திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 9)
ஏழாம்பத்து
இரண்டாம் திருவாய்மொழி
என் திருமகள் சேர் மார்வனே என்னும் என்னுடை ஆவியே என்னும் நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே என்னும் அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே என்னும் தென் திருவரங்கம் கோயில் கொண்டானே தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே
– “என்னுடைய ஸ்வாமியாகிய லக்ஷ்மியானவள் தனக்கு விருப்பமான இடமாகச் சேர்ந்த திருமார்பனே!”, என்கிறாள். “அந்தச் சேர்த்தி அழகுடன் எனக்கு உயிராக எனது நெஞ்சத்தில் எப்போதும் உள்ளவனே”, என்கிறாள். “நீலவரை என்பதற்கு ஏற்ப திருமேனியின் வடிவழகிற்குச் சேரும்விதத்தில் உள்ள உனது வெண்மையான கோரைப்பற்கள் கொண்டு, ப்ரளய நீரில் முழுகி அண்ட கபாலத்தில் பதித்திருந்த பூமியை எடுத்து, நீ உனக்கு விருப்பமானவளாகக் கொண்டுள்ள பூமிப்பிராட்டிக்கு நாயகனே!”, என்கிறாள். “ஏழு ரிஷபங்களைப் பந்தயப் பொருளாக வைத்த அன்று, இடி போன்று அச்சம் விளைவிக்கவல்ல அந்த ஏழு எருதுகளையும், விருப்பமான விஷயத்தைக் கண்டது போன்று தடவி, நிதியை எடுத்துக் கொண்டது போன்று எடுத்துக் கொண்ட நப்பின்னை பிராட்டியின் நாயகனே!”, என்கிறாள். இவ்விதம் இவர்கள் அனைவரின் பக்கமும் உனது ஆழ்ந்த காதலை வெளிப்படுத்தியது போன்று இவளுக்கும் உதவி செய்வதற்காகவே ஏற்பட்ட இடமாகிய திருவரங்க க்ஷேத்ரத்தையே உனது இருப்பிடமாகக் கொண்டவனே! இவளுடைய இந்தத் துன்பங்கள் முடிவதற்கான எந்த ஒரு விதத்தையும் நான் தெளிவாக அறியவில்லை.
– இவளுடைய து:கத்துக்கு ஒரு முடிவு காண்கிறிலேனென்கிறாள்.
– “இவளுடைய துக்கத்திற்கு ஒரு முடிவு காண இயலவில்லை”, என்கிறாள்.
(என் திருமகள் சேர் மார்பனே யென்னும்) என் பேற்றுக்குப் புருஷகாரமில்லாமல் இழக்கிறேனோ? என்னும். விசிஷ்டத்திலன்று என் என்கிற இது; விசேஷணாம்சத்திலே; அதாவது - என் என்கிறவிடம் திருமகளிலே யந்வயிக்கிறது: மார்பனே என்கிறவிடத்தில் அந்யவயிக்கிறதன்று. அநந்தாழ்வான் தன் பெண்பிள்ளையை “என்திருமகள்” என்று திருநாமஞ் சாத்தினான்; பட்டர் பெருமாளுக்கு “அடியேனை ‘ஸ்த்ரீதநமாகப் பிராட்டிக்கு வந்தவன்’ என்று திருவுள்ளம் பற்றவும்; நானும் ‘இவர் எங்கள் நாய்ச்சியார்க்கு நல்லர்’ என்று, அவ்வழியே ‘அழகிய மணவாளப்பெருமாள்’ என்று நினைத்திருக்கவுமாக வேணும்” என்று வேண்டிக் கொண்டார். (சேர்மார்பனே) ரஹஸ்யத்தில் நித்யயோகத்தைச் சொல்லுகிறது; அவள் ஒரு க்ஷணம் பிரியவிருக்கிலன்றோ எனக்குப் பேறு தாழ்க்கவேண்டுவது? பெருமாளுக்கு விண்ணப்பஞ் செய்யுமவை கேட்கைக்காக நஞ்சீயரை யழைத்தருளித் தாம் அமுது செய்யா நிற்கச்செய்தே இத்திருவாய்மொழி இயலைக் கேட்டருளாநிற்க, இப்பாட்டளவிலே வந்தவாறே “என் திருமகள் சேர்மார்பனேயென்னு மென்னுடையாவியே என்னும்” என்று இயலைச் சேர்த்தருளிச் செய்ய, அத்தைக் கேட்டுக் கையையுதறி, ‘ஸ்ரீரங்கநாத’ என்று அணையிலே சாய்ந்தருளினார் பட்டர்” என்று அருளிச்செய்வர். “அப்போது மேனியிலே பிறந்த விக்ருதியைக் கண்டு ‘இவர்க்கு பகவத் ப்ராப்தியணித்தாகிறதோ?’ என்று அஞ்சியிருந்தேன்” என்று ஜீயர் அருளிச்செய்வர். (என்னுடையாவியே யென்னும்) இவர்க்கு ப்ராணன் ஒரு வாயு விசேஷமல்ல: ஒரு மிதுநமேயாயிற்று. திருமகள் சேர்மார்பனாய்க் கொண்டு எனக்கு தாரகனானவனே! என்னும். (நின் இத்யாதி) ப்ரணயிநிகளுக்குக் காரியஞ் செய்யும்போது உன்னை யழிய மாறியன்றோ கார்யஞ் செய்வது? ஸ்ரீபூமிப்பிராட்டிபக்கல் முகம் பெறலாவது அவன் விபூதியைத் தன் முகேந நோக்கினாலிறே? “நின் திருவெயிறு” என்னுமித்தனை யழகுக்கு, (இடந்து நீ கொண்ட) நீயிடந்து கொண்ட ஸ்ரீபூமிப்பிராட்டிக்கு வல்லபனானவனே! (அன்று இத்யாதி) ஒருநாள் உதவின நீ, இன்று உதவினாலாகாதோ? நப்பின்னைப் பிராட்டியுடைய தசையை அன்றென்னுமித்தனை. ஒன்றிரண்டன்றிக்கே யிருக்கிற ருஷபங்களேழையும் தழுவி அவள் திருமுலைத் தடத்தை யணைத்தாப்போலே யிருக்கிறதாயிற்று. அவளைப் பெறுகைக்கு உபாயமாகையாலே. உருவென்று இடி. இடி போலே பயங்கரமான குரலையுடைய ஏறென்னுதல், உருவென்று மிடுக்காய், மிடுக்குத்தான் வடிவு கொண்டாப்போலே என்னுதல். “உருவுட்கு” என்று உரிச்சொல்லு. நீ கொண்ட – நீ கைக்கொண்ட. (ஆய்மகளன்பனே யென்னும்) என்னைக் கைவிட்டு என் ஸ்வாமிநிகள் பக்கலில் எங்ஙனே முகம் பெற இருக்கிறாய்? என்னும். (தென்திருவரங்கங்கோயில் கொண்டானே) தெற்குத் திக்குக்கு ச்லாக்யமான ஸ்ரீரங்க க்ஷேத்ரத்தை வாஸஸ்தாநமாக வுடையவனே! “எருதேழடர்த்த அவதாரத்திலே முகங்காட்டப் பெற்றதில்லை” என்னும் குறையுண்டோ? அவதாரங்கள் போலன்றியே நித்யவாஸம் பண்ணுகிறது, பிற்பாடர்க்கு உதவவன்றே? “கதஸ்ஸ்வம்ஸ்த்தாநமுத்தமம்” என்னவேண்டாதபடி கோயில் கொண்டானாயிற்று. (தெளிகிலேன்) அங்குக் குறையற்ற பின்பு “தப்பாது” என்று தெளியவிறேயடுப்பது, அது மாட்டுகிறிலேன். “மா சுச:” என்றத்தை யநுஷ்ட்டாக பர்யந்தமாக்கிக் கொண்டு கிடந்தால், “ஸ்த்திதோஸ்மி கத ஸந்தேஹ” என்றிருக்கவிறே யடுப்பது? அது மாட்டுகிறிலேன். இவள் தனக்கு முடிவு தெளிகிறிலேன். இவளவஸ்தை இதுவாயிருக்க, ஒரு ஜ்ஞாந லாபத்தாலே யாறியிருக்கப்போமோ?
– (என் திருமகள் சேர் மார்பனே யென்னும்) - மஹாலக்ஷ்மியைக் கூறியதன் காரணத்தை உணர்த்துகிறார்; “எனது பேற்றை அடைவதற்கு ஏற்ற ஒரு புருஷகாரம் இல்லாமல் நான் அந்தப் பேற்றை இழக்கிறேனோ?” என்கிறாள். “என்" என்பது மஹாலக்ஷ்மிக்கான அடைமொழி. இவ்விதம் இது மஹாலக்ஷ்மியைக் குறிப்பதைச் சில நிகழ்வுகளால் உணர்த்துகிறார். அநந்தாழ்வான் தனது பெண்பிள்ளைக்கு “என் திருமகள்” என்று பெயர் சூட்டினார். அடுத்து ஸ்வாமி பராசரபட்டர் ஸ்ரீ குணரத்நகோசத்தில் (51) - மாதர் மைதிலி -- என்று கூறியதைக் கொண்டு விளக்கம் அருளிச்செய்கிறார்; பட்டர் பெரியபெருமாளிடம், “அடியேனை ‘ஸ்த்ரீதனமாக பிராட்டியாருடன் வந்தவன்’ என்று திருவுள்ளத்தில் கொள்ளவேண்டும். இது போன்றே அடியேனும், உம்மைக் குறித்து இவர் எங்கள் நாச்சியாருக்கு நல்லவர் என்று கருத்தில் கொண்டு உம்மை ‘அழகியமணவாளப் பெருமாள்’ என்று எண்ணும்படியாக நீவீர் செய்தருளவேன்டும்”, என்று ப்ரார்த்தனை செய்தார். – (சேர் மார்பனே) – “சேர்” என்று நிகழ்காலத்தில் கூறுவதன் மூலம் த்வயத்தின் உள்ள “ஸ்ரீமந்” என்பதன் பொருளைக் கருத்தில் கொள்கிறார் என்று கருத்து. இது அங்குள்ள நித்யமான சேர்க்கையைக் கூறுவதாக உள்ளது. அவள் அவனை விட்டு ஒரு க்ஷணம் பிரிந்து நின்றால் அல்லவோ எனக்குப் பேறானது தாமதப்படும்? இவளுக்கு இருவரும் சேர்ந்து நிற்பதே உயிராக உள்ளது என்பதை ஒரு நிகழ்வின் மூலம் கூறுகிறார்; ஸ்வாமி பராசரபட்டர், பெரியபெருமாள் திருமுன்பாக புராண விஷயங்களைக் கூறும் பொருட்டு, ஆழ்வார் பாசுரங்களிலிருந்து சுவையான அமிர்தம் போன்றவற்றை மேற்கோள் காண்பிப்பதற்காக, நஞ்சீயரிடம் பாசுரங்களைக் கூறும்படியாகச் சொல்லி, தான் கேட்பார். அப்போது நஞ்சீயர் இந்தத் திருவாய்மொழி பாசுரத்தில் உள்ள “என் திருமகள் சேர்மார்பனே என்னும், என்னுடைய ஆவியே என்னும்” என்று கூறுவதற்குப் பதிலாக, “என் திருமகள் சேர்மார்பனேயென்னு மென்னுடையாவியே என்னும்” என்று சொற்களை சேர்த்து அருளிச்செய்தார் (இவ்விதம் கொண்டால், “என்னுடைய திருமகள் சேரும்படியான மார்பைக் கொண்டவன் என்று கூறப்படுகின்ற என்னுடைய ஆவியே” என்ற பொருள் வரும். இதன்படி பராங்குசநாயகியின் உயிரானது ஒரு வாயு அல்ல, இந்த திருமகளுடன் சேர்ந்துள்ள ஸர்வேச்வரன் என்றாகும்). இதனைக் கேட்டவுடன் பட்டர் தனது கைகளை உதறிக்கொண்டு “ஸ்ரீரங்கநாதா” என்று அணையில் சாய்ந்துவிட்டார். அப்போது பட்டருடைய திருமேனியில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு, இவருக்கு பெரியபெருமாளுடன் சேறும் காலம் அருகில் வந்துவிட்டதோ என்று நான் அச்சம் கொண்டேன்”, என்று இப்படியாக நஞ்சீயர் அருளிச்செய்தார். (என்னுடையாவியே யென்னும்) - இவருக்கு ப்ராணன் என்பது ஒரு குறிப்பிட்ட வாயு மட்டும் அல்ல, பொருந்தி நிற்கும் ஒரு ஜோடியே ப்ராணனாக உள்ளது. “திருமகள் சேர்ந்த திருமார்பு கொண்டபடி நின்று எனக்கு உயிர் பிழைக்கக் காரணமாக உள்ளவனே” என்கிறாள். – (நின் இத்யாதி) - உனது காதலிகளுடைய விஷயங்களில் நீ செயலாற்றும்போது உன்னையே முழுவதுமாக மாற்றிக் கொண்டு கார்யம் செய்கிறாய்? ஸ்ரீபூமிப்பிராட்டியார் உன்னை நோக்கும்படிச் செய்தல் என்பது, அவளுடைய செல்வமாகிய இந்தப் பூமியை தான் நோக்கினால் அல்லவோ உண்டாகும்? இவ்விதம் செய்தால் அல்லவோ “நின் திரு எயிறு” என்பதாக உள்ள அழகுக்குச் சேரும்? (இடந்து நீ கொண்ட) - நீ இடந்து எடுத்து ஸ்ரீ்பூமிப்பிராட்டிக்கு இவ்விதமாக உதவி செய்தவனே! (அன்று இத்யாதி) - அன்று ஒருநாள் இவ்விதம் உதவிய நீ, இன்று வந்து உதவலாகாதோ? “அன்று” என்பது நப்பின்னை பிராட்டியின் நிலையைக் கண்ட அன்று என்று கூறுவதாகவும் கொள்ளலாம். ஒன்று இரண்டு என அல்லாமல் ஏழு எருதுகளையும் ஒன்றாகத் தழுவி. “அடர்த்து” என்று கூறாமல் “தழுவி” என்று கூறியதன் கருத்து என்னவென்றால், அவளைப் பெறுவதற்கான உபாயமாக இந்த ஒரு வாய்ப்பு உள்ளதால், அவளுடைய ஸ்தனங்களை அணைத்தது போன்று இவனுக்கு இந்தச் செயல் உள்ளது. உரு என்றால் இடி; இடி போன்று பயங்கரமான குரல் கொண்ட எருதுகள் என்று கருத்து. அல்லது உரு என்றால் மிடுக்கு; அதாவது மிடுக்கு என்பதே வடிவம் கொண்டது போன்றுள்ள எருதுகள். (நீ) - நீ கைக்கொண்ட. – (ஆய்மகளன்பனே யென்னும்) - வெறுப்பாக அருளிச்செய்வதாகக் கூறுகிறார்; “என்னைக் கைவிட்டு, எனது ஸ்வாமிநிகளாக உள்ளவர்களிடம், அவர்கள் பார்வையைப் பெறுவதற்காக நீ எப்படி நிற்கிறாய்?”, என்கிறாள். (தென்திருவரங்கங்கோயில் கொண்டானே) – தெற்குத் திசையைக் கொண்டாடத்தக்கதாகச் செய்யவல்ல திருவரங்க க்ஷேத்ரத்தை உனது இருப்பிடமாகக் கொண்டவனே! ஏழு எருதுகளை அடக்கிய அந்த அவதார காலத்தில் நான் இருந்து உனது திருமுகத்தைக் காணபெறவில்லையே என்ற குறை உள்ளதோ? அவதாரங்கள் போன்று வந்து மறைவது என்பது அல்லாமல், எப்போதும் திருவரங்கத்தில் வசித்தல் என்பது, இந்த அவதார காலங்களுக்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு உதவுவதற்காக அல்லவோ? அவதாரங்கள் ஒரு காலகட்டத்தில் மட்டுமே உண்டாவதாகும் என்பதற்கு ப்ரமாணம் மஹாபாரதத்தில் – கத: ஸ்வம் ஸ்த்தாநம் உத்தமம் - தனது மேலான பரமபதத்தை அடைந்தான் - என்பதாகும். – (தெளிகிலேன்) - இவ்விதம் இங்கு வந்து சயனித்த பின்னர், எந்தவிதமான குறையும் இல்லை என்றான பின்னர், இவன் உதவுவதில் தப்பமாட்டான் என்று தெளியவேண்டும் அல்ல்வோ? ஆனால் அதனை மட்டும் நான் செய்யவில்லை. கீதையில் (18-63) – மா சுச: - துக்கம் கொள்ளவேண்டாம் - என்பதையே இறுதியான முடிவாக்கிக் கொண்டு நீ திருவரங்கத்தில் கிடக்கும்போது, கீதை (18-73) - ஸ்த்திதோஸ்மி கத ஸந்தேஹ – எனது அனைத்து ஐயங்களும் நான் நீங்கப்பெற்றவனாக, நிலைத்த மனம் கொண்டவனாக உள்ளேன் - என்று அல்லவோ நான் இருக்கவேண்டும்? ஆனால் அதனை நான் செய்யவில்லை. இவ்விதம் தெளிவு ஏற்படாமல் உள்ளதன் காரணம் கூறுகிறார்; (இவள்) - இவளுடைய துக்கத்திற்கு ஒரு எல்லையை நான் காண இயலவில்லை.