திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 4)

ஏழாம்பத்து

மூன்றாம் திருவாய்மொழி

இழந்த எம்மாமைத் திறத்துப் போன * என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் * உழந்து இனி யாரைக் கொண்டு என் உசாகோ? * ஓதக் கடல் ஒலி போல ** எங்கும் எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு * தென் திருப்பேரெயில் வீற்றிருந்த * முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் * அன்னையர்காள்! என்னை என் முனிந்தே?

– முன்பே இழந்த எனது நிறத்தை மீட்டு எடுக்கச் சென்ற எனது நெஞ்சமும் அங்கேயே நின்று விட்டது. எனது அந்தரங்கமான நெஞ்சமானது என்னை விட்டுச் சென்ற பின்னர், தளர்ந்து நின்று, இந்த அனுபவ தாரையில் எந்த விருப்பமும் இல்லாதவர்களிடம், அவர்களுக்கு விருப்பமற்ற எந்தப் பொருள் குறித்து நான் பேசுவேன்? இவ்விதம் யாரிடமாவது பேசவேண்டும் என்றிருந்த நான், மிகுந்த அலைகள் கொண்டதான ஸமுத்ரத்தின் ஒலி போன்று அனைத்து திசைகளிலும் ஓங்கி ஒலிக்கின்ற ஸாமவேத கோஷமானது, அனைத்து காலங்களிலும் ஒலித்தபடி உள்ள தென்திருப்பேரையில் நகரத்தில் வீற்றிருப்பவனும், அந்த வேத கோஷத்தின் எதிரொலி போன்று முழங்கும் ஸ்ரீபாஞ்சஜந்யத்தைக் கொண்டவனும் ஆகிய பகவானுடைய வியக்க வைக்கும் ஸௌலப்யம் போன்றவற்றை வெளிப்படுத்தும் லீலைகளில் ழூழ்கி இருந்தேன். “மூப்பும் முறையும் உடையோம்” என்றிருக்கிற எனது தாய்மார்களே! வேறு துணை இன்றி தனித்து அவன் விஷயத்தில் ஈடுபட்டு நிற்கும் என்னை நீங்கள் கோபித்து என்ன பயன்?

– “ஏதேனுமொன்றைக் கொண்டு வருந்தியாகிலும் போதுபோக்காதே இங்ஙனே செய்யலாமோ?” என்று பொடிகிற தாய்மாரைக் குறித்து, “என்னெஞ்சம் அவனாலே அபஹ்ருதமாயிற்று. நான் எத்தைக் கொண்டு போதுபோக்குவது?”, என்கிறாள்.

– ஏதேனும் ஒன்றை மனதில் வைத்துக் கொண்டு, இவ்விதம் வருத்தம் அடைந்தபடியாவது பொழுதைக் கழிப்பதை விடுத்து, இவ்விதம் வேறு ஏதேனும் செய்யலாம் அல்லவோ?”, என்று கோபித்துக் கொள்ளும் தாய்மார்களை நோக்கி, "எனது நெஞ்சமானது அவனால் அபகரிக்கப்பட்டது. இனி நான் எதனைக் கொண்டு எனது பொழுதைப் போக்குவது?”, என்கிறாள்.

(இழந்த எம்மாமைத் திறத்துப் போன) நாணும் நிறையும் இழந்ததென்றவிடம் உபலக்ஷணமாகாதே; அநுபாஷணத்திலே நிறமிழந்தமையும் தோற்றச் சொல்லா நின்றாள். “அத்தலையிலுள்ளது நாம் ஸர்வஸ்வஹரணம் பண்ணுகைபோய், நமக்கு உள்ளத்திலேயொன்றைச் சிலர் கொடுபோகையாவதென்?” என்று அபிமாநித்து, “இப்போதே மீட்டுக் கொடு வருகிறேன்” என்று த்வரித்துப் போன நெஞ்சும் அங்கே படையற்றது. (என்னெஞ்சினாரும் அங்கேயொழிந்தார்) அங்கே புக்காரையும் தம்படியாக்கிக் கொண்டார். “பிரியேன்” என்று சொன்னவரிறே இத்தலையைப் பிரிந்து நினையாதிருக்கிறார். (நெஞ்சினார்) அலைந்த பரிவட்டமுந் தாமுமாய் அணுக்கடித்துத் திரியா நின்றாராயிற்று. (நெஞ்சினார்) “ப்ரவேக்ஷ்யாமி ச வாஹிநீம்” என்று தூசித்தலையில் வ்யாபரிப்பேன் நான் என்றானின்றே ஸ்ரீவிபீஷணாழ்வான். (இழந்த இத்யாதி) நிறந் தொடக்கமான இழந்தவையடைய மீட்பதாகச் சொல்லிப் போன நெஞ்சினாரும் அங்கே கால்தாழ்ந்தார். வினைத்தலையிலே படையறுக்குமாப்போலே வரிசையுங் கொடுத்துத் தம்மோடு ஸாம்யா பத்தியுங் கொடுத்தார். வினைத்தலையில் படையறுக்கையாவது, யுத்த ஸமயத்திலே எதிர்த்தலையில் சேனையைத் தன்பக்கலிலே யாக்கிக் கொள்ளுகை. “ராஜாஹ்யேஷ விபீஷண:” என்னுமாப்போலே வரிசை பெற்றுத் திரியாநின்றார். ராவணன் முன்னே, அவன் சோற்றையுண்ட சுகஸாரணர்கள் விபீஷணாழ்வானை, “ராஜா” என்பானென்? என்னில், எழுத்து உருவழியாதே கிடந்தாலும், புள்ளி குத்தினால் அத்தைக் கழித்து மேலே போமாப்போலே, முடி கொடுக்குமவர் கையாலே வைக்கையாலே. என்றாலும், ராவணன் க்ரௌர்யத்தையறிந்து வைத்துக் கூசாதே இங்ஙன் சொல்லுவானென்? என்னில். “சித்ரம் குத்துமோ” என்றிருந்தார்கள். “நிலவரைக் கொண்டு வினை செய்யலாம்” தரங் கொடுப்பரிறே. (என்னெஞ்சினாருமங்கே யொழிந்தார்) நிறம் மீட்கப் போனாரும் நிறங்கொடு போனாரோடொத்தார். இத்தலையில் வெறுமை கண்டு போனதுவும் பௌஷ்கல்யங் கண்டு போனவனோடு ஒத்தது. போவார்போவாரெல்லாம் இத்தலைக்குக் காரியமாகக் காணும் போம்போது சொல்லிப்போவது! அவன்தானே “இத்தலையூற்றிருக்க வேணும்” என்று போனானானான்; இது இத்தலையில் வெறுமை கண்டு, நோக்குகைக்காகப் போயிற்று. நாம்தாம் அவர்களை வெறுக்கிறதென், “நோபஜநம் ஸ்மரந்” என்று புக்கார் மீளாத தேசமான பின்பு? (அங்கேயொழிந்தார்) “கடலுக்குக் குறை நிரப்ப வேணும்” என்று திரியாநின்றார். (உழந்து இத்யாதி) பண்டு நெஞ்சிழந்தவர்களும் வருந்தி தரித்துச் சிலரோடே வ்ருத்த கீர்த்தநம் பண்ணியிருந்திலர்களோ? நீயும் அப்படியே வருந்தியாகிலும் சிலரோடே காலக்ஷேபம் பண்ண வேண்டாவோ? என்ன; (இனி உழந்து ஆரைக் கொண்டு என் உசாகோ) உழந்து - வருந்தி. (இனி) என்னெஞ்சை இழந்த பின்பு. இனி து:க்கப்பட்டு ஆரோடேகூட எத்தைச் சொல்லி நான் காலம் போக்குவது? லங்கையிலே இருந்தவளுக்கு ஒருவனாதல் ஒருவன் குடியாதல் உண்டு; அதுவுமில்லையே எனக்கு! “ஜ்யேஷ்ட்டா கந்யாநலாநாம் விபீஷண ஸுதா” இங்கேயிருந்தே அங்குத்தைக்கு ஆவாளொருத்தி காண்! (கபே) ஓரோ அவஸ்த்தைகளிலே நீ உதவுமாப்போலே காண் இவளுந் ஓரோ தசைகளிலேயுதவ வல்லபடி. பல சொல்லியென்? உன்னோடொப்பா ளொருத்தி. (ஆரைக் கொண்டென்னுசாகோ) தேஹாத்மாபிமாநிகளான ஸம்ஸாரிகளைக் கொண்டு போதுபோக்கவோ? “ஈச்வரோஹம்” என்றிருக்கிற ப்ரஹ்மேசாநாதிகளைக் கொண்டு போதுபோக்கவோ? பகவதநுபவத்திலே அநந்யபரராயிருக்கிற நித்யஸூரிகளைக் கொண்டு போதுபோக்கவோ? இத்தலையை உரிசூறை கொண்டு போனவனைக் கொண்டு போதுபோக்கவோ? ஆரைக் கொண்டு எத்தையுசாவுவது? (என்னுசாகோ) “ஸமா த்வாதச தத்ராஹம்” என்று சொல்லலாமிறே யவளுக்கு. அப்படியே நமக்கும் ஏதேனுமுண்டோ? கலவியில் அபர்யாப்தியிருக்கிறபடி. (ஆரைக் கொண்டு) நெஞ்சு போலே நமக்குப் பாங்காயிருப்பாருண்டோ? ஆனால், செய்ய வடுப்பதென்? என்னில், (ஓதக்கடல் இத்யாதி) அங்குத்தையது இங்கே நடையாடா நின்ற பின்பு, நாமும் அங்கே போய்ப்புகுமத்தனை. ஓதங் கிளர்ந்த கடல் போலேயிருந்துள்ள வேதகோஷமானது எங்கும் பரம்பாநின்ற தென்திருப்பேரையில் வீற்றிருந்த. (நல்வேதம்) “வேதாநாம் ஸாமவேதோஸ்மி” என்கிற ஸாம த்வநியாய்க் கிடக்குமத்தனை, பார்த்த பார்த்தவிடமெங்கும்; அவ்விருப்பைக் கண்டு முக்தர் ஸாமகாநம் பண்ணி ப்ரீதிக்குப் போக்குவிடுமாப்போலே. (முழங்கு சங்கக் கையன்) வேதத்வநியானது ஸ்ரீபாஞ்சஜந்யத்தைக் கிட்டி ப்ரதித்வநியெழா நிற்கும். (மாயத்தாழ்ந்தேன்) அவனுடைய ஸ்மித வீக்ஷணாதிகளிலே மீளவொண்ணாதபடி யகப்பட்டேன். (அன்னையர்காளென்னையென் முனிந்தே) ப்ராப்தி யுண்டென்னாச் சீறுமத்தனையோ? சீற்றத்துக்கெதிர்த்தலையும் வேண்டாவோ? தர்மியுண்டாய் முனிய வேணுமே! (மாயத்தாழ்ந்தேன் என்னையென் முனிந்தே) ஸ்வாதீநரையன்றோ முனிந்தால் ப்ரயோஜநமுள்ளது.

– (இழந்த எம்மாமைத் திறத்துப் போன) - மாமை என்பது நிறம். கடந்த பாசுரத்தில் நிறம் இழந்ததைக் கூறிய பின்னர் இங்கு மீண்டும் அதனையே ஏன் பின்மொழிய வேண்டும் என்பதற்கு விடை தருகிறாள்; “நெஞ்சமானது தனது நாணத்தையும் அடக்கத்தையும் இழந்தது” என்று கூறினால், இழந்த அனைத்தையும் சேர்த்துக் கூறியதாக இராது அல்லவோ? ஆகவே இவ்விதம் மீண்டும் கூறுவதன் மூலம், நிறத்தை இழந்ததையும் வெளிப்படுத்துகிறாள். இவளுடைய நெஞ்சம் செய்தது என்ன என்பதைக் கூறுகிறாள்; “அவனிடமிருந்து நாம் முழுவதையும் நமக்கு உரியதாக்கிக் கொள்ள முயன்றோம். ஆனால் அதனைச் செய்யாமல், நமக்கு உள்ளதில் ஒன்றை அவனிடம் சிலர் கொண்டு செல்வதை எப்படி விடமுடியும்?”, என்று எண்ணிய எனது நெஞ்சமானது, அவனிடம் நான் இழந்த பலவற்றையும் “தன்னுடையது" என்று எண்ணியபடி, “இப்போதே சென்று நான் மீட்டுக் கொண்டு வருகிறேன்" என்று வேகமாக அவனிடம் சென்றது. ஆனால் அதுவும் அங்கேயே நின்றுவிட்டது. – (என்னெஞ்சினாரும் அங்கேயொழிந்தார்) - அங்கே சென்ற எனது மனதையும் அங்கு முன்பே சென்ற நெஞ்சமானது, “தன்னுடையது” என்று செய்து கொண்டது. “இவளை விட்டுப் பிரியமாட்டேன்” என்று கூறிய இவளுடைய நெஞ்சமும் கூட இப்போது இவளை நினைக்காமல் உள்ளது. (நெஞ்சினார்) - அலைந்த பரிவட்டமும் தானுமாக இவளுடைய நெஞ்சமானது அங்கேயே அவனுக்கு அந்தரங்கமாகி நின்றது. இவளுடைய நெஞ்சம் அங்கு அந்தரங்கமாக நின்றதற்கு ப்ரமாணம் யுத்தகாண்டம் (19-23) - ப்ரவேக்ஷ்யாமி ச வாஹிநீம் - படையின் முதல் இடத்தில் நான் நிற்பேன் - என்று ஸ்ரீவிபீஷணாழ்வான் கூறியது ஆகும். (இழந்த இத்யாதி) – அடுத்து “திறம்” என்பதற்கு “கூட்டம்” என்பதாகப் பொருள் கொண்டு அருளிச்செய்கிறார்; எனது நிறம் போன்ற அனைத்தையும் நான் இழந்தேன்; அவற்றை முழுவதுமாக மீட்பதாகக் கூறி எனது நெஞ்சம் அங்கு சென்றது; அத்தகைய நெஞ்சமும் அங்கேயே நிலைத்தது. “அங்கே புக்காரையும் தம்படியாக்கிக் கொண்டார்” என்பதற்கு, “உனது கார்யம் நிறைவேற்றச் சென்ற உனது நெஞ்சமானது அவன் சொற்களைக் கேட்டு அடங்குவதற்கு என்ன காரணம்?”, என்று கேட்கலாம்; இதற்கு விடை தருகிறாள்; போர்முனையில் எதிரிகளின் படையைத் தன் வசமாக்குவது போன்று தனது வரிசைசையும் அவன் எனது நெஞ்சத்திற்கு அளித்து, தன்னுடன் “என்னை விட்டுப் பிரிதல்” என்பதான ஒப்புமையையும் அளித்தான். இலங்கையை அழிப்பதற்கு ஸ்ரீ்விபீஷணாழ்வானுக்கு முடிசூட்டியதை இதற்கு உதாரணம் காண்பிக்கிறார்; யுத்தகாண்டம் (28-27) - ராஜாஹ்யேஷ விபீஷண: - இந்த விபீஷணன் அரசன் அல்லவோ - என்பது போன்று, எனது நெஞ்சமும் அவனுடன் ஒப்புமை வரிசையில் நின்றது. ஆனால் இராவணனுக்கு முன்னரே விபீஷணனை “அரசன்” என்று கூறலாமோ என்பதற்கு விடை தருகிறார்; அதாவது இராவணன் இறப்பதற்கு முன்னரே, அவனுடைய சோற்றை உண்டு இன்பத்தில் இருந்த அவனுடைய தொண்டர்கள், விபீஷணனை “ராஜா” என்று ஏன் கூறினர்? இதற்கு விடை தருகிறார்; ஓலையில் தெளிவான எழுத்து இருந்தாலும் அதன் மேல் ஒரு புள்ளி வைத்தால் அது எப்படிச் செல்லாததாகி விடுமோ, அது போன்று ஆசார்யனின் திருக்கரங்கள் நம் மீது படும்போது, நம்மிடமுள்ள கர்மங்களும் அகங்காரமும் பகவானால் தள்ளுபடி செய்யப்பட்டு, நாம் உய்வடைவது போன்று, இங்கு இராமனால் அளிக்கப்பட்ட க்ரீடம் என்பதால், “ராஜா” என்றனர். இவ்விதம் இராவண் முன்பாக உரைத்தால், அவன் துன்புறுத்தமாட்டானோ என்பதற்கு விடை தருகிறார்; அதாவது இராவணனுடைய க்ரூரமான தன்மையை அறிந்துள்ளபோதிலும், அதனை எண்ணி அஞ்சாமல் இவ்விதம் கூறலாமோ? இதற்கு விடை, “ஒரு ஓவியத்தில் வரையப்பட்ட ஆயுதம் தாக்குமோ?”, என்று இருந்தனர்; தகுதியானவர்களைக் கொண்டு தக்க செயலாற்றலாம் என்று எண்ணுவதால் அதற்கான தகுதியைத் தருவார்கள் அல்லவோ? – (என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்) - எனது நிறத்தை மீட்டுக் கொண்டு வருகிறேன் என்று சென்ற நெஞ்சமும், அந்த நிறத்தை அபகரித்துச் சென்றவருடன் சேர்ந்து ஒப்புமை அடைந்தது. இவள் விஷயத்தில் வெறுமை உள்ளதைக் கண்டு அதனை சீராக்குவதற்காக சென்ற நெஞ்சமும், அந்த ஊரின் நிறைவைக் கண்டு, நிறத்தை அபகரித்துச் சென்றவனுடன் ஒப்பானது. இதுவரை பாராமல் இருந்தவர்களையும் கூட, இவளுக்காகச் சென்றதாகக் கூறலாமோ என்பதற்கு விடை தருகிறார். இங்கிருந்து அங்கு செல்லும் ஒவ்வொருவரும் இவள் விஷயத்திற்காகவே செல்வதாக அல்லவோ உரைத்துச் செல்கிறார்கள்! அவனும் கூட இங்கிருந்து செல்லும்போது, “இவள் மீது காதல் மிகுதியாக இருத்தல் வேண்டும்” என்று அல்லவோ கூறிச் சென்றான்! இப்படி உள்ளபோது, இ்ப்போது சென்ற நெஞ்சமானது இவளுடைய வெறுமையைக் கண்டு, இதனைப் போக்கவே அங்கு சென்றது. இப்படி உள்ளபோது, நாம் அதனை ஏன் வெறுக்க வேண்டும்? அதாவது, அந்த இடமானது உபநிஷத்தில் - நோபஜநம் ஸ்மரந் - அதன் பின்னர் நினைப்பதில்லை - என்பதாகக் கூறப்படும் இடம் போன்று உள்ளபோது, நாம் ஏன் வெறுக்க வேண்டும்? (அங்கேயொழிந்தார்) - எனது நெஞ்சமானது அங்கு சென்ற பின்னர், அங்குள்ள ஸர்வேச்வரனைக் குறித்து, “கடலுக்கு நீரில் குறைவு ஏற்பட்டது. அதனை நிரப்ப வேண்டும்” என்று எண்ணியபடி அங்கேயே தங்கியது. (உழந்து இத்யாதி) – இவளுடைய நிலையைக் குறித்துக் கேட்ட தாய்மார்கள், “அதாவது முன்பு ஸீதையானவள் த்ரிஜடையுடன் உரையாடி தனது காலத்தைக் கழித்தாள். அவர்கள் வருத்தம் அடைந்தாலும், உயிர் தரித்து, ஒரு சிலருடன் அவனுடைய செயல்கள் குறித்துப் பேசியபடி உள்ளனர். நீயும் இவ்விதம் வருந்தினாலும், சிலருடன் சேர்ந்து காலம் கழிக்கவேண்டுமா?”, என்றனர். இதற்கு விடை தருகிறாள். (இனி உழந்து ஆரைக் கொண்டு என் உசாகோ) - உழந்து என்றால் வருந்தி; (இனி) - எனது நெஞ்சத்தை இழந்த பின்னர், இனி துக்கம் அடைந்து யாருடன் சேர்ந்து எதனைப் பேசி எனது காலத்தை நான் கழிப்பேன்? இலங்கையில் சிறையிருந்தவளுக்கு ஸ்ரீவிபீஷணாழ்வான் மற்றும் த்ரிஜடை போன்றவர்கள் இருந்தனர்; எனக்கு அது போன்று இங்கு யாரும் இல்லையே! – இவ்விதம் ஸீதை இருந்தாளோ என்பதற்கு ப்ரமாணம் கூறுகிறார்; ஸுந்தரகாண்டம் (37- 11) - ஜ்யேஷ்ட்டா கந்யாநலாநாம் விபீஷண ஸுதா - என்று அனுமனைப் பார்த்து ஸீதை உரைத்தவற்றைக் கூறுகிறார். இந்த இலங்கையில் இருந்தபடியே இராமனுக்கு ஆவாள் ஒருத்தியைக் காண்பாயாக. (கபே) - ஒவ்வொரு நிலையிலும் நீ ஸீதைக்கு உதவியது போன்று இவளும் எனது ஒவ்வொரு நிலையிலும் உதவவல்லவளே ஆகிறாள். பலவும் கூறி என்ன பயன்? உன் போன்று ஒருத்தி கிடைப்பாளோ? (ஆரைக் கொண்டு என் உசாகோ) - சரீரத்தையே ஆத்மா என்று எண்ணுபவர்கள் முலமோ நான் எனது பொழுதைப் போக்க இயலும்? அல்லது, “ஈச்வரோஹம் - நானே ஈச்வரன்” என்று கூறிக்கொள்ளும் நான்முகன் ஈசன் போன்றவர்கள் மூலம் பொழுது போக்க இயலுமோ? அல்லது பகவத் அனுபவத்தில் மட்டுமே தங்கள் சிந்தனையை நிறுத்தி வேறு எதிலும் செல்லாத நித்யஸூரிகள் மூலம் பொழுது போக்கவோ? இப்படியாக எனது நிலையைச் செய்துவிட்டுச் சென்றவன் மூலம் பொழுது போக்க இயலுமோ? யாரைக் கொண்டு அவர்களுடன் என்ன பேசுவது? (என் உசாகோ) அயோத்யாகாண்டத்தில் - ஸமா த்வாதச தத்ராஹம் - நான் அங்கு பன்னிரண்டு ஆண்டுகள் இன்பமாக இருந்தேன் - என்று கூறலாம்படி ஸீதைக்கு நிலை இருந்தது; என் விஷயத்தில் அவ்விதம் ஏதும் உள்ளதா? இவ்விதம் கூறும்படியாக இவளுக்கு அவனுடைய சேர்க்கை ஏற்படவில்லையோ என்றால், “அந்தச் சேர்க்கையில் நிறைவு ஏற்படவில்லை” என்கிறாள். (ஆரைக் கொண்டு) - எனது நெஞ்சம் போன்று நமக்குப் பாங்காக இருப்பார்கள் வேறு யாரேனும் இருப்பார்களோ? – சரி, இனி என்ன செய்யபோகிறாய் என்பதற்கு விடை தருகிறாள்; (ஓதக்கடல் இத்யாதி) - ஓதக்கடல் என்றால் அலைகள் ஒங்கி வீசியபடி உள்ள கடல், அலை எழுந்தபடி உள்ள கடல், ஸம்ருத்தமான கடல். பரமபதத்தில் உள்ள ஸாம வேத கோஷமானது இந்தத் திருப்பேரெயில் நகரத்தில் ஒலித்தபடி உள்ளபோது, நாமும் அங்கு சென்று சேர்வோம். அதாவது அலை வீசியெறியும் கடல் போன்றுள்ள ஸாம வேதகோஷமானது எங்கும் நிறைந்தபடி உள்ள நிருப்பேரெயிலில் வீற்றிருந்த. (நல்வேதம்) - கீதை (10-22) - வேதாநாம் ஸாமவேதோஸ்மி – வேதங்களில் நான் ஸாமவேதம் ஆகிறேன் - என்று ஸாமவேத கோஷமாகவே காண்கின்ற இடங்களிலெல்லாம் உள்ளது. பரமபதத்தில் இவன் வீற்றிருந்த நிலையைக் கண்டு அங்குள்ல முக்தர்கள் ஸாமகானம் செய்து ப்ரீதியை வெளிப்படுத்துவது போன்று இங்கும் உள்ளது. (முழங்கு சங்கக் கையன்) - வேத கோஷமானது ஸ்ரீபாஞ்சஜந்யத்தை அண்டி நின்று, அதிலிருந்து கிளம்பும் முழக்கத்தை எதிரொலிப்பதாக இருக்கும். – (மாயத்தாழ்ந்தேன்) - அவனுடைய புன்னகை மற்றும் கடைக்கண் பார்வை போன்றவற்றில், அவற்றிலிருந்து மீள முடியாதபடி அகப்பட்டேன். (அன்னையர்காள் என்னையென் முனிந்தே) - எனது தாய்மார்கள் என்ற ஸம்பந்தம் உள்ளதை மட்டுமே எண்ணியபடி, அந்த உரிமையில் என் மீது கோபம் கொண்டு என்ன நடக்கப்போகிறது? அதாவது உறவுமுறை மற்றும் வயதான நிலை ஆகி்யவற்றை என்ணிக் கோபம் கொண்டால் மட்டுமே போதுமானதா? அந்தக் கோபத்திற்கான இலக்காக ஒருவர் வேன்டுமா? (மாயத்தாழ்ந்தேன் என்னையென் முனிந்தே) - சுய நினைவு உள்ளவர்களிடம் கோபம் காண்பித்தால் அல்லவோ பயன் இருக்கும்!