திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 2)
ஏழாம்பத்து
மூன்றாம் திருவாய்மொழி
நானக் கருங்குழல் தோழிமீர்காள்! * அன்னையர்காள்! அயல் சேரியீர்காள்! * நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன் * என் வசம் அன்று இது இராப் பகல் போய் ** தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ் * தென் திருப்பேரெயில் வீற்றிருந்த * வானப்பிரான் மணிவண்ணன் கண்ணன் * செங்கனி வாயின் திறத்ததுவே
– நானம் என்றால் நறுமணம். பரிமளம் அடங்கிய நறுமணம் பொருந்திய கருத்த கூந்தலைக் கொண்ட தோழிகளே! அவர்களுடன் என்னுடன் எந்த வேறுபாடும் இன்றி அடக்கியபடி உள்ள தாய்மார்களே! மிகுந்த ஈடுபாடு கொண்ட நான், என்னைக் காட்டிலும் அதிகமான ஈடுபாடு கொண்டதும், சுதந்திரமானதும் ஆகிய இந்த நெஞ்சத்தை, என்னை விட்டுச் செல்லாமல் காக்கமாட்டேன்; இது எனது கட்டுப்பாட்டில் இல்லை. இந்த நெஞ்சம் செய்வது என்ன? இரவு-பகல் என்ற வேறுபாடு ஆராயாமல் என்னை விட்டு அகன்று சென்று, வண்டுகள் மொய்த்தபடி உள்ள பூம்பொழில்கள் உடையதாகவும், குளிர்ந்த நீர்நிலங்கள் சூழ்ந்ததாகவும் உள்ள தென்திருப்பேரெயில் நகரில், தனது மேன்மைகள் அனைத்தும் வெளிப்படும்படியாக வீற்றுள்ளவனும், பரமபதத்தின் மேன்மை கொண்ட பிரானும், ஒளி வீசும் மாணிக்கம் போன்ற வடிவம் கொண்டவனும் ஆகிய க்ருஷ்ணனுடைய, சிவந்த பழம் போன்றுள்ள அதரத்தின் அழகில் மயங்கி நிற்கிறது.
தாய்மார் முகம்பார்த்துச் சொன்னாளாயிறே கீழிற்பாட்டில் நின்றது. “இவள் இவ்வளவில் மீளுமவளன்றிக்கே யிருந்தாள்” என்று தாய்மாரோடு தோழிமாரோடு அயற்சேரியுள்ளாரோடு வாசியற வந்து திரண்டு ஹிதஞ் சொல்லப் புக்கார்கள். “உங்கள் ஹித வசநங் கேளாதபடி நிரவதிகமான பரத்வ ஸௌலப்யங்களை யுடையவன் பக்கலிலே ஸக்தமாய்ப் போன என்னெஞ்சைத் தகையமாட்டுகிறிலேன்; என்னெஞ்சைக் கடல் கொண்டது காணுங்கோள்” என்கிறாள்.
தாய்மார்கள் முகம் நோக்கிக் கூறியதாக அல்லவோ கடந்த பாசுரம் நின்றது? “இவள் அந்த விஷயத்திலிருந்து மீளமாட்டாள்” என்று தாய்மார்கள், தோழிமார்கள், மற்ற ஊரில் உள்ளவர்கள் என்னும் பலரும் வந்து திரண்டு இவளுக்கு நன்மை கூற முயன்றனர். இதற்கு இவள், “உங்களுடைய நன்மையை அளிக்கவல்ல சொற்களைக் கேட்காதபடி, அளவற்ற பரத்வ ஸௌலப்யம் குணங்களைக் கொண்ட அவன் பக்கம் எனது நெஞ்சம் சென்று விட்டது. அதனை நான் தடுக்கமாட்டேன். எனது நெஞ்சத்தை கடல் கொண்டது” என்கிறாள்.
– (நானக் கருங்குழல் தோழிமீர்காள்) நானம் நறுநாற்றம். அவர்களுக்கு ஒரு பழி சொல்லுமாப்போலே சொல்லுகிறாள். அவர்கள் தலையான நறுநாற்றத்துடனே வந்து நிற்கையாலே. மயிர்பட மாந்தும்படியிறே இவள்படி. உங்கள் ஸந்நிதியில்லையாகில் நான் இங்கே இரேனோ? “மை வண்ண நறுக்குஞ்சி”க்கு ஸ்மாரகமாயிரா நின்றதே இவர்கள் குழல். “ஏகம் து:கம் ஸுகஞ்சநௌ” என்று இவளுடைய ஸுகது:கங்களே தங்களுக்கும் ஹுகது:கமாம்படி இருக்கையிறே தோழிமாராகையாவது? இவன் மயிர்முடி பேணாதே, பரிமளங் காணில் முடியும்படியாயிருக்க, இவர்கள் குழல் பேணிப் பரிமளங் கொண்டு காரியங் கொள்ளப்போருமோ? என்னில், கலவியில் இவளோடு அவன் நெருங்க நெருங்கச் சாத்திக் கழித்தபடியே ஸர்வஸ்வதாநம் பண்ணுவது இவர்களுக்கே. அப்போது அவன் பண்ணின ப்ரஸாதாதிசயத்தாலே, அது சருகானாலும் அவர்கள் மாறாதே வைத்துக் கொண்டிருப்பர்களே! அது இவளுக்கு ஸ்மாரகமாய் நலிகிறபடி. அன்றிக்கே, இவர்கள்தான் பரிமளங் கொண்டு கார்யக்கொள்ளவும் வல்லவர்கள். அதாவது தாங்கள் தளர்த்துகாட்டில் இவள் மிகவும் தளரும் என்று ஒப்பித்துக் கொண்டிருப்பர்கள். தந்தாமுடைய பொறாமையும் பாரார்களாயிற்று, இவளை யுஜ்ஜீவிப்பிக்கைக்காக. அகாரவாச்யனான அவனும் ஜீவித்து, மகாரவாச்யனான இவனும் ஜீவித்து, அநாதிகாலம் போரச் செய்தேயும், உஜ்ஜீவிக்கப் பெறாதே நடுவே கிடந்து போயிற்றே. இனி, கடக க்ருத்யமிறே உஜ்ஜீவிப்பிக்கை; அப்படியே இவளை இசைவித்து உஜ்ஜீவிப்பிக்கவேணுமே. தந்தாம் க்லேசங்கள் பாரார்களிறே “சேஷிக்கதிசயம் வேணும்” என்றிருப்பார்; பெருமாளிலும் க்லேசம் விஞ்சியிருக்கச் செய்தே பெருமாளுடைய ரக்ஷணத்துக்காக இளையபெருமான் தம்மைப் பேணிக் கொண்டு தரித்திருக்குமாப்போலே. பரமபோகிகளிறே இளையபெருமாள் தாம். (ஸௌமித்ரே பச்ய பம்பாயா:) அங்குத்தை போக்யதை நெஞ்சிலே படச்செய்தேயும், பெருமாளுக்கு அந்யபரதை விளைக்கைக்காக முகத்தை மாற வைத்துக்கொண்டு நின்றார்; “பிள்ளாய், பாராய் இது இருந்தபடி!” என்கிறார். (நானக் கருங்குழல்) ஒரு தமிழன் “நானமென்று குழலுக்கு விசேஷணமாகையாலே, நாவி போன்ற குழல்” என்றான். அத்தால் நினைக்கிறதும் பரிமளத்தை. (தோழிமீர்காள்) ப்ரியஞ் சொல்லுவாரும் ஹிதஞ்சொல்வார் கோடியிலே புகுவதே! (தோழிமீர்காள் அன்னையர்காள் அயற்சேரியீர்காள்) தான் அறிந்து தோழிமாருக்குச் சொல்லாதேவிருப்பதோர் அவஸ்த்தையையும், தோழிமாரும் தானும் அறிந்து தாய் அறியாதேவிருப்பதோர் அவஸ்த்தையும், தானும் தோழியும் தாயுமறிந்து பிறரறியாதிருப்பதோர் அவஸ்த்தையுமயாயிற்று இருப்பது; அந்நிலை குலைந்து எல்லாரையுமொக்க ஸம்போதிக்கும்படியாயிற்று ஜகத் ப்ரஸித்தமானபடி. பிறர்க்குச் சொல்ல வேண்டுவதில்லையிறே, ஆயிருக்க, ப்ரதிகூலர்க்குங் கூட தயை பண்ணவேண்டும்படி காணும் இவளுடைய ஆர்த்தி. “மாம் ஸமாநாய து:கிதாம்” என்று, “என்னை நீ பெருமாளுடனே கூட்டவல்லையே” என்றாளிறே ராவணனை. “ததா குரு தயாம் மயி” என்றும், “வாசா தர்மமவாப்நுஹி” என்றும் ஒரு திருவடி போல்வார்க்குச் சொல்லக் கடவ வார்த்தையையிறே, பிரித்தவனைப் பார்த்துச் சொல்லிற்று. (தோழிமீர்காள் இத்யாதி) எங்ஙனே நான் உகந்தது உகந்திகோள்! எங்ஙனே எனக்கு ப்ரியஹிதம் பார்த்திகோள்! எங்ஙனே யுதாஸீநைகளாயிருந்திகோள்! “எங்கள் பக்கம் குறையுண்டோ? மர்யாதை தப்பினவாறே நாங்களும் முறை தப்பினோமித்தனை யன்றோ?” என்ன, (நான் இத்தனி நெஞ்சம் காக்கமாட்டேன்) உங்களுக்கும் ஏதேனும் இங்ஙனே இருப்பதொரு ஹேதுவுண்டோ முறை தப்புகைக்கு? (நான்) நீங்களும் ஏதேனும் நெஞ்சு இழந்திகோளோ? உங்களளவல்லவென்றபடி. (இத்தனி நெஞ்சம்) உங்களில் நான் வ்யாவ்ருத்தையானாப் போலேயாயிற்று, என்னிலும் என் நெஞ்சு வ்யாவுருத்தமானபடி. (தனி நெஞ்சம்) சொல்லிற்றுக் கேளாத வ்வதந்திரமான நெஞ்சம். “தத் தஸ்ய ஸத்ருசம்பவேத்” என்றிருப்பார் நெஞ்சமும் இதுக்கு ஒப்பல்ல. (காக்கமாட்டேன்) “முந்துற்ற நெஞ்சேயியற்றுவா யெம்மோடு நீ கூடி” என்றிருக்கு மித்தனை யொழிய, இவளால் தடுத்து வைக்கப் போகாதே. “குரவ: கிம் கரிஷ்யந்தி” என்று ஒருவரையும் பாராதே போகாநின்றது; ஒன்று கேட்டு மீளுமளவல்ல. மீட்கலாமளவும் காற்கட்டிப் பார்த்து போகாமையாலே கைவாங்கினமை தோற்றுகிறதுகாணும் “மாட்டேன்” என்கிற வுறைப்பாலே. ஸம்ஸாரிகள் சப்தாதி விஷயங்களினின்றும் மீளமாட்டாதாப்போலேயிறே இவர் பகவத் விஷயத்தினின்றும் மீளமாட்டாதபடி. “மாட்டேன் என்று சொல்லுமிது வார்த்தையோ? எல்லாவளவிலும் தந்தாம் நெஞ்சு தந்தாமுக்கு விதேயமாக வேண்டாவோ?” என்னில், (என் வசமன்றிது) என் செய்வோம், தாய் வேறு கன்று வேறாக்கும் விஷயமானால்? கைகேயி சொற்கேட்டு ஸ்ரீபரதாழ்வான் ராஜ்யம் பண்ணுமன்றாயிற்று இவளும் இத்தாயார் வார்த்தை கேட்டு மீளுவது. இப்போது நான் உங்கள் மகளன்றோ? என்னைப் போலுமன்றே என்னெஞ்சு. எனக்குத் தானென்றிருக்குங் நிலை குலைந்தது. தன் வழியே நானொழுகும்படியாயிற்று. தந்தாமுடைய நெஞ்சு அபவ்யமானனும், பவ்யமாயிருப்பதொருபோது பார்த்து ஹிதஞ் சொல்லவேண்டாவோ? என்ன, (இராப்பகல் போய்) ஸ்ருஷ்டமான காலத்திலே இதுக்கு ஹிதம் சொல்லலாவது ஒருபோது காண்கிறிலேன். ஒருபோது பகவத் விஷயத்திலும் கைவைத்து, ஒருபோது ஸம்ஸார யாத்ரையிலும் கை வைக்குமளவல்லவிறே இவளுடைய ப்ராவண்யம். இங்கேயிருப்பது ஒரு போதுண்டாகிலிறே ஒன்று சொல்லி மீட்கலாவது? (தேன் மொய்த்த இத்யாதி) இது மீட்கலாம் விஷயத்திலேயோ அகப்பட்டது. அவ்வூரில் போக்யதையிலே படிந்தாரையும் மீட்கப்போமோ? தேன் என்று வண்டு. (பூம்பொழிலித்யாதி) பூத்த பொழிலையும் குளிர்ந்த நீர் நிலங்களையுமுடைத்தான தென் திருப்பேரையில். (வீற்றிருந்த) பரமபதத்தில் இருப்படங்கலும் தோற்றும்படியிருக்கை. அவ்விடம் போலுமன்றிறே இவ்விடம்? ஒருவர் கூறை எழுவர் உடுக்கிறவிடமிறே; அவ்விடத்தோடொக்க இவ்விடத்தையும் திருத்திக் கொண்டிருக்கிறவிடமிறே. (வானப்பிரான்) இத்தால் கண்ணழிவற்ற மேன்மையைச் சொல்லுகிறது. (தென்திருப்பேரெயில் விற்றிருந்த வானப்பிரான்) ஸ்ரீவைகுண்டத்தி லிருப்பை நமக்காக இங்கேயிருக்கிற உபகாரகன். (மணிவண்ணன்) மேன்மையில்லை யாகிலும் விடவொண்ணாத வடிவிற் பசையிருக்கிறபடி, (கண்ணன்) அங்குள்ளார்க்குப் படிவிடும் உடம்பை இங்குள்ளார்க்கு வரையாதே கொடுத்துக் கொண்டிருக்கிறவன். (வானப்பிரானித்யாதி) மேன்மையளவிடவோ? வடிவழகளவிடவோ? (செங்கனி வாயின் திறத்ததுவே) கிண்ணகத்தில் ஒரு சுழியிலே யகப்படுவாரைப் போலே, வாய்க்கரையிலே யகப்பட்டது; ஆசைப்பட்ட விஷயத்தைக் கரைகண்டதாகிலன்றோ மீளுவது? வெந்து கனிந்த திருப்பவளத்தினிடையாட்டத்தது. இது மீள நினைக்கிலன்றோ உங்கள் வார்த்தை கேட்கைக்கு அவகாசமுள்ளது.
– (நானக் கருங்குழல் தோழிமீர்காள்) - நானம் என்பது நறுமணம். நறுமணம் வீசும் கறுத்த கூந்தல் கொன்ட தோழிமார்களே! அவர்களுக்கு ஒரு பழிச்சொல்லைக் கூறுவது போன்று உரைக்கிறாள்; அதாவது அவர்கள் தலையான நறுமணம் கொண்டபடி வந்து நிற்பதைக் கூறுகிறாள்; இவர்களுடைய நறுமணத்துடன் கூடிய கறுத்த கூந்தலானது, அவனுடைய நறுமணம் பொருந்திய கறுத்த கேசத்தை இவளுக்கு ஞாபகப்படுத்துகிறது; இதனால் துன்பம் ஏற்படுகிறது. மாந்துதல் என்றால் நசித்தல் அல்லது தளர்தல். நீங்கள் இங்கு எனது அருகில் இல்லையென்றால் நான் இங்கு இருக்க மாட்டேனோ? அவர்கள் இவள் அருகில் உள்ளது என்பது இவளுக்கு எப்படிப் பாதகம் என்பதைக் கூறுகிறார்; திருநெடுந்தாண்டகம் (21) – மைவண்ண நறுங்குஞ்சி - என்பதற்கு ஏற்ப அத்தகைய சேர்க்கை இவளுக்கு ஞாபகப்படுத்துவதாக இவர்களுடைய கூந்தல் உள்ளது. கிஷ்கிந்தாகாண்டம் (5-18) - ஏகம் து:கம் ஸுகஞ்சநௌ - நம் இருவருக்கும் துக்கமும் ஸுகமும் ஒன்றே - என்று கூறுவதற்கு ஏற்ப இவளுடைய இன்பதுன்பங்களே தங்களுக்கும் இன்பதுன்பங்களாக இருக்கும்படி உள்ளவர்களே உண்மையான தோழிமார்கள் ஆகிறார்கள் அல்லவோ? இவள் தனது கூந்தலைச் சரியாகப் பேணாமல், பரிமளம் கண்டவுடனேயே முடிந்த போகும்படியாக உள்ளபோது, இவர்கள் தங்களுடைய கூந்தலை நன்கு பேணியபடி, பரிமளம் கொண்டு அலங்கரிக்க முடியுமோ? இதற்குச் சமாதானம் கூறுகிறார்; இதற்கு முன்னர், அவனுடைய கேசத்தை இவர்களுடைய கூந்தல் ஒத்திருந்த காரணத்தால், நினைவுபடுத்துவதாக இருந்து துன்பம் அளிப்பதாகக் கூறினாள். இங்கு, இவர்களுடைய கூந்தலானது அவனுடன் ஸம்பந்தம் கொண்டுள்ளதால் இவ்விதம் துன்பம் ஏற்படுத்துவதாகக் கூறுகிறாள்; அதாவது, அவன் இவளுடன் சேர்கிறான்; அப்போது அவன் நெருங்க நெருங்க, தான் அணிந்திருந்த அனைத்தையும் கழற்றிக் களைந்து அளித்தது இந்தத் தோழிமார்களிடமே ஆகும்; அப்போது அவனுடைய க்ருபை காரணமாக, அவன் அளித்த அந்தப் பொருள்கள் சருகாக இருந்தாலும், அவற்றைத் தாங்கள் அணிந்தனர்; அத்தகைய ஞாபகம் இவளைத் துன்புறுத்துகிறது. இவள் இவ்விதம் தளர்ந்து நிற்கும்போது அவர்கள் ஒப்பனை செய்து கொள்வார்களோ என்பதற்கு விடை தருகிறார்; இவர்கள் பரிமளம் மூலம் தங்கள் செயலைச் செய்து கொள்ள வல்லவர்கள்; அதாவது, தாங்கள் தளர்வுடன் இருப்பதைக் காண்பித்துக் கொண்டால், அதனைக் கண்டு இவள் மிகவும் தளர்ந்து போவாள் என்று கருதி, தாங்கள் தங்களை நன்கு ஒப்பனை செய்து கொள்பவர்கள். தங்களுடைய பிரிவாற்றாமை என்பதான நிலையையும் மீறி, இவளைப் பிழைக்கும்படிச் செய்யவல்லவர்கள். – “இவர்களால்தான் அவள் பிழைத்துக் கொள்ளவேண்டுமோ? தானே பிழைக்க இயலாதோ?”, என்பதற்கு விடை தருகிறார்; “ஆசார்யன் இல்லையென்றால் கரையேற வழி உண்டோ?”, என்பதன் மூலம் சமாதானம் கூறுகிறார்; அகாரம் மூலம் கூறப்படும் அவனும், மகாரம் மூலம் கூறப்படும் இவனும் பல காலம் ஜீவித்தபடி உள்ளபோதிலும், கரையேற இயலாமல் ஸம்ஸாரத்தில் உழல்வதாகவே உள்ளதல்லவோ? இவ்விதம் உள்ளபோது இவளை அவனிடம் கொண்டு சேர்ப்பவர்களுடைய செயலாக அல்லவோ இவளைப் பிழைக்க வைக்கும் செயல் உள்ளது? அது போன்றே இவளையும் தங்கள் வழிக்குக் கொண்டு வந்து பிழைக்குபடிச் செய்யவேண்டும். “தங்களுடைய பிரிவாற்றாமை என்பதையும் கூடப் பொருட்படுத்தமாட்டனர்” என்பதை விளக்குகிறார்; தங்களுடைய எஜமானனுக்கு ஒரு மேன்மையை ஏற்படு்த்தவேண்டும் என்று எண்ணுபவர்கள், தங்கள் தங்கள் துக்கத்தைப் பார்க்கமாட்டார்கள் அல்லவோ? இதற்கு ஒரு உதாரணம் கூறுகிறார்; இராமனைக் காப்பதற்காக லக்ஷ்மணன் தன்னைப் பேணிப் பாதுகாத்துக் கொன்டு உயிர் தாங்கினான் என்பது போன்று இங்கும் கொள்க; இதனை மேலும் விளக்குகிறார்; லக்ஷ்மணன் மிகவும் இன்பத்துடன் வாழ்ந்தான்; இதற்கு ப்ரமாணம் கிஷ்கிந்தாகாண்டம் (1-60) - ஸௌமித்ரே பச்ய பம்பாயா: - பம்பையின் இனிமை நெஞ்சத்தில் பட்டபோதிலும், இராமனுக்கு வேறு ஒன்றில் எண்ணம் மாறி ஸீதையைக் குறித்த கவலை மாறவேண்டும் என்பதற்காக, தனது முகத்தை மாற்றாமல் நின்றான்; அப்போது இராமன் கிஷ்கிந்தாகாண்டம் (1-60) - ஸௌமித்ரே பச்ய பம்பாயா: - லக்ஷ்மணா! இந்தப் பம்பையைப் பார்ப்பாயாக - என்றான். (நானக் கருங்குழல்) - ஒரு தமிழ்ப் புலவன், “நானமென்று குழலுக்கு விசேஷணமாகையாலே, நாவி போன்ற குழல்” என்றான்; இதன் மூலம் நினைக்கப்படுவதும் நறுமணமே ஆகும். – (தோழிமீர்காள்) - எனக்கு விருப்பமானவற்றைக் கூறுபவர்களும் கூட எனக்கு “நன்மையைக் கூறுகிறோம்” என்றுள்ளவர்களுடைய கூட்டத்தில் சேர்ந்தனரே! (தோழிமீர்காள் அன்னையர்காள் அயற்சேரியீர்காள்) - பொதுவாக உலகில் தான் ஒரு விஷயத்தை அறிந்து அதனைத் தோழிமார்களுக்கும் கூட அறிவிக்காமல் உள்ள நிலை, தோழிமாரும் தானும் அறிந்து அதனைத் தாய்மாருக்கு அறிவிக்காமல் உள்ள நிலை மற்றும் தானும் தோழியும் தாய்மாரும் அறிந்து அதனை மற்றவர்களுக்குக் கூறாமல் உள்ள நிலை என மூன்று நிலைகள், அனைவரையும் இவ்விதம் ஒன்றாக அழைக்கும்படி ஆயிற்று; காரணம், எனது விஷயம் அனைவரும் அறிந்த ஒன்றாக ஆயிற்று என்பதால் ஆகும். ஆனால் அடுத்த ஊரில் உள்ளவர்களுக்கு ஏன் கூறவேண்டும் என்பதற்கு விடை தருகிறார்; மற்றவர்களுக்குக் கூறவேண்டிய அவசியம் இல்லை அல்லவோ எனலாம்; ஆயினும், இவளுடைய விரோதிகளுக்குக் கூட இவள் விஷயத்தில் கருணை காண்பிக்கும்படியாக இவளுடைய துன்பமான நிலை உள்ளது. இவ்விதம் கூறியவர்கள் உள்ளனரோ? இதற்கு விடை தருகிறார்; ஸுந்தரகாண்டம் (21-18) - மாம் ஸமாநாய து:கிதாம் - துக்கம் அடைந்துள்ள என்னை இராமனுடன் சேர்ப்பாயாக - என்று “என்னை நீ இராமனிடம் சேர்த்து வைப்பாயாக” என இராவணனிடமே கூறும் நிலை ஸீதைக்கு வந்தது. இதன் மூலம் “பகைவர்களுக்கும் கூட அருள் செய்யவேண்டும்” என்ற நிலை வெளிப்பட்டதோ என்பதற்கு பதில் கூறுகிறார்; ஸுந்தரகாண்டத்தில் - ததா குரு தயாம் மயி - அது போன்றே எனது விஷயத்தில் அருள் செய்வாயாக - என்றும், ஸுந்தரகாண்டத்தில் - வாசா தர்மமவாப்நுஹி - வாக்கு மூலம் தர்மம் அடைவாய் - என்றும் உள்ள சொற்களானவை, அனுமன் போன்றவர்களிடம் கூறவேண்டியதாக உள்ளபோதிலும், இங்கு ஸீதை, தன்னை இராமனிடமிருந்து பிரித்தவனிடம் கூறுகிறாள். – (தோழிமீர்காள் இத்யாதி) - தோழிமார்கள், தாய்மார்கள் மற்றும் மற்ற ஊரில் உள்ளவர்கள் என முவரையும் அழைப்பதன் கருத்தைக் கூறுகிறார்; தோழிகளே! நான் உகந்ததை நீங்கள் எப்படி உகந்தீர்கள்? அன்னைமார்களே! எனக்கு ப்ரியமான நன்மையை நீங்கள் எப்படி அறிந்தீர்கள்? மற்ற ஊரில் உள்ளவர்களே! எப்படி உதாஸீனர்களாக உள்ளீர்கள்? இதனைக் கேட்ட அவர்கள், “எங்களிடம் ஏதேனும் குறை உள்ளதோ? நீ உனக்கான மரியாதைக் குலைத்த காரணத்தால்தான் நாங்களும் முறை தவற வேண்டியதாக இருந்தது”, என்றனர். இதற்கு இவள் விடை தருகிறாள். (நான் இத்தனி நெஞ்சம் காக்கமாட்டேன்) - உங்களுக்கும் இப்படி முறை தவறுவதற்கு ஏதேனும் ஒரு காரணம் உள்ளதோ? (நான்) - நீங்களும் என்னைப் போன்றே உங்களுடைய நெஞ்சத்தை இழந்தீர்களா? உங்கள் அளவு அல்ல எனது நிலை. (இத்தனி நெஞ்சம்) - உங்களுடைய சிந்தனை போன்றவற்றிலிருந்து நான் வேறுபட்டவளாக உள்ளதைப் போன்று, எனது நெஞ்சமும் என்னிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. (தனி நெஞ்சம்) - யார் சொல்வதையும், நான் சொல்வது உட்பட, எதனையும் கேட்காத சுதந்திரமாக உள்ள நெஞ்சம். “இத்தனி” என்பதில் உள்ள “இ” என்ற சுட்டு எழுத்தைப் போன்று கூறுகிறார்; ஸுந்தரகாண்டம் (29-30) - தத் தஸ்ய ஸத்ருசம்பவேத் - அந்தச் செயல் அவருக்குத் தகுதியானதாகும் - என்று உறுதியுடன் உள்ள ஸீதையின் நெஞ்சமும் கூட எனது இந்த நெஞ்சத்திற்கு ஒப்பானது அல்ல. – (காக்கமாட்டேன்) – பெரியதிருவந்தாதி (1) - முந்துற்ற நெஞ்சேயியற்றுவா யெம்மோடு நீ கூடி - எனக்கு முன்பாக அவனிடம் சென்ற எனது நெஞ்சமே! உனக்கு பின்பாக வரும் எனது விருப்பத்தை நிறைவேற்றுவாயாக - என்று வேண்டுவது அல்லாமல், இவளால் அதனைத் தடுக்க இயலாது. “செல்லாதே” என்று கூறுகிறாளே தவிர, அதனை ஏன் தடுக்க முயலவில்லை என்பதற்கு விடை தருகிறார்; ஸ்ரீவிபு. (5-18-22) - குரவ: கிம் கரிஷ்யந்தி - தாய்தந்தையர் என்ன செய்வார்கள் - என்பதற்கு ஏற்ப, எனது நெஞ்சமானது ஒருவரையும் குறித்து ஆராயாமல் சென்றது; எதனையும் கேட்டு மீண்டு வரும்படியாக உள்ளதாக இல்லை; அதனை மீண்டும் இங்கு வரும்படிச் செய்யலாம் என்பதற்கான பல முயற்சிகளையும் எடுத்து, அது இயலாமல் கைவிட்ட நிலை வெளிப்படுகிறது; இது “மாட்டேன்” என்ற உறுதியால் வெளிப்பட்டது. ஸம்ஸாரிகளை உலக விஷயங்களிலிருந்து மீட்க இயலாதது போன்று இவர் பகவத் விஷயத்திலிருந்து மீள இயலாதபடி உள்ளார். இதனைக் கேட்ட தாய்மார்கள், “மாட்டேன் என்று கூறலாமா? அனைத்து நிலைகளிலும் அவரவர்கள் நெஞ்சம் அவரவர்களுக்கு அடிபணிந்து நிற்க வேண்டாமா?”, என்றனர். இதற்கு விடை தருகிறாள்; (என் வசமன்றிது) - தாய்ப்பசு நிலையில் தலைமகள் மற்றும் கன்று நிலையில் அவளுடைய மனம் என்று வைத்துக் கூறுகிறாள்; தாய் வேறு மற்றும் கன்று வேறு என்றாக்கவல்ல விஷயம் என்னும்போது என்ன செய்யமுடியும்? இதற்கு ஓர் உதாரணம் கூறுகிறார்; கைகேயியின் சொற்கள் கேட்டு, அதன்படி பரதாழ்வான் அரசபதவியை ஏற்றால் அல்லவோ இவளும் தனது திருத்தாயார் சொற்கள் கேட்டு மீண்டும் வருவாள்? இப்போது நான் உங்கள் மகள் அல்லவோ? என்னைப் போன்று எனது நெஞ்சம் இருப்பதில்லை; எனக்கு மட்டுமே எனது நெஞ்சம் என்று உள்ள நிலை குலைந்தது; அது தன் வழியே செல்ல, நான் அதன் வழியே செல்லும்படி ஆயிற்று. – இதனைக் கேட்ட தாய்மார்கள், “தங்கள் தங்கள் நெஞ்சமானது அவரவர்களுக்கு பவ்யமாக இல்லை என்றாலும், அது எந்த நேரத்தில் பவ்யமாக உள்ளதோ அப்போது நன்மை கூறவேண்டாமோ?”, என்றனர்; இதற்கு விடை தருகிறாள்; (இராப்பகல் போய்) - ஸ்ருஷ்டி ஏற்பட்ட காலம் தொடங்கி இதற்கு இவ்விதம் நன்மை கூற எந்த ஒரு காலத்தையும் காண இயலவில்லை. வேறு எந்த ஒரு காலமும் நன்மை கூறுவதற்கு அமையாமல் உள்ளதன் காரணம் கூறுகிறார்; இவளுடைய ஈடுபாடு என்பது, ஒரு காலகட்டத்தில் பகவத் விஷயத்தில் நிலைத்தல் மற்றும் வேறு ஒரு காலக்கட்டதில் ஸம்ஸார விஷயத்தில் நிலைத்தல் என்பதாக இல்லையே! இவளுடைய நெஞ்சமானது ஏதோ ஒரு காலகட்டத்தில் இங்குள்ள விஷயத்தில் நின்றால் அல்லவோ அதற்கு நன்மை கூறி மீட்க இயலும்? (தேன் மொய்த்த இத்யாதி) - இந்த நெஞ்சமானது மீட்டு எடுக்கவல்ல ஒரு விஷயத்திலோ சென்று அகப்பட்டது? அந்த ஊரின் இனிமையில் படிந்து நிற்பவர்களை மீட்க இயலுமோ? தேன் என்று வண்டைக் குறிப்பதாகும். – (பூம்பொழிலித்யாதி) - நன்கு பூத்த பொழிலையும், குளிர்ந்த நீர் நிலைகளையும் கொண்ட தென்திருப்பேரையில். (வீற்றிருந்த) - பரமபதத்தின் இருப்பு முழுவதும் வெளிப்படும்படியாக உள்ள இடம். பரமபத்தைக் காட்டிலும் இங்கு இருப்பதற்கான ஆழ்ந்த ஈடுபாட்டையும், அதன் காரணத்தையும் கூறுகிறார். பரமபதம் போன்றது அல்ல இந்த இடம்; ஒருவர் கூறை எழுவர் உடுத்திக் கொள்ளும்படியாக உள்ள இடம் அல்லவா? அங்கு போன்று இங்கும் திருத்தியபடி உள்ளான். (வானப்பிரான்) - குறைவற்ற மேன்மை கூறப்பட்டது. (தென்திருப்பேரெயில் விற்றிருந்த வானப்பிரான்) - ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தனது இருப்பை இங்கு வந்து நமக்காக வெளிப்படுத்தியபடி உள்ள உபகாரகன். (மணிவண்ணன்) - மேன்மை இல்லை என்பதாக இருந்தாலும், விட இயலாதபடியான வடிவழகு கொண்டவன். (கண்ணன்) - அங்குள்ளவர்களுக்குத் தனது திருமேனி அழகை பிரித்துக் கொடுப்பது போன்று அல்லாமல் இங்குள்ளவர்களுக்கு முழுவதுமாக அப்படியே தருபவன். (வானப்பிரானித்யாதி) - மேன்மையை அளவிட வேண்டுமோ? வடிவழகை அளவிட வேண்டுமோ? நீர்மையை அளவிடவேண்டுமோ? (செங்கனி வாயின் திறத்ததுவே) - பெரும் ஆற்றின் வெள்ளத்தில் உள்ள ஒரு சுழியில் அகப்பட்டவர் போன்று இவனுடைய சிவந்த உதடுகளிலும் வாயிலும் அகப்பட்ட நிலை. விரும்பிய விஷயத்தின் எல்லையைக் கண்ட பின்னர் அல்லவோ அதிலிருந்து மீள இயலும்? சிவந்து கனிந்த திருப்பவளத்தின் செயல்பாடு இப்படியாக உள்ளது; இதிலிருந்து மீள எண்ணினால் அல்லவோ உங்கள் சொற்களைக் கேட்கும் நேரம் ஏற்படும்?