திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 7)

ஏழாம்பத்து

இரண்டாம் திருவாய்மொழி

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் பற்றிலார் பற்ற நின்றானே கால சக்கரத்தாய் கடல் இடம் கொண்ட கடல் வண்ணா கண்ணனே! என்னும் சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய் என்னும் என் தீர்த்தனே என்னும் கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும் என்னுடைக் கோமளக் கொழுந்தே

– மென்மையான அழகான தளிர் போன்ற எனது இந்தப் பெண், “அனைத்து இடங்களிலும் அடியார்கள் அல்லாதவர் விஷயத்தில் துன்பமும், அடியார்கள் விஷயத்தில் இன்பமும் படைத்தாய். பல அவதாரங்கள் செய்து, உள்ளும் புறமும் உன்னைப் பற்றாத ஜயந்தன் போன்றவர்களும் கூட பற்றும்படியாக நின்றாய். அடியார்கள் உன்னை வந்து அடையும் காலம் என்பது உனது கட்டுப்பாட்டில் வைத்தபடி, மாதம் ருது வருடம் போன்றவற்றைக் கொண்டதான காலம் என்ற சக்கரத்திற்கு நிர்வாஹகனாக உள்ளாய். அடியார்களைக் காப்பாற்றுவதற்காகத் திருப்பாற்கடலில் சாய்ந்து கிடப்பது போன்று திருக்கண்கள் வளர்பவனே! திருப்பாற்கடலை விட்டு இந்த இருள் நிறைந்த பூமியின் காப்பாற்றும் செயல் விஷயமாக க்ருஷ்ணனாக வந்தவனே!”, என்கிறாள். "அந்த அவதார காலத்தின் பின்பு வந்தவர்களுக்காக, அழகான மீன்கள் நிறைந்த குளிர்ந்த தண்ணீர் கொண்ட நீரால் சூழப்பட்ட திருவரங்கம் பெரியகோயிலில் அருகில் உள்ளவனே!", என்கிறாள். “இப்படிப்பட்ட ஸௌலப்யம் காரணமாக நான் மூழ்கி நீராடும்படியான தீர்த்தனே!”, என்கிறாள். இப்படிப்பட்ட துயரம் நிறைந்த ஒலியைக் கேட்ட பின்னரும் நீ வராமல் உள்ளதால், அழகாகப் பெருத்து குளிர்ந்த இவளுடைய கண்ணானது, அதிகமாக கண்ணீருடன் உள்ளபடியாக நிற்கிறாள். (குறிப்பு - இந்தப் பாசுரமானது, திருத்தாயாரானவள் முன்னிலை சொல் ஏதும் இன்றி கூறுவதாக உள்ளதால், தன்னுடைய உள்ளத்திலேயே இரங்கியபடி இருத்தல் எனலாம். அல்லது “கடல் வண்ணா” என்பது முடிய திருத்தாயார் சொற்களாகவும், “கண்ணனே" என்று தொடங்கி நாயகியின் சொற்களாகவும் கொள்ளலாம்).

ஆச்ரயங்களை யநுஸந்தித்து, பொறுக்குமளவுகளிலே யன்றோ ஸுகது:கங்களைச் சுமத்துவது? இப்படி என்னைப் படுத்தலாமோ என்னாநின்றா ளென்கிறாள். “ஆச்ரிதரை வாழ்விக்கையும் அநாச்ரிதரை நலிகையுமன்றிக்கே, இப்போது விபரீதமாயிற்றே உம்முடையபடி என்கிறாள்” என்று பிள்ளான். இக்கோமளக் கொழுந்துக்கு, கைம்முதலொன்றுமில்லாதார் பற்றினால் ரக்ஷிக்கக் கடவ நீர்மையுடையவன் ஸந்நிதியிலே இதெல்லாம் படவேண்டுகிறது, என்னோட்டை ஸம்பந்தமென்று மநோரதிக்கிறாள்.

– “பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்” என்பதற்கு இரண்டுவிதமான பொருள்கள் உள்ளதைக் கருத்தில் கொண்டு, இரண்டுவிதமான அவதாரிகைகளைக் கூறுகிறார். மேலும், “என்னுடைக் கோமலக்கொழுந்து, கோல மாமழைக்கண் பனி மல்க இருக்கும், பற்றிலார் பற்ற நின்றானே” என்கிற பதங்களில் கருத்தை வைத்து மற்றொரு அவதாரிகையும் என்பதாக மூன்று வகையான அவதாரிகைகளை வரிசையாக அருளிச்செய்கிறார்; இதனை, அவதாரிகையின் உள்ள “ஆச்ரயங்களை" என்று தொடங்கிக் காணப்படும் மூன்று வாக்கியங்களில் கூறுகிறார். எனது மகள், “அவரவர்களுடைய அளவுகளை எண்ணி, அவர்களால் பொறுக்கும் அளவிற்கு அல்லவோ இன்பதுன்பங்களைத் தரவேண்டும். இவ்விதம் என்னைத் துன்புறுத்தலாமோ?”, என்று கேட்கிறாள்; இது முதல் அவதாரிகை கருத்து ஆகும். அல்லது, “உனது அடியார்களை வாழும்படிச் செய்தல், அடியார்கள் அல்லாதார் வீழும்படிச் செய்தல் என்பது அல்லவோ உனது செயலாற்றும் விதம்; இப்போது அது மாறியதே” என்று கேட்பதாகப் பிள்ளான் அருளிச்செய்வார்; இது இரண்டாவது அவதாரிகை கருத்தாகும். அல்லது, “கைம்முதல் ஏதும் இல்லாதவர்கள் வந்து சரணம் புகுந்தால் ரக்ஷிக்கக் கூடிய அவனுடைய அருகாமையில் உள்ளபோதிலும் கோமளக்கொழுந்து போன்ற எனது இந்தப் பெண், இது போன்று பல துன்பங்களை அடைய வேண்டியுள்ளது. இதற்குக் காரணம் எனது ஸம்பந்தம் ஆகும்”, என்று எண்ணுகிறாள்; இது மூன்றாவது அவதாரிகை கருத்து ஆகும்.

(பால இத்யாதி) இடமறிந்து ஸுகது:கங்களைப் படைத்தவனே! பாலென்றது இடமென்றபடி; அப்பாலிப்பாலென்றால் அவ்விடமிவ்விடமென்றபடி. பாலவாகஸ்த்தாநேஸ்த்தாநேயாக. உம்மைப் பிரிந்தார் எல்லாரும் அநுபவிக்கும் து:கத்தை இவளொருத்தியை அநுபவிக்கப் பார்த்தால் இவளால் பொறுக்கப்போமோ? அங்ஙனன்றிக்கே, ஆச்ரிதர் வாழவும் அநாச்ரிதர் கெடும்படியாகவுமன்றோ நீ பண்ணி வைத்தது? பாலென்பது முறை. “செய் குந்தா வருந்தீமை யுன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்த”னன்றே. பண்டு கட்டின மர்யாதையும் இவளுக்கில்லையோ? பாலென்று பாகமும், இயல்வும், இடமும், ந்யாயமும், இவை நாலுக்கும் பேர். தந்தாமால் பொறுக்கவொண்ணாதவை தாந்தாமே ஏறிட்டுக் கொள்ளும்போது நம்மால் செய்யலாவதுண்டோ? நம்பக்கல் குறையில்லை. பேறு தந்தாமதானால் தாங்களும் சில செய்யவேணுமென்று அவனுக்குக் கருத்தாக, (பற்றிலார் பற்ற நின்றானே) ஒரு கைம்முதலில்லாதார்க்காகவன்றோ இங்கு வந்து சாய்ந்தருளிற்று? இக்கிடை நித்யஸூரிகளுக்காகவோ? உம்முடைய பக்கல் பற்றறுத்துக் கொண்ட ஜயந்தன் போல்வார்க்கும் பற்றாயிருக்கும் அவரன்றோ நீர்! “தமேவ சரணங்கத:” அன்றோ? அது உண்டானாலும் அதுக்கொரு காலமுண்டே என்ன, (கால சக்கரத்தாய்) அக்கால சக்கரம் நீயிட்ட வழக்கன்றோ? ஆச்ரிதர்க்காகப் பகலை யிரவாக்கினவனன்றோ? அன்றிக்கே, ப்ரதிபந்தகமுண்டேயென்னில்; ப்ரதிபந்தகத்துக்கு மருத்யுவான திருவாழியன்றே தரித்திருக்கிறது. பரிகரமுண்டானாலும் நான் தூரஸ்த்தனன்றோ என்னவொண்ணாதே! (கடலிடங் கொண்ட கடல்வண்ணா) நீ எங்களைக் காலம் பார்த்தன்றோ கிட்டக் கிடக்கிறது. ஒரு கடல் ஒரு கடலிலே சாய்ந்தாற்போலே அணித்தாகத் திருப்பாற்கடலிலே சாய்ந்திலையோ? ஆனால் அங்கே வரலாகாதோ என்ன; அவ்வலையலைக் கேட்க மாட்டாத இடையர்க்கும் இடைச்சிகளுக்குமாக க்ருஷ்ணனாய் வந்து உதவிற்றிலையோ? என்கிறாள். (கண்ணனேயென்னும்) “நாக பர்யங்கமுத்ஸ்ருஜ்யஹ்யாகதோ மதுராம் புரீம்” என்று அக்கிடையைவிட்டு இடையிலே வந்து உதவிற்றிலையோ? அது தப்பிற்றிறே என்ன, அவ்வவதாரம் பரத்வமென்னும்படியன்றோ கோயிலிலே வந்து சாய்ந்தருளிற்று? (சேல்கொளித்யாதி) “ஜலாந்மத்ஸ்யாவிவ” அன்றே; ஜலசரஸத்த்வங்கள் ஜலத்தைப் பிரிந்து தரிக்கிலன்றே இவள் உம்மைப் பிரிந்து தரிக்கவல்லளாவது? அவ்வூரிலே வர்த்திக்கிற உமக்குப் போருமோ இவளுக்கு முகங்காட்டாதொழிகிறவிடம். (என் தீர்த்தனேயென்னும்) நீ உபேக்ஷித்தாலும் உன்னையொழிய எனக்குச் செல்லாதபடி பண்ணினவனே! என்னுதல்; நான் இழிந்தாடும் துறையென்னுதல். (கோலமித்யாதி) தர்சநீயமாய்ப் பரந்து ச்ரமஹரமான கண் நீர் மல்க இராநின்றாள். கண்ணுங் கண்ணநீருமான அழகு, காட்டிலெறித்த நிலாவாவதே! இக்கண்ண நீருக்கு ஸாதநாநுஷ்ட்டாநத்தைப் பண்ணி பலவேளையிலே யிழப்பதே! (என்னுடைக் கோமளக்கொழுந்தே) கலக்கப்பொறாத மார்த்தவத்தையுடையவள் பிரியப் பொறுக்குமோ? "தசை முறுகினால் வைத்யர் கண் முகம் பாராதாப் போலே, மகளவஸ்த்தையைக் கண்டு தளர்ந்து பெரியபெருமாள் முகம் பாராதே வார்த்தை சொல்லுகிறாள்" என்றருளிச்செய்வர். (கொழுந்து) உபக்நம் தேட்டமானவளவிலே தறையிலே படர விடுவதே. "பதி ஸம்யோக ஸுலபம் வய:". இப்பாட்டிலொருதலைக் கட்டின்றிக்கே யிருக்குமிதுக்குக் கருத்து "பரிஹரிக்குமெல்லை கழிந்தாள், நாம் இவர்க்குச் சொல்லுவதென்? என்று தன்னிலே நோவுபடுகிறாள்" என்று வங்கிப்புரத்து நம்பி பணிக்கும்.

– (பால இத்யாதி) - இடம் அறிந்து இன்ப துன்பங்களைப் படைத்தவனே! “பால" என்றால் இடம். ஆனால் “பால” என்றால் இடத்தைக் கூறுமோ என்பதற்கு விடை தருகிறார்; “அப்பால் இப்பால்” என்றால் “அந்த இடம், இந்த இடம்” என்று கூறுவது காணலாம். பாலவாக என்பது அந்த இடத்தில். “பாலதுன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்” என்று நாயகி கூறும் சொற்களுக்கு ஏற்றபடி திருத்தாயார் கூறுவதைக் கூறுகிறார்; உன்னைப் பிரிந்தவர்கள் அனைவருடைய துன்பத்தையும் இவள் ஒருவளே அனுபவிக்க முயன்றால், இது அவளால் பொறுத்துக் கொள்ள இயலுமோ? அல்லது அடியார்கள் வாழும்படியாகவும், அடியார்கள் அல்லாதவர்கள் வீழும்படியாகவும் அல்லவோ நீ செய்து வைத்தாய்? இவ்விதம் கொண்டால் “பால்” என்பதற்கு “முறை” என்று பொருள் கொள்க; இந்த இரண்டுவிதமான பொருள்களுக்கு ப்ரமாணம் திருவாய்மொழி (2-6-1) - செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய் குந்தா - என்பதாகும். ஆகவே “பால” என்று தொடங்கும் பகுதிக்கு, “பொறுக்கத்தக்க இடம் அறிந்து அந்தந்த இடங்களில் இன்ப துன்பங்களைக் படைத்தவனே” என்பது முதல் பொருள்; அடுத்து, “அடியார்களாக உள்ள முறையில் சுகத்தையும், அடியவர்கள் அல்லாத முறையில் துக்கத்தையும் படைத்தவனே” என்பது இரண்டாவது பொருள்; இதற்கு முன்பு ஏற்பட்ட மர்யாதையும் இவளுக்கு இல்லையோ என்கிறார். “பால்” என்பது இடம் மற்றும் முறை என்பதாகப் பொருள் தருமோ என்பதற்கு, “பால என்றால் பாகம், இயைபு, இடம், நியாயம் என்று பொருள்” என்கிறார்; ந்யாயம் என்றால் முறை. – இதற்கு ஸர்வேச்வரன், “அவரவர்களால் பொறுத்துக்கொள்ள இயலாதபடி உள்ளவற்றை, அவர்கள் தாங்களாகவே தங்கள் மீது ஏறிட்டுக் கொள்ளும்போது, நம்மால் ஏதேனும் செய்யமுடியுமா? நம்மிடம் எந்தக் குறையும் இல்லை. பேற்றினை அடையப்போவது அவரவர்கள் என்றால், அதற்காக அவர்களும் சிலவற்றைத் தாங்கள் செய்யவேண்டும்”, என்றான். இதற்குத் திருத்தாயார் விடை தருகிறார்; (பற்றிலார் பற்ற நின்றானே) - ஒரு கைம்முதலும் இல்லாதவர்களுக்காக அல்லவோ நீ இங்கு வந்து சாய்ந்தருளியுள்ளாய்! இங்கு கிடக்கும் இந்த நிலையானது நித்யஸூரிகளுக்காகவோ? அல்லவே! உன்னுடைய விஷயத்தில் எந்தப் பற்றுதலும் வைக்காமல் அறுத்துக் கொண்ட ஜயந்தன் போன்றவர்களுக்கும் கூட பற்றுதலாக உள்ளவன் அல்லவோ நீ? ஆனால் ஜயந்தன் பற்றினானோ என்பதற்கு ப்ரமாணம் ஸுந்தரகாண்டம் (38-31) - தமேவ சரணங்கத: - இராமனையே சரணம் புகுந்தான் - என்று கூறப்பட்டதாகும். – ஆனால் குற்றம் செய்தவர்களுக்கும் பற்றும் இடமாக உள்ள நிலை உள்ளது என்றாலும், அதற்கும் ஒரு காலம் உள்ளது அல்லவோ என்பதற்கு விடை தருகிறார்; (கால சக்கரத்தாய்) – அந்தக் காலசக்கரம் என்பது உனது ஆணைக்குப்பட்டு உள்ளது அல்லவோ? அதற்கு ஸர்வேச்வரன், “அவ்விதம் காலமானது நாம் இட்ட கட்டளையை ஏற்றதுண்டோ?”, என்று கேட்டான்; இதற்கு விடை தருகிறாள்; உனது அடியார்களுக்கு உதவி செய்வதற்காக பகல் பொழுதையே இரவாக்கியவன் அல்லவோ? அல்லது வேறுவிதமாகவும் பொருள் கூறலாம். ஸர்வேச்வரன், “ஆனாலும் தடைகள் இருக்கும் அல்லவோ?”, என்றான்; இதற்கு விடை தருகிறார்; காலம் என்ற சொல்லானது காலத்தையும் யமனையும் குறிப்பதாகும்; “காலசக்கரத்தின் நிர்வாஹகன்" என்பது முதல் பொருள்; “யமனாகிய சக்கரத்தை உடையவன்” என்பது இரண்டாவது பொருள். அதாவது தடைகளுக்கும் யமனாகிய திருவாழியை அல்லவோ நீ வைத்துள்ளாய்! ஆனால், இவ்விதம் ஆயுதம் உள்ளபோதிலும், நான் தூரமாக உள்ளவன் என்று நீ கூற இயலாது; இதற்கான காரணம் கூறுகிறாள்; (கடலிடங் கொண்ட கடல்வண்ணா) - நீ எங்களைக் காப்பாற்றுவதற்காக அல்லவோ அருகில் கிடக்கிறாய். “கடல் வண்ணா” என்று கூறாமல் “கடல் இடம் கொண்ட” என்று சிறப்பித்துக் கூறுவதன் காரணத்தைக் கூறுகிறார்; ஒரு கடலானது ஒரு கடலில் சாய்ந்து கிடப்பது போன்று மிகவும் அண்மையில் திருப்பாற்கடலில் சாய்ந்ததுள்ளாய் அல்லவோ? – இதற்கு ஸர்வேச்வரன், “சரி, அப்படி உள்ளபோது இந்தப் பெண் அங்கு வரலாம் அல்லவோ?”, என்றதற்குத் திருத்தாயார் பதில் கூறுகிறாள்; அந்த அலையலையைக் கேட்க இயலாதபடி உள்ள இடையர்களுக்கும் இடைச்சிகளுக்கும் க்ருஷ்ணனாக வந்து நீ உதவினாய் அல்லவோ? அலையலை என்பது, “அலை” என்று ஒலியாக, “அலையலை” என்று மிகப் பெரிய ஒலியாக, மிக்க ஓசை கொண்ட ஸமுத்ரத்தைக் காண்பிக்கிறது. ஆனால் இவ்விதம் கடல் இடம் கொண்டவனோ க்ருஷ்ணனாக வந்தான் என்ற கேள்விக்கு விடை தருகிறார்; ஹரிவம்ஸம் (113-62) - நாக பர்யங்கமுத்ஸ்ருஜ்யஹ்யாகதோ மதுராம் புரீம் - ஆதிசேஷன் என்ற படுக்கையை விட்டு எழுந்து மதுரா நகரத்திற்கு வந்தான் - என்று கூறுவதற்கு ஏற்ப, அங்கு கிடப்பதை விடுத்து நடுவில் வந்து உதவவில்லையோ? “நடுவில்” என்றால் ஆயர்கள் நடுவே என்று பொருள். ஆனால் அது காலம் கடந்ததால் கிட்டவில்லை அல்லவோ என்பதற்கு விடை தருகிறாள்; அப்படிப்பட்ட க்ருஷ்ணாவதாரம் கூட பரத்வம் போன்று தூரத்தில் உள்ளது என்று கூறும்படியாக அல்லவோ இங்கு வந்து திருவரங்கம் பெரியகோயிலில் சாய்ந்தருளினாய்? (சேல்கொளித்யாதி) அயோத்யாகாண்டம் (53-24) – ஜலாந்மத்ஸ்யாவிவ - தண்ணீரிலிருந்து மேலே எடுக்கப்பட்ட மீன்கள் போன்று ஆனான் - என்பதற்கு ஏற்ப, நீரில் உள்ள உயிர்களை நீரிலிருந்து பிரித்தால் அவை உயில் பிழைக்கும் என்றால் அல்லவோ இவளும் உன்னைப் பிரிந்தாள் உயிர் தரிப்பாள்? அந்த ஊரில் வசிக்கும் உமக்கு இவளுக்குத் திருமுகம் காண்பிக்காமல் உள்ள நிலை ஏற்குமோ? (என் தீர்த்தனேயென்னும்) - தீர்த்தன் என்பதற்கு இரண்டு பொருள்; தூய்மையாக உள்ள தன்மை மற்றும் ஸௌலப்ய தன்மை. நீ விலகினாலும் உன்னை அல்லாமல் வேறு யாரிடமும் சொல்லாதபடிச் செய்தவனே; தீர்த்தன் என்பதற்கு கூறப்பட்ட இரண்டு பொருள்களில், முதல் பொருளுக்கு “உனக்கு மட்டுமே நான்” என்று என்னைச் செய்தவன் என்பதாகும். அடுத்து இரண்டாவது பொருளில், நீராடும் கரை போன்று இறங்கி நின்று மூழ்குவதற்குச் சுலபமானவன் என்று கொள்க. – (கோலமித்யாதி) - காண்பதற்கு இனிமையாக உள்ளதும், பரந்து விரிந்துள்ளதும், காண்பவர் களைப்பைப் போக்கவல்லதும் ஆகிய கண்களில் நீர் மல்க நிற்கிறாள். “கோல மாமழைக்கண்” என்பதற்கு “கண்ணுங்கண்ண” என்று வ்யாக்யானத்தில் உள்ள இரண்டு வாக்கியங்களால் பொருள் கூறுகிறார்; கண்ணும் கண்ணீருமாக உள்ள இந்த அழகான கண்கள், காட்டில் வீணாகப் போகும் நிலவு ஒளி போன்று ஆயிற்று. இந்தக் கண்களானவை ஸாதனங்களாக இருந்து பலன் பெற வேண்டிய வேளையில் இழக்கிறதே! (என்னுடைக் கோமளக்கொழுந்தே) - சேர்க்கையின் நேரத்தில் கூட அதனைப் பொறுக்க இயலாத மென்மையான இவள், பிரிவு நேரத்தை எப்படிப் பொறுப்பாளோ? காலிலோ அல்லது கையிலோ தசை முறுகினால், அதனை வைத்யர் ஒருவர் சீராக்கும்போது, வேதனையைப் பொறுத்துக் கொள்வதற்காக, அந்த வைத்யர் முகத்தைப் பார்க்காமல் திருப்பிக் கொள்வது போன்று, இவள் தனது மகளுடைய நிலைமையை கண்டு தளர்ந்து பெரியபெருமாளைப் பார்க்காமல் கூறுகிறாள்”, என்று நஞ்சீயர் அருளிச்செய்வர். (கொழுந்து) - கொள்கொம்பு அவசியம் தேவை என்றுள்ளபோது தரையில் படர விடுவது ஏற்புடையதோ? அயோத்யாகாண்டம் (118-34) - பதி ஸம்யோக ஸுலபம் வய: - நாயகனுடன் சேர்வதற்கு ஏற்ற எனது வயதை - என்பது காண்க. இந்தப் பாசுரத்தில் தீர்மானமான முடிவு ஏதும் இல்லாமல் நிறைவு செல்வதன் காரணம் கூறுகிறார்; இது வங்கிபுரத்து நம்பியின் கருத்தாகும்; “பரிகாரம் செய்யும் எல்லையை எனது இந்தப் பெண் கடந்தாள். இதனை நாம் பெரியபெருமாளிடம் கூறவும் வேண்டுமோ?”, என்று கருதி, திருத்தாயார் தானே நோவு அடைகிறாள்.