திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 3)
ஏழாம்பத்து
மூன்றாம் திருவாய்மொழி
செங்கனி வாயின் திறத்ததாயும் * செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும் * சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் * தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் ** திங்களும் நாளும் விழா அறாத * தென் திருப்பேரெயில் வீற்றிருந்த * நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ! * நாணும் நிறையும் இழந்ததுவே
– சிவந்த கனி போன்று இனிமையுடன் கூடியதும், கவர்ந்து இழுக்கவல்லதும் ஆகிய அவனுடைய திருவாயில் விருப்பம் கொண்டதாகவும்; சிவந்த ஒளி வீசும் நீளமான க்ரீடத்தில், அந்த மேன்மைக்கு ஏற்றபடி தாழ்ந்ததாகவும்; அப்படிப்பட்ட அவனுடைய பரத்வத்தை உணர்த்துகின்ற திவ்ய ஆயுதங்களைக் கண்டு மகிழ்ந்தும்; எல்லையற்ற இனிமையான தாமரை போன்ற திருக்கண்களுக்குத் தோற்றபடியாகவும் எனது நெஞ்சம் உள்ளது. ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு நாளும் இடைவிடாமல் உத்ஸவங்கள் நடந்தபடி உள்ள தென்திருப்பேரையில் நகரத்தில், தனது வேறுபாடு வெளிப்படும்படியாக எழுந்தருளியுள்ள நம்முடைய பிரானுக்கு, எனது நெஞ்சமானது நாணத்தையும் அடக்கத்தையும் இழந்தது.
சேர்க்குமவளொருத்தியுமேயாக அல்லாத பங்களமடங்கலும் “நமக்கு நிலமன்று” என்று கைவாங்கிற்று; தோழியானவள் “இது நமக்குப் போராது காண், நெஞ்சை ஒருங்கப் பிடித்து தரித்திருக்க வேண்டாவோ?” என்ன; “அந்நெஞ்சுதான் இனிச் செய்வதென்? அவயவாதி சோபைகளிலே அகப்பட்டு அதுவும் தனக்குள்ளதடங்கலும் இழந்ததுகாண்” என்கிறாள்.
– இவளை அவனுடன் சேர்க்கும் ஒருத்தி தவிர மற்ற அனைவரும் “இவளுடைய செயலானது நமக்கு அடக்க இயலாத ஒன்றாகும்” என்று பின்வாங்கினர். அப்போது இந்த ஒரு தோழி மட்டும், “என்ன செய்தாலும் பெண்களுக்கே உரிய நாணம், அடக்கம் போன்றவற்றை பார்த்துக் கொள்ளவேண்டாமோ?” என்றாள். இதற்கு நாயகி, “அந்த நெஞ்சத்தை இனி என்ன செய்வது? அவனுடைய அவயவங்களுடைய அழகில் மயங்கியபடி உள்ளது. இதன் விளைவாக அந்த நெஞ்சமும் தனக்குள்ள அடக்கம் போன்றவற்றை இழந்து நிற்கிறது”, என்கிறாள்.
– (செங்கனிவாயின் திறத்ததாயும், செஞ்சுடர் நீண்முடித் தாழ்ந்ததாயும், சங்கொடு சக்கரங்கண்டுகந்தும், தாமரைக்கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்) “நெஞ்சு நாணும் நிறையும் இழந்ததுகாண்!” என்கிறாள். ஸௌபரி என்பான் ஒருத்தன் ஒரு ஸுக்ருதமடியாக ஐம்பது வடிவு கொண்டானிறே. அவ்வளவல்லவிறே இவள் கலந்த விஷயம் பண்ணவல்லது. அவன் வ்யக்திதோறும் பரிஸமாப்ய வர்த்திக்குமாப் போலேயாயிற்று இதுவும் அவயங்கள்தோறும் தனித்தனியகப்பட வல்லபடி. “ஏகதா பவதி த்ரிதா பவதி” என்கிறபடியே அநுபவியாநின்றால் பிறக்கும் நாநாபாவம், பிரிவிலே நெஞ்சுக்கு உண்டாகாநின்றது. (செங்கனி வாயின் திறத்ததாயும்) “பிரிந்து கடக்கவிருக்கிலென்? உன் கண்வட்டத்திலே கிடக்கிலென்? இது உன் சரக்கன்றோ?” என்று சொல்ல உபக்ரமித்து, தழுதழுத்து வருகிற திருவதரத்திலே யகப்பட்டபடி. அதிலும் அதரத்தில் பழுப்புக்குள் இழியமாட்டுகிறதில்லை. (வாயின் திறத்ததாயும்) அதுதான் ஒரு மஹாபாரதத்துக்குப் போருமாகாதே? (செஞ்சுடர் இத்யாதி) பிரிவை ப்ரஸங்கித்துப் பேர நின்றபோது, ஆதிராஜ்ய ஸூசகமாய் “உபயவிபூதி நாதன்” என்று தோற்றும்படியிருக்கிற திருவபிஷேகத்தைக் கண்டு தறைப்பட்டுக் காலைப் பிடித்தது. (சங்கொடு இத்யாதி) பிரிந்தால் விரோதியைப் போக்குகைக்குப் பரிகரமாய், வைத்த கண் மாறவொண்ணாத அழகையுடைய ஆழ்வார்களைக் கண்டுகந்தது. (தாமரைக்கண்களுக்கற்றுத் தீர்ந்தும்) “தவாஸ்மி” என்று சொல்லப்புக்கு மாட்டாதொழிந்தால், குறையும் தலைக்கட்டின திருக்கண்களுக்காயிற்று அநந்யார்ஹமாக எழுதிக் கொடுத்தது. பிரிகிறபோது நோக்கின நோக்கிலே, பிறர்க்காகாதபடி உஜ்ஜீவிக்கப் பண்ணினான். அம்ருதமதநத்தில் தான் எட்டு வடிவு கொண்டாப்போலே காணும் இதுவும் விஷயாதீநமாகப் பல வடிவு கொள்ளுகிறபடி. அவனுடைய ஐச்வர்யமடைய இதுக்கு உண்டாகக் கடவதிறே. (திங்களும் நாளும் இத்யாதி) உத்தேச்ய பூமியிலே நித்யோத்ஸவம் செல்லாநிற்க, அது இங்கே நம் கண்வட்டத்தே து:கத்துக்கு இலக்காயிருக்குமோ! மாஸத் திருநாளும் நித்யத்திருநாளுமோவாத. (வீற்றிருந்த நங்கள் பிரானுக்கு) இவ்விருப்பு நமக்கு ஆக்கிக் கொண்டிருக்கிற உபகாரகனுக்கு பரத்வம் நித்யமுக்தர்க்கு; வ்யூஹம் முக்த ப்ராயர்க்கு; விபவம் புண்ணியம் பண்ணினார்க்கு; இவ்விருப்பு பாபம் பண்ணின ஸம்ஸாரிகளுக்காகவிறே. (என்னெஞ்சம்) அவனுடைய உபகாரமும் ஸௌந்தர்யாதிகளும் வயிரவுருக்காகை. நெஞ்சினுடைய வன்மையறிதியிறே. நெஞ்சும் அவனும் ஒரு கோவையிலே அடைப்புண்டபடி. (நங்கள் பிரானுக்கு என்னெஞ்சம்) “ராகவோர்ஹதி வைதேஹீம்” என்னுமாப்போலே. (தோழீ) நெஞ்சைத் திருத்திக் கலப்பிக்கப்பட்ட வருத்தம் அறிதியிறே. இப்போது நீயுங் கூட எதிர்த்தலையாம்படியிறே வாய்த்தது. (நாணும் நிறையும் இழந்ததுவே) இது இழவாதது உண்டோ? அரைக்ஷணம் அவன் பேர நின்று படுத்தின பாடெல்லாம் என்தான்! நான் தன்னையிழந்தேன், தாய்மார் தோழிமார்கள் என்னையிழந்தார்கள், நெஞ்சு நாணும் நிறையும் இழந்தது.
– (செங்கனிவாயின் திறத்ததாயும், செஞ்சுடர் நீண்முடித் தாழ்ந்ததாயும், சங்கொடு சக்கரங்கண்டுகந்தும், தாமரைக்கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்) - நெஞ்சமானது நாணத்தையும் அடக்கத்தையும் இழந்ததற்கான காரணம் கூறுகிறாள். ஆனால் ஒரு நெஞ்சமே இவ்விதம் பலவிதமான அவயவங்களை அனுபவிக்க இயலுமோ என்பதற்கு, பலவிதமான வடிவம் ஏற்பதால் ஒரு உதாரணம் மூலம் கூறுகிறார்; ஸௌபரி என்ற முனிவர் தனது நல்வினை காரணமாக ஐம்பது வடிவம் கொண்டார் அல்லவோ? அந்த அளவிற்காவது இவன் கலந்த இந்த விஷயம் செய்யவல்லது அல்லவோ? இவ்விதம் பல வடிவம் கொள்ளவில்லை என்றாலும், அவனுடைய பல அவயவங்களிலும் ஈடுபடலாம் என்பதற்கு ஒரு உதாரணம் கூறுகிறார்; அவன் ஒவ்வொரு உருவத்திலும் நிறைந்து வசிப்பது போன்று இந்த நெஞ்சமானது ஒவ்வொரு அவயவத்திலும் தனித்தனியாக அகப்பட்டு நிற்கிறது. பல வடிவம் கொண்டதற்கு த்ருஷ்டாந்தம் கூறுகிறார்; சாந் - ஏகதா பவதி த்ரிதா பவதி - ஒரு சரீரம் ஆகிறான், மூன்று சரீரங்கள் ஆகிறான் - என்பதற்கு ஏற்ப அனுபவித்தபடி நின்றால் பிறக்கின்ற பலவிதமான சரீரங்கள் பிரியும்போது நெஞ்சத்தில் ஏற்படுகிறது. இவ்விதம் பல உருவங்கள் எடுப்பதற்கு இதே பாசுரத்திற்கான வ்யாக்யானத்தில் பின்னர் வருகின்ற “அம்ருத மதநத்தில்” என்று தொடங்கும் வாக்கியம் மூலம் மூன்றாவது உதாரணம் கூறுகிறார். – (செங்கனி வாயின் திறத்ததாயும்) - இவனுடைய வாயில் செந்நிறம் தோன்றுதல் என்பது வாய் திறந்து சொற்களைப் பேசும்போது அல்லவோ? இதனை அடுத்து கூறுகிறார். அவன் இவளிடம், “நான் உன்னை விட்டுப் பிரிந்து சற்று தூரம் சென்றால் என்ன? உனது கண்களுக்கு எப்போதும் இலக்காக உள்ளபடி அருகில் இருந்தால் என்ன? எப்படியானாலும் நான் உனக்கே உரியவன் அல்லவோ?”, என்றான். இவ்விதம் அவன் தழுதழுத்த குரலில் கூறத் தொடங்க, அப்படிப்பட்ட வாயில் இவள் அகப்பட்டான்; அதிலும் குறிப்பாக அதன் சிகப்பு நிறத்தில் அகப்பட்டு மீளாமல் உள்ளாள். (வாயின் திறத்ததாயும்) – அவனுடைய அவயவங்கள் ஒரு பெருங்கூட்டமாக, ஒரு மஹாபாரதத்திற்கு போர் போன்று இவளுக்கு உள்ளதே! (செஞ்சுடர் இத்யாதி) - இதுவரை சிவந்த வாயில் ஈடுபட்டபடி நின்றிருந்த இவளது மனமானது, இப்போது திருமுடியில் ஈடுபடுவது ஏன் என்பதற்கு விடை தருகிறார்; பிரிவைக் குறித்து உரைக்க முயன்றபோது, ஆதிராஜ்யத்தை வெளிப்படுத்துவதும், “உபய விபூதி நாதன்” என்பதை வெளிப்படுத்துவதும் ஆகிய திருவடியைக் கண்டு, அதில் மயங்கி நின்றாள். (சங்கொடு இத்யாதி) – பிரிந்தால், விரோதியை விலக்குவதற்கான உதவியாட்களாக, வைத்த கண் மாறாமல் பார்க்கவேண்டிய அழகுள்ள திவ்யமான ஆயுதங்களைக் கண்டு மகிழ்ந்தாள். (தாமரைக்கண்களுக்கற்றுத் தீர்ந்தும்) – “தவ அஸ்மி - உனக்கே நான் ஆகிறேன்” என்று கூறிய பின்னர் அகன்றால், அந்தக் குறையைப் போக்கவல்ல திருக்கண்களுக்கு, வேறு யாருக்கும் வசப்படாதபடி ஆனாள். அதாவது, தான் பிரிந்தபோது இவளைப் பார்த்து அந்தப் பார்வையின் மூலம், இவள் மற்றவர்களுக்கு என்று ஆகாதபடி, தனக்கே என்று வாழும்படிச் செய்தான். அமிர்தம் எடுப்பதற்காக ஸமுத்திரம் கடையப்பட்டபோது, தானே “தேவர்கள், ராக்ஷஸர்கள், வாஸுகீ, மந்தரம்” போன்றவர்களுக்கு அந்தர்யாமியாகவும், “கூர்மம், அந்தரிக்ஷம், உபேந்த்ரன்” என்பதாகவும் எட்டு ரூபங்கள் எடுத்து, அந்த மலையைச் சாயாமல் காப்பாற்றினான். இங்கு இவளுடைய நெஞ்சமும் இத்தகைய அவயவங்களில் ஈடுபட்டு, பல வடிவங்கள் கொள்கின்றன. அவனுடைய ஐச்வர்யம் அனைத்தும் இவளுடைய நெஞ்சத்திற்கும் உள்ளது போன்று ஆயிற்று. – (திங்களும் நாளும் இத்யாதி) - நாம் சென்றடைய வேண்டிய பூமியாகிய திருப்பேரெயில் நகரத்தில், எப்போதும் உத்ஸவம் உண்டானபடியாக உள்ளபோது, எனது நெஞ்சமானது நமது கண்ணுக்கு இலக்கானபடி, துக்கத்தில் பிடியில் இலக்கானபடி இருக்குமோ? மாதத் திருநாள்களும், நாள் திருநாள்களும் நடந்தபடி உள்ள. (வீற்றிருந்த நங்கள் பிரானுக்கு) - இங்குள்ள தன்னுடைய இருப்பு என்பதை, நமக்கு என்று செய்து வைத்தபடி உள்ள உபகாரகனுக்கு. ஆனால் இங்கே உள்ள இருப்பானது நமக்காக என இருக்குமோ என்பதற்கு விடை தருகிறார்; பரத்வம் என்பது நித்யமுக்தர்களுக்காக ஆகும்; வ்யூஹமானது முக்தரைப் போன்றவர்களுக்காக ஆகும்; விபவம் என்பது புண்ணியம் செய்தவர்களுக்காக ஆகும்; இங்குள்ள இருப்பானது, பாபம் செய்த ஸம்ஸாரிகளுக்காக ஆகும் அல்லவோ? – (என்னெஞ்சம்) - அவனுடைய உபகாரத்தன்மை மற்றும் அழகு போன்றவை வஜ்ரத்தையும் உருக்கவல்ல வஸ்து போன்று உள்ளது. அதாவது “நமக்குள்ள பெண்மையால் நாம் யாருக்கும் வசப்படமாட்டோம்” என்றுள்ள நெஞ்சத்தையும் உருக்குவதாக இந்த இரண்டு தன்மைகளும் உள்ளன. எனது நெஞ்சத்தின் கடினத்தை அறிவர் அல்லவோ? எனது நெஞ்சமும், அவனும் “சுதந்திரமாக உள்ள தன்மை” என்ற ஒரு தன்மையில் ஒன்றாயின. அவனையும், தனது நெஞ்சத்தையும், தனக்கு அடிமையாக உள்ளதாகக் கொள்வதால் “நங்கள் பிரான், என் நெஞ்சம்” என்றாள். அடுத்து, “என் நெஞ்சு” என்பதற்கு, “பகவானிடம் ஈடுபட்ட எனது நெஞ்சம்” என்பதாகப் பொருள் கொண்டு அருளிச்செய்கிறார்; ஸுந்தரகாண்டம் (16-5) - ராகவோர்ஹதி வைதேஹீம் - இராமனுக்குத் தகுந்த வைதேஹி - என்பது போன்று “எனக்கு ஏற்ற” மற்றும் “அவனுக்கு ஏற்ற” எனது நெஞ்சம். அதாவது அடியார்கள் விஷயத்தில் அவன் மிகவும் ப்ரியமாக இருப்பான்; எனது நெஞ்சமானது எனக்கு முன்பாக அவனிடம் சென்றதாக, பகவத் விஷயத்தில் ஈடுபாட்டுடன் உள்ளது; ஆகவே பரஸ்பரம் ஒப்புமை கூறப்பட்டது. – (தோழீ) – மேலே “நெஞ்சத்தின் வன்மை அறிதி” என்ற கூறியதன் கருத்தை உணர்த்துகிறார்; முதல் உறவு செய்தபோது வெட்கம் மற்றும் அடக்கம் ஆகியவற்றைத் தவிர்த்து பொருந்த விட்டவள் நீ அல்லவோ?அப்போது அவற்றைத் தவிர்ப்பதற்கு நீ செய்த பெருமுயற்சிகளை நீ அறிவாய் அல்லவோ? இப்போது நீயும் கூட இந்த நெஞ்சத்திற்கு அவசியம் இல்லை என்று, எதிர்த்தலையாக உள்ள நிலை ஏற்பட்டது. (நாணும் நிறையும் இழந்ததுவே) - இது இழக்காதது ஏதும் உண்டோ? நாணம், அடக்கம், நிறம் போன்ற பலவற்றையும் இழந்தது. அரைக்கணம் அவன் பிரிந்திருந்தபோது இந்த நெஞ்சம் என்னைப் படுத்திய விதங்கள்தான் என்னே! நான் என்னையே இழந்தேன், தாய்மார்களும் தோழிமார்களும் என்னை இழந்தார்கள், எனது நெஞ்சம் நாணத்தையும் அடக்கத்தையும் இழந்தது.