திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 10)

ஏழாம்பத்து

இரண்டாம் திருவாய்மொழி

முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும் மூவுலகு ஆளியே என்னும் கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும் நான்முகக் கடவுளே என்னும் வடிவு உடை வானோர் தலைவனே என்னும் வண் திருவரங்கனே என்னும் அடி அடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே

– ப்ரத்யக்ஷமாக அவன் தனது திருமுகத்தை காண்பிக்கவேண்டும் என்ற தீர்மானம் கொண்ட இந்தப் பெண்ணானவள், தனக்கு ஏற்ற முடிவு ஏதும் அறியவில்லை என்கிறாள். “மூன்று லோகங்களுக்கும் ஈச்வரனாகிய இந்தினுக்கு அந்தர்யாமியாக நின்று இவை அனைத்தையும் நிர்வாகம் செய்பவனே!” என்கிறாள். “பரிமளம் ப்ரவாஹமாக வரும்படியான கொன்றைமலர்க் கொத்தைச் சூடியுள்ள ஜடைமுடி கொண்ட ருத்ரனுக்கு அந்தர்யாமியாக உள்ளவனே!”, என்கிறாள். “இவர்கள் இருவருக்கும் எஜமானனாக உள்ள நான்முகனுக்கு ஆத்மாவாக உள்ளவனே!”, என்கிறாள். “தன்னோடு ஒத்த வடிவம் கொண்ட நித்யஸூரிகளுக்குத் தலைவனே!”, என்கிறாள். அந்த மேன்மைகளோடு கூடியவனாக, தன்னை விரும்புபவர்களுக்குத் தன்னையே அளிக்கின்ற தாராள மனம் கொண்டவனாக, திருவரங்கம் கோயிலுக்கு நிர்வாஹகனாக உள்ளவனே!", என்கிறாள். இவ்விதம் நீர்மையையும், மேன்மையையும், தாராளத்தையும் எண்ணியபடி, அவற்றில் மட்டுமே ஈடுபட்டு, அதன் விளைவாக அவன் திருவடிகளைக் கிட்ட இயலாது என்பது போன்று கிடக்கும் இவள், நீர் நிலம் என்ற வேறுபாடு ஆராயாமல் உபகாரம் செய்யும் மழைமேகம் போன்ற வடிவம் கொண்ட அவன் திருவடிகளைக் கிட்டி அடைந்தாள்.

– இனிக் கிட்டமாட்டாளோ என்னும்படி அவஸந்நையான இவள், பெரியபெருமாள் திருவடிகளை ஸம்ச்லேஷிக்கப் பெற்றா ளென்கிறாள்.

– “இனி, இவள் பெரியபெருமாளைக் கிட்டமாட்டாளோ” என்று கூறும்படியான துக்கத்தை அடைந்திருந்த இந்தப் பெண், பெரியபெருமாள் திருவடிகளில் கலக்கப் பெற்றாள்”, என்கிறாள்.

(முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும்) பெண்பிள்ளை வார்த்தையைத் திருத்தாயார் அநுபாஷிக்கையாலே, “இவள், தனக்கு முடிவு ஒன்றறிகிலேன்” என்னா நின்றாளென்கிறாள். இத்து:க ஸாகரத்தைக் கரை காணும் விரகு அறிகிலேனென்னுதல்; முடிந்து பிழைக்கும் விரகு அறிகிலேனென்னுதல். (மூவுலகு இத்யாதி) “மூவுலகாளியே! கடிகமழ் கொன்றைச் சடையனே! நான்முகக்கடவுளே! என்னும். வடிவுடைவானோர்க்குத் தலைவனே! என்னும்” என்று திருமாலையாண்டான் வையதிகரண்யமாக்கி நிர்வஹிக்கும்; என்னும் என்னுமது என்னுமவனாய். எம்பெருமானார் கேட்டருளி ஸாமாநாதிகரண்யத்தாலே அருளிச் செய்தருளினார்; “த்ரைலோக்யத்துக்கும் கடவனான இந்திரனுக்கு அந்தர்யாமியாய் நின்று அவனுடைய அதிகாரத்தை நிர்வஹிக்கிறவனே! என்னும், பரிமளத்தையுடைத்தான கொன்றையை ஜடையிலேயுடைய ருத்ரனுக்கு அந்தர்யாமியாய் நின்று அவனுடைய பதத்தை நிர்வஹிக்கிறவனே! என்னும், அவர்களோடு இவ்வருகுள்ளாரோடு வாசியற எல்லார்க்கும் நிர்வாஹகனாயிருக்கிற சதுர்முகனாகிற தேவதைக்கு அந்தர்யாமியானவனே! என்னும்”. (வடிவுடை இத்யாதி) பகவதநுபவத்தால் வந்த ஹர்ஷம் வடிவிலே தோற்றும்படியிருக்கிற நித்யஸூரிகளுக்கு நாதனானவனே! என்னும். வடிவுடை வானோர் தலைவனே என்றத்தோடு, மூவுலகாளியே என்றத்தோடு, கடிகமழ் கொன்றைச் சடையனே என்றத்தோடு, நான்முகக்கடவுளே என்றத்தோடு வாசியற்றிருக்கிறதாயிற்று இவர்க்கு; மயர்வற மதிநலம் பெறுகையாலே, விசேஷணாம்சத்தில் பர்யவஸிக்குமவ ரல்லரே; ஸர்வ நிர்வாஹகனென்று உணர்ந்திருக்குமவராயிற்று இவர். (வண் திருவரங்கனேயென்னும்) நித்யஸூரிகளே அநுபவித்துப் போகையன்றிக்கே, நித்யஸம்ஸாரிகளும் இழவாமைக்கன்றே இங்கு வந்து கண்வளர்ந்தருளுகிறது. இங்குச் சாய்ந்தருளினதின் பலம் நான் பெறவேண்டாவோ? என்னும். ஆசைப்பட்டார்க்குத் தன்னைக் கொடுக்கும் ஔதார்யம். (அடியடையாதாளித்யாதி) “ஜீவிப்பாரைப் போலேயிருந்து, கடுக முடிந்து கொடுநின்றாள்” என்று நிர்வஹிப்பாருமுண்டு; அப்போது, மேல்ப்ரபந்தம் நடவாது; ஆகையாலே “திருவடிகளைக் கிட்டாதாரைப் போலேயிருந்து கிரமத்திலே கிட்டிக் கொண்டு நின்றாள்” என்று அருளிச்செய்யும்படி. இதுதான் மாநஸாநுபவத்திலே ஒரு வைசத்யத்தைச் சொன்னபடி. (அடியடையாதாள்போல்) இவள் இப்போதே திருவடிகளைச் சேரமாட்டாள்; இன்னம் சிறிது காலமிருக்கும் போலேயிருந்தது; முடிந்து கொடுகின்றாளென்னுதல். இனி “ஸம்ச்லேஷிக்கப் பெறாளோ?” என்று தோற்றும்படி அவஸந்நையான இவள், கிட்டி ஸம்ச்லேஷிக்கப் பெற்றாள் காளமேகநிப ச்யாமமான பெரியபெருமாள் திருவடிகளையே என்னுதல்.

– (முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும்) – “முடிவு இவள் எனக்கு” என்று கூறாமல், “முடிய இவள் தனக்கு” என்று கூறுவதன் காரணம் கூறுகிறார்; அந்தப் பெண்பிள்ளை கூறும் சொற்களையே அவளுடைய திருத்தாயாரும் மீண்டும் கூறுவதால், “இவள் தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன்” என்கிறாள்; இதனை, “இவள் தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன் என்னும்” என்று வரிசைப்படுத்த வேண்டும். “முடிவு அறிகிலேன்” என்பதற்கு இரண்டுவிதமான பொருள்களைக் கூறுகிறார். இவளுடைய துக்கம் என்னும் ஸமுத்திரத்தின் எல்லையைக் காண்பதற்கான வழியை நான் அறியவில்லை; அல்லது இவள் முடிந்து பிழைக்கும் வழி என்ன என்பதை நான் அறியவில்லை. – (மூவுலகு இத்யாதி) – இதற்குத் திருமாலையாண்டான் பொருள் கொள்ளும்போது “என்னும்” என்பது “சொல்லப்படுவதாக” என்கிறார்; அதாவது “மூவுலகாளியே! கடிகமழ் கொன்றைச் சடையனே! நான்முகக்கடவுளே” என்று கூறும்படி வடிவு கொண்ட வானவர்களாகிய இந்த்ரன் போன்றவர்களுக்குத் தலைவனே என்று கூறுவதாகக் கொள்ளவேண்டும். இங்கு இவர் வையதிகரண்யம் என்று கூறப்படுவதான “வெவ்வேறான பொருள்களைக் கூறும் சொற்கள்” என்ற அடிப்படையில் பொருள் கொள்கிறார். இவ்விதம் கொள்ளும்போது, “மூவுலகாளியே” என்பதில் உள்ள ஏவகாரமானது “ஒன்று, இரண்டு” என்பது போன்ற எண்ணிக்கையைக் குறிப்பதாக அமைகிறது; மேலும், “என்னும்” என்பதற்கு “எண்ணுபவனாய்” என்பதாகப் பொருள் கொண்டார். இந்த விளக்கத்தை எம்பெருமானார் கேட்டருளினார். இந்தக் கருத்தானது, ஒவ்வொரு பாசுரத்திலும் “என்னும் என்னும்” என்று திருத்தாயார் கூறுவதற்குப் பொருந்தாது என்று திருவுள்ளம் கொண்டார். ஆகவே ஒரே பொருளைக் கூறுகின்ற பல சொற்கள் கொண்டதான ஸாமாநாதிகரண்யத்தால் விளக்கம் அருளிச்செய்தார். இந்தக் கருத்தானது, “மூன்று லோகங்களுக்கும் உரிமை கொண்ட இந்த்ரனுக்கும் அந்தர்யாமியாக நின்று அவனுடைய அதிகாரத்தை நிர்வாகம் செய்பவனே என்கிறாள். பரிமளம் பொருந்திய கொன்றைமலரைத் தனது ஜடையில் அணிந்துள்ள ருத்ரனுடைய அந்தர்யாமியாக இருந்து அவன் இடத்தை நிர்வாகம் செய்பவனே என்கிறாள். அவர்களுடன் இங்குள்ளவர்கள் என்ற வேறுபாடு இன்றி அனைவருக்கும் நிர்வாஹகனாக உள்ள நான்முகனுடைய அந்தர்யாமியாக இருப்பவனே என்றாள்”, என்னும் விளக்கம் அளிப்பதாக உள்ளது. (வடிவுடை இத்யாதி) – சரி, “வானோர் தலைவனே” என்று அவனுக்கே உரிய திருமேனி கொண்டவனாகவும், “மூவுலகு ஆளியே” என்று பொதுவாக உள்ள திருமேனியைக் கொண்டவனாகவும் ஒருசேர ஏன் அனுபவிக்கவேண்டும் என்பதற்கு விடை தருகிறார்; பகவத் அனுபவம் ஏற்பட்ட காரணத்தால் வந்த மகிழ்ச்சியானது வடிவத்தில் தோன்றும்படியாக உள்ள நித்யஸூரிகளுக்கு நாதனாக உள்ளவனே என்கிறாள். “வடிவுடை வானோர் தலைவனே” என்பதுடன், “மூவுலகு ஆளியே” என்பதுடன், “கடிகமழ் கொன்றைச்சடையனே” என்பதுடன், “நான்முகக்கடவுளே” என்பதுடன் எந்தவிதமான வேறுபாடும் இன்றி உரைப்பதாக இவருக்கு உள்ளது; இதன் காரணம் “மயர்வற மதிநலம்” பெறுவதால் ஆகும்; அனைத்தையும் நிர்வாகம் செய்பவன் என்று இவள் உணர்ந்துள்ளதால்ஆகும். (வண் திருவரங்கனேயென்னும்) - நித்யஸூரிகள் மட்ட்மே அனுபவித்துச் சென்று விடாதபடி, நித்யஸம்ஸாரிகளும் இழந்து விடக்கூடாது என்பதற்காக அல்லவோ இங்கு வந்து திருக்கண்கள் வளர்ந்தபடி உள்ளான்! இங்கு வந்து சாய்ந்தருளியதன் பலனை நான் பெறவேண்டாமோ என்கிறாள். தன்னை ஆசைப்பட்டவர்களுக்கு தன்னையே அளிக்கின்ற தாராள குணம். (அடியடையாதாளித்யாதி) – “பிழைத்தவள் போன்று காணப்பட்டு சட்டென்று முடிந்தாள்” என்று கூறுபவர்கள் உண்டு; இவ்விதம் பொருள் கொண்டால், அடுத்து வரவுள்ள பாசுரங்களை இவளால் நாயகியாக நின்று கூறமுடியாது என்பதால், “திருவடிகளை அடைய இயலாதவர்கள் போன்று நின்று, சரியான முறையில் கிட்டி நின்றாள்” என்று அருளிச்செய்வர். ஆனால் இவ்விதம் நேரடியாக அடைந்தாளோ என்றால், இ்து மன அனுபவத்தில் உள்ள தெளிவைக் காண்பிக்கிறது என்று கருத்து. (அடியடையாதாள்போல்) - இவள் இப்போதே திருவடிகளைச் சேரமாட்டாள்; மேலும் சில காலம் இருப்பாள் என்பது போன்று இருந்தாள்; முடிந்தபடி இருந்தாள் எனலாம். இங்கு “அவனுடைய சேர்க்கையை இவள் பெறமாட்டளோ” என்று தோன்றும்படியான துக்கம் கொண்டிருந்த இவள், காளமேகம் போன்ற நிழல் கொண்ட பெரியபெருமாளின் திருவடிகளைக் கிட்டிக் கலந்து அனுபவிக்கப் பெற்றாள்.