பெரியாழ்வார் திருமொழி - முதல்பத்து (பாசுரம் 16)
முதல்பத்து
இரண்டாம் திருமொழி
விண் கொள் அமரர்கள் * வேதனை தீர * முன் மண் கொள் வசுதேவர் * தம் மகனாய் வந்து ** திண் கொள் அசுரரைத் * தேய வளர்கின்றான் * கண்கள் இருந்த ஆ காணீரே * கன வளையீர் வந்து காணீரே
– ஸ்வர்க்க லோகங்களைத் தங்களது இருப்பிடமாக உடைய இந்த்ரன் முதலான தேவர்களின் துன்பமானது தீரும்படியாக, முன்னரே பூமியை இருப்பிடமாகவுடைய ஸ்ரீவஸுதேவருடைய துன்பம் தீர்க்க, அவருடைய புத்திரனாக வந்து தோன்றி, வலிமை உடைய அஸுரர்கள் அழியும்படியாக திருவாய்ப்பாடியில் வளரும் க்ருஷ்ணனுடைய திருக்கண்களின் அழகினை காணுங்கள். பொன் வளைகளை அணிந்துள்ள பெண்களே நீங்கள் வந்து காணுங்கள்.
திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேச அவதாரிகை - ஸமுதாயசோபையிலே அநுஸந்தித்த திருக்கண்களிலழகு பின்னாட்டுகையாலே மீண்டும் அது தன்னையே அநுபவிக்கிறார். மாமுனிகள் வ்யாக்யான அவதாரிகை - ஸமுதாய சோபையின் நடுவே அநுபவித்த திருக்கண்களினழகு பின்னாட்ட, அத்தை அநுபவிக்கிறார். அதுதன்னில் எல்லாவற்றுக்கும் பின்பநுபவித்தது திருமூக்கினழகிறே. திருமூக்குக்கும் திருக்கண்களுக்கும் ஒரு சேர்த்தியுண்டே; அத்தாலும், பாதாதிகேசமநுபவித்து வருகிற அடைவுக்குச் சேர்ந்ததாகையாலும் திருக்கண்களிலே சுழியாறுபட்டு அநுபவிக்கிறார்.
– திருமுக மண்டலத்தின் மிகுதியான அழகை அனுபவிக்கத் திருக்கண்களின் அழகானது குறைவாக விளங்கியதால், அதனை அனுபவிக்கிறார். ஏன் மீண்டும் அனுபவிக்கிறார்? திருமுகமண்டலம், அதிலும் எல்லாவற்றைக் காட்டிலும் மிகுதியாக அனுபவித்தது திருமூக்கின் அழகினை அல்லவா? திருமூக்கிற்கும் திருக்கண்களுக்கும் ஒரு தொடர்பு உண்டு அல்லவோ? இதனாலும், திருவடிகள் தொடங்கி திருமுடி வரை அனுபவித்து வருகிற முறைக்கு ஏற்றதாகையாலும் திருக்கண்களிலே, நதியில் உண்டாகும் சுழி போன்று ஈடுபட்டு அனுபவிக்கிறார்.
திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேசம் - (விண்கொளித்யாதி) அவதாரங்களுக்கு ஹேது ஸாது பரித்ராணாதிகளிறே. விண்ணைத்தங்களுக்கு வஸ்தவ்ய பூமியாகக் கொண்டிருக்கிற அமரர்களுக்கு வந்த க்லேசம் தீர்க்கும்போது அவர்களடியாக மண்கொள் வசுதேவர்க்கு வந்த க்லேசமும் தீர்க்கவேணுமென்றிறே அவர்க்கு புத்ரனாக முற்பாடு வந்தவரித்தது. அவர்கள் தங்கள் க்லேசம் தீர்த்தாராயிருப்பதும் இவர் க்லேசம் தீர்த்தாலிறே. (திண்கொளித்யாதி) பின்பு திருவாய்ப்பாடியிலே கம்ஸாதிகள் தேய, வளர்ந்தது தன் க்லேசம் தீருகைக்காகவிறே. திண்மையாவது கம்ஸன் முதலானாருடைய ஆஸுரபாவத்தாலும், ஜந்மத்தாலும், வந்த நெஞ்சில் வலி; அதாவது மாதாவென்றும், பிதாவென்றும் ஸ்வஸாவென்றும், பந்துக்களென்றும் பாராமல் கல்லிடை மோதியும், அல்பம் க்ருபை பிறவாத கம்ஸன் முதலான அஸுரர்களை வயிற்றெரி கொளுந்தி க்ஷயிக்கும்படியாகவிறே திருவாய்ப்பாடியிலே போய் வளர்ந்தருளுகிறதும். வளர்கின்றவனுடைய கடாக்ஷந்தான் அநுகூல வர்க்கம் தழைக்கவும் ப்ரதிகூல வர்க்கம் முடியவுமாயிறே யிருப்பது. (கனவளை) ஸ்ப்ருஹாவஹமுமாய் மமதா விசிஷ்டமுமான அநந்யார்ஹ சிந்ஹம். மாமுனிகள் வ்யாக்யானம் - (விண்கொள்) அவதார ப்ரயோஜநம் ஸாது பரித்ராணாதிகளாகையாலே ஸ்வர்க்காதி லோகங்களை இருப்பிடமாகவுடைய இந்த்ராதி தேவர்களுக்கு ஆஸுர ப்ரக்ருதிகளால் வரும் து:க்கம் போம்படியாக முன்னே பூமியை இருப்பிடமாகவுடைய ஸ்ரீவஸுதேவருக்குப் புத்ரனாய் வந்தவதரித்து, தன்னைப் பற்றச் சிறைப்பட்டிருந்த ஸ்ரீவஸுதேவர் து:க்கத்தைத் தீர்த்து, பின்னை தேவர்கள் து:க்கம் தீர்க்கைக்காக முன்னே இங்கே வந்தவதரித்தானாய்த்து. “தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல்” என்னக் கடவதிறே. (திண்கொளித்யாதி) காயபலமும் மநோபலமுமுடையரான அஸுரர்களானவர்கள் க்ஷயித்துச் செல்லும்படியாகத் தான் வளரா நிற்கிறவனுடைய. இவன் கால் நெடுக நெடுக அஸுரவர்கம் க்ஷணமாய் விட்டதிறே. (கண்களித்யாதி) இப்படி அநுகூல ரக்ஷணமும் ப்ரதிகூல நிரஸநமும் பண்ணுமிடத்தில் இவர்கள் தழைக்கவும் அவர்கள் க்ஷயிக்கவும் கடாக்ஷிக்கும் திருக்கண்களினழகிருக்கிறபடியைக் காணுங்கோள்; பொன்னாலே செய்த வளையையுடைய நீங்கள் வந்து காணுங்கோள்.
– (விண்கொள்) - அவதாரங்களுக்குக் காரணம் சாதுக்களை ரக்ஷிப்பதற்கே ஆகும். ஸ்வர்கத்தை தங்களுக்கு இருப்பிடமாகக் கொண்டிருக்கிற இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கு, அசுரக் கூட்டங்களால் வரும் துக்கங்களைப் போக்கடிக்க, முன்னொரு நாள், பூமியை இருப்பிடமாகவுடைய ஸ்ரீவஸுதேவருக்குப் பிள்ளையாய் வந்து அவதரித்தான். ஆனால், தேவர்களின் துக்கம் தீர்க்க அவதரித்துள்ளானா என்றால் இல்லை. தன்னைக் கைப்பற்ற, கம்ஸன் ஸ்ரீவஸுதேவரைச் சிறை வைத்ததால், பெரியதிருமொழி (8-5-1) - தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் - என்பதற்கு ஏற்ப, தனது தந்தையின் துக்கத்தைத் தீர்க்கவே அவதரித்தான். இப்படியாக ஸ்ரீவஸுதேவருடைய துக்கம் தீர தேவர்களுடைய துன்பமும் தீர்ந்தது. (திண்கொள்) - அசுர பாவத்தாலும், ஜன்மத்தாலும் ஏற்பட்ட உடல் மற்றும் மனவலிமை மிக்க, அசுரக்கூட்டங்கள். அதாவது தாய் என்றும், தந்தை என்றும், ஸ்வஸா என்றும், பந்துக்கள் என்றும் பாராது, கல்லில் மோதியும், தயையானது சிறிதும் இல்லாத கம்ஸன் முதலான அசுரக்கூட்டங்கள் துன்பப்பட்டு தேயும்விதமாக திருவாய்ப்பாடியில் சென்று கால் உயர உயர வளர்கின்றதும், இப்படி அடியார் கூட்டங்கள் தழைக்கவும் அசுரக்கூட்டங்கள் அழியவும் கடாக்ஷிக்கும் திருக்கண்களின் அழகினை வந்து காணுங்கள். விரும்பத்தக்கதும், ஸர்வேச்வரன் “என்னுடையது” என்று உரிமைக் கொண்டாடப்படுவதும், பிறருக்கு உரிமையில்லாததும் ஆகிய ஆத்ம ஸ்வரூபத்தின் அடையாளமாக உள்ள பொன்னால் ஆகிய வளைகளை அணிந்த பெண்களே, நீங்கள் வந்து காணுங்கள்.