திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 6)
ஏழாம்பத்து
இரண்டாம் திருவாய்மொழி
மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே என்னும் மா மாயனே என்னும் செய்ய வாய் மணியே என்னும் தண் புனல் சூழ் திருவரங்கத்து உள்ளாய் என்னும் வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல் என்னும் பைகொள் பாம்பு அணையாய் இவள் திறத்து அருளாய் பாவியேன் செயற்பாலதுவே
– “உனது பவ்யமான இயல்பு மூலம் என்னை மயக்கி எனது நெஞ்சத்தைக் கவர்ந்தவனே", என்கிறாள். “இவ்விதம் மயங்க வைப்பதற்காக எண்ணற்ற வியக்க வைக்கும் லீலைகள் செய்தவனே” என்கிறாள். “பவ்யமான தன்மையை வெளிப்படுத்துவதான சொற்கள் முலம் துடித்தபடி உள்ள சிவந்த வாயைக் கொண்ட மாணிக்கமே” என்கிறாள். “உன்னை அடைந்து எனது தாபம் தீர்வதற்கு ஏற்றபடியாகக் குளிர்ந்த நீரைக் கொண்ட திருவரங்கம் பெரியகோயிலில், அருகில் உள்ளவனே” என்கிறாள். “வாள், கதை, சங்கு, சக்கரம், வில்” ஆகிய ஐந்து ஆயுதங்களை, காப்பாற்றும் காலதாமதம் பொறுக்காதவர்கள் போன்று எப்போதும் தயாராக ஏந்தியபடி நின்று, அந்த வடிவழகை நித்யஸூரிகள் அனுபவிக்கும்படிச் செய்து, அவர்களுடைய இருப்பிற்குக் காரணமாக உள்ளவனே”, என்கிறாள். உனது திருமேனியின் ஸ்பர்சம் காரணமாக நன்கு விரிந்த பணங்களைக் கொண்டவனும், தனது ஜாதிக்கு ஏற்ற மென்மை குளிர்ச்சி நறுமணம் ஆகியவற்றைக் கொண்டவனும் ஆகிய ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்டவனே! நீ இவ்விதம் படுக்கையில் நன்கு கிடந்து சயனிக்க, தரையில் கூட படுப்பதற்கு இயலாமல் உள்ள இவள் விஷயத்தில், இவ்விதம் இவளுடைய நிலையைக் காணும்படியாகப் பாபம் செய்த நான் என்ன செய்யவேண்டும்? இந்த விதத்தை நீயே அருளிச்செய்யவேண்டும்.
– “இவன் இவ்வளவு ஆபந்நையாயிருக்க, இவளார்த்தி தீர்த்து அருளாதொழிகைக்குக் காரணம் என்னுடைய கர்மவிபாக”மென்கிறாள்.
– “இவள் இத்தகைய ஆபத்தான நிலையில் உள்ளபோதிலும் அவன் இவளுடைய துயரத்தைப் போக்கி அருளாமல் இருப்பதற்குக் காரணம் எனது பாபங்களே ஆகும்”, என்று திருத்தாயார் கூறுகிறார்.
(மையல் செய்து) உணர்த்தியுண்டாகில் நெஞ்சிழிவாள்காணும். எதிரிகளுடைய அநவதாநம் பார்த்திருந்து அவர்கள் கோட்டை கொள்ளுவாரைப்போலே. (என்னை) கடலைத் தறை கண்டானென்னுமாப்போலே. (மனங் கவர்ந்தானே) புழுகூற்றிச் சட்டம் பொகடுவாரைப்போலே. (மையலித்யாதி) கொன்று கிழிச்சீரை யறுப்பாரைப் போலே. (மாமாயனேயென்னும்) மையல் செய்த ப்ரகாரங்கள். கலக்கிற ஸமயத்தில் தாழ நின்று கையைக் காலைப் பிடித்துப் பரிமாறின பரிமாற்றங்காணும் இவள் நெஞ்சில் பட்டுக் கிடக்கின்றது. ஸ்வதஸ்ஸித்தமான மேன்மை போலல்லவாயிற்று ப்ரணயித்வத்தாலே தாழ நின்ற நிலை. ஸம்ச்லேஷ தசையில் ஆச்சர்யமான சேஷ்டிதங்களை யுடையவனே என்னும். (செய்யவாய் மணியே யென்னும்) இதுவும் அந்த மாயங்களிலே யொன்று. தைர்யபங்கம் பிறந்து “நான் உன் சரக்கன்றோ?” என்று சொல்லுறுகிறபோதை அதரத்தில் பழுப்பு. “ஸவிலாஸஸ்மிதாதாரம்” என்னக்கடவதிறே. (மணியே) புஷ்பம் விகஸிதமாம்போது எங்குமொக்க ஒரு செவ்வி பிறக்குமாபோலே ஸ்மிதம் பண்ணுகிறபோது வடிவிலே எங்குமொக்க ஒரு செவ்வி பிறந்தபடி. (தண்புனல்) ஸ்மிதத்தில் குளிர்த்திபோலே காணும் ஊரில் குளிர்த்தியும். அவ்வாயில் குளிர்த்திபோலே காணும் இவ்வாயில் குளிர்த்தியும். (வெய்யவாளித்யாதி) திவ்யாயுதங்கள் எதிரிகளையழிக்கைக்கு உடாயிருக்குமாப்போலே காமிநிகளை யழிக்கைக்கும் உடலாலிருக்குமிறே. உகப்பாரையும் உகவாதாரையும் ஒக்கத் தோற்பிக்குமவை. முன்னே கைகண்டு வைக்கிறவையிறே. காணவே எதிரிகள் மண்ணுண்ணும்படியான, திவ்யாயுதங்களை தரித்திருக்கிற நீ என் விரோதிகளைப் போக்கி முகம் காட்டாதொழிவதே. (விண்ணோர் முதலென்னும்) திவ்யாயுதங்களோட்டைச் சேர்த்தியால் வந்த அழகைக் காட்டி நடத்த, அதுவே ஜீவநமாகவாயிற்று அக்காடு கிடப்பது. இல்லேயாகில், அங்கே வினையுண்டாய் தரித்துக் கொண்டிருக்கிறானன்றே. (பைகொளித்யாதி) ஸ்மிதத்தோடு, திவ்யாயுதங்களோடு, நித்யவிபூதி யுக்தனாயிருக்கிற இருப்போடு, திருவநந்தாழ்வான் மேலே சாய்ந்தருளினத்தோடு வாசியற எல்லாம் உத்தேசமாயிருக்கிறதாயிற்று. பகவத் ஸ்பர்சத்தாலுண்டான ஹர்ஷத்தாலே விகஸிதமான பணங்களையுடையனான திருவநந்தாழ்வானைப் படுக்கையாகவுடையவனே! தனிப்படுக்கையிலே சாய்வதே நீர், இவள் தறைக்கிடைகிடக்க. (இவள் திறத்தருளாய்) படுக்கையில் சேர்த்தி பெறாவிட்டால், நாட்டுக்குப் பண்ணும் அருளுமின்றிக்கே யொழியவேணுமோ? (இவள் திறத்து) பாடோடிக் கிடக்கிற இவள் திறத்து. (அருளாய்) அருள்கொள்வார் தேட்டமான நீ, அருள்பெறில் ஜீவிக்குமிவளை இப்படி தறைக்கிடைக்கிடக்க விட்டுவைப்பதே! (பாவியேன்) நீரருளதவராயல்ல; இவள் அது பெறாவிடில் ஜிவிப்பாளாயல்ல; இதுக்கடி நான் பண்ணின பாபமிறே. “மத்பாபமேவாத்ர நிமித்தமாஸீத்” என்னுமாப்போல, (செயற்பாலது) என்னுடைய செயலிடத்தது அருளாமைக்கு அடி; இவள் பக்கலிலும் குறையில்லை, உம்முடைய பக்கலிலும் குறையில்லை, இருவருமான சேர்த்தி பெறவிருக்கிற என் பாபமிறே இதுக்கு ஹேது.
– (மையல் செய்து) - இவள் மயக்கம் தெளிந்தால், நெஞ்சு இளகியபடி உள்ளாள். இவளுடைய மயக்கத்தைத் தெளிய வைத்து இவளுடைய நெஞ்சத்தை உருக்கியதற்கு உதாரணம் கூறுகிறார்; தகுந்த நேரம் பார்த்து பகைவர்களுடைய கோட்டையைக் கைப்பற்றுவது போன்று ஆகும். (என்னை) - கடலின் தரையைக் கண்டவன் போன்று, (மனம் கவர்ந்தானே) - எனது மனதைக் கவர்ந்தான் என்கிறாள்; சரீரத்தை விடுத்து, அதன் சாரமாக உள்ள மனதைக் கவர்ந்ததற்கு உதாரணம் கூறுகிறார்; மரச்சட்டத்திற்கு புழுகு என்னும் வாசனை திரவியம் இடுவது போன்று ஆகும். (மையல் இத்யாதி) - மயக்கத்தை உண்டாக்கி நெஞ்சத்தைக் கவர்ந்ததற்கு உதாரணம் கூறுகிறார்; கொலை செய்து கொள்ளையடிப்பது போன்று ஆகும். (மாமாயனே என்னும்) - மயக்கிய விதங்கள். இவளுடன் கலந்து நிற்கும் நேரங்களில் தாழ நின்று இவளுடைய கைகளையும் கால்களையும் பிடித்த செயல்கள் அல்லவோ இவளுடைய நெஞ்சத்தில் தைத்து நிற்கிறது! காதல் ஏற்படும்போது இவ்விதம் தாழ நிற்கும் நிலையானது இயல்பான நிலை அல்ல அல்லவோ? அவ்விதம் சேரும்போது வியப்படைய வைக்கும் செயல்கள் செய்தபடி உள்ளவனே என்கிறாள். (செய்யவாய் மணியே என்னும்) - இதுவும் அவன் செய்யும் மாயங்களில் ஒன்றாகிறது; தைரியத்திற்குக் குறைவு ஏற்பட்டு, “நான் உனது கட்டுப்பாட்டில் உள்ளவன் ஆகிறேன்" என்று கூறும்போது உதடுகளில் ஏற்படும் பழுப்பு, அல்லது புன்னகை செய்யும்போது ஏஏற்படும் சிவப்பு என்பதாக வேறு ஒரு கருத்தையும் ஒரு ப்ரமாணத்தால் கூறுகிறார்; ஸ்ரீ்விபு. (5-17-21) ஸவிலாஸஸ்மிதாதாரம் - அழகான புன்னகை கொண்ட திருமுகத்தாமரை உடையவன் - என்பது காண்க. (மணியே) - மலர் ஒன்று மலரும்போது அதன் அனைத்து பகுதிகளும் ஒரே போன்று செவ்வி ஏற்படும் நிலை. (தண் புனல்) - புன்னகையில் ஏற்படும் குளிர்ச்சி போன்றே ஊரில் உள்ள குளிர்ச்சியும் உள்ளது. அவன் உள்ளத்தில் ஏற்படும் குளிர்ச்சி போன்று வெளியிலும் உள்ளது. – (வெய்யவாளித்யாதி) - காதலியானவள் தனது காதலனுடைய அவயவங்கள் குறித்துக் கூறாமல், ஆயுதங்களைக் கூறுவது ஏன் என்பதற்கு விடை தருகிறார்; திவ்யமான ஆயுதங்களானவை எதிரியை அழிப்பதற்கு உதவியாக உள்ளது போன்று, காதலிகளை அழிப்பதற்கும் உதவியாக உள்ளதால் ஆகும்; அதாவது அவனை விரும்புபவர்கள் மற்றும் விரும்பாதவர்கள் என்ற வேறுபாடு இன்றி அனைவரையும் ஒரே போன்று தோற்கடிக்கவல்லவை அல்லவோ? அதாவது தங்கள் மேன்மை மற்றும் அழகால் இருவரையும் அழிக்கின்றன. ஆயுதங்களில் இவள் ஈடுபடுவதற்கு, இவள் இவற்றைக் குறித்து அறிந்தது எப்படி என்ற கேள்விக்குப் பதில் கூறுகிறார்; "கைக்கொண்டு வைக்கிறவை” என்பதற்கு இரண்டு பொருள்; அனுபவித்தவை என்றும், கையில் கண்டு வைத்தவ என்றும் இரண்டு பொருள்கள்; இதன் மூலம் இவள் அறிந்தாள். இந்த ஆயுதங்களை பார்த்த நேரத்திலேயே உனது விரோதிகள் மண்ணைக் கவ்வும்படிச் செய்யும் நீ, எனது விரோதிகளை விலக்கி, உனது திருமுகம் காண்பிக்காமல் உள்ளது ஏன்? திவ்யமான ஆயுதங்களுடைய சேர்த்தியால் அந்த அழகை காண்பித்து நியமித்து வழி நடந்த, அதுவே அவனுடைய பரமபத வாழ்க்கை என்று ஆயிற்று. இதற்காகவா அங்கு அவன் தங்கியபடி உள்ளான் என்றால், இவ்விதம் இல்லையெனில், வினை காரணமாக அவன் அங்கு உள்ளான் என்று கூறமுடியாது அல்லவோ? அவ்விதம் அவன் அங்கு இல்லை அல்லவோ? (பைகொள் இத்யாதி) – புன்னகையுடன், திவ்ய ஆயுதங்களுடன் நித்யவிபூதியைக் கொண்டவனாக, ஆதிசேஷன் மீது சயனித்தபடி உள்ளவனாக என்பதாக உள்ள பலவும், எந்தவிதமான வேறுபாடும் இன்றி, அனைத்துமே அடையத்தக்க இலக்காக இவன் இருப்பதற்குப் பொருத்தமாக அமைந்துள்ளன. பகவானுடைய திருமேனி ஸ்பர்சம் காரணமாக ஏற்பட்ட மகிழ்ச்சியால் பரந்து விரிந்த பணங்கள் கொண்ட ஆதிசேஷனைப் படுக்கையாக கொன்டவனே! இவள் இவ்விதம் தரையில் கிடக்கும்போது நீவிர் தனியாக ஒரு படுக்கையில் சாய்ந்து கிடப்பதோ? (இவள் திறத்து அருளாய்) – “அருளாய்” என்பதற்கு “அருள்வதில்லை” என்று பொருள்; அதாவது படுக்கையில் சேர்த்தி கிட்டவில்லை என்றால், உலகினருக்குச் செய்யும் க்ருபையும் இல்லாமல் தவிர்க்க வேண்டுமோ? (இவள் திறத்து) - இவ்விதம் துக்கத்துடன் உள்ள இவள் விஷயத்தில். (அருளாய்) - உனது க்ருபையை எப்போதுமே விரும்பி ஏற்பவர்களுக்கு விருப்பமான நீ, அத்தகைய க்ருபை கிடைத்தால் மட்டுமே உயிர் தரிக்கும் இவளை, இவ்விதம் தரையில் கிடக்கும்படிச் செய்கிறாயே! (பாவியேன்) - நீ அருளாதவன் அல்லன், இவள் அத்தகைய அருள் பெறாதபோது பிழைத்திருப்பவள் அல்லள்; இத்தகைய நிலைக்குக் காரணம் நான் செய்த பாபம் அல்லவோ? இதற்கு ப்ரமாணம் காண்பிக்கிறார்; அயோத்யாகாண்டம் - மத்பாபமேவாத்ர நிமித்தமாஸீத் – பரதாழ்வான், “எனது பாபமே இதற்குக் காரணமாயிற்று”, என்றான் - என்பது காண்க. (செயற்பாலது) - எனது கர்மமே இவ்விதம் கடாக்ஷம் கிட்டாமைக்குக் காரணம்; இவள் விஷயத்திலும் குறை இல்லை; உன் விஷயத்திலும் குறை இல்லை; என் பாபாமேதான் காரணம் ஆகும்.