திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 1)
ஏழாம்பத்து
மூன்றாம் திருவாய்மொழி
வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தித் * தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே * புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர் * என் சொல்லிச் சொல்லுகேன்? அன்னைமீர்காள்! ** வெள்ளச் சுகம் அவன் வீற்றிருந்த * வேத ஒலியும் விழா ஒலியும் * பிள்ளைக் குழா விளையாட்டு ஒலியும் அறாத் * திருப்பேரெயில் சேர்வன் நானே!
– சொல்லாலும் மனத்தாலும் விளக்க இயலாதபடியாக எனது உள்ளத்தில் ஓடுகிற மாற்றங்களை அறியாமல், “இவளைப் பெற்றவர்கள் அல்லவோ நாம்” என்று என்னை விலக்க முற்படுபவர்களே! நான் விரும்பியபடியே வெண்மையான நிறத்தையும், சுரியையும் கொண்ட ஸ்ரீபாஞ்சஜந்யத்துடன் திருவாழியையும் எந்தியபடி, நான் தளரும்படியாக என்னை மற்றவர்களுக்கு என இல்லாமல் தனக்கு மட்டுமே என்று செய்த, தாமரை போன்ற திருக்கண்கள் கொண்டவன், நான் மட்டுமே அல்லாமல் தனது அனைத்து விபூதிகளும் உள்ளே புகுந்தாலும் இடம் உள்ள எனது நெஞ்சத்தின் உள்ளே, கருடனைத் தனது விருப்பமான முறையில் நடத்தும் விதத்தை நீங்கள் அறியமாட்டீர்கள்! இந்த அனுபவத்தை நான் என்ன சொற்கள் கொண்டு கூறுவேன்? இப்படிப்பட்ட பகவத் அனுபவம் என்பதால் அளவிட முடியாதபடியான இன்பம் என்ற ஸமுத்திரம் கொண்டதாகவும்; எனது நெஞ்சத்தில் எப்போதும் ப்ரகாசித்தபடி உள்ள அவன் தனது மேன்மை வெளிப்படும்படியாக உள்ள இடமாக உள்ள்ளதாவும்; அந்த அழகான வீற்றிருந்தல் என்பதை அனுபவிப்பவர்களுடைய வேத கோஷமும், எப்போதும் உத்சவம் உள்ளதால் ஏற்படும் வாத்யங்களின் ஒலியும், அவனுடைய குணங்களையும் விளையாட்டுக்களையும் எப்போதும் கொண்டாடியபடி விளையாடும் குழந்தைகளுடைய ஒலியும் எப்போதும் கேட்டபடி உள்ளதும் ஆகிய திருப்பேரெயில் என்ற இடத்திற்கு நான் சென்று சேர்வேன்.
இப்பிராட்டி வாசாமகோசரமாம்படி தனக்கு வர்த்திக்கிற வ்யஸநத்தாலே தென்திருப்பேரையிலே போகவேணுமென்று தனக்குப் பிறந்த தசையை வினவுகிற திருத்தாய்மார்க்குச் சொல்கிறாள்.
– சொற்களால் விவரிக்க இயலாதபடி தனக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தால் துவண்ட இந்தப் பராங்குசநாயகியானவள், தென்திருப்பேரைக்குச் செல்லவேண்டும் என்று தனக்கு ஏற்பட்ட நிலையை, தன்னைக் குறித்து வினவுகின்ற திருத்தாய்மார்களிடம் கூறுகிறாள்.
(வெள்ளைச்சுரிசங்கொடாழியேந்தி) “தவளவொண் சங்கு சக்கரம்” என்றும், “கூராராழி வெண்சங்கு” என்றும், “சங்குசக்கரங்களென்று கைகூப்பும்” என்றும் கையுந் திருவாழியுமான அழகு கைவிடாதே இவரை யநுவர்த்திக்கிறபடி. “முகில்வண்ண”னிறே; அந்நிறத்துக்குப் பரபாகமான வெளுப்பையும், சுரியையுமுடைத்தான ஸ்ரீபாஞ்சஐந்யத்தையும், அங்ஙனமொரு விசேஷணமிட்டுச் சொல்லவேண்டாதபடியான அழகையுடைத்தான திருவாழியையும் ஏந்தி. (தாமரைக்கண்ணன்) “தாமரைக் கண்ணென்றே தளரும்” என்றது பின்னாட்டுகிறபடி. திருமேனிக்கு திவ்யாயுதங்கள் ப்ரகாசகமாயிருக்குமாப்போலே, ஆத்மகுணங்களுக்கு நோக்கு ப்ரகாசகமாயிருக்கிறபடியும். அகவாயில் தண்ணளி யெல்லாம் கண் வழியேயிறே தோற்றுவது. ப்ரதிகூலர்க்கு திவ்யாயுதங்களோடொக்கத் திருக்கண்களும் விரோதியாய்த் தோற்றுமாப் போலேயிறே, அநுகூலர்க்குத் திருக்கண்களோபாதி திவ்யாயுதங்களும் அழகுக்கு உடலாய்த் தோற்றும்படி. திருக்கண்களோடே திவ்யாயுதங்களையும், திவ்யாயுதங்களோடே திருக்கண்களையும் சேர்த்தநுபவிப்பர்கள். ஆயுதங்களோடே திருக்கண்களைக் கூட்டுகிறது தோற்பித்தபடிக்கு; “ஜிதந்தே” என்னப் பண்ணுமிறே. கண்களோடு திவ்யாயுதங்களைக் கூட்டுகிறது அழகுக்கு. இவ்விடத்தே நிலாத்துக்குறிபகவர் வார்த்தையை யருளிச்செய்வர் ஜீயர். கைக்கு ஆழ்வார்கள் ஆபரணமாயிருக்குமாப் போலேயாயிற்று, முகத்துக்குத் திருக்கண்கள் ஆபரணமாயிருக்கும்படியும். “திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் நிகழும் அருக்கனணி நிறமுங் கண்டேன் செருக்கிளரும் பொன்னாழி கண்டேன், புரிசங்கைக் கண்டேன், என்னாழி வண்ணன்பால் இன்று” என்று வடிவழகோபாதி திவ்யாயுதங்களும் ஆபரணமாய் அழகியதாயிறேயிருப்பது. ஆழ்வார்கள்தான் அவனைக் கைசெய்திருக்கையாலே ஆபரணகோடியாயிறே இருப்பது. கைசெய்கையென்று அலங்கரிக்கைக்குப் பேர். (என்னெஞ்சினூடே) தங்கள் நெஞ்சிலில்லாமையாலே “இது கூடாது” என்றிருப்பர்களிறே. (என்னெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற) இவர்க்கு மயர்வற மதிநலமருளி, “நெஞ்சமே நீணகர்” என்னும்படியிறே திருத்திற்று; ஒரு த்ரிபாத் விபூதியிலும் இடமுடைத்தாயிருக்கை. திருவடி திருத்தோளிலேயேறி அங்குள்ளார்க்கு உஜ்ஜீவநமாகச் சாரிகை வந்து காட்டுமாப்போலே, இவர் நெஞ்சிலுள்ளே ச்ருங்கலமாக அழகு செண்டேறுகிறபடி. (நெஞ்சினூடே) “அகவாயிலிலுள்ளது கண்ணுக்குத் தெரியாதோ?" என்றிருக்கிறார்களாயிற்று இவர்கள். “நிர்க்குண: பரமாத்மாஸௌ தேஹம் தேவ்யாப்யதிஷ்டதி” என்னுமாப்போலே. “நெஞ்சிலில்லையாகில் நானுமில்லையென்று நினைத்திருக்கலாயிற்றுக்கிடீர்” என்றிருகிறாள் இவள். (ஒரு வாசத்தடத்தில்) ஹம்ஸ சக்ரவாகங்கள் போலே ஆழ்வார்களும், காடு பட அலர்ந்த தாமரை போலேயிருக்கிற திவ்யாவயங்களும், அத்தடாகத்தில் நீரும் இலையும் போலேயிருக்கிற திருமேனியுமாய், அத்தைக்கினிய ஒரு மேரு வலித்தாப் போலேயிருக்கிற பெரியதிருவடியோடே கூட இவர் திருவுள்ளத்தே உலாவுகிறபடி. இப்படியேயிறே அதுகூலரோடு பரிமாறும்படி. நஞ்சீயர் கோயிலுக்கெழுந்தருளாநிற்க, வழியிலே பிள்ளானைக் கண்டு, “ஈச்வர ஸ்வரூப வ்யாப்தியேயோ, விக்ரஹ வ்யாப்தியும் உண்டோ?” என்று கேட்க; “பாஷ்யகாரர் தோற்றவருளிச் செய்து கொண்டு போந்தது ஸ்வரூப வ்யாப்தியாயிருக்கும். ஆகிலும், எம்பார் ஒருநாள் ‘உபாஸகாநுக்ரஹார்த்தமாக ஆச்ரிதருடைய நெஞ்சிலே விக்ரஹத்தோடே வ்யாபித்திருக்கும்’ என்று அருளிச் செய்யக் கேட்டேன்” என்று பணித்தான். “குஹாயாம்”, “கஹ்வரேஷ்ட்டம் புராணம்”, “அரவத்தமளியினோடுமழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையுந் தானும் அகம்படி வந்து புகுந்து” என்றும், “யேஷாமிந்தீவர ச்யாமோ ஹ்ருதயே ஸுப்ரதிஷ்ட்டித:” என்றும், “என்னெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற” என்றுஞ் சொல்லுகிறபடியே. – சுபாச்ரய ப்ரகரணங்களிலும் “தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்” என்கிறபடியே அவ்வடிவேயாயிற்று த்யேயமாகச் சொல்லுகிறது. பின்பு “ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து” என்று கொடுப்பதும் அவ்வடிவேயாயிற்று. புறம்புள்ளார் சொன்னபடி சொல்கிறார்கள்; நம் ஆழ்வார்கள் போன வழி இதுக்கு மேற்படவில்லை; ‘இதுக்கு முன்னே ஒன்றுண்டு' என்று சொல்லுகிறவர்கள், ஸ்வரூப ஸத்பாவஞ் சொல்லுகிறார்களித்தனை; விக்ரஹமில்லையென்றன்று. (புள்ளைக் கடாகின்ற) “அகவாயில் நின்று சுழிக்குமத்தனையோ?” என்று அவன் த்வரித்து வடிம்பிட்டுத் தாக்க, “ஓம் காண்! நீயறிந்தாயோ?” என்று ப்ரேரித்து, மீளாநிற்கும்; “தீமத:” என்கிறடியே, பக்ஷபாதத்தோடே சேர்க்கையிலேயிறே அவனுக்கும் பணி. (கடாகின்ற) பூதமாய் விஸ்மரிக்கிறிகோளன்று, பவிஷ்யமாய் உபதேசிக்கிறதன்று, வர்த்தமாநத்துக்கு உபதேசம் வேணுமோ? (காணீர்) காண்கிறிலீர். வர்த்தமாநமும் கார்யகரமன்றிக்கே யொழிகிறது நிரோதிக்கிற நிர்பந்தத்தாலேயிறே. “உங்களுக்குக் குரகோஷம் கேட்கிறதில்லையோ? ப்ரஸித்தமான அர்த்தம் உபதேசிக்க வேண்டுவதே. (காணீர்) உங்களுக்குக் கண்ணும் செவியுமின்றிக்கே யிருந்தோ நிஷேதிக்கிறது? என்னைப் போலே உட்கண்ணாலே காணிகோள்! – “நாங்கள் கண்டிலோம்; கண்ட நீ சொல்லிக் காணாய்!” என்றார்கள். (என் சொல்லிச் சொல்லுகேன்) எனக்குச் சொல்லவாவதில்லை; என்ன பாசுரமிட்டு எத்தைச் சொல்லுவது? உங்கள் கண்ணுக்கு விஷயமாகாதாப்போலே என் வாக்குக்கும் விஷயமாகிறதில்லை. இவர்க்கு நெஞ்சு நிறைந்தது வாய் கொள்ளுகிறதில்லை காணும்! (என் சொல்லிச் சொல்லுகேன்) நான் பல ஹாநியாலே சொல்லமாட்டேன்; விஷயம், இயத்தாராஹித்யத்தாலே சொல்லி முடிக்கப் போகாது; உங்களுக்கு ப்ரதிபத்தி பண்ணுகைக்குப் பரிகரமில்லாமையால் சொல்லத்தான் வேண்டா. (அன்னைமீர்காள்) ஜ்ஞாதாம்சங் கொண்டு “போதயந்த: பரஸ்பரம்” பண்ணலாயிற்றிறே ஸஜாதீயைகளானிகோளாகில். (என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்) எனக்கோடுகிற வ்யஸநத்துக்குப் பாசுரமில்லை; அவஸ்த்தா ஜ்ஞாநமின்றிக்கே பழமை கொண்டாடுகிறிகோளித்தனையிறே; நிஷேதிக்கைக்கு அநுவர்த்தநீயைகளாமத்தனையோ வேண்டுவது? “எங்களுக்குக் காணவும் கேட்கவும் கண்ணும் செவியுமில்லையாகில், நீதான் செய்யப் பார்த்ததென்?” என்ன; ஹிதஞ்சொல்லி மீட்க நினைப்பார் இல்லாத ஊரிலே போய்ப்புகுமித்தனை என்கிறாள். பிரிந்து போனாரை நினைக்கவொட்டாத தேசமிறே; “நோ பஜநம் ஸ்மரந்” என்கிறபடியே. (வெள்ளச்சுசுமவன்) ஸுக வெள்ளத்தையுடையவன். விச்லேஷ தசையிலும் ஸம்ச்லேஷ ஐநிதமான நிரதிசய ஸுகம் மாறாதவன். பிரிவிலும் அரையாறுபடாதபடிகாணும் கலவியில் அவன் தேக்கின ஸுகாதிசயமிருந்தபடி. “வெள்ளை” என்று பாடமானபோது மறுவற்ற ஸுகமென்கை. து:காமிச்ர ஸுகமென்றபடி. “அவன் வீற்றிருந்த தென்திருப்பேரெயில்” என்று அந்வயம். இட்டகாலிட்டகையளா யிருக்கிற இருப்புக்கு எதிர்த்தட்டாயிருக்கிற இருப்பிறே அது. இத்தலையைத் துடிக்கவிட்டுத் தன் ஐச்வர்யந் தோற்ற ஸுகோத்தரமாக இருக்கிறபடி. (அவன் வீற்றிருந்த) இத்தலையைத் தோற்பித்த தன் வெற்றியெல்லாம் அவ்விருப்பிலே தோற்றும்படியிருந்த. அவன் மெய்மறந்து அப்படியிருந்தால் நாமும் மெய்மறந்திருக்கவோ? பரிபூர்ணனாய் அவன் செருக்காலேயிருந்தால், குறைவாளராய் நோவுபடுகிற நாமும் இருக்கவோ? அவன் முறை தப்ப நின்றால் நாமும் முறை தப்புமித்தனையன்றோ? பிரிந்தால் முறை பார்த்திருக்கலாம் விஷயத்துடனே கலந்தோமாகிலன்றோ நாம் ஆறியிருக்கலாவது? முறையை யழித்தாகிலும் மடலையெடுத்துக் கொண்டு போமித்தனையன்றே? “நமக்கே நலமாதலின்” என்னக்கடவதிறே. (வேதவொலியும்) அவன் நெஞ்சொழிந்து பழம்புணர்ப்புக் கேளாநின்றான் காணும், அதாவது, பண்டு தான் வென்ற வெற்றிமாலைகள் கேட்கையிறே. அதாவது, “ஜிதந்தே புண்டரீகாக்ஷ” என்கிற வெற்றி மாலைகளிறே. (விழாவொலியும்) இவளைத் தோற்பித்ததுக்கு நெய்யாடல் போற்றுகிபடி. (அறா) தீர்த்தம் ப்ரஸாதித்த பிற்றைநாளே திருமுளைச்சாத்தாநிற்குமத்தனை. ஸ்யமந்தகமணி கைப்பட்டபின்பு அக்ரூரன் அடுத்தடுத்து அச்வமேதம் பண்ணினாற்போலே, அவர்க்கும் அடுத்தடுத்து உத்ஸவமாய்ச் செல்லுகிறவித்தனை. ஸ்த்ரீரத்நமிறே இவள். இவளிருக்கிறவிடமிறே மங்களகோஷங்கள் மாறிக் கிடக்கிறது. (பிள்ளைக்குழா விளையாட்டொலியும் அறா) பருவம் நிரம்பியிருக்கச் செய்தே நிஷேதிப்பார் இருக்கிற ஊரை விட்டு பருவம் நிரம்புவதற்கு முன்னே பகவதநுபவமே யாத்ரையாய்ச் செல்லுவார் இருந்த ஊரில் போய்ப்புகுமித்தனை என்கிறாள். அவ்வூரில் பருவம் நிரம்பாத பிள்ளைகளும் அகப்பட மகரநெடுங்குழைக்காதனுடைய வடிவழகிலே தோற்று வாய்வெருவா நிற்பர்கள்; “பாலா அபிக்ரீடமாநா க்ருஹத்வாரேஷு ஸங்கச: | ராமாபிஷ்டவ ஸம்யுக்தாச்ச க்ருரேவமித: கதா:” என்னும்படியே. – (ராமோ ராமோ ராம இதி) “சோறு சோறு சோறு” என்பாரைப்போலே. (ப்ரஜாநாமபவந்கதா:) ஜநிதர்மாக்களுக்கெல்லாம் பாசுரம் இதுவே. (ராமபூதம் ஜகதபூத்) நாடு அடங்க ராமாத்வைதமானபடி. நித்யவிபூதியிலே பரிமாறக்கடவது இங்கே பரிமாறுகைக்கு ஹேதுவென்? என்னில், (ராமே ராஜ்யம் ப்ரசாஸதி) நாடு அடங்கலும் தந்தாமுடைய கர்ம பலம் புஜிக்கப் பெற்றார்களில்லை; ராமபாக்யமே யநுபவித்துவிட்டது. (நசாக்நிஜம்பயம் கிஞ்சித்) அக்நியும் சோறு வேவிக்கவேண்டும் ஔஷ்ண்யத்துக்கு மேற்பட உடைத்தாவதில்லை. (நாப்ஸுமஜ்ஜந்தி ஐந்தவ:) கொண்டு ஆழக் கடவ ஐலந்தானே கொண்டு மிதக்கப்புக்கது ராம சரத்துக்கு அஞ்சி. பண்டே கைகண்டிருப்பதொன்றே ஜலந்தான். வேலைவேவ வில்வளைத்தவனிறே. (திருப்பேரெயில் சேர்வன் நானே) ஐயித்தார் இருந்தவிடத்தே தோற்றர் சென்று விழும் அத்தனையிறே. தாமரைக்கண்ணன் என்னெஞ்சினுடேயிறே; ஆகையாலே “ஜிதந்தே” என்று சென்று விழுமத்தனையிறே.
– (வெள்ளைச்சுரிசங்கொடாழியேந்தி) - திருக்கண்களுக்கு முன்பாக, அவனுடைய திவ்ய ஆயுதங்கள் குறித்து ஏன் கூறினார் என்றால், திருவாய்மொழி (6-5-1) - தவளவொண் சங்கு சக்கரம் - என்றும், திருவாய்மொழி (6-9-1) - கூராராழி வெண்சங்கு - என்றும், திருவாய்மொழி (7-2-1) - சங்குசக்கரங்களென்று கைகூப்பும் - என்றும் கூறுவதற்கு ஏற்ப உள்ள, “திருக்கரமும் திருவாழியும்” என்பதான சேர்க்கை அழகானது இவரை விடாமல் தொடர்ந்தபடி உள்ளதால் ஆகும். “முகில் வண்ணன்” அல்லவோ? இந்த நிறத்திற்குச் சேரும் விதத்தில் உள்ள வெண்மை மற்றும் சுரி கொண்ட ஸ்ரீ்பாஞ்சஜயம்; “வெள்ளை” என்று சங்கிற்கு அடைமொழி அளித்தது போன்று கூறாமல் வெறுமனே “ஆழி” என்று கூறியதன் கருத்து, அவ்விதம் சிறப்பான அடையாளம் இட்டுக் கூறவேண்டிய அவசியம் இல்லாதபடியான அழகு கொண்ட சக்கரம்; இவற்றை ஏந்தியவனாக. (தாமரைக்கண்ணன்) - திருவாய்மொழி (7-2-1) - தாமரைக் கண்ணென்றே தளரும் - என்று முன்பு கூறியது இப்போதும் இவளுக்குத் தொடர்ந்தபடி உள்ளது. திவ்யமான ஆயுதங்களுடன் திருக்கரங்களையும் சேர்த்துக் கூறியதற்கு வ்யாக்யானத்தில் “திருமேனிக்கு” என்று தொடங்கியும், “ப்ரதிகூலர்க்கு” என்று தொடங்கியும் கருத்து அருளிச்செய்கிறார். திருமேனிக்குத் திவ்ய ஆயுதங்கள் ப்ரகாசமாக இருக்கும்; அதாவது ப்ரகாசமான உள்ள தன்மை மற்றும் கவர்ந்து இழுக்கவல்ல தன்மை ஆகிய இரண்டும் இவை இரண்டிற்கும் ஒத்துப்போவதால் சேர்த்துக் கூறுகிறார் என்றும் கொள்ளலாம்; அவ்விதம் ப்ரகாசப்படுத்துவதாக இருக்குமோ என்பதற்கு விடை தருகிறார். உள்ளத்தில் இருக்கின்ற ஈடுபாடு முழுவதும் கண்கள் வழியாக அல்லவோ வெளிப்படும்? அவனுடைய விரோதிகளுக்குத் திவ்ய ஆயுதங்கள் போன்றே, அவனுடைய திருக்கண்களும் விரோதியாகத் தோன்றுவது போன்று, அவனுடைய அடியார்களுக்குத் திருக்கண்கள் போன்றே திவ்ய ஆயுதங்களும் அழகுக்கு இடமாகத் தோன்றுகின்றன என்று கருத்து. திருக்கண்கள் விரோதியாகத் தோன்றியதற்கான ப்ரமாணம் “துச்சாதனனை அகல விழித்தானே” என்பதாகும். திவ்ய ஆயுதங்களுடன் அவயவங்களையும், திவ்ய அவயவங்களுடன் திவ்ய ஆயுதங்களையும் சேர்த்து அனுபவிப்பார்கள். இவ்விதம் சேர்த்து அனுபவிப்பதன் காரணத்தை வ்யாக்யானத்தில் “ஆயுதங்களோடே” என்று தொடங்கும் மூன்று வாக்கியங்களால் கூறுகிறார்; ஆயுதங்களுடன் சேர்ந்து அவனுடைய திருக்கண்களும் தோற்கடிக்கும் என்பதற்கு ப்ரமாணம் ஜிதந்தே (1) – ஜிதந்தே - உனக்குத் தோற்றோம் – என்பதாகும்; திருக்கண்களுடன் ஆயுதங்களைச் சேர்த்தற்குக் காரணம் அழகிற்காகவும் ஆகும். இங்கு நிலாத்துக்குறிபகவர் என்பவர் ஸ்வாமி பராசரபட்டரிடம், “பகவான் இரண்டு திருக்கரங்கள் கொண்டவனோ அல்லது நான்கு திருக்கரங்கள் கொண்டவனோ என்று கேட்டதற்கு, பட்டர் அருளிச்செய்த சொற்களை நஞ்சீயர் நினைவு கூருவர். அடுத்து, ஒப்பனை அழகாலும், திவ்ய ஆயுதங்கள் மற்றும் திருக்குணங்களுக்குச் சேர்த்தி உள்ளது என்பதை மூன்றாவதாக ஒரு கருத்தினால் அருளிச்செய்கிறார்; திருக்கரங்களுக்கு திவ்ய ஆயுதங்களாகிய சங்கு சக்கரம் முதலானவை அழகாக உள்ளதைப் போன்று, திருமுகத்திற்குக் கண்கள் ஆபரணமாக உள்ளன; இவ்விதம் திருமுகத்திற்குக் கண்கள் ஆபரணமாக உள்ளதற்கு ப்ரமாணம் மூன்றாம் திருவந்தாதி (1) - திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் நிகழும் அருக்கனணி நிறமுங் கண்டேன் செருக்கிளரும் பொன்னாழி கண்டேன், புரிசங்கைக் கண்டேன், என்னாழி வண்ணன்பால் இன்று - என்று வடிவழகு போன்றே திவ்ய ஆயுதங்களும் ஆபரணங்களாக உள்ளன. திவ்யமான ஆயுதங்களாகிய அவை, அவனுக்கு “அலங்கரித்தல், துணை செய்தல், போர் செய்தல்” போன்றவற்றைச் செய்வதால், ஆபரணங்களுடைய வரிசையிலும் இருப்பவை ஆகும். – (என்னெஞ்சினூடே) – தாய்மார்கள், தங்களுடைய நெஞ்சத்தில் அவன் இல்லாத காரணத்தால் “இது கூடாது” என்று தடுத்தபடி இருப்பார்கள். (என்னெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற) - ஆனால் அணுவாகிய நெஞ்சத்தில் அவன் உள்ளானோ என்பதற்கு விடை கூறுகிறார்; இவருக்கு “மயர்வற மதிநலம்” அருளி, திருவாய்மொழி (3-8-2) – நெஞ்சமே நீள் நகர் - என்பதாக அல்லவோ செய்தான்? பரமபதத்தின் அளவிற்கு இங்கும் இடம் உள்ளது. கருடனுடைய திருத்தோள்களில் ஏறிக்கொண்டு பரமபதத்தில் உள்ளவர்களுக்கு வையாளி எனப்படும் வேடிக்கையான நடைகளைக் காண்பித்து அவர்களைத் தரிக்கும்படிச் செய்வது போன்று, இவருடைய நெஞ்சத்தில் தடையின்றி தனது அழகைக் காண்பித்துக் கொண்டு புறப்படுகிறான். (நெஞ்சினூடே) – “நெஞ்சத்தில் உள்ள விஷயம் கண்களுக்குப் புலப்படாது” என்று இவர்கள் உள்ளனர்; ஆனால் அவ்விதம் உள்ளே இருப்பது வெளியே தென்படும் என்பதற்கு ப்ரமாணம் மஹாபாரதத்தில் - நிர்க்குண: பரமாத்மாஸௌ தேஹம் தேவ்யாப்யதிஷ்டதி - தோஷம் இல்லாத பரமாத்மா, சரீரம் முழுவதும் நிரம்பி நிற்கிறான் - என்பது காண்க. “நெஞ்சத்தில் அவன் இல்லை என்றால், நானும் இல்லை என்னும்படி எனது நிலையை எண்ணவேண்டும்”, என்பதாக இவள் உள்ளாள். – (ஒரு வாசத்தடத்தில்) - ஹம்ஸம் மற்றும் சக்ரவாகப் பறவைகள் போன்றுள்ள திவ்யமான ஆயுதங்களும், காடு முழுவதும் படர்ந்து மலர்ந்து நிற்கும் தாமரைகள் போன்றுள்ள திவ்யமான அவயவங்களும், அந்தத் தடாகத்தில் உள்ள நீரும் இவையும் போன்றுள்ள இவன் திருமேனியும், அந்தத் தடாகத்தை ஒரு பெரிய மேரு மலை தாங்கி நிற்பது போன்றுள்ள கருடனும் என்பதாகத் தோன்றி இவருடைய நெஞ்சத்தில் உலவுகிறான். இவ்விதம் அல்லவோ இவன் இவருடைய நெஞ்சத்தில் விக்ரஹ ரூபமாக உள்ளான் என்பதற்கு ஒரு உரையாடலை ப்ரமாணமாகக் காண்பிக்கிறார். ஒருநாள் நஞ்சீயர் திருவரங்கம் பெரியகோயிலுக்குச் செல்லும் வழியில் திருக்குருகைப்பிரான் பிள்ளையை வழியில் கண்டு அவரிடம், “அடியார்களுடைய மனதில் ஈச்வரனுடைய ஸ்வரூபம் பரவியுள்ளதா அல்லது திருமேனி பரவி நிற்கிறதா?”, என்று கேட்டார். இதற்குப் பிள்ளான், “எம்பெருமானார் வ்யாக்யானம் செய்தபோது, அவனுடைய ஸ்வரூபமே பரவி உள்ளது என்றார். ஆனால் ஒருநாள் எம்பார் கூறும்போது, உபாஸகர்களுக்கு அனுக்ரஹம் செய்வதற்காக, அவர்களுடைய மனதில் திருமேனி வடிவத்திலேயே அவன் பரவி நிற்கிறான் என்று கூறியதைக் கேட்டேன்”, என்று விடை அளித்தார். இவ்விதம் திருமேனியே பரவி நிற்கிறது என்பதற்கான ப்ரமாணங்கள்: தைத்திரீயத்தில் - குஹாயாம் - மனம் என்ற குகையில் உள்ளான் – என்றும், கட உபநிஷத்தில் - கஹ்வரேஷ்ட்டம் புராணம் - மனத்தில் உள்ள புராண புருஷன் - என்றும், பெரியாழ்வார் திருமொழி (5-2-10) - அரவத்தமளியினோடுமழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையுந் தானும் அகம்படி வந்து புகுந்து – என்றும், இராமாயணத்தில் - யேஷாமிந்தீவர ச்யாமோ ஹ்ருதயே ஸுப்ரதிஷ்ட்டித: - யாருடைய மனதில் கறுத்த பகவான் அமர்ந்துள்ளானோ - என்றும், இந்தப் பாசுரத்தில் “என்னெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற” என்றும் கூறும் பலவும் ஆகும். – ஆனால் விக்ரஹங்கள் கல்பிக்கப்பட்டவை என்று கூறுகிறார்களே என்றால் அவை உண்மையானவை என்பதற்குப் பொருத்தமான ப்ரமாணங்களைக் கூறுகிறார். த்யானத்திற்கு மங்களகரமான இலக்குகள் மற்றும் இடங்கள் குறித்துக் கூறும்போது, முண்டகம் (3-2-3) - தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் - தன்னால் யார் ஒருவன் விரும்பப்படுகிறானோ அவனுக்கு அந்தப் பரமாத்மா தனது ஸ்வரூபத்தை காண்பிக்கிறான் - என்பதற்கு ஏற்ப, அத்தகைய வடிவமே த்யானத்திற்கான வஸ்துவாக உள்ளதைக் கூறுகிறார். மேலும் யுத்தகாண்டம் (1-13) - ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து – இராமன் அனுமனை அணைத்துக் கொண்டு, “இந்த அணைத்தல் என்பது அனைத்தையும் அளிக்கவல்லது”, என்றான் - என்று கூறுவதற்கு ஏற்ப, அனைத்தையும் அளிப்பது அந்த வடிவமே என்பதாக உள்ளது. ஆக இப்படியாக, “உபாஸன நேரத்தில் அவனுடைய திருமேனியை த்யானிக்கப்பட வேண்டிய வஸ்துவாகக் கூறுவதாலும், பலன் அளிக்கும் வேளையில் பலனை அளிப்பதும் அதுவே என்பதாலும், சாந்தோக்யத்தில் - ஸதா பச்யந்தி - எப்போதும் பார்த்தபடி உள்ளனர் - என்பதற்கு ஏற்ப பார்வைக்கு விஷயமாக உள்லதாலும், விக்ரஹமானது கல்பிக்கப்பட்டது அல்ல என்று கருத்து. ஆனால், “அனைத்தும் மாயை” என்று கூறுபவர்கள் இதனை ஏற்கவில்லையே என்று கூறினால், “அவர்கள் கருத்தினால் நமக்கு என்ன பயன் உள்ளது” என்றும், “நம்முடைய ஆழ்வார்கள் நமக்குக் கூறியதே நம்மால் நம்பத்தக்கதாக உள்ளது” என்றும் கூறுகிறார்; மற்றவர்கள், அவர்கள் கூறும்படிக் கூறட்டும், நம்முடைய ஆழ்வார்கள் சென்ற வழியானது இதனை அல்லாமல் வேறு ஏதும் இல்லை. ஆனால், “தத் ஏக அவயவம் தேவம்” என்பது போன்றவை மூலம், “விக்ரஹத்தை விட்டு அப்பால் செல்வர்” என்று கூறப்பட்டதே என்று கேட்பதற்கு விடை அருளிச்செய்கிறார்; “இந்த விக்ரஹத்திற்கும் உள்ளே ஒன்று உண்டு” என்று கூறுபவர்கள், ஸ்வரூபத்தில் உண்மையைக் கூறுகிறார்கள், “விக்ரஹம் இல்லை” என்று கூறவில்லை. – (புள்ளைக் கடாகின்ற) – கருடனை “கடாகின்ற” என்று அஃறிணையாக ஏன் கூறினாள் என்பதற்கு விடை அளிக்கிறார்; “உள்ளத்தில் துக்கம் வைத்துத் தவித்தபடி உள்ளாள்” என்று அவன் விரைந்து செல்லும்படியாக கருடன் அவனை நிர்ப்பந்தம் செய்ய, அவன் “ஓ! நீ அறிந்தாயோ” என்று தூண்டியபடி உள்ளான். இவ்விதம் ஈச்வரனைக் காட்டிலும் துன்பம் கொண்டவர்களைக் காப்பாற்றும் தவிப்பு கருடனுக்கு உள்ளதோ என்பதற்கு விடை தருகிறார்; ஸுந்தரகாண்டம் (16-4) - தீமத: - அறிவுள்ளவன் - என்பதற்கு ஏற்ப, தனது சிறகுகள் மூலம் சென்று, அவனை அவரவர்களிடம் சேர்த்தலே கருடனுடைய பணியாக உள்ளது அல்லவோ? (கடாகின்ற) – “கடாகின்ற” என்பதற்கு “நடத்துகின்ற” என்று பொருள். இந்தச் சொல்லை, “காணீர்” என்பதுடன் சேர்த்துக் கொண்டு, வ்யாக்யானத்தில் “பூதமாய்” என்று தொடங்கும் மூன்று வாக்கியங்களைக் கூறுகிறார்; முன்பு நடந்ததை நீங்கள் மறக்கவில்லை, இனி வருவதையும் உபதேசம் செயவில்லை, இப்போது நடப்பதற்கு உபதேசம் செய்யவேண்டுமோ? இப்படியாக உள்ளபோது ஏன் உபதேசிக்கவேண்டும் என்பதற்கு விடை அளிக்கிறார்; “காணீர்” என்ற சொல்லின் பொருள் அருளிச்செய்தபடி, அதற்கான காரணத்தைக் கூறுகிறார்; இதனை வ்யாக்யானத்தில் உள்ள “காண்கின்றிலீர்" என்று தொடங்கி உள்ள இரண்டு வாக்கியங்கள் கூறுகின்றன; (காணீர்) - இப்போது நடப்பதையும் நீங்கள் தடுக்க முயல்வது என்பது, “தடுக்கவேண்டும்” என்ற நிர்ப்பந்தம் காரணமாக அல்லவோ? “காணீர்” என்பதற்கு “காண்கிறீலீர்” மற்றும் “காணுங்கோள்” என்று இரண்டு பொருள் கூறுகிறார்; இவற்றில், “காணுங்கோள்” என்பதான இரண்டாவது கருத்தை, “காதுகள், புறக்கண்கள் மற்றும் அகக்கண்” மூலம் காணவேண்டும் என்று மூன்றுவிதமாக அருளிச்செய்கிறார்; உங்களுக்குக் குளம்பின் ஒலி கேட்கிறது அல்லவோ? மிகவும் அறிந்த விஷயத்தையும் உங்களுக்கு உபதேசம் செய்யவேண்டியதாக உள்ளதே! (காணீர்) - உங்களுக்குக் கண்களும் காதுகளும் இல்லாமல் உள்ளதோ? அதன் காரணமாக என்னைத் தடுக்கிறீர்களோ? அல்லவே, உங்களுக்கு இவை இரண்டும் உள்ளதே? என்னைப் போன்று அகக்கண்களால் நீங்கள் காண்பீர்களாக. – (என் சொல்லிச் சொல்லுகேன்) - இதற்கு அவர்கள், “நாங்கள் காணவில்லை. கண்ட நீ, கூறுவாயாக”, என்றனர். இதற்கு இவள் கூறத் தொடங்கினாள். எனக்குக் கூற இயலவில்லை. என்ன சொற்கள் கொண்டு எதனைக் கூறுவது? ஆனால் இவளால் ஏன் சொற்கள் கொண்டு கூற இயலவில்லை என்பதற்கு விடை தருகிறாள்; உங்கள் கண்களுக்கு புலப்படாமல் உள்ளது போன்று, எனது வாக்கிற்கும் எட்டாதபடி உள்ளது. இவருக்கு நெஞ்சத்தில் நிறைந்த விஷயமானது, வாக்கில் அடங்காமல் உள்ளது. (என் சொல்லிச் சொல்லுகேன்) - இவ்விதம் கூற இயலாமல் உள்ளதற்கு மூன்று காரணங்களை அருளிச்செய்கிறாள்; நான் வலிமை குன்றியவளாக உள்ளதால், கூற மாட்டேன்; விஷயத்தின் அளவு “இந்த அளவே” என்று கூறி முடிக்க இயலாததால், கூறி முடிக்க இயலாது; நான் கூறியதை எண்ணிப் பார்ப்பதற்கான மனம் போன்றவை உங்களிடம் இல்லை என்பதால் கூறவேண்டியதில்லை. ஆனால், “அனைத்தும் கூற இயலாது என்றாலும், அறிந்தவரை கூறலாம் அல்லவோ?”, என்பதற்கு விடை தருகிறாள். (அன்னைமீர்காள்) - அறிந்த விஷயத்தை மட்டுமே கொண்டு, “ஒருவருக்கு ஒருவர் உணர்த்தலாம்” என்பதற்கு ஏற்பச் செய்யலாம் என்றால், என்னைப் போன்று அவன் விஷயத்தில் நீங்கள் ஒத்துப் போகவில்லை அல்லவோ? அல்லது எனது தோழிமார்கள் போன்று அல்லவே நீங்கள்! (என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்) – இதுவரை “அன்னைமீர்” என்பதற்கு “வயதானவர்கள்” என்று பொருள் கொண்டு கூறினார்; இனி, “நியமிப்பவர்கள்” என்று பொருள் கொண்டு, “எனக்கோடுகிற” என்று தொடங்கி உள்ள இரண்டு வாக்கியங்களில் பொருள் தருகிறார்; என்னுடைய மனதில் உள்ள சோகத்திற்கும் களைப்பிற்கும் சொற்கள் இல்லை; எனது நிலையைக் குறித்து அறியாத நீங்கள், முன்பு நடந்தவற்றையே மீண்டும் கொண்டாடியபடி உள்ளீர்கள். என்னை இந்த விஷயத்திலிருந்து விலக்குவதற்கு, தொடர்ந்தபடி வந்து செய்வதோ வேண்டுவது? இதனைக் கேட்ட தாய்மார்கள், “எங்களுக்குக் காண்பதற்குக் கண்ணும், கேட்பதற்குக் காதுகளும் இல்லையென்றால், நீதான் செய்ய முயல்வது என்ன?”, என்றனர். இதற்கு இவள், “நன்மை கூறி மீட்க நினைப்பவர்கள் யாரும் இல்லாத ஊருக்குச் சென்று புகுவதற்குப் பார்க்கிறேன்”, என்றாள். அவன் வரமாட்டானோ என்றால், சாந்தோக்யத்தில் (8-12-3) – நோபஜநம் சரீரம் - முக்தன் இந்தச் சரீரத்தை நினைப்பதில்லை - என்பதற்கு ஏற்ப, பிரிந்தவர்களை மீண்டும் நினைக்க இயலாதபடி உள்ள இடம் அல்லவோ? – (வெள்ளச்சுசுமவன்) - இன்ப வெள்ளத்தை உடையவன். பிரிவு நிலை மற்றும் கலந்திருக்கும் நிலை ஆகிய இரண்டிலுமே உண்டாகக்கூடிய எல்லையற்ற ஸுகம் கொண்டவன். பிரிவில் துன்பம் அடையாதபடி, சேர்க்கையில் அவன் தேக்கி வைத்துத் தந்த பேரின்பம் உள்ளது. “வெள்ள” என்பதை “வெள்ளை” என்று கொண்டால், மறுவற்ற ஸுகம். (அவன் வீற்றிருந்த) – இதனை “அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெயில்” என்று படிக்கவேண்டும். இவள் “இட்ட கால் இட்ட கை” என்று கிடந்தபோது, அத்தகைய நிலைக்கு எதிர்த்தட்டாக உள்ள இருப்பு. இவளை இங்கு துடிக்கும்படிச் செய்து தனது ஐச்வர்யம் வெளிப்படும்படியாக மேலான இன்பத்துடன் இருத்தல். (அவன் வீற்றிருந்த) – “வீற்றிருந்த” என்பதற்கு, “அரசனாக இருந்து” என்பதாக வேறு ஒரு பொருளும் கூறுகிறார்; அதாவது, இவளை வென்ற தனது வெற்றி முழுவதும் வெளிப்பட்டபடியாக அந்த இருப்பு உள்ளது. இதனைக் கேட்ட தாய்மார்கள், “அவன் இவ்விதம் உள்ளபோது நீ அவனை ஒதுக்காமல், ‘சென்று சேர்வேன்’ என்று கூறுவது ஏன்?”, என்றார்கள்; இதற்கு விடை தருகிறாள். அவன் நம்முடைய மேன்மையை மறந்து, நம் மீது விருப்பம் இருந்தால், நாமும் அவன் மேன்மையை மறந்து இருக்கவேண்டுமோ? இவ்விதம் இவள் கூறக் காரணம் என்ன? அவன் பரிபூர்ணனாக உள்ளான்; இந்தச் செருக்கு காரணமாக இவ்விதம் உள்ளான்; ஆனால் நாமோ குறைகளுடன் இருந்து வருந்துகிறோம். இப்படி உள்ளபோது நாமும் அப்படி இருக்கலாமோ? இதனைக் கேட்ட தாய்மார்கள், “அவன் வராமல் உள்ளபோது நாம் இவ்விதம் விரைவு கொள்ளலாமோ?”, என்பதற்கு இவள் விடை தருகிறாள்; அவன் முறை தப்ப நின்றால், நாமும் முறை தப்பி நிற்கலாம் அல்லவோ? இதற்குத் தாய்மார்கள், “அவன் முறை தப்பினால் நாம் நமது முறைகளைத் தப்புவது முறையோ?”, என்பதற்கு இவள் விடை தருகிறாள்; பிரிந்தால் முறை பார்த்து நிற்கலாம்; விஷயத்துடன் கலக்கும்போது அல்லவோ நாம் பொறுமையுடன் இருக்கமுடியும்? முறையை அழித்துக் கொண்டாவது மடலை எடுத்துக் கொண்டு செல்லவேண்டும் அல்லவோ? இவ்விதம் செய்தவர்கள் உள்ளனரா என்பதற்கு ப்ரமாணம் பெரியதிருமொழி (9-3-9) - நமக்கே நலமாதலின் - என்பதாகும். (வேதவொலியும்) - அவன் தனது நெஞ்சத்தை ஒழிந்தவனாக, பழைய வெற்றி மாலைகளைக் கேட்டபடி உள்ளான்; அதாவது முன்பு தான் வென்ற வெற்றி மாலைகள் குறித்து கேட்டபடி உள்ளான்; அதாவது, “ஜிதந்தே புண்டரீகாக்ஷ - தாமரை போன்ற திருக்கண்கள் கொண்ட உனக்கு வெற்றி” என்பது போன்றவை ஆகும். (விழா ஒலியும்) - இவளைத் தோற்கடித்ததற்காக நெய் இறைத்து விளையாடியபடி உள்ளான். (அறா) - விழாவானது தடை இன்றி நித்யமாக இருத்தலைக் கூறுகிறார்; தீர்த்தம் அளித்த அடுத்த நாள் அல்லவோ திருமுளைகளை எடுப்பார்கள். ஸ்யமந்தக மணி கைப்பட்ட பின்னர், அக்ரூரர் அடுத்து அடுத்து அச்வமேதம் செய்தது போன்று, இங்கும் அடுத்து அடுத்து திருவிழாவாகவே உள்ளது; ஸ்யமந்தகம் போன்று இவள் பெண் இரத்தினம் அல்லவோ? இவள் உள்ள இடம் அல்லவோ மங்கள் ஒலிகள் மாறிக்கிடக்கின்றன? – (பிள்ளைக்குழா விளையாட்டொலியும் அறா) - பகவத் அனுபவம் பெறத்தக்க பருவம் வந்தபோதிலும், இவ்விதம் விலக்கியபடி உள்ளவர்கள் இருக்கின்ற ஊரை விட்டு சென்று, பருவம் நிரம்புவதற்கு முன்னரே பகவத் அனுபவம் என்பதே தங்கள் வாழ்க்கை என்று உள்ளவர்கள் வாழ்கின்ற ஊருக்குச் சென்று சேரவேண்டும் என்கிறாள். இளமைப் பருவத்தில் பகவானை அனுபவத்தில் இருப்பார்களோ என்பதற்கு விடை தருகிறாள்; அந்த ஊரில் பருவம் நிரம்பாத சிறுபிள்ளைகளும் கூட மகரநெடுங்குழைக்காதனுடைய வடிவழகில் தோற்றவர்களாக, வாய்விட்டு புலம்பியபடி இருப்பார்கள். இவ்விதம் இருப்பதற்கு ப்ரமாணம் அயோத்யாகாண்டம் (6-16) - பாலா அபிக்ரீடமாநா க்ருஹத்வாரேஷு ஸங்கச: | ராமாபிஷ்டவ ஸம்யுக்தாச்ச க்ருரேவமித: கதா: - அயோத்தியில் விளையாடியபடி உள்ள சிறுபிள்ளைகளும் கூட, தங்கள் வீடுகளின் வாசல்களில் கூட்டமாக நிற்று இராமனைத் துதிக்கும் விஷயம் நிரம்பிய கதைகளையே பேசினர் - என்பதாகும். – (ராமோ ராமோ ராம இதி) - பாலர்கள் மட்டும் அல்லாமல் அயோத்தியில் உள்ள அனைவருமே அப்படி இருப்பார்கள் என்று கூறி ப்ரமாணம் காண்பிக்கிறார்; உத்தரகாண்டம் - ராமோ ராமோ ராம இதி – ராமா ராமா ராமா - என்பது போன்றே இருப்பார்கள்; அதாவது “சோறு சோறு சோறு” என்று உள்ளது போன்று ஆகும். (ராமபூதம் ஜகதபூத்) - நாடு முழுவதும் இராமன் ஒருவனே உள்ளான் என்பதானது - என்று கருத்து. அவன் நித்யவிபூதியில் உள்ளது போன்று இங்கு இருக்கக் காரணம் என்ன என்பதற்குக் கூறுகிறார்; (ராமே ராஜ்யம் ப்ரசாஸதி) - நாடு முழுவதும் தங்கள் தங்கள் கர்மபலன்களை அனுபவிக்கவில்லை, இராம பாக்யமே அனுபவித்தனர். அவ்விதம் அவர்கள் தங்கள் கர்மபலன்களை அனுபவிக்கவில்லையோ என்பதற்கு விடை தருகிறார்; “இல்லை” என்று கூறி, ப்ரமாணமும் காண்பிக்கிறார்; ஸங்க்ஷேப இராமாயணம் (1-92) - நசாக்நிஜம்பயம் கிஞ்சித் - அக்னியும் கூட சோற்றை வேக வைக்கத் தேவையான அளவைக் காட்டிலும் அதிகமாச் சுடாமல் இருந்தது; நாப்ஸுமஜ்ஜந்தி ஐந்தவ: - எந்தப் பொருளையும் ஆழத்தில் மூழ்கடிக்கும் நீரும் கூட, மிதக்கும்படிச் செய்தது; இவை அனைத்தும் இராமனின் பாணத்திற்கு அஞ்சியே ஆகும். ஆனால் இவ்விதம் அச்சம் கொள்ளுமோ என்றால், முதலில் கைகண்டது தண்ணீரையே ஆகும்; ஸமுத்ரத்தை எரித்ததற்கு ப்ரமாணம் திருச்சந்தவிருத்தம் (31) - வேலைவேவ வில்வளைத்தன் - என்பதாகும். ஆனால் தான் சென்று ஏன் அவனை பார்க்கவேண்டும், இவள் உள்ள இடம் தேடி அவன் வரலாம் அல்லவோ என்பதற்கு விடை தருகிறாள்; (திருப்பேரெயில் சேர்வன் நானே) - வெற்றி பெற்றவர்கள் இடம் தேடி அல்லவோ தோற்றவர்கள் செல்வர்? இப்படி இவள் தோற்றாளோ என்றால், “தாமரைக்கண்ணன் என் நெஞ்சத்தில் உள்ளான்” என்றாள் அல்லவோ? “ஜிதந்தே - உனக்கு வெற்றி” என்று கூறிச் சென்று விழுகிறாள்.