திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 8)

ஏழாம்பத்து

இரண்டாம் திருவாய்மொழி

கொழுந்து வானவர்கட்கு என்னும் குன்று ஏந்தி கோநிரை காத்தவன் என்னும் அழும் தொழும் ஆவி அனல எவ்வுயிர்க்கும் அஞ்சன வண்ணனே என்னும் எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன் என்னும் செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய் என் செய்கேன் என் திருமகட்கே

– “நித்யஸூரிகளுக்குக் கொழுந்து போன்று அவர்கள் தலைக்கு ஆபரணமாக உள்ளவன்” என்பாள். அந்த மேன்மையுடன் கூடியவனாக அடியார்களைக் காப்பாற்றும் பொருட்டு க்ருஷ்ணனாக அவதாரம் செய்து, கோவர்த்தன மலையை மிகவும் எளிதாக எடுத்து, பசுக்களைக் காப்பாற்றி, மனிதர்களால் செய்ய இயலாத லீலைகளைச் செய்தவனே” என்பாள். அப்படிப்பட்ட காப்பாற்றுதல் என்பது தன் விஷயத்தில் நடக்காமல் உள்ளதால், பக்தி பரவசத்தால் கண்ணும் கண்ணீருமாக நிற்கிறாள். ப்ரபந்நர்கள் போன்று அஞ்சலி செய்தபடி உள்ளாள். கண்ணும் கண்ணீருமாக இருத்தல் மற்றும் அஞ்சலி செய்தல் ஆகிய இந்த இரண்டுமே பலன் அளிக்காமல் போவதால், உயிரும் வெந்து போகும்படியாக வெப்பமான மூச்சு விடுகிறாள். “இவ்விதம் என்னை துக்கத்தில் ஆழ்த்திய ச்யாமள திருமேனி கொண்டவனே” என்கிறாள். இப்படிப்பட்ட தனது கூக்குரலைக் கேட்ட பின்னர் வரக்கூடும் என்று எண்ணியவளாக, தனது தலையை உயர்த்தி நோக்கி, கண்களை இமைக்காதபடி உள்ளாள். “எந்தவிதத்தில் உன்னைக் காண்பேன்”, என்று புலம்புகிறாள். காண்பதற்கு இனிமையான நிறைந்த நீரால் சூழப்பட்ட திருவரங்கம் பெரியகோயிலில் அருகில் உள்ளவனே! மஹாலக்ஷ்மிக்கு நிகரான எனது இந்த பெண்பிள்ளைக்கு நான் என்னை செய்வேன்! இந்தத் துன்பத்திற்கு அடிப்படையான காதலைக் கட்டுப்படுத்துவேனோ அல்லது வராமல் உள்ள உன்னை வரும்படி செய்வேனோ? இரண்டும் இயலாது என்று கருத்து.

– “இவளுக்கு மேன்மேலன வருகிற நோவுகள் தீர்க்கைக்கு நான் செய்வதென்?” என்கிறாள்.

– “இவளுக்கு மேலும் மேலும் வருகிற நோவுகளைத் தீர்ப்பதற்கு நான் என்ன செய்வேன்?”, என்று திருத்தாயார் புலம்புகிறாள்.

– (கொழுந்து வானவர்கட்கென்னும்) நித்யஸூரிகளுக்கும் தலையானவனே! என்னும். அன்றியே, அவர்கள் வேராகத் தான் கொழுந்தானவன் என்னுதல். (குன்றேந்தி) லோகாந்தரத்தில் பரிமாற்றந் தேட வேணுமோ? பசுக்களுக்கும் தத் ப்ராயரான இடையர்க்கும் உதவினவனன்றோ? மேன்மையில்லாமை யிழக்கிறேனோ, நீர்மையில்லாமை யிழக்கிறேனோ என்னும். (அழும்) மலையை தரித்து ஒரு வர்ஷத்தைப் பரிஹரித்த நீர் இவ்வர்ஷத்தைப் பரிஹரித்தாலாகாதோ? “பஹுதாஸந்தத து:கவர்ஷிணி” என்கிற இது பரிஹரித்தாலாகாதோ? (அழும்) பாலர் செய்வதையும் செய்யும் என்னுதல்; ஸ்நேஹிகள் செய்வதையும் செய்யுமென்னுதல். (தொழும்) புகலற்றார் செய்வதைச் செய்யுமென்னுதல்; வேதாந்த ஜ்ஞாநமுடையார் செய்வதைச் செய்யுமென்னுதல். (ஆவியன வெவ்வுயிர்க்கும்) தொழுதவநந்தரம் வரக்காணாமையாலே, “ப்ரஹ்மாஸ்த்ரம் வாய் மடிந்தது” என்று, அதாஹ்யமான ஆத்மவஸ்து அக்நிமயமாம்படி நெடுமூச்செறியும்; “தீர்க்கமுஷ்ணஞ்ச நிச்வஸ்ய” என்கிறபடியே. (அஞ்சனவண்ணனேயென்னும்) நெருப்பிலே நீரைச் சொரிந்தாப்போலே அக்குளிர்ந்த வடிவைக் கொண்டு வந்து தோற்றவல்லையே யென்னும். “மேக ச்யாமம்” என்னும் வடிவிறே. கைகேயி வார்த்தையால் பிறந்த தாபமடைய ஆறுங்கிடீர் அவ்வடிவழகிலே விழிக்கப் பெற்றேமாகில் என்றார்களிறே. (எழுந்து இத்யாதி) வடிவை நினைத்தவாறே தரித்தெழுந்திருந்து, வர ஸம்பாவநையுள்ள திக்கைப் பார்த்து, “ப்ரதம பரிஸ்பந்தமே தொடங்கிக் காணவேணும்” என்று இமை கொட்டாதே பார்த்துக் கொண்டிருக்கும். (எங்ஙனே நோக்குகேனென்னும்) தான் பார்த்த திக்கில் வரக் காணாமையாலே “பின்னோக்கி வந்து கட்டிக்கொள்ளும்” என்று புரிந்து பாரா நிற்கும். (எழுந்து மேல்நோக்கி) வடிவை நினைத்தவாறே தளர்த்தியிலே எழுந்திருந்து, “ஆனைக்கு உதவினாப்போலே வரக்கூடும்” என்று மேல்நோக்கிப் பார்த்து, “ப்ரதம பரிஸ்பந்தமே தொடங்கிக் காணவேணும்” என்று இமைகொட்டாதே யிருக்கும்; (எங்ஙனே நோக்குகேனென்னும்) பின்னையும் தோற்றக் காணாமையாலே, நான் உன்னைக் காணும் விரகு எது? என்னும். (செழுந்தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய்) அழகிதாய்ப் பெருத்த நீர் சூழ்ந்த கோயிலை இடமாகவுடையவனே! இப்படி ச்ரமஹரமான தேசத்திலே நீர் வந்து சாய்ந்தது, இவள் வரவு பார்த்தன்றே? அத்தலை இத்தலையாயிற்றே? (என் செய்கேன்) கர்த்தவ்ய மடங்கலும் தானே யநுஷ்டித்தாள். நான் இனிச் செய்வதென்? உபாயாந்தர ஸாத்யமோ உம்முடைய தர்சநம்? (என் திருமகட்கே) இவளை இழக்கலாமோ உமக்கு? உம்மை ஒருவரையும் ஆசைப்பட்ட ஏற்றமன்றே அவளது? உம்மையும் அவளையும் சேர ஆசைப்பட்ட ஏற்றமுடையவளல்லளோ இவள்? ஸாக்ஷால்லக்ஷ்மி யோடொக்கச் சொல்லலா மாகாதே இவளை!

– (கொழுந்து வானவர்கட்கென்னும்) - “கொழுந்து” என்பது ஒரு மரத்திற்கு முக்கியமானது என்பதால் “தலையானவனே” என்றாள். இரண்டாவது கருத்தாக, “அவர்கள் துக்கத்திற்குத் தான் வருந்துதல்” என்று கூறுகிறாள்; அதாவது “நித்யஸூரிகளுக்குத் தலையானவனே” என்று கருத்து. அல்லது அவர்கள் அனைவரும் வேராக, தான் கொழுந்தாக உள்ள நிலை. (குன்று ஏந்தி) - அவனுடன் கலந்து பழக வேறு லோகம் சென்று தேடவேண்டுமோ? பசுக்கள் மற்றும் அந்தப் பசுக்களின் தன்மை கொண்ட இடையர்களுக்கு உதவியவன் அல்லவோ? அவனுக்கு மேன்மை இன்றி நான் அவனை இழக்கிறேனோ அல்லது நீர்மை இன்றி நான் அவனை இழக்கிறேனா? – (அழும்) - மலையை ஏந்தி ஒரு மழையைத் தடுத்த நீ, இந்தத் துக்கம் மூலம் உண்டாகும் கண்ணீர் மழையைத் தடுத்தால் ஆகாதோ? ஸ்தோத்ரரத்னம் (44) - பஹுதாஸந்தத து:கவர்ஷிணி - பலவிதமான துக்கங்களால் ஏற்படும் மழை - என்பதற்கு ஏற்ப உள்ள இதனைத் தடுத்தால் ஆகாதோ? (அழும்) - சிறியவர்கள் செய்யும் செயலைச் செய்கிறாள். (தொழும்) - ப்ரபத்தி நிஷ்டர்கள் செய்வதைச் செய்கிறாள். வேதாந்த ஞானம் கொண்ட உபாஸகர்கள் செய்வதைச் செய்கிறாள். (ஆவியன வெவ்வுயிர்க்கும்) - தொழுதவுடன் அவன் வரக்காணாமையால், “ப்ரஹ்மாஸ்த்ரம் வாய் மடிந்தது” என்று எரிக்க இயலாத ஆத்மவஸ்துவும் கூட அக்னிமயமாகும்படி வெப்பமான பெருமூச்சு விடுகிறாள்; யுத்தகாண்டம் (117-6) - தீர்க்கமுஷ்ணஞ்ச நிச்வஸ்ய - நீண்ட வெப்பமான மூச்சு - என்பது காண்க. – (அஞ்சனவண்ணனேயென்னும்) – நெருப்பில் நீரைக் கொண்டு வந்து சேர்த்து அணைப்பது போன்று, அந்தக் குளிர்ந்த வடிவைக் கொண்டு வந்து காண்பிக்கமாட்டாயா என்கிறார். அயோத்யாகாண்டம் (83-8) – மேக ச்யாமம் - மேகம் போன்று கறுத்தவன் –என்பது காண்க; அதாவது கைகேயியின் சொற்களால் ஏற்பட்ட துன்பம் முழுவதும் அவனுடைய அந்த மேகம் போன்ற திருமேனியைக் கண்டால் ஆறும் என்று கூறினார். (எழுந்து இத்யாதி) – ஆனால் மயக்கம் அடைந்தவள் மீண்டும் விழித்து எழுவாளோ என்பதற்கு விடை தருகிறார்; அவனுடைய திருமேனியை எண்ணியவுடன் பிழைத்து எழுந்து, அவன் வரக்கூடிய வாய்ப்புள்ள திசையை நோக்கி, “முதலில் புறப்படும் இடம் தொடங்கிக் காணவேண்டும்” என்று இமைக்காமல் பார்த்தபடி உள்ளாள். (எங்ஙனே நோக்குகேனென்னும்) - தான் ஆவலுடன் பார்த்த திசையில் அவன் வரக்காணாமையால், “பின்புறமாக வந்து கட்டிக்கொள்வான்” என்று விரும்பி நிற்கிறாள். (எழுந்து மேல்நோக்கி) - அவனுடைய திருமேனி வடிவழகை எண்ணியவுடன் தளர்ச்சியிலிருந்து எழுந்து, “யானைக்கு உதவியது போன்று வரக்கூடும்” என்று மேல் நோக்கி நின்று, “முதலில் புறப்படும் இடம் தொடங்கிக் காணவேண்டும்” என்று இமைக்காமல் பார்த்தபடி உள்ளாள். (எஎங்ஙனே நோக்குகேனென்னும்) - அதன் பின்னரும் நீ வராத காரணத்தால், “நான் உன்னைக் காணும் வழி என்ன?”, என்கிறாள். – (செழுந்தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய்) - ஆறாகப் பெருகும் நீர் நிறைந்த திருக்காவேரியால் சூழப்பட்ட திருவரங்கம் பெரியகோயிலை இடமாகக் கொண்டவனே! காண்பவர் களைப்பைப் போக்கும்விதமாக உள்ள இடத்தில் நீ வந்து சாய்ந்து கிடப்பது இவளுடைய வருகையை எதிர்பார்த்து அல்லவோ? ஆனால், நீ இவள் வருகையை எதிர்பார்க்கும் நிலை மாறி, இவள் உனது வருகையை எதிர்பார்க்கும் நிலை வந்ததே! (என் செகேன்) - செய்யவேண்டிய அனைத்தையும் தானே முழுவதுமாகச் செய்தாள், நான் இனி செய்யவேண்டியது என்ன உள்ளது? அல்லது மற்ற உபாயங்களால் மட்டுமே உனது தரிசனம் என்பதை நிறைவேற்றிக் கொள்ளும்படி ஆனதோ? (என் திருமகட்கே) - இவளை நீ இழக்கலாமோ? “உன்னை மட்டுமே விரும்பியபடி உள்ள ஏற்றம்” என்பதைக் கொண்டவள் அல்லவோ? உன்னையும் அவளையும் சேரவேண்டும் என்ற ஆசை கொண்ட ஏற்றம் உடையவள் அல்லவோ இவள்? மஹாலக்ஷ்மியோடு ஒப்புமை கூறலாம்படி உள்ளாள் அல்லவோ?