திருவாய்மொழி - ஏழாம்பத்து (pravesam 1)
ஏழாம்பத்து
ப்ரவேசம் – மூன்றாம் திருவாய்மொழி
வெள்ளைச் சுரிசங்கு ப்ரவேசம்
கீழ், “இட்டகாலிட்டகை” என்றபடியே இவள் மோஹித்துக் கிடக்சு, இவளுக்கு முன்னே தோழிமாரும் தரைப்பட திருத்தாயாரொருத்தியும் இவள் தசையை அநுஸந்தித்து அருகேயிருந்து கூப்பிட்டுப் போருமது தவிர்ந்து இப்பெண் பிள்ளை தானேயெழுந்திருந்து கால்நடை தந்து போமவளாய் விழுந்தது. அதுக்கடி, “பற்றிலார் பற்ற நின்றானே” என்று பெரியபெருமாளுடைய அசரண்ய சரண்யத்வந் தொடக்கமான இவளுக்குப் பற்றாசான குணங்களையும் ஸௌந்தர்யாதி விக்ரஹ குணங்ளையும் இவள்தான் வாய் வெருவியும் திருத்தாயார் சொல்லவும் கேட்டு அத்தாலே தரித்தாள். போன உயிரை மீட்கவற்றாயிறே குண ஸ்வபாவமிருப்பது. கீழ்ப்பிறந்த மோஹமும் தெளிந்து, விச்லேஷ வ்யஸநமும் அநுஸந்திக்க வல்லளாய், பின்பு, “அவனைக் கிட்டியல்லது நில்லேன்” என்னும் ஆற்றாமையும் பிறந்து, அது பெறாமையாலே அவஸந்நையாக, இவள் விடாய்க்கு ஈடாம்படி அணித்தாகத் தென்திருப்பேரையிலே விற்றிருந்த மகரநெடுங்குழைக்காதனுடைய அபேக்ஷிதாதிகளிலே அபஹ்ருத சித்தையாய், “அவனிருந்தவிடத்தேறப் போகவேணும்” என்று ஒருப்பட, பழையபடியே தோழிமாரும் தாய்மாரும் அவளைச் சூழப்போந்து, “உனக்கு இத்தனை அதிமாத்ர ப்ராவண்யமாகாது; நமக்கு இது பழியாய் விளையும்” என்ன; “நீங்கள் சொல்லுகிறவற்றால் ப்ரயோஜநமுண்டாகமாட்டாது, நான் அவன் பக்கலிலே அபஹ்ருத சித்தையானேன்; ஆன பின்பு, நானே போனேனாகாமே நீங்கள் என்னோடுடன்பட்டு அங்கே கொடுபோய்ச் சேர்க்கப் பாருங்கோள்” என்று தனக்குப் பிறந்த துணிவை அவர்களுக்கு அறிவித்துச் சொல்லுகிறதாயிருக்கிறது. அங்ஙனன்றிக்கே, பிள்ளான் பணிக்கும்படி: “முகில்வண்ணனடியே இவளணுகியடைந்தனள்” என்றதாகையாலே, “ஸமாத்வாத சதத்ராஹம்” என்கிறபடியே பெரியபெருமாளோடே சிரகாலம் உந்மஸ்தகரஸமான ஸம்ச்லேஷம் ப்ரவ்ருத்தமாய், பிரிந்து கூடாவிடில் இரண்டு தலைக்கும் அழிவு வருமளவாச்சுதாய், இனியெல்லாவளவிலும் ஒரு நீராகக் கலக்கிறது தர்மியிரண்டும் கூடியிறே; ஆகையாலே, பிரியாவிடில் தர்மிலோப பர்யந்தமாகப் புக, இவ்வளவில், நாயகனான இவன் இரண்டு தலையும் ஜீவிக்கப் பார்ப்பானொருவனாகையாலே பிரிவை ப்ரஸங்கிக்க, இவளும் விச்லேஷத்தில் வாஸநையில்லாதாளொருத்தியாகையாலே “கலவியிலேயொரு வகையோ” என்று கொண்டு இவளும் அனுமதி பண்ண, அவனும் அவ்வேட்டை நிமித்தமாகப் புறப்பட, இனைம் திருவணுக்கன் திருவாசலிளவும் ஒருப்படுத்தி மீள, எல்லாவளவிலும் பிரிவு தன் காரியம் செய்தன்றி நில்லாதிறே; அநந்தரம் இவள் நோவுபடப் புக, இத்தைக் கண்டதோழிமாரும் தாய்மாரும் “உனக்கு ஓடுகிறதென்?” என்று கேட்க, “ஸ்ரீஜநகராஜன் திருமகள் காட்டிலே கூடப் போய் அவரிருந்தவிடம் நின்றவிடம் உலாவினவிடந்தோறும் கூடவிருந்து அநுபவித்தாற் போலே, நானும் அவனிருந்தவிடத்தே போய்ப் புக்கல்லது நில்லேன்” என்ன; “உனக்கு இது தலைமைக்குப் போராது; நீ சொல்லுகிறவை வார்த்தையன்று” என்ன; “அவர்களை நீங்கள் நிரோதிக்கிறத்தால் பெற்றதென்? நான் போகை தவிரேன்; நீங்களே என்னைக் கொடுபோய் விடுங்கோள்” என்ன; அவர்கள் “அதுக்கு நாங்கள் வழிப்படோம்” என்ன; “ஆகில் நானேயாகிதும் போகை தவிரேனென்கிறாள்” என்று. – (ஸமா த்வாதச சதத்ராஹம்) இப்போது காதாசித்க தர்சநமுங் கூட அரிதாம்படியிருக்கிற நான், முன்பு சிரகாலம் அவரோடேயநுபவிக்கப் பெற்றேன்காண். (ராகவஸ்ய நிவேசநே) எங்கள் மாமனாருடைய மாளிகையிலே அவர் தண்ணீர்த் துரும்பறுத்துத் தர, நெடுங்காலம் அநுபவித்தேன். (புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வகாம ஸம்ருத்திநீ) “ஸர்வாந்காமாந்” என்கிறபடியே எல்லாம் அநுபவிக்கப் பெற்றேன். அப்படியுமன்றிறே இங்கு. (பஹவோ ந்ருப கல்யாணகுணா:) என்று குணங்களிரட்டித்தவிடமிறே இது. ஆக இத்தால் சொல்லிற்றாயிற்று: நமக்கு சப்தாதி விஷயங்களினின்றும் இந்திரியங்களை மீட்கவொண்ணாதாப் போலேயிறே இவரை பகவத்விஷயத்தினின்றும் மீட்கவொண்ணாதபடி. அது கர்மமடியாக வருகிறது; இது பகவத் ப்ரஸாதமடியாக வருகிறது. திருத்தாயார் பேச்சாய் வருகிறவை, ஆழ்வார் தமக்குப் பிறந்த தசாவிசேஷம், தலைமகளாய்ப் பேசுகிறதும் இவர்க்குப் பிறந்ததோர் அவஸ்தாவிசேஷம்; அதில், நிஷேதிக்கிற திருத்தாயார் முகத்தாற் சொல்லுகிறது, ஸ்வருபமான ப்ராவண்யத்திலே உபாயத்வம் சேரிற் செய்வதென் என்னுமதுக்குச் சொல்லுகிறது; பெண்பிள்ளை கருத்தாற் சொல்லுகிறது, உபாயம் அவனேயாகில் ப்ராவண்யம் ஸ்வரூபமாமத்தனையன்றோ என்று. ஆக, இவ்விரண்டர்த்தத்தையும் இரண்டு முகத்தாலே ஆழ்வார் தாம் அநுஸந்தித்தபடியைச் சொல்லுகிறது. மோஹமுந் தெளிந்து தானே கூப்பிட வல்லளான இதுவே இத்திருவாய்மொழிக்கு ஏற்றம்.
– கடந்த திருவாய்மொழியில் இந்தப் பராங்குச நாயகியானவள், “இட்ட கால் இட்ட கை" என்று மோகம் அடைந்து கிடந்தாள். இவளுக்கு முன்னரே இவளுடைய தோழிமார்களும் விழுந்து கிடக்க, இவளுடைய திருத்தாயார் மட்டுமே இவளுடைய நிலையை நினைத்து, இவள் அருகே இருந்தபடி அழைத்தாள்; அது மட்டும் அல்லாமல், இந்தப் பெண்பிள்ளை தானாகவே எழுந்திருந்து கால்களால் மெல்ல நடந்து செல்ல முயன்றபோது கீழே விழுந்தாள். ஆனால் மயக்கம் அடைந்து கிடந்தவர்களுக்கு தெளிவு ஏற்பட்ட காரணம் என்ன என்பதைக் கூறுகிறார்; “பற்றிலார் பற்ற நின்றானே” என்று பெரியபெருமாளுடைய, “சரணம் புகாதவர்களுக்கும் சரணம் புகும் இடமாக உள்ள தன்மை” தொடக்கமாக, இவளுக்குக் கொள்கொம்பாக உள்ள பல திருக்கல்யாண குணங்களையும், ஸௌந்தர்யம் போன்ற திருமேனி குணங்களையும் இவள் வாய்விட்டுப் புலம்பி, அது மட்டும் அல்லாமல் திருத்தாயார் சொற்களைக் கேட்டும் தரித்தாள். ஆனால் இவ்விதம் குணங்கள் உயிர் பிழைக்கும்படிச் செய்யுமோ என்பதற்கு விடை தருகிறார்; போன உயிரை மீட்கும்படியாக அல்லவோ குணங்கள் இயல்பு கொண்டவையாக உள்ளன! – கடந்த திருவாய்மொழியில் பிறந்த மயக்கம் தெளிந்து பிரிவின் துன்பம் குறித்து நினைக்கவல்லவளாக, தொடர்ந்து, “அவனை அடைந்தால் அல்லாமல் நான் நிற்கமாட்டேன்” என்பதான பிரிவாற்றாமையும் ஏற்பட்டு, அதுவும் பெறாத காரணத்தால் துக்கம் நிறைந்தவளாக நின்றால். அப்போது, இவளுடைய இந்தத் தவிப்பிற்கு ஈடாக, இதனைத் தவிர்க்கும்படியாக , மிகவும் அருகில், தென்திருப்பேரெயில் என்ற திவ்யதேசத்தில் வீற்றுள்ள மகரநெடுங்குழைக்காதனுடைய புன்னகை மற்றும் கடைக்கண் பார்வைகளால் ( இந்த இரண்டு குறித்து, இருபத்து நாலாயிரப்படி வ்யாக்யானத்தில் ஸ்மித வீஷணாதிகள் என்று கூறப்பட்டது; ஈட்டில் அபேக்ஷிதாதிகள் என்று உள்ளது) அலங்கரிக்கபட்ட சிந்தனை நிறைந்தவளாக, “அவன் உள்ள இடத்திற்கு நான் செல்லவேண்டும்” என்ற உறுதியுடன் இருந்தாள். இதனைப் பார்த்த தோழிமார்களும் தாய்மார்களும் முன்பு போன்றே இவளிடம் வந்து, இவளைச் சூழ்ந்து நின்று, “உனக்கு இந்த அளவிற்கு ஈடுபாடு ஏற்படக்கூடாது. இது பெரும்பழியாக வந்து சேரும்” என்றனர். இதனைக் கேட்ட இந்தப் பெண் அவர்களிடம், “உங்களுடைய இந்தச் சொற்களால் எந்தப் பயனும் ஏற்படாது. நான் அவன் விஷயத்தில் அபகரிக்கப்பட்ட சிந்தனை உடையவள் ஆவேன். அதனால், நானே அங்கு சென்றேன் என்ற பேச்சு வராமல், நீங்கள் என்னுடைய சிந்தனைக்கு உட்பட்டவர்களாக, நீங்களாகவே என்னை அங்கு கொண்டு சென்று சேர்ப்பீகளாக", என்று தனக்குப் பிறந்த துணிவை அவர்களுக்குத் தெளிவாக உணர்த்தும்படியாக உள்ளாள். – இதற்கு இவ்விதம் பொருள் கொள்ளாமல், பிள்ளான் வேறுவிதமாகக் கூறுகிறார். “அணுகி அடைந்தனள்” என்பதற்கு, “நேரடியான சேர்க்கை” என்று பொருள் கொண்டு கூறுகிறார். “முகில்வண்ணன் அடியே இவள் அணுகி அடைந்தனள்” என்று கூறியதால், ஸுந்தரகாண்டம் (32-17) - ஸமாத்வாத சதத்ராஹம் - அங்கு இராமனுடைய மாளிகைகளில் பன்னிரண்டு ஆண்டுகள் இனிமையை அனுபவித்தேன் - என்று கூறுவதற்கு ஏற்ப, பெரியபெருமாளுடன் நீண்டகாலம் பரிபூர்ணமான சேர்க்கை உண்டானது. ஆனால் இவ்விதம் சேர்ந்த பின்னர் பிரியவேண்டியது ஏன் என்பதற்கு விடை தருகிறார்; பிரிந்து சேராவிட்டால், இரண்டு பேருக்கும் அழிவு ஏற்படும் என்றாயிற்று. ஆனால், ஒரே பொருள் என்று கூறலாம்படி கலந்த பின்னர் பிரிவு எற்படுமோ என்பதற்கு விடை தருகிறார்; இனி அனைத்து அளவிலும் ஒரே நீராகக் கலத்தல், அதாவது ஒரே பொருள் என்று கூறலாம்படி ஆதல் என்பது, தர்மிகள் இரண்டும் சேர்ந்து அல்லவோ? எனவே பிரியாமல் இருந்தால், தர்மியே அழியும் நிலை ஏற்படும் என்றானது. அப்போது நாயகனாகிய எம்பெருமானுக்கு, இரண்டு பேரும் பிழைக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளதால், பிரிவு என்பதைக் குறித்துப் பேசினான். இதனைக் கேட்ட இவள், “பிரிவு என்பது கூடாது” என்று கூறாமல், பிரிவில் சற்றும் விருப்பம் இல்லாதவள் என்றாலும், “இத்தகைய பிரிவும், சேர்க்கை என்ற கலவியில் ஒரு வகையோ" என்று எண்ணினாள். இதற்கு அனுமதியும் அளித்தாள். இவளுடைய அனுமதியைப் பெற்றவுடன் அவனும் வேட்டையாடுதல் என்ற ஒரு காரணத்தைக் கைக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டான். இவளும் திருவரங்கத்தின் கர்பக்ரஹத்தின் முன்வாசல் முடிய வந்து ஒருப்படுத்தி நின்று திரும்பினாள். சரி, இவளும் பிரிவதற்கு அனுமதி அளித்தாள் என்றால், ஏன் துக்கம் கொள்ளவேன்டும் என்பதைக் கூறுகிறாள்; எந்த நிலையாகவோ அல்லது கலவி இலக்கணம் என்பதாகவோ உள்ளபோதிலும், பிரிவானது தனது செயல்பாட்டைக் காண்பிக்காமல் இருக்காது அல்லவோ? ஆகவே அதன் பின்னர் இவள் துக்கம் அடைந்தாள். இதனைக் கண்ட தோழிமாரும் தாய்மாரும், “உனது எண்ணத்தில் உள்ளது என்ன?”, என்றனர். இதற்கு இந்தப் பெண் விடை தருகிறாள்; “ஸ்ரீஜநகராஜனுடைய திருமகளான ஸீதை, இராமனுடன் கானகம் சென்று, அவர் இருந்த இடம், நின்ற இடம், உலவிய இடம் என்று அனைத்து இடங்களிலும் அவருடன் இருந்தவளாக அனுபவித்தாள். இதனைப் போன்றே நானும் அவன் இருந்த இடம் சென்று சேர்வது அல்லாமல் நிற்கமாட்டேன்", என்றாள். இதற்கு இவர்கள், “இது உனது பணிவிற்குச் சேராது. நீ கூறும் சொற்கள் அனைத்தும் சொற்களே அல்ல", என்றனர். இதற்கு இவள், “நமது கூட்டத்தைச் சேர்ந்தவர்களை நீங்கள் ஏற்பதால், என்னைப் பெற்ற பயன் என்ன? நாம் அங்கு செல்வதைத் தவிர்க்கப் போவதில்லை. நீங்கள் என்னை அங்கு கொண்டு சென்று சேர்ப்பீர்களாக", என்றாள். இதற்கு இவர்கள், "நாங்கள் அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம்”, என்றனர். இதற்கு இவள், “அப்படியென்றால் நானே அங்கு செல்கிறேன்”, என்றாள். இப்படியாகப் பிள்ளான் கருத்தாகும். – முன்பு எடுத்த ஸுந்தரகாண்டம் (33-17) - ஸமா த்வாதச சதத்ராஹம் - என்பதற்கான வ்யாக்யானம் அருளிச்செய்கிறார்; (ஸமா த்வாதச சதத்ராஹம்) - இப்போது அவனுடைய தரிசனம் என்பது எப்போதாவது மட்டும் கிட்டும் என்னும்படியாக அரிதாக உள்ளது. இப்படி உள்ள நான், முன்பு அவருடைய மாளிகையில் பல காலம் அவருடன் சேர்ந்து அனுபவித்தேன். (ராகவஸ்ய நிவேசநே) - எங்கள் மாமனார் மாளிகையில் அவர் அனைத்துத் தடைகளையும் விலக்கித் தர, நீண்ட காலம் அனுபவித்தேன். (புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வகாம ஸம்ருத்திநீ) – தைத்திரீயத்தில் – ஸர்வாந் காமாந் - - அனைத்து விருபங்களையும் – என்று கூறுவதற்கு ஏற்ப, அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கப்பெற்றேன். ஆனால், உபநிஷத்தில் “ஸர்வாந்காமாந்” கூறப்பட்டது பரமபதத்தைக் குறித்து அல்லவோ என்றால்,அது போன்றே இங்கும் இருந்தது என்று கருத்து. அயோத்யாகாண்டம் (2-26) - பஹவோ ந்ருப கல்யாணகுணா: - அரசே! கல்யாணகுணங்கள் பல உண்டு - என்பதற்கு ஏற்ப, குணங்கள் இரட்டிப்பாக ஆகிய இடம் இங்கு அல்லவோ? – ஆக இதன் மூலம் கூறப்பட்டது என்ன? நமக்கு புலன் விஷயங்களிலிருந்து நம்முடைய இந்த்ரியங்களை மீட்டு எடுக்க இயலாதபடியாக உள்ளது போன்று, இவரை பகவத் விஷயத்திலிருந்து மீட்டு எடுக்க இயலாதபடி உள்ளது. இதன் காரணம் நம்முடைய இந்த்ரிய ஈடுபாடானது கர்மம் காரணமாக வருவதாகும், இவருடைய பகவத் விஷய ஈடுபாடானது பகவத் க்ருபை காரணமாக வருவதாகும். திருத்தாயாராக உள்ள நிலை மற்றும் தலைமகளாக உள்ள நிலை ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர்த்தத் திருவுள்ளம் கொண்டவராக, அவற்றை மீண்டும் கூறுகிறார். திருத்தாயாராக இவர் பேசும் பேச்சாக வருபவை, இவருக்கு பிறந்த ஒரு சிறப்பான நிலையாகும்; தலைமகளாக இவர் கூறும் சொற்களும் இவருக்குப் பிறந்த சிறப்பான நிலையாகும்; இவ்விதம் ஒவ்வொன்றும் ஒருவருக்கே ஏற்படும் நிலை மாறுபாடுகள் என்று கூறும்போது, “விலகுவதும், ஈடுபடுவதும்” ஒருவருக்கே ஏற்படுமோ என்று கேட்கலாம்; அதாவது திருத்தாயார் நிலையில் உள்ள இது இந்தப் பெண்ணின் ஈடுபாட்டை விலக்க முயல்வதும், தலைமகளாக உள்ளபோது ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளுதலும் ஒருவருக்கே ஏற்படுமோ என்று கேட்கலாம்; இதற்கு விடை தருகிறார். இவற்றைத் தள்ளுவதாகத் திருத்தாயார் முகத்தால் கூறுவது என்னவென்றால், “ஸ்வரூபமான ஈடுபடானது உபாயத்தில் சேர்ந்து விட்டால் என்ன செய்வது?”, என்பதாகும்; தலைமகள் கருத்தால் கூறுவது என்னவென்றால், “உபாயம் அவனாகவே உள்ளபோது, ஈடுபாடும் ஸ்வரூபம் ஆகும் அல்லவோ?", என்பதாகும். ஆக, இந்த இரண்டு ஆழ்பொருள்களையும், இந்த இரண்டு முகங்கள் முலம், ஆழ்வார் தாம் எண்ணியதைக் கூறினார். மோகம் தெளிந்து, தானே அழைக்கவல்லவளாகிய இந்த நிலையே இந்தத் திருவாய்மொழிக்கு ஏற்றம் ஆகும்.