திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 11)
ஏழாம்பத்து
இரண்டாம் திருவாய்மொழி
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொரு நல் துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் முகில் வண்ணன் அடிமேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார் முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே
தாராள குணம் கொண்ட மேகம் போன்ற இயல்பு கொண்ட பெரியபெருமாளுடைய திருவடிகளையே அடைந்து, அதற்குக் காரணமான அவனுடைய க்ருபையைப் பெற்று உய்ந்தவரும்; மிகுந்த புனல் நிறைந்த தாமிரபரணியில், துகில் போன்று நிறம் கொண்ட பரிசுத்தமான நீரைக் கொண்ட இடத்தை உடையவரும்; மது நிறைந்த மலர்கள் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட எல்லையற்ற செல்வம் நிறைந்த திருநகரிக்கு நிர்வாஹகரும் ஆகிய நம்மாழ்வார், கார்மேகம் போன்ற எல்லையற்ற அழகுடன் கூடிய பெரியபெருமாளுடைய திருவடிகள் விஷயமாக அருளிச்செய்த ஆயிரம் பாசுரங்களில் உள்ள இந்தப் பத்தை, பொருளுடன் கற்கவல்லவர்கள், மழை மேகம் போன்று நிறம் கொண்ட பரமபதத்தில் நித்யஸூரிகளால் சூழப்பட்டு, எல்லையற்ற ஆநந்த வெள்ளத்தில் இருப்பார்கள்.
– நிகமத்தில், இத்திருவாய்மொழி யப்ஸிக்கவல்லார், இவர் பட்ட க்லேசம் படாதே திருநாட்டிலே நிரதிசயாநந்த யுக்தராய், நித்யஸூரிகள் சூழ இருக்கப் பெறுவர் என்கிறார்.
– இறுதியாக, “இந்தத் திருவாய்மொழியைப் பொருளுடன் கற்கவல்லவர்கள், இவர் அடைந்த பிரிவாற்றாமை போன்ற துயரங்களை அடையாமல், எல்லையற்ற ஆநந்தம் நிறைந்தவர்களாக, நித்யஸூரிகள் சூழ வாழ்வர்”, என்கிறார்,
(முகில்வண்ணன் இத்யாதி) பெரியபெருமாள் திருவடிகளைக் கிட்டி அங்குத்தை ப்ரஸாதத்தைப் பெற்று தரித்தவன். பூர்வாவஸ்தையில், ஸத்தையும் அழியும்படியா யிருக்கையாலே உய்ந்தவனென்கிறது. மொய்யென்று மிகுதிக்கும், வலிக்கும் பேர். இப்போது நீரோட்டத்தால் வந்த வலியை நினைக்கிறது. வலியையுடைத்தான ஜலத்தோடே கூடின பொருநலில் துகிலினுடைய வண்ணத்தையுடைத்தான தூநீர்த் துறைவன். சேர்ப்பன் - துறைவன். நெய்தல் நிலத்தில் தலைமகன். மொய்புனலென்னாநிற்க, தூநீரென்றது பெருவெள்ளமாயிருக்கச் செய்தே தெளிந்திருக்கும்படியைப் பற்ற. “ரமணீயம் ப்ரஸந்நாம்பு ஸந்மநுஷ்யமநோயதா” என்கிறபடியே, தர்சநீயமான பொழிலையுடைத்தாய் உதாரமான திருநகரிக்கு நாதன். (முகில் இத்யாதி) காளமேகம் போலே நிரதிசய ஸௌந்தர்ய யுக்தரான பெரியபெருமாள் விஷயமாக அருளிச்செய்த சப்தாத்மகமான மாலைகளாயிரத்து இப்பத்தையும் பாவ வ்ருத்தியோடே அப்யஸிக்கவல்லவர்கள். “பெரியபெருமாள் திருவடிகளிலே திருவாய்மொழி யாயிரமுஞ் சொல்லிற்று. ‘திருமோகூர்க்கீத்த பத்து’, ‘திருவேங்கடத்துக்கிவை பத்தும்’ என்று பிரித்துக் கொடுத்த இத்தனை; பெருமாள் திருப்பலகையில் அமுதுபடியிலே மற்றைத் திருப்பதிகள் நாயன்மார்க்கும் அளந்து கொடுக்குமாப்போலே” என்று பிள்ளையருளிச்செய்வர். (முகில்வண்ண வானத்து) அங்கிருக்கிறவனுடைய நிழலீட்டாலே அவன்படியாயிருக்கிற வானம் என்னுதல்; முகில்வண்ணனுடைய வானமென்னுதல். (இமையவர் இத்யாதி) இவள் மோஹித்துக் கிடக்கத் திருத்தாயார் தனியேயிருந்து கூப்பிட்ட எளிவரவு தீர, நித்யஸூரிகள் திரளவிருக்க, அவர்கள் நடுவே ஆநந்த நிர்ப்பரராயிருந்து அநுபவிக்கப் பெறுவர்கள்.
– (முகில்வண்ணன் இத்யாதி) – பெரியபெருமாள் திருவடிகளைக் கிட்டி, அங்கு அவன் க்ருபையை பெற்று உயிர் தரித்தவர். கடந்த பாசுரத்தில் துயரம் நிறைந்து உள்ளபோது, இங்கு “உய்ந்தவன்” என்று “பிழைத்த என்ற நிலை” ஏற்பட்டதாகக் கூறலாமோ என்பதற்கு விடை தருகிறார்; முன்பு தனது இருப்பு என்பது கூட இல்லாமல், அழியும்படியாக இருந்தவர் என்பதால் இங்கு “உய்ந்தவன்” என்கிறார். (மொய் புனல் பொருநல் துகில் வண்ணம் தூநீர் சேர்ப்பன்) - மொய் என்பதற்கு மிகுதி மற்றும் வலிமை ஆகிய இரண்டு பொருள். இங்கு நீரோட்டத்தால் வந்த வலிமையானது கூறப்பட்டது. வலிமை கொண்ட நீருடன் கூடிய தாமிரபரணி நதியில், துகிலினுடைய வண்ணத்தைக் கொண்டதான தூநீர் துறைவன். “சேர்ப்பன்” என்பது துறைவன் மற்றும் நெய்தல் நிலத்தின் தலைவன் என்று இரண்டு பொருள் தரும்; இங்கு “துறைவன்” என்ற பொருள் தருவதாக உள்ளது. “மொய் புனல்” என்று கூறிய பின்னர், “தூநீர்” என்று கூறியதால், பெரிய வெள்ளமாக உள்ளபோதிலும் தெளிந்தபடி உள்ள நிலை கூறப்பட்டது. இவ்விதம் தெளிவாக உள்ளதற்கு ப்ரமாணம் பாலகாண்டம் (2-5) - ரமணீயம் ப்ரஸந்நாம்பு ஸந்மநுஷ்யமநோயதா - களங்கம் அற்ற, தெளிந்த நீருடைய, அழகான பெரியோர்களின் மனம் போன்றுள்ள இந்த தீர்த்தத்தைப் பாரும் – என்பதாகும். (வண்பொழில் சூழ் வண் குருகூர் சடகோபன்) - காண்பதற்கு இனிமையான பொழில்கள் கொண்ட தாராளமான குணம் கொண்ட திருநகரிக்கு நாதன். – (முகில் இத்யாதி) - காளமேகம் போன்று எல்லையற்ற ஸௌந்தர்யம் நிறைந்த பெரியபெருமாள் விஷயமாக அருளிச்செய்த சொற்கள் கொண்ட மாலையாக ஆயிரத்தில் இப்பத்தையும், இதன் ஆழ்கருத்துடன் கற்கவல்லர்கள். ஆனால் ஆயிரம் பாசுரங்களும் பெரியபெருமாள் குறித்தே உள்ளது என்றால், திருவேங்கடமுடையான் போன்றவர்களுக்கு ஏதும் இல்லை என்றாகுமே என்பதற்கு விடை தருகிறார்; “பெரியபெருமாள் திருவடிகளில் ஆயிரம் பாசுரங்களையும் கூறி முடித்தார்; பின்னர் திருவாய்மொழி (10-1-11) - திருமோகூர் திருமோகூர்க்கீத்த பத்து – என்றும், திருவாய்மொழி (6-10-11) - திருவேங்கடத்துக்கிவை பத்தும் - என்று பிரித்துக் கொடுத்தார். அதாவது பெரியபெருமாள் திருப்பலசையில் அமுது பாறையில், மற்ற திவ்யதேச பெருமாள்களுக்கு அளந்து கொடுப்பது போன்று ஆகும்” என்று பிள்ளை அருளிச்செய்வார். – (முகில் இத்யாதி) - அங்குள்ளவன் நிழல் படிவதால் அவன் போன்றே உள்ள வானம் என்று கூறலாம். அல்லது முகில்வண்ணனுடைய வானம் எனலாம். (இமையவர் இத்யாதி) - இவள் மயக்கத்தில் கிடக்க, திருத்தாயார் தனியே நின்று அவனை அழைத்த களைப்புடன் துயரமும் என்பது போன்ற ஏதும் இல்லாமல், நித்யஸூரிகள் திரளாக நிற்க, அவர்கள் நடுவில் ஆனந்தத்தை உடையவர்களாக இருந்து, அவனை நன்கு அனுபவிக்கப் பெறுவார்கள். திருவாய்மொழி ஏழாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி ஸம்பூர்ணம்