திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 5)

ஏழாம்பத்து

இரண்டாம் திருவாய்மொழி

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் திருவரங்கத்து உள்ளாய் என்னும் வந்திக்கும் ஆங்கே மழைக் கண்ணீர் மல்க வந்திடாய் என்று என்றே மயங்கும் அந்திப் போது அவுணன் உடல் இடந்தானே அலை கடல் கடைந்த ஆர் அமுதே சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே

அந்திப்பொழுது என்பதான ஒரு சிறப்பான காலத்தில் அஸுரனாகிய இரண்யனுடைய சரீரத்தைப் பிளந்தவனே! அலை மிகுந்த ஸமுத்திரத்தைக் கடைந்த எல்லையற்ற இனிமையானவனே! இவ்விதம் காலம் மூலம் ஏற்படும் கட்டுப்பாடு, விரோதிகள் ஏதும் இல்லாத நிலை, மிகவும் கடினத்துடன் செய்யவேண்டிய செயல் ஆகியவை ஏதும் இல்லாதபடி, “உனது திருமேனியுடன் சேர்ந்து நிற்கவேண்டும், உனது திருவடிகளையே சேர்ந்து அனுபவிக்கவேண்டும்” என்று உறுதி கொண்ட இந்தப் பெண் பிள்ளையின் மதியைக் கெடுத்தவனே! முன்பு, உன்னுடன் கலந்ததையே இவள் சிந்தித்தபடி உள்ளாள். அது அப்போது முழுமையாகக் கைகூடப்பெறாமையால் அறிவற்று நிற்கிறாள்; ஒருவிதமாகத் தேற்றிக் கொள்கிறாள். அப்போது நீ வந்தாய் என்று எண்ணிக் கைகளைக் குவிக்கிறாள்; “திருவரங்கம் பெரியகோயில் கண்வளர்பவனே” என்று அழைக்கிறாள். அந்த வடிவழகை எண்ணித் தலையால் வணங்குகிறாள். அப்போது வராமல் உள்ளதால், அங்கேயே இருந்து, மழை போன்று கண்களில் நீர் மல்க “வருவாயாக” என்று பலமுறை அழைத்து மயங்குகிறாள்.

– “இவளுக்கு ப்ரதிக்ஷணம் பேதித்து ஒன்றோடொன்று சேராத வருகிற அவஸ்தா பேதங்களை அறிவித்து, இவளை இப்படி படுத்துகை உம்முடைய நீர்மைக்குப் போருமோ” என்கிறாள்.

இவளுக்கு ஒவ்வொரு நொடியிலும் மாறுபாடுகள் அடைந்து, ஒன்றுக்கொன்று சேராமல் வரும் பல்வேறு நிலைகளில் உள்ள வேறுபாடுகளை எடுத்துரைத்து, “இவளை இவ்விதம் செய்தல் உனது நீர்மைக்கு ஏற்குமோ?”, என்கிறார்.

(சிந்திக்கும்) உம்முடைய ஸௌந்தர்யாதிகளையும் உம்மோட்டைக் கலவியையும் நினைக்கும். முன்பு இவ்வநுஸந்தாநமும் இன்றிக்கே யாயிற்றிருந்தது; மோஹத்தோபாதி இதுவும் ஒரு விக்ருதியாயிருக்கிறபடி. (திசைக்கும்) அப்போதே காணப் பெறாமையாலே மோஹிக்கும். (தேறும்) ஒரு ஹேதுவின்றிக்கே யிருக்கந் தேறாநின்றாள். இதுதானும் பயாவஹமாயிருக்கிறதாயிற்று; மோஹம் செல்லாநிற்க, அபேக்ஷிதம் பெற்றாரைப் போலே தேறுகை பயாவஹமிறே. சரமதசையில் பிறக்கும் தெளிவுக்கும் அஞ்சவேணுமே. உய்ந்தபிள்ளை பாடும்போது, “கெட்டேன், இவள் ‘தேறும்’ என்பதே” என்று சீயரருளிச் செய்வராம். (கைகூப்பும்) இது இவளுக்குப் ப்ரக்ருதி. கீழே “மயங்கும் கைகூப்பும்” என்றது; இங்கே “தேறும் கைகூப்பும்” என்றது; அல்லாதன ஸஞ்சாரியாய்ச் செல்லாநிற்க, இது ஒன்றும் ஸ்த்திரமாய்ச் செல்லாநிற்கும்; ஸ்வரூபாநுபந்தியாகையாலே. “நித்யாஞ்ஜலிபுடா:” என்னக்கடவதிறே. மோஹத்திலும் உணர்த்தியிலும் ஸத்தையுண்டே; “வழுவிலாவடிமை செய்யவேண்டு நாம்” என்றதிறே நிலைநின்ற ஸ்வரூபம். அநுவர்த்தமாநமானதிறே பரமார்த்தமாவது. (திருவரங்கத்துள்ளாயென்னும்) “பெருமாளேயென்னும்” என்று சீயர். அவ்வூரில் ஸம்பந்தங் கொண்டு போலே காணும் அவரையும் விரும்பிற்று. (வந்திக்கும்) “திருவரங்கத்துள்ளாய்” என்றது நெஞ்சிலே வடிம்பிட்டு “ஒரு முகமே, முறுவலே, ஒரு வளையமே” என்று ஸ்தோத்ரம் பண்ணா நின்றாளென்னுதல்; பக்நாபிமாநையாய்த் திருவடிகளிலே விழுந்து கிடக்குமென்னுதல். (ஆங்கே) அவ்வஸ்தையிலே; (மழைக்கண்ணீரித்யாதி) குளிர்ந்த கண்ணீர் மல்க, வந்திடாயென்றென்று சொல்லி, அச்சொல்வோடே யறிவுகெடும். – “நினைத்த போதாக வரப்போமோ?” என்ன, (அந்திப்போது) “மத்தஸ் ஸர்வமஹம் ஸர்வம்” என்று தெளிந்திருப்பார்க்கோ உதவலாவது? அறிவு கெடுவார்க்கு உதவலாகாதே? அவன் வரத்துக்கு விருத்தமாயிருப்பதொரு காலத்திலே, ஆஸுர ப்ரக்ருதியாயிருக்கிற அவுணனுடைய சரீரத்தைப் பிளந்து பொகட்டிலையோ? தமப்பன் பகையானாலோ வுதவவாவது? நீர் பகையானா லுதவலாகாதோ? இவ்வளவில் உதவாமைக்கு மேற்படப் பகையில்லையிறே. “அது ஒருகால் சிறுக்கனுக்கு உதவினமையுண்டு. அது தப்பிற்றிறே”யென்ன; பின்போ நீயுதவாவது? (அலைகடல் கடைந்த) ப்ரயோஜநாந்தர பரர்க்கும் அகப்படக் கடலைக் கடைத்து கொடுத்திலையோ? உன்னைக் கொண்டு ஒரு ப்ரயோஜநங் கொள்வார்க்கோ உதவலாவது? உன்னையே “ப்ரயோஜம்” என்றிப்பார்க்கு உதவலாகாதோ? (ஆரமுதே) இவருடைய அம்ருதத்தைக் கொண்டாயிற்று அவர்கள் கடல் கடைந்தது. (சந்தித்து இத்யாதி) உன்னைக் கிட்டித் திருவடிகளைச் சாரவேணுமென்று வ்யவஸிதையாயிருக்கிற இவளை இப்படி யறிவு கெடுப்பதே! அன்றிக்கே, உன்னைக் கிட்டி ஸந்நிதியிலே முடியுமித்தனையென்று ப்ராணனை தரித்திருக்கிறவளை என்னுதல். “தாவத்த்யஹம் தூதஜிஜீவிஷேயம்” என்று காணும் இருக்கிறது. (மையல் செய்தானே) உம்மை யாசைப்பட்டவளுக்கும் மயக்கமேயோ பலித்துவிட்டது.

– (சிந்திக்கும்) - உனது அழகு முதலானவற்றையும், உன்னுடனான சேர்க்கையையும் எண்ணியபடி உள்ளாள். “இப்படிப்பட்ட நினைவுகளானவை ஒவ்வொரு நொடியும் மாறியபடி உள்ளதோ?” என்பதற்கு விடை தருகிறார்; முன்பு இத்தகைய எண்ணங்கள் இல்லாமல் இருந்தன; மோகம் போன்றே இதுவும் ஒரு வேறுபாடாகவே உள்ளது. (திசைக்கும்) - அப்போதே காண இயலாமையால் மயக்கம் அடைகிறாள். (தேறும்) - எந்தவிதமான காரணமும் இன்றி தெளிவு அடைகிறாள். ஆனால் இப்படித் தெளிவது நன்மையே அல்லவோ என்பதற்கு விடை தருகிறாள்; இப்படி இவள் செய்வது அச்சத்தை ஏற்படுத்துகிறது; மயக்கத்தின் காரணமானது விலகாமல் உள்ளபோது, விரும்பியதை அடைந்தவர்கள் போன்று தெளிவடைதலானது அச்சத்தை ஏற்படுத்தும் அல்லவோ? அந்திமகாலத்தில் பிறக்கின்ற தெளிவிற்கும் அச்சம் கொள்ளவேண்டும் அல்லவோ? இவ்விதம் தெளிவடைதல் என்பது அச்சத்திற்குக் காரணமாகிறது என்பதற்கு ஒரு நிகழ்வைக் கூறுகிறார்; இந்தப் பாசுரத்தை உய்ந்தபிள்ளை பாடும்போது கேட்ட நஞ்சீயர், “கெட்டேன். இவள் தேறும் என்று கூறுவதே எனக்கு அச்சமாக உள்ளது” என்பாராம். – (கைக்கூப்பும்) - இது இவளுடைய இயல்பாகும்; இவ்விதம் இயல்பாக உள்ள விதத்தை அருளிச்செய்கிறார்; முன்பு “மயக்கும் கைகூப்பும்” என்றாள்; இங்கு “தேறும் கைக்கூப்பும்” என்கிறாள்; மற்ற அனைத்து செயல்களும் மாறியபடி உள்ளபோது, இத்தகைய “கைகூப்புதல்” என்பது மட்டுமே நிலையாக உள்ளது; இதன் காரணம், இது ஸ்வரூபத்துடன் சேர்ந்தது என்பதால் ஆகும். இவ்விதம் ஸ்வரூபத்துடன் சேர்ந்துள்ளதால், அஞ்ஜலியானது நித்யமே ஆகும் என்பதற்கு ப்ரமாணம் கூறுகிறார்; மோக்ஷதர்மத்தில் - நித்யாஞ்ஜலிபுடா: - எப்போதும் அஞ்ஜலி செய்தபடி உள்ளவர்கள் – என்பது காண்க. இதற்கான காரணம், மயக்கத்திலும் தெளிவிலும் இருப்பு என்பது உண்டு அல்லவோ? இதன் பயன் என்ன என்பதை அருளிச்செய்கிறார்; திருவாய்மொழி (3-3-1) – வழுவிலாவடிமை செய்யவேண்டு நாம் - என்பது அல்லவோ நிலையான ஸ்வரூபமாக உள்ளது? எப்போதும், அனைத்து நிலைகளிலும் தொடர்ந்தபடி உள்ளது அல்லவோ உண்மையானது ஆகிறது. – (திருவரங்கத்துள்ளாய் என்னும்) – “பெருமாளே என்று கூறுவாள்” என்று நஞ்சீயர் உரைப்பார். “பெருமாளே” என்பதே இங்கு பொருள் என்று கொண்ட பின்னர் “திருவரங்கத்துள்ளாய்” என்று கூறவேண்டுமோ என்பதற்கு விடை தருகிறார். இந்த ஊரின் ஸம்பந்தம் கொன்டு அவனை விரும்பியது போன்றதாகும். (வந்திக்கும்) – “திருவரங்கத்தில் உள்ளாய்” என்று நெஞ்சிலேயே தூண்டப்பட்டவனாக, “ஒரு அழகான திருமுகமே, புன்முறுவலே, அழகான துளசிமாலையே” என்று பலவாறு துதித்தபடி உள்ளாள். அல்லது தன்னைப் பற்றிய சிந்தனைகள் அனைத்தையும் இழந்தவளாக, அவன் திருவடிகளில் விழுந்து கிடப்பாள். (ஆங்கே) - அப்படிப்பட்ட நிலையிலேயே. (மழைக்கண்ணீர் இத்யாதி) – குளிர்ந்த கண்ணீருடன் கூடியவளாக “வந்திடாய்” என்று கூறி, அந்தச் சொல்லுடன் தனது அறிவும் மயங்கி நிற்கிறாள். – ஆனால், இவள் நினைத்தபோது அவன் வருவானோ என்பதற்கு விடை தருகிறாள்; (அந்திப்போது) - ப்ரஹ்லாதனுக்காக ஹிரண்யனுடைய உடலைப் பிளந்தான் என்று விவரித்து, அதனைக் கூறும் திருத்தாயாருடைய நிலையை வ்யாக்யானத்தில் உள்ள “மத்த” என்று தொடங்கி காணப்படும் மூன்று வாக்கியங்களில் கூறுகிறார். ஸ்ரீவிபு. (1-99-58) - மத்தஸ் ஸர்வமஹம் ஸர்வம் - அனைத்தும் என்னிடமிருந்தே உண்டானது - என்று தெளிந்த அறிவு கொண்ட ப்ரஹ்லாதன் போன்றவர்களுக்கு உதவவேண்டுமோ? அத்தகைய அறிவில்லாதவர்களுக்கு உதவக்கூடாதா? தந்தை பகையானால் மட்டுமே நீ சென்று உதவுவாயா? நீயே பகையாக இருந்தால் உதவ மாட்டாயா? ஆனால் இவன் இந்த நாயகிக்குப் பகையோ என்பதற்கு விடை அருளிச்செய்கிறார். இந்த நிலையில் இவளுக்கு உதவாமல் இருப்பதைக் காட்டிலும் மேலான பகை ஏதும் இல்லை! இதனைக் கேட்ட அவன், “அது ஒருமுறை ஒரு சிறுவனுக்காகச் செய்த உதவியாகும். அதன் விளைவாக அவன் உயிர் பிழைத்தான் அல்லவோ?”, என்றான். இதற்குத் திருத்தாயார் பதில் கூறுகிறாள்; அதன் பின்னர் நீ யாருக்கும் உதவி செய்ததில்லையா? (அலைகடல் கடைந்த) - மற்ற பயன்களை எதிர்பார்ப்பவர்களுக்குக் கூட, நீ கடலைக் கடைய உதவினாய் அல்லவோ? உன்னைக் கொண்டு தங்களுடைய ப்ரயோஜனத்தை அடைய எண்ணுபவர்களுக்கு மட்டுமே நீ உதவுவாயா? உன்னையே ப்ரயோஜனம் என்று கொள்பவர்களுக்கு உதவமாட்டாயா? (ஆரமுதே) - இவனுடைய அமிர்தத்தைக் கொண்டு அல்லவோ அவர்கள் கடலைக் கடைந்தது! (சந்தித்து இத்யாதி) – “உன் சரணம் சார்வதே” என்பதற்கு இரண்டுவிதமான கருத்துக்கள்; முதல் கருத்தில் “சரணம் சேர்தல்" என்பது கலவியைக் குறிக்கும்; இரண்டாவது கருத்தில் “சரணம் சேர்தல்” என்பது முடிதல் என்பதைக் குறிக்கும். உன்னை அண்டி வந்து உனது திருவடிகளைச் சேரவேண்டும் என்று உறுதி பூண்டுள்ள இவளை, இவ்விதம் அறிவு கெடும்படிச் செய்கிறாயே! அல்லது உன்னை அண்டி நின்று உனது அருகில் முடியவேண்டும் என்று தனது ப்ராணனைத் தரித்துள்ளவள்; இவ்விதம் தரித்தவர்கள் உண்டோ என்பதற்கு ப்ரமாணம் ஸுந்தரகாண்டம் (36-30) - தாவத்த்யஹம் தூதஜிஜீவிஷேயம் - என்னை அழைத்துச் செல்ல எத்தனை காலம் முயற்சி உள்ளதோ அதுவரை நான் உயிருடன் காத்திருப்பேன் - என்பதாகும். (மையல் செய்தானே) – உம்மைக் குறித்து ஆசை கொன்டவளுக்கு மயக்கம் அல்லவோ பலனாக வந்தது என்பாள்.