பெரியாழ்வார் திருமொழி - முதல்பத்து (பாசுரம் 15)
முதல்பத்து
இரண்டாம் திருமொழி
நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால் நாக்கு வழித்து நீராட்டும் இந் நம்பிக்கு வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்த ஆ காணீரே மொய் குழலீர் வந்து காணீரே
– யசோதைப்பிராட்டி, தனது க்ருஷ்ணனின் திருமேனி மென்மைக்குத் தகுந்ததா என நோக்கி அரைத்த மஞ்சளால் அவன் நாக்கினை வழித்து, நீராட்டும்போது, அவன் அவளுக்குக் கட்டுண்டுக் கிடப்பான். இப்படிப் பரிபூர்ணமான குணங்கள் கொண்ட நம்பியின் மிழற்றலையும், கண்களையும், வாயின் இதழ் அசையும்படிச் சிரிக்கும் புன்முறுவலையும், மூக்கினையும் வந்து காணுங்கள். செறித்த கூந்தலையுடைய பெண்களே! நீங்கள் வந்து காணுங்கள்.
திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேச அவதாரிகை - திருப்பவளத்தில் நின்றும் போந்து திருமுக மண்டலத்தில் ஸமுதாய சோபையை அநுபவிக்கிறார். மாமுனிகள் வ்யாக்யான அவதாரிகை - திருப்பவளத்தினழகை அநுபவித்த வநந்தரம் திருமுக மண்டலத்தில் ஸமுதாய சோபையை அநுபவிக்கிறார்.
– திருவாயின் இதழ் அழகினை அனுபவித்த பின்னர் திருமுக மண்டலத்தின் மிகுதியான அழகினை அனுபவிக்கிறாள்.
திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேசம் - பிள்ளையைத் திருமஞ்ஜநம் செய்விப்ப தாக உபக்ரமித்து திருமேனிக்குத் தகுதியாக மஞ்சட்காப்பும் நேராக வரைத்து மற்றும் வேண்டும் உபகரணங்களும் சேர்த்து வைத்துத் “திருமேனிக்குத் தகுதியோ” என்று இவற்றையும் பார்த்த அசோதை இம்மஞ்சளாலே திருநாவும் வழித்து நீராட்டுகிறபோது, அவளுக்கு வசவர்த்தியான குணங்களை யுடையனாகையாலே பூர்ணனுக்கென்கிறது. மாதா முதலானாரை நாமக்ரஹணம் பண்ணுகிறவாக்கும், “என்னைப் பாரீர்”, “என்னைப் பாரீர்” என்கிறவர்களைக் கடாக்ஷிக்கிற திருநயங்களும், மந்தஸ்மிதம் பண்ண உபக்ரமிக்கிற திருவதர ஸ்ப்புரத்தையும், அந்த ஸ்ப்புரத்தையோடே கூடின மந்தஸ்மிதமும், ஒரு விசேஷணமிட்டுச் சொல்லவேண்டாத திருமூக்கின் அழகுமிருந் தப்ரகாரத்தை அநுபவிக்க அழைக்கிறார். (மொய்குழலீர்) கைங்கர்யத்துக்கு பூர்வக்ஷணவர்த்தியாய் ப்ரார்த்தநா ரூபையான ப்ரபத்திகள். மாமுனிகள் வ்யாக்யானம் - (நோக்கியித்யாதி) திருமேனியின் ஸௌகுமார்யமறியும் யசோதைப்பிராட்டி அதுக்குத் தகுதியாம்படி பார்த்து, நேராக அரைத்த மஞ்சள்காப்பாலே திருநாவை வழித்து திருமஞ்ஜநம் செய்யும்படி விதேயதயா பூர்ணனான இவனுக்கு. (வாக்குமித்யாதி) மாதா முதலானாரை நாமக்ரஹணம் பண்ணுகிற வாக்கும், “என்னைப் பாரீர் என்னைப் பாரீர்” என்ன, அவர்களைக் கடாக்ஷிக்கிற திருநயநங்களும், மந்தஸ்மிதம் செய்ய உபக்ரமிக்கிற திருவதரஸ்ப்புரணத்தையும், அந்த ஸ்ப்புரத்தையோடே கூடின மந்தஸ்மிதமும், “மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ வறியேன்” என்று நித்ய ஸந்தேஹ ஜநகமான திருமூக்குமாகிற இச்சேர்த்தியழகிருந்தபடி காணுங்கோள்; செறிந்த குழலையுடைய நீங்கள் வந்து காணுங்கோள்.
– (நோக்கி அசோதை) - பிள்ளையை நீராட்டவேண்டும் என்று நீராட்டத் தொடங்கும்போது, திருமேனியின் ம்ருதுவான தன்மையினை உணர்ந்துள்ள யசோதை, அத்திருமேனிக்குத் தகுதியான மஞ்சளைச் சீராக அரைத்து ஏனைய சாதனங்களையும் ஒன்றாய் தன் கண்முன்னே சேர்த்து வைத்து, “இவைகள் நம் பிள்ளையின் திருமேனிக்குத் தகுமோ?” என்று நோக்கினாள். (நுணுக்கிய மஞ்சளால் நாக்கு வழித்து) - இப்படி யசோதை அந்த மஞ்சள்காப்பாலே நாவினை வழித்து நீராட்டு செய்யும்போது, இவளுக்கு வசப்பட்டபடி உள்ளதால், இத்தகைய குணங்களைப் பரிபூர்ணமாகக் கொண்டுள்ள நம்பியான கண்ணனுடைய. (வாக்கும்) – “அம்மே”, “யசோதா” என்று மிழற்றிச் சொல்லும் வாயினையும், இவ்வாறு அழைக்கப்படாதவர்கள் “என்னைப் பார், என்னைப் பார்” என்றதும், அவர்களைக் கடாக்ஷிக்கும் கண்களையும், இப்படிக் காண, மந்தமாய் சிரிக்கத் தொடங்கும் வேளையில் அசையும் இதழினையும், இந்த அசைவால் பெருகும் முறுவலையும், (திருவாய்) – “மாட்டு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்” என்று எவ்விதத்திலும் வர்ணிக்க இயலாத திருமூக்கின் அழகினையும், இவையெல்லாம் கூடியிருக்கிற முகத்தினைக் காணவாருங்கள். (மொய்குழலீர்) - செறிந்த கூந்தலையுடைய நீங்கள் வந்து காணுங்கள். கைங்கர்யத்திற்கு ஆசையுற்று, அதனை நிறைவேற்றும் வழியாக ப்ரபத்தியைப் பின்பற்றுவர்கள் ஆவர்.