பெரியாழ்வார் திருமொழி - முதல்பத்து (பாசுரம் 14)

முதல்பத்து

இரண்டாம் திருமொழி

எந் தொண்டை வாய்ச் சிங்கம் வா என்று எடுத்துக் கொண்டு அந் தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர் தம் தொண்டை வாயால் தருக்கிப் பருகும் இச் செந் தொண்டை வாய் வந்து காணீரே சே இழையீர் வந்து காணீரே

– “கொவ்வைப்பழம் போன்ற இதழ்களையுடைய சிங்கக்குட்டி போன்ற என மகனே வா” என்று அழைத்து இடுப்பில் எடுத்துக் கொண்டு, இடைப்பெண்கள் அந்த அழகான கொவ்வைப்பழம் போன்ற வாயின் இதழில் ஊறும் அமிர்தத்தை விரும்பி, தங்களுடைய கொவ்வை வாயாலே நெருக்கிப் பருகப்பருக மேன்மேலும் சிவக்கும் இந்த கொவ்வை வாயினை வந்து பாருங்கள். சிவந்த ஆபரணங்களையுடைய பெண்களே நீங்கள் வந்து காணுங்கள்.

திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேச அவதாரிகை - திருக்கண்டத்தில் நின்றும் திருப்பவளத்திலே பெருகுகிறார். மாமுனிகள் வ்யாக்யான அவதாரிகை - திருக்கழுத்தினழகை யநுபவித்த வநந்தரம் திருப்பவளத்தினழகை அனுபவிக்கிறார்.

– திருக்கழுத்தின் அழகை அனுபவித்த பின்னர் திருவாயின் இதழின் அழகினை அனுபவிக்கிறார்.

திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேசம் - (என் தொண்டையித்யாதி) ஆதொண்டை போலே யிருக்கிற திருப்பவளத்தையுமுடையனாய் ஸிம்ஹக்கன்று போலே கர்வத்தையுமுடையனா யிருக்கிற பிள்ளையை “என் பிள்ளை” என்று அழைத்தெடுத்துக் கொண்டு இடைப்பெண்களெல்லாம் அழகிதாயிருக்கிற தொண்டை வாயில் ஊருகிற அம்ருதத்தை ஆதரித்துத் தங்கள் கோவை வாயாலே இவனுடைய திருப்பவளத்தை நெருக்கிப் பருகப்பருக, பின்னையும் செந்தொண்டை வாயாயிருக்கிற ஆச்சர்யத்தை வந்து காணீரென்கிறார். சேயிழை - பக்தி ப்ரகாசகமான ஆத்மபூஷணம். மாமுனிகள் வ்யாக்யானம் - (என் தொண்டையித்யாதி) ஆதொண்டை போலே யிருக்கிற திருப்பவளத்தையும் ஸிம்ஹக்கன்றுபோலே செருக்கையுமுடையனா யிருக்கிற இவனை என்னுடையவனென்று அபிமாநித்து வாவென்று அழைத்து எடுத்துக் கொண்டு இடைப்பெண்களெல்லாரும் அழகிய தொண்டை போலேயிருக்கிற திருவதரத்திலூருகிற அம்ருதத்தை ஆதரித்துத் தங்கள் கோவை வாயாலே நெருக்கிப் பாநம் பண்ணுகிற. “தருக்கிப் பருகும்” என்றது, செருக்கிப்பருகு மென்னவுமாம். (இச்செந்தொண்டை வாயித்யாதி) இப்படி அவர்கள் பருகப் பருகப் பின்னையும் சிவப்பு மாறாதேயிருக்கிற இத்திருப்பவளத்தை வந்து காணுங்கோள்; சிவந்த ஆபரணங்களையுடைய நீங்கள் வந்து காணுங்கோள்.

– (என் தொண்டை) - சிவந்திருக்கும் கோவைப்பழத்தைப் போன்று சிவந்த இதழ்களை உடையவனாய், சிம்மத்தைப் போன்று செருக்கு உடையவனாய் இருக்கிற பிள்ளையை, “என் மகனே” என்று அழைத்து எடுத்துக் கொண்டு இடைப்பெண்கள் எல்லோரும், இந்த அழகிய சிவந்த வாயின் இதழில் ஊறுகிற அமிர்தத்தை விரும்பி, அன்பினால் தங்களுடைய கோவை வாயாலே இவனுடைய இதழினை நெருக்கிப் பருகினர். இவ்விதம் பருகியதால் மேன்மேலும் சிவந்து போகும் கொவ்வைப்பழம் போன்ற வாய் இதழின் அதிசயத்தை வந்து காணுங்கள் (சேயிழையீர்) - அன்பின் வெளிப்பாடாகச் சிவந்து ப்ரகாசிக்கும் ஆபரணங்கள் அணிந்த பெண்களே நீங்கள் வந்து காணுங்கள்.