நின்று. “பூர்வஜ” என்னும்படியே; என்னைப் பெறுகைக்கு அவஸரப்ரதீக்ஷனாய்க் கொண்டு தன் வேறுபாடு தோற்றவிருக்கிற. (கனிந்தபொழிலித்யாதி) கொண்டு புக்குக் காட்டுவார் தாழ்வே; அங்குள்ளதெல்லாம் பக்வ பலமாயிருக்கும். கனிந்த மரம் கண்டால் “அஸுராவேசமுண்டு” என்று அஞ்சவேண்டாத சோலை. (காலம் பெறவென்னைக் காட்டுமினே) இக்குடிக்கும் எனக்கும் பரிஹாரமொன்றேயிறே. பின்னையும் என்னையங்கே கொண்டு போய்ப் பரிஹரிக்கை தவிரிகோள்; நானுளேனானபோதே அத்தைச் செய்யப் பாருங்கோள். பின்னை கதே ஜலே ஸேதுபந்தமாகாமே, நான் ஜீவிக்கும் எல்லையிலே காட்டுங்கோள்.
(முனிந்து இத்யாதி) - எனது நினைவுகளையும் எண்ணங்களையும் சற்றே சிந்தித்துப் பார்ப்பீர்களாக. அவன் குழந்தையாக இருந்தபோதே காண்பித்த சீற்றம் முதலானவற்றில் அகப்பட்ட நான், உங்களுடைய கோபத்தின் காரணமாக மீண்டு வருவேனோ? இதற்குத் தாய்மார்கள், “ஏதேனும் ஒரு கோபத்தில் அகப்பட்டாய் என்றால், எங்கள் கோபத்திலும் அகப்படலாம் அல்லவோ?”, என்றனர்; இதற்கு விடை தருகிறாள்; நன்மையும் ப்ரியமும் கலந்து நிற்கும் அவனுடைய அத்தகைய செயலில் அகப்பட்ட நான், நன்மை அற்றதும் ப்ரியம் அற்றதும் ஆகிய உங்கள் கோபத்தால் மீள்வேனோ? அதாவது அவனுடைய கோபமானது அடியார்களுடைய விரோதிகளை விலக்குவதற்கு ஏற்றதாகவும், அடியார்கள் மீது கொள்ளும் வாத்ஸல்யத்திற்கு ஏற்றதாகவும் உள்ளதால் நன்மை மற்றும் ப்ரியம் கலந்ததாகவே இருக்கும்; ஆனால் உங்களுடைய கோபமானது, “எஜமானன் உள்ள இடத்திற்கு அவன் அடிமை செல்லுதல் என்பதே ஸ்வரூபமாக உள்ளபோது, அதனைத் தகாத செயல்” என்று கூறுவதாலும், இது எனக்கு விருப்பம் அற்றதாக உள்ளதாகவும், நன்மை அற்றதாகவும் ப்ரியம் இன்றியும் உள்ளதாகும். (முனிந்து சகடமுதைத்து) - தாய்ப்பால் கிட்டுவதற்குக் காலதாமதம் உண்டானதைப் பொறுக்க முடியாமல் சீற்றம் கொண்டு நீட்டிய திருவடிகளுக்கு இலக்காக இருந்த சக்கரமானது பொடிப்பொடியானது; இதற்கு ப்ரமாணம் ஸ்ரீவிபு. (5-6-1) - ஸ்தந்யார்த்தீ ப்ரருரோதஹ - தாய்ப்பாலை வேண்டி அமுதான் – என்பதாகும். – (மாயப்பேய் முலையுண்டு) – “ஸ்தனங்களைத் தாய்ப்பாலை எண்ணியவனாக நின்று சீறினான்” என்று தாய்பால் தர வந்த வஞ்சகம் நிறைந்த பேயாகிய பூதனையை முடித்து. (மருதிடை போய்) - தாய்ப்பால் பருகிய பின்னர் ஒரு குழந்தையானது தவமும் அல்லவோ? வெளியிலிருந்து வந்து இவனைத் துன்புறுத்துவது என்பது மட்டுமே அல்லாமல், நின்ற இடத்திலேயே நின்று தவறாமல் கொல்ல எண்ணிய மருதமரங்கள் இ்ரண்டையும் பொடியாக்கி. (கனிந்த இத்யாதி) - அஸுர இயல்பு உள்ளே புகுந்ததால் ஒன்று பழுத்த விளாம்பழமாகவும், ஒன்று கன்றாகவும் நின்றது. அவற்றில் ஒன்றை மற்றொன்றின் மீது எறிந்து இரண்டையும் முடித்த. – (கண்ணபிரானுக்கென் பெண்மை தோற்றேன்) - விரோதிகளை அழித்தமை குறித்துக் கூறியதைத் தொடர்ந்து “பெண்மை தோற்றேன்” என்று கூறியதன் கருத்து என்னவென்றால், “விரோதிகளாக உள்ளதால் அழிப்பதற்குத் தகுதியான சகடம் போன்றவற்றை அழித்தான். அழியாமல் உள்ளதான எனது பெண்மையையும் அழித்தான்” என்பதாகும். எதன் மூலம் அழித்தான் என்பதைக் கூறுகிறாள்; தனது வலிமையால் அவற்றை அழித்தான்; தனது மென்மை, அதாவது ஸௌளப்யத்தால் இவளை அழித்தான். இவளுக்கு அவன் செய்த உபகாரம் என்ன? (பிரானுக்கு) - அவற்றின் கைகளில் அகப்படாமல் தப்பித்துத் தன்னை இவளுக்குத் தந்தான்; இந்த உபகாரத்திற்கு இவள் தன்னையே எழுதிக் கொடுத்தாள். எஜமானனாகிய தன்னை உண்டாக்கி, என்னை அடிமைத்தனத்தின் எல்லையில் நிறுத்தினான். பல விரோதிகளை அழித்தான் என்று கூறியதன் கருத்து, கீதையில் (4-5) - பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி - எனக்குப் பல பிறவிகள் கழிந்தன - என்பதற்கு ஏற்ப பல அவதாரங்கள் போன்று, இந்த அவதாரத்தில் இவன் செய்த பல செயல்களும் இவளைப் பெறுவதற்காகவே ஆகும் என்பது போன்றே இருந்தன. ஆனால் அவனுடைய சீற்றத்திற்கு இவள் ஈடுபடுவாளோ என்பதற்கு விடை தருகிறாள்; அடியார்களிடம் கொண்ட வாத்ஸல்யம் கார்யமாகவே இந்தச் சீற்றம் ஏற்படுகிறது அல்லவோ? (கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன்) - கீதை (15-18) - அதோஸ்மி லோகே வேதேச ப்ரதித: புருஷோத்தம: - ஸ்ம்ருதியிலும் வேதத்திலும் புருஷர்களில் உத்தமன் என்று கூறப்படுகிறேன் - என்றும், கீதை (15-19) - ஜாநாதி புருஷோத்தமம் - யார் என்னைப் புருஷர்களில் உத்தமன் என்று தெளிந்து கொள்கிறானோ - என்றும் கூறுவதற்கு ஏற்ப உள்ள தனது ஆண் தன்மையைக் காண்பித்து அல்லவோ இவளுடைய பெண்மைத்தன்மையை அபகரித்தான்! (பெண்மை தோற்றேன்) - ஆனால் இவள் தனது நிறம் போன்ற பலவற்றையும் இழந்துள்ளபோது, “பெண்மை தோற்றேன்” என்று மட்டுமே ஏன் கூறவேண்டும் என்பதற்கு விடை கூறுகிறாள்; இதுவரை எதனைத் தோற்கவில்லையோ அதனையே தோற்றேன். (முனிந்தினியித்யாதி) - இனியும் என்னை மீட்கலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? இவ்விதம் என்னை மீட்க எண்ணும் நீங்கள், அவனுடைய வெற்றிச்செயல்களுக்கு முன்பாக அல்லவோ மீட்க எண்ணுகிறீர்கள்? (என் செய்தீர்) - எனக்கு ஏற்பவர்களாக இருந்து நீங்கள் மீட்க எண்ணவில்லை; இதன் விளைவாகவே உங்களுடைய இந்த மீட்புச் செயலானது நிறைவேறவில்லை. (அன்னைமீர்காள்) - நான் பிறந்தது முதலாக எனது இயல்பை நன்கு அறிந்த நீங்கள் என்னை மீட்க எண்ணுகிறீர்கள்! அவன் செய்த உபகாரங்கள் எதனையும் நீங்கள் அறியாத காரணத்தால்தான், இவ்விதம் கோபம் கொள்கிறீர்கள். இதனைக் கேட்ட தாய்மார்கள், “அவன் செய்த உபகாரங்களை மறக்கக்கூடாது என்பதால், அவற்றையும் அவனையும் நீ நினைத்தபடி உள்ளாய். ஆயினும் பெற்று வளர்த்த எங்களுடைய இத்தகைய உபகாரங்களையும் நீ எண்ணவேண்டும் அல்லவோ?”, என்றனர். இதற்கு இவள் விடை தருகிறாள்; (முன்னியவன் வந்து வீற்றிருந்த) – உபகாரம் செய்ததில் அவனே முதலில் செய்தவன் ஆகிறான். (முன்னி) - முன்பாகவே செய்து; இதற்கு ப்ரமாணம் ஜிதந்தேயில் - பூர்வஜ: - முன்பே உண்டானவனே – என்பதாகும். அதாவது, என்னைப் பெறுவதற்குரிய காலத்தை எதிர்நோக்கியபடி, தனக்கு உங்கள் மேன்மைகள் அனைத்தையும் வெளிப்படுத்தும்படியாக வீற்றுள்ளான். – (கனிந்தபொழிலித்யாதி) - அங்கு என்னைக் கொண்டு சென்று காண்பிப்பவர்கள் உண்டாக்கும் காலதாமதம் மட்டுமே உள்ளது; இவன் என்னை எதிர்பார்த்தபடியே உள்ளான். அங்குள்ள அனைத்தும் பக்குவமாகக் கனிந்து நிற்கும். “கனிந்த பொழில்” என்பதால் “கனிந்த விளா” என்று எண்ணி, அதில் அஸுரர்களுடைய ஏறிடுதல் உண்டோ என்று எண்ணி அஞ்சவேண்டாதபடி உள்ள சோலை; அதாவது, தான் மிகவும் விருப்பத்துடன் எழுந்தருளியுள்ள இடம் என்பதால் விரோதிகள் யாரும் இல்லை. (காலம் பெறவென்னைக் காட்டுமினே) - இவளை அவர்கள் அங்கு அழைத்துச் சென்று காண்பித்தல் என்பது உறுதியானால் அல்லவோ “காலம் பெற என்னைக் காட்டுமின்" என்று கூறுதல் பொருத்தமாகும் என்பதற்கு விடை தருகிறாள்; உங்களுடைய இந்தக் குலத்திற்கும் எனக்கும் ஏற்ற பரிஹாரம் இந்த ஒன்று மட்டும் அல்லவோ? அதாவது, இவளுடைய உயிர் தரிப்பினால் மட்டுமே தாங்கள் உயிர் தாங்கும்படியாக உள்ள குலம். ஆகவே என்னை அங்கு கொண்டு சென்று சேர்ப்பதில் தவற வேண்டாம். நான் “உள்ளேன்” என்பதாக உள்ளபோதே என்னை அங்கு கொண்டு சேர்க்கும் செயலைச் செய்ய முயல்வீராக. “தண்ணீர் முழுவதும் ஓய்ந்த பின்னர் அணை கட்டலாம்” என்று எண்ணியபடி இருக்காமல், நான் உயிருடன் உள்ளபோதே என்னைக் கொண்டு சென்று காண்பிப்பீர்களாக.